அக்கா கடை -சாப்பிட்டு வயிறார வாழ்த்தினாலே போதும்!



பெண்கள் தனியாக சாதிக்கும் போது, அவர்கள் குழுவாக இணைந்தால் பல விஷயங்களை எளிதில் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக கிண்டியில் இயங்கி வருகிறது ‘ஹோம் மீல்ஸ்’ என்ற உணவகம். பெண்களால் மட்டுமே இயக்கப்பட்டு வரும் இந்த உணவகத்தில் காலை, மதியம் என இரு வேளை உணவுகள் பரிமாறப்படுகிறது. சைவம், அசைவம் என்று அனைத்து உணவுகளையும் மிகவும் சுவையாகவும் தரமாகவும் இவர்கள் கடந்த நான்கு வருடமாக வழங்கி வருகிறார்கள்.

 ‘‘நாங்க என் மகள் மற்றும் என் நாத்தனார் என்று குடும்பமாதான் ஆரம்பித்தோம். இப்ப எங்களுக்கு உதவியா மூன்று பேர் இருக்காங்க’’ என்று பேசத் துவங்கினார் மாணிக்கவள்ளி. ‘‘எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி. என் கணவர் தாமசுக்கும் அந்த ஊர் தான். ஆனால் அவர் சென்னையில் செட்டிலானவர். நான் திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு வந்துட்டேன். அவர் இங்கு இதே இடத்தில் தான் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தார். நான் பி.ஏ. பி,எட் படிச்சிருக்கேன். எங்களுக்கு ஒரு மகன், மகள். இரண்டு பேரும் பொறியியல் பட்டதாரிகள். என் மகள் எனக்கு உதவியா ஓட்டலில் இருக்காங்க’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் தாமஸ்.

‘‘நான் இந்த உணவகத்தை ஆரம்பிப்பதற்கு முன் நிறைய வேலைகளை பார்த்து வந்தேன். கடைசியாக தான் இங்கு ஜெராக்ஸ் கடையை ஆரம்பிச்சேன். கிண்டி தொழிற்பேட்டையை சுற்றி நிறைய நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக வேலை வாய்ப்பு நிறுவனம் இருப்பதால், எப்போதும் மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இது பெரிய வளாகம் தான். ஆனால் உணவகம் என்று இங்கு எதுவுமே கிடையாது.

சின்ன சின்ன பெட்டிக்கடை மற்றும் டீக்கடை தான் அதிகம். என் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வரும் பலர் இங்கு ஒரு உணவகம் கூட இல்லை, சாப்பிட மெயின் ரோட்டிற்கு போகவேண்டி இருக்கு. சிறிய அளவில் உணவகம் இருந்தா நல்லா இருக்கும்ன்னு வருத்தப்பட்டு ேபாவாங்க. அப்பதான் நாம் ஏன் சிறிய அளவில் கலவை சாப்பாடு கட்டிக் கொண்டு வரக்கூடாதுன்னு தோணுச்சு. வீட்டில் சொன்னவுடன் அவங்களும் சரி செய்யலாம்ன்னு ஆர்வமா சொன்னாங்க. அப்படித்தான் ஹோம் மீல்சுக்கு பிள்ளையார் சுழி போட்டோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி.
‘‘இவர் வந்து சொன்னபோது, பெரிய அளவில் செய்ய முடியாதுன்னு சொன்னேன்.

காரணம் பசங்க படிச்சிட்டு இருந்தாங்க. வீட்டையும் பார்த்துக் கொண்டு, இதையும் செய்ய முடியாது. பத்து சாப்பாடு வேண்டும்ன்னா கட்டித் தரேன்னு சொன்னேன். அதனால் தினமும் ஏதாவது ஒரு கலவை சாப்பாடு கட்டித் தருவேன். இவர் கடையில் இவரையும் சேர்த்து இரண்டு பேர் வேலை செய்து வந்தாங்க. அவங்களுக்கு போக மீதமுள்ள 7 சாப்பாட்டை கடைக்கு வருபவர்களுக்கு இவர் விற்பனை செய்திடுவார். அதன் பிறகு இவர் கடையிலே சமைத்துக் கொள்கிறேன்னு சொன்னார். கடையில் வேலை செய்யும் பெண்களைக் கொண்டு அங்கு சமையல் செய்ய ஆரம்பித்தார். சாதம், சாம்பார், ஒரு கூட்டுன்னு செய்து விற்பனை செய்தார். அதுவும் பத்து பேர் அளவுக்கு தான் சமைப்பாங்க.

இவர்களும் அதே உணவை சாப்பிட்டுக் கொள்வாங்க. ஆனால் அது ரொம்ப காலம் நீடிக்கவில்லை. காரணம் கடையில் வேலைப் பார்ப்பவர்களே சமைக்கும் போது, அவர்களுக்கு ஒரு சலிப்பு தட்ட ஆரம்பித்தது. சாப்பாடு சுவையா இல்லைன்னு இவரே வீட்டில் வந்து சொல்வார். ‘எனக்கே இப்படி இருக்குன்னா சாப்பிட வருபவர்கள் என்ன யோசிப்பாங்க’ன்னு சொல்வார். இதற்கிடையில் பிசினசும் கொஞ்சம் டல்லாக ஆரம்பிச்சது. காசு செலவு செய்து வாங்கிய ஜெராக்ஸ் மெஷினுக்கு பெரிசா வேலையும் இல்லை. அடுத்து என்ன செய்யலாம்ன்னு இவர் என்னிடம் பேசிய போது தான் ஜெராக்ஸ் கடைக்கு பதில் அங்க சிறிய அளவில் உணவகம் ஆரம்பிக்கலாம். சமையல் முழுதும் நான் பார்த்துக் கொள்கிறேன்னு சொன்னேன். அவருக்கும் சரின்னு பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

‘‘என் மனைவி பட்டதாரி. அரசு வேலைக்காக விண்ணப்பித்து ஆர்டரும் கிடைச்சது. ஆனால் வேறு ஊரில் பணிக்கான அழைப்பு வந்தது. குழந்தைகளும் சிறியவர்களாக இருந்தார்கள். மேலும் வேலைன்னு போயிட்டா குழந்தை வீட்டை பார்த்துக்க முடியாதுன்னு இவங்க நினைச்சாங்க. கிடைச்ச வேலையை வேண்டாம்ன்னு எங்களுக்காக சொல்லிட்டாங்க. அவங்களுக்கு ஒரு அடையாளம் இந்த கடை மூலமா கிடைச்சா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு.

முதலில் வெறும் சைவ உணவகமா தான் ஆரம்பித்தோம். காலை டிபன் மற்றும் மதிய சாப்பாடு. காலை இட்லி, பூரி, பொங்கல், வடை தோசை சட்னி சாம்பார்ன்னு கொடுத்தோம். மதியம் முழு சாப்பாடு. அதில் கீரை, உருளைக்கிழங்கு, அப்பளம், ஸ்வீட், பாயசம் கண்டிப்பா இருக்கும். இதை தவிர சாதம், சாம்பார், மோர் குழம்பு அல்லது காரக்குழம்பு, ஒரு கூட்டு இருக்கும். கொஞ்ச காலத்தில் அசைவ உணவு இல்லையான்னு வாடிக்கை யாளர்கள் கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்காக சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, மீன் வறுவல், சிக்கன் கிரேவி, முட்டை தோசை, சிக்கன், மட்டன் மற்றும் மீன் பிரியாணி தயார் செய்ய ஆரம்பிச்சோம். சமையல் வேலையை என் மனைவி தான் பார்த்துப்பாங்க. அவங்களுக்கு உதவியா மகளும் என் தங்கையும் இருக்காங்க. மற்ற வேலை செய்ய மூன்று பெண்கள் இருக்காங்க’’ என்றார்

‘‘இங்கு வேலைக்கு வரும் பெண்கள் வந்த ஒரே மாதத்தில் எல்லா உணவையும் சமைக்க கத்துப்பாங்க. அவங்கள அதற்கு ஏற்ப டிரெயினிங் செய்திடுவோம். இதில் எந்த சீக்ரெட்டும் கிடையாது. நாம வீட்டில் சமைக்கும் அதே உணவு தான் என்பதால், மசாலாப் பொருட்கள் எல்லாம் நாங்களே அரைக்கிறோம். கடைகளில் விற்கும் மசாலா பொருட்களை வாங்குவது இல்லை. காலை டிபன் வேலையை அவங்களே பார்த்துப்பாங்க. நான் பத்து மணிக்கு வந்திடுவேன். அதற்குள் அன்று சமையலுக்கு தேவையான பொருட்களை இவர் வாங்கி வந்திடுவார்.

அதை சுத்தம் செய்து, காய்கறிகளை எல்லாம் நறுக்கி ரெடியா வச்சிடுவாங்க. நான் சமைச்சிடுவேன். 12 மணிக்கெல்லாம் எல்லா உணவும் தயாராயிடும். இங்கு எல்லா உணவும் அன்லிமிடெட் தான். வேண்டிய உணவை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சிலர் நிறைய சாப்பிடுவாங்க. சிலர் கொஞ்சமா சாப்பிடுவாங்க. அவங்களின் தேவைக்கு ஏற்ப உணவினை அவர்களே பரிமாறிக் கொள்ளலாம்.

காரணம் எனக்கு உணவை வீணாக்க பிடிக்காது. இதற்கு தான் நாம கஷ்டப்படுறோம். குப்பையில் கொட்டுவதற்கு, அளவோடு சாப்பிடலாமே. சமையல் துறையை பொறுத்தவரை நாம் குறிப்பிட்ட அளவு தான் என்று கணக்கிட முடியாது. ஒரு நாள் பத்து பேர் அதிகமா சாப்பிட வருவாங்க. சில நாட்களில் குறைவா இருக்கும். அதனால் நாங்க எப்போதுமே அளவா தான் சமைப்போம். அது மட்டுமில்லை நாங்களும் இங்க தான் சாப்பிடுவோம். அப்படியே உணவு மீந்துவிட்டால், எங்க கடையில் வேலைப் பார்ப்பவர்கள் வீட்டிற்கு செல்லும் போது எஞ்சிய உணவை அவர்களுக்குள் பிரித்துக் கொடுத்திடுவோம்.

அன்று சமைக்கும் உணவை நாங்க மறுநாள் வரை வைத்திருப்பதில்லை. அப்படி இருந்தால் உணவின் சுவை மாறிடும். சில சமயம் பழைய உணவு என்று வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்திடும். அந்த விஷயத்தில் நாங்க எப்போதுமே பழைய உணவினை கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியா இருக்கோம்’’ என்றவரை தொடர்ந்த தாமஸ் ஆரம்ப நிலையில் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.

‘‘எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், ஆரம்பிக்கும் போது முதலீடு போடணும். எல்லாருடைய கையிலும் காசு இருக்காது. கடன் வாங்கித்தான் இதை ஆரம்பிச்சேன். நல்லாவே போச்சு. கடனும் அடைச்சேன். ஆனால் என்னுடைய கடைக்கு எதிரே போட்டியாக வேறொரு உணவகம் வந்தது.

அதனால் என்னுடைய பிஸ்னஸ் கொஞ்சம் பாதிச்சது. அதற்காக கொஞ்சம் நிறையவே செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிறையவே இழந்ேதன்னு தான் சொல்லணும். இதற்கிடையில் கொரோனாவால் ஒரு ஆட்டம் கண்டது. கடையை திறக்க முடியல. கையில் இருந்த காசை வச்சு தான் சமாளிச்சோம். இப்ப மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாலும், வாடிக்கையாளர்களின் வரவு முன்பு போல் இல்லை.

காரணம் இங்கு இருக்கும் நிறுவனங்களை எல்லாம் மூடிவிட்டனர். இன்றும் கூட இங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் ஏதும் திறக்கவில்லை. வீட்டில் இருந்ேத வேலை என்பதால், அங்கு வேலை பார்த்தவர்கள் எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்க. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மூச்சு விட ஆரம்பிச்சு இருக்கோம். கொரோனா இரண்டாம் அலைன்னு சொல்றாங்க. சமாளிக்க முடியும் என்ற தைரியம் மட்டும் மனதில் இருக்கு. எங்களை பொறுத்தவரை இந்த கடையை பெரிய அளவில் கொண்டு வர விருப்பமில்லை. வரும் வாடிக்கையாளர்கள் வயிறார சாப்பிட்டு வாழ்த்தினாலே போதும்’’ என்றார் மாணிக்கவள்ளி.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்