கறிவேப்பிலை



இயற்கை 360°

‘‘அய்யோடா... ரசத்துக்குள்ள ஒரு கார்டனையே இறக்கியிருக்காங்க பாருங்க நம்ம பாட்டி” என்றபடி உணவிற்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத்
தட்டின் ஓரத்தில் குப்பையைப் போல ஒதுக்கும் குழந்தைகளே! உங்கள் பாட்டி ரசத்தில் மிதக்கவிடும் கறிவேப்பிலை பற்றி உலகப் புகழ்பெற்ற உணவு நிறுவனமான கார்டோஸ் லெகசியின் (Cardoz Legacy) நிறுவனர் பார்க்கா ஃப்ளாய்ட் சொல்வது என்ன தெரியுமா..?

‘‘நீங்கள் உணவு சமைக்கும் போது, கறிவேப்பிலையை அதில் சேர்க்கவில்லை என்றால், உண்மையில் உணவை நீங்கள் சமைக்கவில்லை என்றே சொல்லலாம்” என்கிறார். உணவில் மணம் சேர்க்கும் மண் மணம் நிறைந்த கறிவேப்பிலை பற்றி இயற்கை மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா..?

பசி இல்லையா..?  கறிவேப்பிலை
சாப்பிடுங்க..!
ஜீரணம் ஆகலையா..? கறிவேப்பிலை சாப்பிடுங்க..!
முடி உதிருதா..? கறிவேப்பிலை
சாப்பிடுங்க..!
இளநரையா..? கறிவேப்பிலை
சாப்பிடுங்க..!
ரத்தம் குறைவா இருக்கா..?
கறிவேப்பிலை சாப்பிடுங்க..!

இப்படி உணவிற்கு மணம் சேர்ப்பது மட்டுமன்றி உடலுக்கும் பெருமளவு ஆரோக்கியத்தைச் சேர்த்திடும் கறிவேப்பிலை தோன்றிய இடம் இந்தியா மற்றும் இலங்கையாகும். கறிவேப்பாக்கு, கறிப்பட்டா, கடிப்பட்டா, மேத்தி நீம், சுரபி நிம்பா என நம் மண்ணின் ஒவ்வொரு மொழியிலும் வேப்பிலையுடன் சேர்த்தே அழைக்கப்படுகிறது கறிவேப்பிலை.

கறிவேப்பிலையின் இலைகள் வேப்பிலையை போலத் தோற்றமளிப்பதுடன் நமது அன்றாட கறி சமையல் வகைகளிலும் இடம்பிடிப்பதால் கறிவேப்பிலை என்றும், அடர்நிறத்தில் அதாவது, கரும்பச்சை நிறமாக இருப்பதால் கறிவேப்பிலை அல்லது கருவேம்பு என்றும் பெயர்க் காரணம் பெறுகிறது.

இதன் மரப்பட்டை மற்றும் இலை ஈர்க்குகள் செம்பு நிறத்தில் காணப்படுவதால் ‘காலசாகம்’ என்று வடமொழியிலும், சிங்கள மொழியில் கறபிஞ்சா என்றும் ஆங்கிலத்தில் Curry leaves என்றும் அழைக்கப்படுகிறது. Andreas Murray என்ற ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர் மற்றும் Gerhard Koenig எனும் ஜெர்மானிய மருத்துவரின் பெயர்களைத் தனது தாவரப்பெயரான ‘Murraya koenigii’ என தாங்கிய கறிவேப்பிலை, தனது கசப்பற்ற சற்றே இனிக்கும் சுவையின் காரணமாக Sweet Neem என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், இந்தோனேசியா என வெப்ப மண்டல நாடுகளின் வறண்ட நிலங்களில் செழித்து வளரும் சிறு மரமான கறிவேப்பிலை பொதுவாக நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக் கறிவேப்பிலை என இருவகைப்படுகிறது. சற்றே பெரிய இலைகளுடன் அதிக கசப்புடன் இருக்கும் காட்டு வகை இயற்கை மருந்தாக மட்டும் பயன்படுகிறது. அதேசமயம், இனிப்பும், துவர்ப்பும், மண் மணமும் நிறைந்த சிறு இலைகளுடனான நாட்டு வகை அன்றாட சமையலுக்குப் பயன்படுவதுடன் மருந்தாகவும் பயன்படுகிறது.

எல்லாக் காலங்களிலும் எல்லா சமயங்களிலும் மலிவாகவும் வெகு எளிதாகவும் கிடைக்கும் கறிவேப்பிலையை நாம் சமைக்காமலும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம். மனிதன் உட்கொள்ளக்கூடிய உணவுகளில் நல்ல மணம், அதேசமயம் மருத்துவக்குணங்கள் நிறைந்தது கறிவேப்பிலை என்பதாலேயே, ‘கீரைகளின் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது.
நான்காம் நூற்றாண்டிலேயே இதன் மருத்துவக் குணங்களை நமது இலக்கியங்கள் குறிப்பிட்டுக்கொண்டாடியுள்ளன என்பதுதான் கறிவேப்பிலையின் தனிச்சிறப்பு.

அப்படிக் கொண்டாட என்னதான் இருக்கிறது இந்தக் கறிவேப்பிலையில்... அவற்றின் பயன்கள்தான் என்ன..? என்ற கேள்விகள் நம்முள் எழுகிறதல்லவா..? உண்மையில் கறிவேப்பிலையின் இலைகள், பூக்கள், கனிகள், ஈர்க்குகள், மரப்பட்டை மற்றும் வேர்கள் என ஒவ்வொரு பாகமும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது என்றாலும், அதன் இலைகள் மட்டுமே உணவாகவும், மருந்தாகவும் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

அதிக (66%) நீர்த்தன்மை மற்றும் அதிகளவு நார்ச்சத்து நிறைந்த இந்தக் கறிவேப்பிலை இலைகளில் 18% மாவுச்சத்து (கலோரிகள்: 108/100g), 6% புரதச்சத்து, 4% அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அத்துடன் மிகக்குறைந்த அளவாக 1%  மட்டுமே கொழுப்பு காணப்படுகிறது. 

சத்துகளில் குறிப்பாக கால்சியம், மெக்னீசியம், ஃபாஸ்பரஸ், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மாங்கனீஸ் உள்ளிட்ட கனிமச் சத்துகளும், பீட்டா கரோட்டீன், ஃபோலிக் அமிலம், நிகோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் உள்ளிட்ட வைட்டமின்களும் (A, B, E), அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இந்த எளிய இலைகளில் நிறைந்துள்ளன.

அதேசமயம் Pinene, Sabinene, Beta Carophylline, Beta Gurjenene போன்ற எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் இந்தக் கொழுப்பு சிறிதும் இல்லாத கறிவேப்பிலையில் நிறைந்துள்ளன. இவற்றுள் குறிப்பாக Mahanimbine, Grinimbine, Carbazole alkaloids மற்றும் Cinnamaldehyde கறிவேப்பிலையின் தனி மணம் மற்றும் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன.

இவையனைத்தும் சேர்ந்து கறிவேப்பிலையை பசியைத் தூண்டும் அருமருந்தாகவும், பித்தத்தைத் தணித்து செரிமானத்தை அதிகரிக்கும் ஒன்றாகவும், மலச்சிக்கலுக்கான எளிய தேர்வாகவும் நிலைநிறுத்துகிறது. அத்துடன் ரத்த அணுக்களை அதிகம் உற்பத்தி செய்து, நச்சுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரித்து, கொழுப்புகளைக் கரைத்து, உடல் பருமனைக் குறைத்து, நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டி, பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலிமை சேர்த்து, கண்களையும், கேசத்தையும், சருமத்தையும் பாதுகாத்து ஒட்டுமொத்தமாக உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதிற்கு உற்சாகத்தையும் அள்ளித்தரும் அற்புத இயற்கைப் படைப்பாக உள்ளது.

இப்படி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், இரைப்பை, கல்லீரல் மற்றும் குடல் நோய்கள், கண் மற்றும் சரும நோய்கள், இன்னும் குறிப்பாக ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து கறிவேப்பிலை பாதுகாப்பு அளிக்கக்கூடும் என்கிறது இயற்கை மருத்துவத்தின் பல்வேறு ஆய்வுகள். 

இதன் காரணமாகவே கறிவேப்பிலையின் பச்சை இலைகளையும், இளந்தளிர்களையும் காலை-மாலை என இரு வேளைகளிலும் வெறும் வயிற்றில் உட்கொள்ள அறிவுறுத்துகிறது சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவங்கள்.

பொதுவாக குழந்தைகளின் பசியின்மையைப் போக்கும் கறிவேப்பிலை, வயிற்றுப்போக்கு, வயிற்று அழற்சி, பித்தப்பை அழற்சி ஆகியவற்றிலும் கர்ப்பகால தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், பயணப்பிணி, ரத்த சோகை, மலச்சிக்கல், மூல நோய் ஆகியவற்றிலும் பெரிதும் பயனளிக்கிறது. மேலும் கறிவேப்பிலையின் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் ஞாபகத் திறனை அதிகரித்து, செயல்திறனைக் கூட்டுகிறது. அதன் பிரத்யேக எண்ணெய்கள் முடி உதிர்தலை தவிர்த்து, முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

பொடுகு, இளநரை, பூச்சிவெட்டு (Tinea capitis) ஆகியவற்றிலும் கறிவேப்பிலை பெரிதும் பயனளிக்கிறது. தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த கறிவேப்பிலை இலைகள் வெளிப்புறமாக கேசத்தில் தேய்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

மேற்சொன்ன Mahanimbicine எனும் தாவர எண்ணெய் ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, மன அழுத்தம் ஆகியவற்றில் பயனளிக்கும் போதே, தோலின் காயங்கள், தழும்புகள் மற்றும் தீப்புண்களை ஆற்றும் திறனையும் கொண்டது. அத்துடன் மூட்டு நோய், தசை வீக்கம் ஆகியவற்றிலும் பயனளிக்கிறது.

கறிவேப்பிலையின் மணம் பூச்சிகள், விலங்குகள் மற்றும் தாவரக் கிருமிகளை விரட்டும் தன்மை கொண்டது என, கறிவேப்பிலையின் பயன்கள் நீண்டுகொண்டே இருக்கிறது.
கறிவேப்பிலை இலை, பழம் மற்றும் பூவிலிருந்து கிடைக்கப்பெறும் ஆவியாகும் எண்ணெயும் அதன் மருத்துவ குணங்களால் அரோமா தெரபியிலும் அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

இதில் கொத்துக்கொத்தாகப் பூக்கும் கறிவேப்பிலையின் வெண்ணிறப் பூக்களும், மிகச்சிறிய அளவில் பழுத்து நிற்கும் கருநிற பழங்களும் நமது பால்ய கால நினைவுகளையும் துளிர்க்கச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வளவு நன்மைகளை பயத்தாலும், கறிவேப்பிலை பொதுவாக ரத்தக்கசிவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால், anticoagulants எனப்படும் ரத்த உறைவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுடன் அதிகளவு சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், பித்தத்தை வெளியேற்றும் தன்மையைக் கொண்டதால் பித்தப்பை கற்கள் கொண்டவர்கள் இதனை அதிக அளவு சேர்ப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.

உத்தரப்பிரதேசத்தின் தாரைப் பகுதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கறிவேப்பிலை, தேசமெங்கும் குறிப்பாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களிலும் மேற்கு வங்கம், அசாம் மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. இந்தியா தவிர இலங்கை, பாகிஸ்தான், சீனா, மியான்மர் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்கா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கறிவேப்பிலை பெருமளவு பயிரிடப்படுகிறது.

பொதுவாக விதைகள் மற்றும் பதியன்கள் மூலமாகப் பயிரிடப்படும் கறிவேப்பிலை நாற்றுகள், 15 மாதங்களிலிருந்து விளைச்சலுக்கு வருகிறது என்றாலும் 3 வருடத்திற்கு மேலான செடிகளின் இலைகளே விற்பனைக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து 20-25 வருடங்கள் வரை ஒவ்வொரு 2-3 மாதத்திற்கு ஒருமுறை இலைகள் பறிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 

பறித்தவுடன் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலைதான் சிறந்தது என்றாலும், அதன் சத்துகளையும் மணத்தையும் ஓரளவு தருகின்ற காய வைத்த இலையும், கறிவேப்பிலைப் பொடியும், கறிவேப்பிலை எண்ணெயும் ஏற்றுமதி செய்யப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. முதன்முதலாக இதனைத் தயாரித்தது இங்கிலாந்துதான். உலர்த்திப் பொடி செய்த கறிவேப்பிலை உணவிலும், கறிவேப்பிலை எண்ணெயை அழகு சாதனப் பொருட்களிலும் ஆங்கிலேயர் பயன்படுத்துகின்றனர்.

சாம்பார், ரசம், சட்னி, வடை, உப்புமா, பொங்கல், மோர், இட்லிப்பொடி, பிரியாணி என நமது அனைத்து சைவ, அசைவ உணவுகளிலும் தாளிப்பாக மணம் சேர்க்கும் கறிவேப்பிலை, தேநீர், சூப் மற்றும் ஸ்டூ தயாரிக்கவும் பயன்படுகிறது. ரசத்தில் கார்டன் என்பது போலவே பெரும்பாலான உணவுகளில் seasoning எனப்படும் சுவையூட்டியாக கறிவேப்பிலை விளங்குகிறது. 

ஆனால், குழந்தைகள் மட்டுமன்றி நாம் அனைவருமே ஏனோ அதனை ஒதுக்கி வைக்கும் உணவாகவே பார்க்கிறோம் என்பதுதான் உண்மை.‘‘கறிவேப்பிலையோ வேப்பிலை... காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை...” என்பது நமது முதுமொழி. இந்தத் தாய்ப்பிள்ளையான கறிவேப்பிலை எனும் ‘Magical herb’ அதாவது, மந்திர மூலிகையை தட்டின் ஓரம் ஒதுக்காமல் உட்கொள்வோம்..! ஆரோக்கியம் பெறுவோம்.!!

(இயற்கைப் பயணம் நீளும்...)