வெளித்தெரியா வேர்கள்! டாக்டர் சாரதா மேனன்



நண்பர்களிடையே மாற்றி மாற்றிப் பேசுபவர்களை, “என்ன உன்னை கீழ்ப்பாக்கம் அனுப்பணுமா.?” என்று கிண்டலாய்க் கேட்பதைப் பார்த்திருப்போம். மனநலம் பிறழ்ந்தவர் என்றால் கீழ்ப்பாக்கம் என்று நினைப்பதற்குப் பின்னால் ஒரு மருத்துவரது வாழ்நாளே உறைந்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.?“டாக்டர் சாரதா மேனன்”... ஆம், இந்திய மனநோயின் வரலாற்றை எழுதும்போது, இவரது பெயரில்லாமல் எழுத முடியாது.
ஆனால் இவரது வாசலில், “மனநோய் மருத்துவர்” என்ற பெயர் பலகை கூட இருக்காது. “முதன்முதலாக ஒரு மனநோயாளியை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது, இதுபோன்ற பெயர்ப்பலகைகள் அவர்களுக்கு பெரும் அச்சத்தையும், தயக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்..” எனக் கூறும் டாக்டர் சாரதா மேனன், தனது 98 வயதில் இன்றும் தினசரி நோயாளிகளைப் பார்த்து வருகிறார்..

கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் 1923ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி, எட்டாவது பெண்குழந்தையாகப் பிறந்தவர். ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்த சாரதாவின் பெற்றோருக்கு, இவரது பிறப்பு ஏமாற்றத்தை தான் அளித்ததாம். பிற்பாடு, அரசுப் பணியிலிருந்த சாரதாவின் தந்தையின் வேலை சென்னைக்கு மாற்றலாகி, சென்னைவாசி ஆனார் சாரதா.

எட்டாவது குழந்தை என்பதால், பெரும்பாலும் மூத்த சகோதரியிடமே வளர்ந்த சாரதாவிற்கு, எப்படியோ மருத்துவம் பயில வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. பெண்களைப் படிக்கவைப்பதே பெரிது என்றிருந்த காலத்தில், மருத்துவப்படிப்பு அதுவும் ஆறு வருடங்கள் என்பதால் பெற்றோர் எதிர்த்தபோதும் தனது கனவை நிறைவேற்றும் உறுதியுடன் இருந்தார் சாரதா.

பள்ளிப்படிப்பை முடித்து, அறிவியலில் இளங்கலைப் பட்டத்தையும் வாங்கியபோது அடுத்த சோதனை. அவரின் 18 வயதில் அவர் தாயார் மறைந்தார். அப்படியும் தந்தையிடம் போராடி, அரசு நிதியுதவியுடன் மருத்துவம் சேர்ந்தவர், 1951ல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.

டெல்லி இர்வின் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பணியை முடித்துத் திரும்பிய சாரதாவிற்கு அடுத்த கட்டத்தைக் காட்டியது சாரதாவின் குடும்ப மருத்துவர். அவரது வழிகாட்டலில் ஆந்திரப்பிரதேசத்தின் பிட்டபுரம் மிஷன் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த சாரதா அங்கே, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு சிகிச்சையளித்தது தான், தனது மனதில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார்.

ஆம்..அதனால் தான் இருந்த சொற்ப பெண் மருத்துவர்களும் மகப்பேறு அல்லது குழந்தைநலம் ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுக்கையில் டாக்டர் சாரதா மனநோய் மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்கிறார்.

பெங்களூரின் நிம்ஹான்ஸ் (NIMHANS) மருத்துவமனையில் 1957ம் ஆண்டு மனநோய் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று இந்தியாவின் முதல் மனநோய் மருத்துவராக தேர்ச்சி பெற்ற சாரதா, அப்போதைய மனநோய்  மருத்துவமனைகளின் நிலையைப் பற்றி கூறும்போது, “ஒரே ஒரு நர்ஸ், ஒரே ஒரு மருந்து, ஓராயிரம் மனநோயாளிகள்” என மனநோய்க்கான மருத்துவம் ஆரம்பநிலையில் மட்டுமே காணப்பட்டதாகவும், அதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானதையும் நினைவு கூறுகிறார்.

இந்த நிலையில் மன அழுத்தம், மனப் பிறழ்வு, ஸ்கிசோஃப்ரினியா, பை போலார் என அனைத்து மனநோய்களுக்கும் தனி சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும், அதற்காக இந்தத் துறையில் தாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருப்பதையும் உணர்கிறார்.

நான்காண்டுகள் கழித்து, 1961ல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற டாக்டர் சாரதா, அரசு அனுமதிபெற்று மனநோய்க்கென தனிப்பிரிவை அங்கு துவங்கியதோடு, அதே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே மனநோயாளிகளுக்கான வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, தீவிர மனநோய் சிகிச்சைப் பிரிவு, அனைத்திற்கும் மேலாக புனரமைப்பு பிரிவு என பல்வேறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றாக செம்மைப்படுத்தத் தொடங்கினார்.

அதேநேரத்தில், “க்ளோர்ப்ரோமசின்” என்ற ஒரே ஒரு மருந்து என்ற நிலையை மாற்றி, மனநோய் மருத்துவத்தில் பல புதுமைகளைப் புகுத்தியதோடு, அது அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் எளிமைப்படுத்திட, மனநோய் மருத்துவம் என்றாலே அது கீழ்ப்பாக்கம்தான் என்று இந்திய அளவில் புகழடைய ஆரம்பிக்கிறது.

“மருத்துவ சிகிச்சை, மனவியல் ஆலோசனை மற்றும் மறுவாழ்வு என்பவை மனநோய் சிகிச்சையின் மூன்று முக்கியத் தூண்கள் என்றிருக்கும் போது, மூன்றாவது தூணாகிய மறுவாழ்வு மட்டும் ஏனோ எப்போதும் ஊனமுற்று இருப்பது தான் வேதனை..” என்று எப்போதும் வருத்தப்படும் டாக்டர் சாரதா, தன்னிடம் வருபவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மருத்துவமனை வளாகத்திலேயே கைத்தறி, கைவினைப்பொருட்கள் உற்பத்தி, தையல்கலை, தோட்டக்கலை ஆகியவற்றை ஊக்கப்படுத்தியதுடன், நோயாளிகள் செய்த கைவினைப் பொருட்களைக் கொண்டு கண்காட்சியை நடத்தி அவர்களின் மறுவாழ்விற்கும்  நம்பிக்கையளித்தார்.

அன்பு, பரிவு, கனிவு, ஈகை போன்ற தனது குணங்களால் தன்னிடம் வரும் நோயாளிகளை குணப்படுத்திய அதேவேளையில் கண்டிப்பு, நாணயம், ஒழுக்கம், நிர்வாகத்திறன் போன்ற குணங்களால் உதவி மருத்துவர்கள் மற்றும் மாணவர்களையும் வழிநடத்திக் கொண்டிருந்தார். “மற்ற நோய்களைப் போன்றதுதான் மனநோயும்.. ஆனால் இவர்களுக்கு மட்டும் தகுந்த சிகிச்சையுடன் கருணையும் சற்று அதிகம் தேவைப்படுகிறது..” என்று கூறும் டாக்டர் சாரதா, அதை மற்ற மருத்துவர்களும் மாணவப் பருவத்திலேயே உணர்ந்தால் நல்லது என்று இளங்கலை மருத்துவப் பாடத்திட்டத்தில், மனநோய் மருத்துவத்தை அறிமுகப்படுத்தி அவர்களது பயிற்சி காலத்தையும் அதிகப்படுத்தினார்.

அதேபோல, மனநோயாளிகளின் கண்ணியம் மற்றும் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் 1996ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் Disability Act என்ற மனிதக் குறைபாடுகள் ஆணையில், மனநோயை சேர்த்ததும் இவரது பரிந்துரையால் தான்.. “சமூகத்தால் எப்போதும் நிராகரிக்கப்படுபவர்கள் மனநோயாளிகள் மட்டுமல்ல. அவர்களது மருத்துவரும் தான். எத்தனையோ முறை, தான் சிகிச்சையளித்த பெண்ணின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொண்டுவரும் பெற்றோர்கள், விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என நேரடியாக கேட்டுக் கொண்ட சம்பவங்களும் உண்டு” என்று புன்னகைக்கும் டாக்டர் சாரதா, அதற்காக வருந்தாமல், “அவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது..” என்கிறார்.

“சுறுசுறுப்பான மனமே, சிறந்த மனம்” என்பதைக் கருத்தில் கொண்டு, தனது பணி ஓய்வுக்குப் பிறகு, 1984ம் ஆண்டு, தனது வீட்டிலேயே ஸ்கார்ஃப் என்ற நிறுவனத்தை (Schizophrenia Research Foundation) தொடங்கி ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளுக்கான சீரமைப்புப் பணிகளை
மேற்கொண்ட சாரதா, தொடர்ந்து செஞ்சிலுவை சங்கம், ஒய்.டபுள்யு.சி.ஏ, சேவா சதன், நவஜீவன், ஆஷா ஆகிய சமூக அமைப்புகளின் உதவியுடனும், அரசின் நிதியுதவியுடனும் ஸ்கார்ஃப் நிறுவனத்தை முறையாக வழிநடத்த, தற்போது திருவேற்காடு, மகாபலிபுரம், அண்ணா நகர் என தனது கிளைகளைப் பரப்பி எண்ணற்றோருக்கு நல்வாழ்வு அளித்து வருகிறது இந்நிறுவனம்.

இவரது அயராத மருத்துவப் பணிகள், இவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது, ‘சிறந்த மருத்துவர் விருது, ‘அவ்வையார் விருது, ‘அன்னை தெரசா விருது, ‘பத்மபூஷன் விருது, ‘பாஸ்டனின் சர்வதேச மனநோய் புனரமைப்பு விருது  என பல விருதுகளைப் பெற்றுத் தந்த போதிலும், “எல்லாவற்றையும் விட எனது நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புவது தான் மிகப்பெரிய விருது” என்று கூறுகிறார் டாக்டர் சாரதா.

தொண்ணூற்றி ஏழு வயதைத் தாண்டிய பின்பும் காலை 6 மணிக்குத் தொடங்கும் இவரது பணிகள், இரவு பத்து மணிவரை நீடிக்க, “மனநோய் என்பதும் மற்றதைப் போல ஒரு நோய்தான் என்று அனைவராலும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை, நான் மருத்துவப்பணி புரிந்திடுவேன்” என்று கூறும் டாக்டர் சாரதா, குருவாயூரப்பன் பாடல்கள், சுடோக்கு, புதிர்கள், ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகங்கள், பிராணாயாமம், சினிமா என இன்றும் தனது ஓய்வு நேரத்தை இன்னும் இனிமையாக்கிக் கொள்கிறார்.

கனிவு மற்றும் கருணை என்ற மொழிகளை நீங்கள் பேசும்போது, அதைக் குருடர்களால் பார்க்க முடியும்.. செவிடர்களால் கேட்க முடியும்... என்கிறார் மார்க் ட்வெய்ன். ஆனால், மனநோயாளியால் கூட அதனைப் புரிந்துகொள்ளவும் முடியும் என்று தனது வாழ்வின் மூலம் நிரூபித்த டாக்டர் சாரதா மேனன், “உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் மன ஆரோக்கியமே.. பெற்றோரின் அரவணைப்பு, சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மற்றும் நல்வழிப்படுத்தும் கல்வி ஆகியன மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பதுடன், ஒரு தலைமுறையையே நல்வழிப்படுத்த உதவும்” என்கிறார்.

ஆம்.. மனநோய் சிகிச்சை முறைகளில், நமது தலைமுறைக்கு தற்போதைய தேவை, சிறிது வெளிச்சம், சிறிது உரையாடல் மற்றும் டாக்டர் சாரதா போன்ற சில ஒப்பற்ற மருத்துவர்களின் சிறந்த வழிகாட்டல்களுமே..!!