சுயமரியாதை இருபாலருக்கும் பொதுவானதே!



‘‘இரண்டாம் பாலினமான பெண்கள், சமூகத்திலும் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான வன்முறை என்பது, அவர்கள் பிறப்பதற்கு முன்பே துவங்கி விடுகிறது. கருவிலேயே பெண் என தெரிந்தவுடன் அழிப்பதில் தொடங்கி, பிறந்த பின்னும் பெண் சிசுக்கொலை என்ற வடிவத்தில், அவர்கள் உயிர் வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை உலக அளவில் 140 மில்லியன் என்றும், இந்தியாவில் 46 மில்லியன் என்கிறது புள்ளி விவரங்கள்’’ என்கிறார் வழக்கறிஞர்  நிர்மலா.

முன்பைவிட இச்சமூகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் பெண்கள் விஷயத்தில், பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது. ஏனெனில் பெண்ணியம், பெண்ணுரிமை என கூறிவிட்டால், நம்மை வேற்றுக்கிரக வாசிகளாக அந்நியப்படுத்தும் தன்மை, நம் சமூகத்தில் உள்ளது. பெண்ணுரிமை என்பது சமத்துவமும், ஆண்களுக்குரிய நியாயமான உரிமைகள், பெண்களுக்கும் உண்டு என்பதைத் தவிர
வேறொன்றுமில்லை.

இன்றைய காலகட்டத்தில், பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் தான் பள்ளி, கல்லூரிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சேர்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் முதல் இடங்களை பிடிப்பது பெண்களே! மேலும் தேர்ச்சி விகிதத்திலும் முன்னிலை பெறுவது பெண்களே ஆவர்.

ஆனால் இப்படி பள்ளி, கல்லூரி படிப்புகளில், முன்னிலை வகிக்கும் பெண்கள், வேலைக்கு செல்வதில், ஆண்களை விட பல மடங்கு பின்தங்கி விடுகின்றனர். எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் இது குறித்து, ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 2005 ஆம் ஆண்டு வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக இருந்தது. பிறகு 13 வருடம் கழித்து, 2018ல் இந்த கணக்கெடுப்பை மறுபடி எடுத்தபோது, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை, 26 சதவீதமாக குறைந்திருந்து அதிர்ச்சி அளித்தது.

இதற்கு முக்கிய காரணங்கள் திருமணம், குழந்தை வளர்ப்பு, பணி பாதுகாப்பின்மை, வாய்ப்புகள் குறைவு போன்றவையே ஆகும். இதற்கு உதாரணமாக, பெரும்பாலும் எல்லா வீடுகளிலும், பெண்கள் தான் சமைக்கிறார்கள் என்றாலும், நல்ல அங்கீகாரமும், சம்பளமும் கிடைக்கும் ஹோட்டல்களில் எல்லாம், ஆண்கள்தான் செஃப்பாக பணியில் உள்ளனர். அதேபோல் 2020- ம் ஆண்டில் கூட, ராணுவத்தில், பணி நிரந்தரம் பெறுவதற்கும், பதவி உயர்வுக்கும், பெண் ராணுவ உயர் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியே, ஓரளவு தீர்வு பெற முடிந்தது.

பெரிய விஷயங்கள் எல்லாம் சிறிய அளவில்தான் துவங்கும் என்பதற்கேற்ப, இதற்கான விதையை நமது வீடுகளில் தான் விதைக்க வேண்டும். முக்கியமாக பெண் குழந்தையையும், ஆண் குழந்தையையும் எந்த வேறுபாடுமின்றி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு, மனதில் இருப்பதை வீட்டில் சொல்லக் கூடிய  சூழலை,வெளியை  நாம் உருவாக்க வேண்டும். இருவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். சமமான பொறுப்புகளும், சுதந்திரமும் வழங்கப்படவேண்டும். ஆனால், சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் செயல்படுவது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் “Freedom comes with Responsibility” என்பார்கள்.

இவ்வாறு பொறுப்புடன் கூடிய சுதந்திரத்தை உணர்ந்து வளரும் குழந்தைகள், தன்னம்பிக்கை மிக்கவர்களாக, எச்சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதி படைத்தவர்களாக வளர்வார்கள். இதையும் தாண்டி, பெண்கள் பள்ளிகள், கல்லூரிகள், வேலையிடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்களை வீட்டில் சொல்லும் அளவுக்கு, தைரியம் அளிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் அல்லது கணவர்கள், இவ்விஷயத்தில் பெண்களுக்கு பக்கபலமாய் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு நடக்கக்கூடாது. இருப்பினும் எதிர்பாராமல், ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால், உடனே மானம் போய்விட்டது, அப்பெண் உயிரோடு இருக்கவே தகுதியற்றவர் என்பது போன்ற கருத்தியல்களை உடைக்க வேண்டும். எப்படி ஒரு விபத்தில் கடுமையாக அடிபட்டாலும், அதிலிருந்து படிப்படியாக வெளிவருவோமோ அதுபோலவே, பாலியல் வன்முறையும், பெண் மீதான விபத்து என்பதை உணர்ந்து, அதிலிருந்து மீள்வோம் என்ற  புதிய பார்வையை கைக்கொள்ளல் வேண்டும்.

நிறைவாக, சுயமரியாதை என்பது பெண், ஆண் என இருபாலருக்கும் பொதுவானதே. வீட்டிலேயே சுயமரியாதையோடு இயங்கும் பெண்கள், வெளியிடங்கள், வேலை என எல்லா நிலைகளிலும், சுயமரியாதையோடு செயல்படுவதையே, அடிப்படையாகக் கொள்வார்கள். அப்படி இயங்கும் பெண்கள், தன்னம்பிக்கை மிக்கவர்களாக, மற்றவர் உரிமைகளை மதிப்பவர்களாக, சுயம் உணர்ந்தவர்களாக, தடைக்கற்களை தாண்டு பவர்களாக, அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆளுமைமிக்க, முதன்மைப் பெண்களாக, முன்னேற்றம் பெறுவது உறுதி’’ என்றார் நிர்மலா.