தாய்ப்பால் எனும் தடுப்பூசி



உலகிலேயே விலை மதிப்பில்லாத உணவுப் பொருள் என்றால் தாய்ப்பால்தான். குழந்தைக்கு முதல் உணவு; முதல் தடுப்பூசியும் இது தான். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தருவதன் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான போதிய சத்துக்கள் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை. குழந்தைக்கு தொற்று நோய் வராமல் தடுக்கும் ஆயுதமான தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி நிரம்பியுள்ளது.

பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் தரக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் வலியுறுத்துவதுண்டு. ஆனால் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தாய்மார்களிடையே உண்மைக்கு மாறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அது குறித்த விழிப்புணர்வு குறித்து பாலூட்டுதல் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன் விளக்குகிறார்.

தாய்ப்பால் கொடுப்பது கடினமானது

குழந்தைகள் பிறக்கும்போதே தாயாரிடம் இருந்து தாய்ப்பால் பருகும் எதிர்பார்ப்புடனேயே பிறக்கின்றன. ஆனாலும் பல தாய்மார்களுக்கு குழந்தையை சரியான முறையில் மார்பகத்துடன் அணைத்து தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை. அதற்கு முறையான பயிற்சி இன்றைய தலைமுறை தாய்மார்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. மேலும் அவ்வாறு கொடுக்கும் போது தாய்மார்ளுக்கும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் எளிதாகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் காயம் ஏற்படும்

குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கற்றுக்கொள்வது என்பது பல தாய்மார்களுக்கு உகந்த அனுபவமாக இருந்ததில்லை. சரியான நிலையில் வைத்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் முலைக்காம்பில் காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு முலைக்காம்புகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்

தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு முலைக்காம்புகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை பிறக்கும்போதே தனது தாயின் மணத்தையும், குரலையும் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்திருக்கும். முலைக்காம்பில் இருந்து ஒருவிதமான தனிமம் உற்பத்தியாகும். அதில் உள்ள நலமளிக்கும் பாக்டீரியா குழந்தையின் நலமான வாழ்க்கைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை.

தாயையும் குழந்தையையும் பிரித்து வைக்க வேண்டும்

குழந்தை பிறந்த உடனே தாயையும் குழந்தையையும் அருகருகே வைத்திருக்கக் கூடிய அவசியத்தை டாக்டர்களும், நர்சுகளும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். குழந்தை நேரடியாக தாயுடன் தொடர்பில் இருக்கும் போது, அதாவது குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த நடைமுறையை மேற்கொண்டால் அதன்பின்பு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதற்கு உதவி புரியும்.

தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் வெறும் சாதத்தை மட்டுமே உண்ண வேண்டும்

அனைவரையும் போலவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சரிவிகித உணவை சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. பொதுவாக உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. குழந்தைகள் கர்ப்பப்பையில் இருக்கும்போதே தங்களது தாயின் உணவு பழக்கத்தை புரிந்து கொள்கின்றன. சில குறிப்பிட்ட உணவை தாய்மார்கள் சாப்பிடும்போது குழந்தை எதிர்மறையாக செயல்படுவதாக உணர்நதால் மருத்துவ நிபுணர்களை ஆலோசிப்பது நல்லது.

உடற்பயிற்சி செய்வதால் தாய்ப்பாலின் சுவை பாதிக்கப்படும்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உள்பட அனைவருக்கும் உடற்பயிற்சி உடல்நலனுக்கு உகந்தது. உடற்பயிற்சி தாய்ப்பாலின் சுவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

மார்போடு நேரடியாக பொருந்தாத வரையில் தாய்ப்பால் கொடுக்க இயலவில்லை

குழந்தை பிறந்த முதல் ஒரு மணிநேரத்தில் தாய்ப்பால் கொடுக்க துவங்கினால் அது மிகவும எளிதானதாகிவிடும். ஏனென்றால் அந்த நேரத்தில்தான் மிகவும் வலுவான முறையில் குழந்தையின் பிரதிபலிப்பு இருக்கும். குழந்தையும் தாய்ப்பால் குடிக்கும் முறையை கற்றுக்கொள்ளும். சில சமயங்களில் குழந்தை பிறந்த உடனேயே தாய்ப்பால் புகட்ட முடியாத நிலை ஏற்படும். அந்த சமயத்தில் எப்போதெல்லாம் முடிகிறதோ
அப்போதெல்லாம் கொடுக்கலாம்.  

தாய்ப்பால் கொடுக்கும் போது விதிமுறைகளை பின்பற்றக்கூடாது

தாய்ப்பால் கொடுக்கும் போது, சில சமயங்களில் தாய்மார்கள் தாய்ப்பாலுக்கு மாற்றாக இதர பொருட்களையோ, விதிமுறைகளையோ பின்பற்ற நினைத்தால் அது குறித்து ஆலோசனை பெறுவது அவசியம். தாய்ப்பால் சுரக்கும் போது எப்போதெல்லாம் இயலுமோ அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

போதுமான தாய்ப்பால் சுரப்பதில்லை

எல்லாருக்கும் தங்கள் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கும். குழந்தையை பொறுத்தவரை தனக்கு தேவையான பாலை சப்பி குடித்து பிறகு
விடுவித்துக் கொள்ளும். அதுவே தாய்ப்பால் சுரக்கிறது என்பதை தீர்மானிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு பெண்ணின் வேலை மட்டுமல்ல, அது குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்தும். அந்த சமயத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க நன்கு சாப்பிட வேண்டும்.

உடல் நலமில்லாத போது தாய்ப்பால் கொடுக்கக்கூடாது

நோயின் தன்மைக்கு ஏற்ப வழக்கம் போல் தாய்ப்பால் கொடுக்கலாம். சரியான மருத்துவ சிகிச்சை, ஓய்வு, நல்லமுறையில் உணவு அருந்துவது, திரவங்களை பருகுவதையும் உறுதி செய்யவேண்டும். மேலும் டாக்டரின் ஆலோசனை பெற்று பிறகு தாய்ப்பால் கொடுக்கலாம்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பிணைப்பை ஏற்படுத்தும்

அனைத்து குழந்தைகளும் வேறுபட்டவை. சில குழந்தைகள் தாய்ப்பால் சரிவர குடிக்காது, அது எப்படி குடிக்கிறது என்பது விஷயமல்ல. ஆனால் தாய்ப்பால் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். தாய்ப்பால் பல வழிகளில் நன்மை அளிக்கிறது. தாய்ப்பால் காரணமாக குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு ஆழ்ந்த பிணைப்பு உருவாகிறது.

ஒரு வருடத்துக்கு மேல் தாய்ப்பாலை நிறுத்துவது கடினம்

ஒரு ஆண்டுக்கு பின்னர் தாய்ப்பாலை நிறுத்துவது கடினம் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் பல வித நன்மைகள் ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. அனைத்து தாய்மார்களும் குழந்தைகளும் வேறுபட்டவர்கள். எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை இருவருமே தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

வேலைக்கு செல்வதால், தாய்ப்பால் கொடுப்பது தடைபடும்

தாய்மார்கள் வேலைக்கு திரும்பிய பின்னரும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். அலுவலகம் வீட்டுக்கு அருகே இருந்தால் மதிய இடைவேளையின் போது வீட்டுக்கு சென்று கொடுக்கலாம். அல்லது தாய்ப்பாலை எடுத்து வைக்கும் கருவியுள்ளது. அதைப் பயன்படுத்தி தாய்ப்பாலை சேமித்து வைத்துவிட்டு வேலைக்கு வரலாம். இதனால் நீங்கள் அலுவலகம் சென்று இருக்கும் நேரத்திலும் தாய்ப்பால் குழந்தைக்கு சென்றடையும். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு உடனே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு டயேரியா, வாந்தி இருந்தால் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது

குழந்தையின் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்து தாய்ப்பால். சில வேளைகளுக்கு மட்டும் மற்ற உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதேவேளை தாய்ப்பால் கொடுப்பதை தொடரவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர, டயேரியா, வாந்தி போன்றவை ஏற்படும் நேரங்களில் குழந்தையின் திரவ தேவையை தாய்ப்பால் பூர்த்தி செய்கிறது. இதர உணவுகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது, குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது


குழந்தை பிறந்த நான்கு நாட்கள் போதுமான தாய்ப்பால் கிடைப்பதில்லை

இதுபோல் நடப்பதற்கு காரணம் குழந்தைக்கு சரியான முறையில் பால் புகட்டாதது தான் காரணம். அதனால் தான் குழந்தைக்கு பால் கிடைப்பதில்லை. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் அது பசியுடனேயே இருக்கும். சரியான முறையில் குடிக்க வைக்கவில்லை என்றால் தாயிடம் இருந்து கிடைக்கும் சீம்பால் எனப்படும் முதல் தாய்ப்பாலும் குழந்தைக்கு கிடைக்காது. ஒரு முறை தாய்ப்பால் கைவிடப்பட்டால் குழந்தை சரிவர பால் குடிக்காது. எனவே ஆரம்பத்தில் இருந்தே சரியான முறையில் பால் குடிக்க கற்றுத்தரவேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்

தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அனைத்து நீரும் உள்ளது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை முதல் 6 மாதம் நல்ல வளர்ச்சி பெறும். அதற்கு வேறு எதுவும் தேவையில்லை. தாய்ப்பாலுடன் தண்ணீர் கொடுத்தால், குழந்தைக்கு பால் குடிப்பதில் ஆர்வம் குறையும். தாய்ப்பால் சுரப்பும் குறையும்.

சிசேரியன் செய்தவர்கள் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. மயக்க மருந்து பாதிப்பில் இருந்த வெளிவந்த உடனேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க துவங்கலாம். ஒருபக்கமாக சாய்த்து படுத்துக்கொண்டு கொடுக்கலாம். குழந்தையை வயிற்றுப்பகுதியில் படுக்க வைத்துக்கொண்டு ஊட்டலாம்.

இரவு நேரத்தில் மட்டுமே குழந்தை துங்க வேண்டும்

ஒவ்வொரு குழந்தைக்கும் தூக்க நேரம் மாறுபடும், பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருக்கும், பகலில் தூங்கும். பெற்றோருடன் சேர்ந்து எழும் பழக்கம் வர 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.

அடிக்கடி தூங்குவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்

குழந்தையானது கர்ப்பப்பையில் 9 மாதம் வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருந்தவை. அதே போன்ற சூழ்நிலையை விரும்புவதால் படுக்கை அல்லது தொட்டிலில் படுக்க வைத்திருப்பதைவிட, கைகளில் தூக்கி வைத்திருக்கும்போதும் அமைதியாக இருக்கும். அதனால் பாதிப்பு ஏற்படாது’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.

ஷன்மதி