என்ன செய்வது தோழி?அடி,உதைதான் வாழ்க்கையா?



அன்புடன் தோழிக்கு, எனக்கு வயது 38, +2 வரை படித்திருக்கிறேன். நன்றாக படம் வரைவேன். ஓவியக்கல்லூரியில் படிக்க விரும்பினேன். ஆனால் வீட்டில் வேறு படிப்பு படிக்கச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லை. அதனால், கல்லூரியில் சேர மறுத்து விட்டேன்.

வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க  ஆரம்பித்தனர். என்னை பார்க்க வந்த முதல் மாப்பிள்ளையே ‘ஓகே’ என்றார். ஆனால் எங்களுக்குதான் தயக்கமாக இருந்தது. காரணம் அவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. அவர்களை பற்றி விசாரித்த போது, அவரின் மூத்த அண்ணன்கள் கல்யாணம் ஆன நான்கைந்து மாதங்களில் தனிக்குடித்தனம் போய்விட்டார்களாம். காரணம் அவரது அம்மாதான் என்று சொன்னார்கள். இந்த காரணங்களால் நாங்கள் ‘சரி’ என்று சொல்ல தயங்கினோம்.

ஆனால் அவர்கள் விடவில்லை. தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தனர். எங்கள் ஊரில் இருந்த அவர்களது உறவினர்களும் ‘நல்ல குடும்பம்.... நல்ல பையன்’ என்று சொன்னார்கள். அவரது அப்பாவும் அடிக்கடி வந்து ‘எங்களை பிடிக்காதவங்க யாரோ தப்பா சொல்லியிருக்காங்க... உங்க பொண்ண நாங்க நல்ல பாத்துக்குவோம்’னு பேசினார்.

தெரிந்தவர்கள் சொன்னதை நம்பி ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டில் ‘சரி’ என்று சொல்லிவிட்டார்கள். காரணம் முதலில் வந்த வரனை தட்ட வேண்டாம் என்பதுதான் எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் எண்ணமாக இருந்தது. இத்தனைக்கும் எனக்கு அப்போது 23 வயதுதான். அவர்கள் எண்ணப்படி திருமணமும் நடந்தது. வாழச் சென்ற பிறகுதான், அவர்களின் கெடுபிடிகள் தெரிந்தன. அந்த வீட்டில் மாமியார் சொல்வதுதான் சட்டம். மாமனார் கூட அவரிடம் கை கட்டித்தான் பேசுவார்.

என் வீட்டுக்காரரோ அம்மாவிடம் கேட்காமல் என்னிடம் பேசக்கூட மாட்டார்.கல்யாணம் ஆன புதிதில் மட்டுமல்ல குழந்தைகள் பிறந்த பிறகும் அதுதான் நிலைமை. அவர் அம்மா இல்லாத போது நன்றாக பேசுவார். அம்மா இருந்தால் நான் இருக்கும் பக்கமே திரும்ப மாட்டார். என் மாமியாரோ ஏதாவது குறை கண்டுபிடித்து, திட்டிக் கொண்டே இருப்பார். நான் ஏதாவது பதில் சொன்னால் கோபம் வந்து விடும். தன் மகனை ஏவிவிட்டு அடிப்பார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன.

ஒருமுறை அவர் அடித்து ரத்தமே வந்து விட்டது. என் மாமியாரோ, ‘கொஞ்சம் மொளகாப் பொடியை அதுமேல தூவுடா அவளுக்கு சொகமாக இருக்கும்’ என்றார். வலி தாங்காமல் இரவு முழுவதும் அழுது கொண்டு இருந்தேன். மறுநாள் பக்கத்து வீட்டுக்காரர் மூலம் விஷயம் தெரிந்து எங்கள் வீட்டினர் வந்து கேட்டனர். அவர்களை மிரட்டிய மாமியார், ‘என் மருமகன் ஐகோர்ட்ல வேலை செய்றாரு... எல்லோரையும் புடிச்சி உள்ளே போட்ருவோம்னு’ சொன்னாங்க. அவங்களும் பயந்து போய் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வந்து என்னை அழைத்து விசாரித்தனர். அவர்களிடமும் அதே ஐகோர்ட் கதையை சொன்னார்கள். ஆனால் என் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு புகார் வாங்கிக் கொண்டனர். விசாரித்து குழந்தையுடன் என் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

சில மாதங்கள் கழித்து அவர்களே சமாதானம் பேச வந்தனர். அப்போதும் மாமனார்தான் வந்தார். ‘குடும்பம்ன்னா அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா பிரச்னை இருக்காது’ என்றார். எங்க வீட்டில் என்னை அனுப்ப மறுத்துவிட்டனர். ஆனால் என் மாமனாரோ விடாமல் சமாதானம் பேச வந்ததால், எவ்வளவு நாட்களுக்கு அம்மா வீட்டில் இருப்பது என்று எங்கள் வீட்டிலும் சமாதானம் ஆனார்கள். ஆனால் அவர்கள் ‘புகாரை வாபஸ் வாங்கிடுங்க’ என்றனர். சரி இனி பிரச்னை இருக்காதுன்னு நாங்களும் புகாரை வாபஸ் பெற்றோம். கொஞ்ச நாட்கள் அமைதியாக போனது. பிறகு பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக என் மாமியார் தனது வேலையை காட்டினார். மீண்டும், பிரச்னை, போலீசார் புகார்
என்பது தொடர்கதையானது.

சமாதானம் ஆவதும், புகாரை திரும்ப பெறுவதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது எனக்கு 2 பிள்ளைகள். பெரியவளுக்கு 9 வயதாகி விட்டது. இவ்வளவு நாட்கள் ஆகியும் மாமியார் கொடுமையில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை. நாத்தனார், அவரது வீட்டுக்காரர் ஆகியோர் வீட்டுக்கு வந்தால் என்னை ஒரு அடிமை போல் நடத்துவார்கள். ‘அந்த வேலை செய், இந்த வேலை செய்’ என்று விரட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு விதவிதமாக சமைத்துப் போட வேண்டும். அவற்றில் எதையும் நான் தொடக் கூடாது. அப்படியே சாப்பிட்டால் பிரச்னைதான். அதனாலேயே அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். சில நேரங்களில் மாமியார், மாமனார், என் கணவர் 3 பேர் மட்டும் சமைத்து
சாப்பிடுவார்கள். எனக்கு மட்டுமல்ல எனது பிள்ளைகளுக்கு கூட தரமாட்டார்கள். குழந்தைகள் ஏக்கமாக பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கும். என் அம்மா வீட்டுக்கு போனால்தான் அவர்கள் விரும்பியது கிடைக்கும். அதனால் ஊருக்கு போனால் மீண்டும் இங்கு வர மறுத்து குழந்தைகள் அடம் பிடிப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு வைத்த ரசம் மிச்சமானது. அடுத்தநாள் சாப்பிடும் நிலையில் இல்லாததால் கீழே ஊற்றிவிட்டேன். ஆரம்பித்தது பிரச்னை. என் கணவரிடம் புகார் சென்றது. என்னால் பொறுக்க முடியாமல், ‘உங்கள மாதிரி நாங்க கடையில வாங்கறதில்லை... எல்லாம் எங்க காட்லேயே விளையுது’ என்றேன். உடனே ‘என்னையே எதிர்த்து பேசறா...நீ வேடிக்க பாக்கறீயா’ என்று கேட்க, என் கணவர், கண்மண் தெரியாமல் அடித்துவிட்டார்.

அதைப் பார்த்த குழந்தைகள் அழ ஆரம்பித்து விட்டனர். அடித்து களைத்து, அவர்கள் தூங்க சென்ற நேரத்தில், இனியும் பொறுக்க முடியாது என்று நானே போலீசுக்கு போன் செய்தேன். காலையில் போலீஸ் வந்து என்னிடமும் குழந்தைகளிடமும் விசாரித்தனர். என் மாமியார் வழக்கம் போல், ‘என் மருமகன் ஐகோர்ட்ல வேலை செய்றாரு தெரியுமா.... இந்த பொண்ணு சொல்ற பொய்ய நம்பனா உங்களுக்குதான பிரச்னை’
என்றார். அதற்கு அந்த பெண் போலீஸ், ‘எங்களுக்கு ஜட்ஜே தெரியும். உங்க வேலைய பாருங்க’ என்று சொல்லிவிட்டார்.

அதற்கு பிறகு வழக்கம் போல் புகார். விசாரித்து விட்டு என்னையையும் குழந்தையையும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக என் கணவரையும் அழைத்து விசாரித்தனர். அதை தெரிந்து கொண்ட அவங்க மருமகன் போலீஸ் ஸ்டேஷன் சென்று மிரட்டினாராம்.இப்போதும் மீண்டும் மாமனார் சமாதானத்துக்கு வருகிறார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த முறை அங்கிருந்து புறப்படும் போதே, ‘இந்த வாழ்க்கை போதும்... விவாகரத்து செய்து விடலாம்’ என்றுதான் நினைத்தேன்.

முன்பு அம்மா வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் மட்டும்தான். இப்போது அண்ணிகள் இருக்கிறார்கள். அவர்களும் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு தான் யோசனையாக இருந்தது. குழந்தைகள் அங்கு படிப்பதால் அவர்களின் எதிர்காலத்தையும் ேயாசிக்க வேண்டி உள்ளது. அதனால் சரி என்று சொல்லும் மனநிலைக்கு வந்து விட்டேன். வழக்கம் போல் அவர்கள் புகாரை வாபஸ் வாங்குங்கன்னு சொல்றாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொன்னால், ‘போம்மா உனக்கு இதே வேலையா போச்சு... நாளைக்கு உன்ன, அவன் ஏதாவது பண்ணா என்ன செய்வே... புகார் அப்படியே இருக்கட்டும்... அவன எழுதி குடுக்கச் சொல்லு இனிமே அடிக்க மாட்டேன், டார்ச்சர் பண்ண
மாட்டேன்னு’ என்று சொல்கிறார்கள்.

மாமியார் வீட்டிலோ ‘எழுதியெல்லாம் தர முடியாது.... புகார திரும்ப வாங்கிட்டு வா’ என்கிறார்கள். என்ன செய்வது புரியவில்லை. புகாரை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அங்கே போனால் அடி உதையும், அவமானமும் கட்டாயம் இருக்கும். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு அம்மா வீட்டிலேயே வாழ்வது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். எங்கள் வீட்டில் உன் விருப்பம் என்கிறார்கள். கூடவே அவர்களின் வக்கீலும், சொந்தக்காரர்களும், ‘எல்லாம் மாமனார் சம்பாதிச்ச சொத்து.... அதனால அவர் விரும்பறவங்களுக்கு தரலாம். உன் பசங்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்டும். பசங்களோட அங்கே போய் வாழு’ என்கின்றனர்.

என் விருப்பம் என்னவென்றே எனக்கு தெரியவில்லை.... குழந்தைகளுக்காகத்தான் யோசிக்கிறேன். போலீசில் புகாரை திரும்ப தந்துவிடுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியுமா? அதற்கு சட்டம் அனுமதிக்குமா?இப்படி கொடுமை செய்யும் கணவரையும், அவரது அம்மா, அப்பாவை திருத்தவோ, ஒழுங்காக இருக்க வைக்க சட்டத்தில் ஏதும் இடமில்லையா? அவங்க மருமகன் ஐகோர்ட்ல வேலை செய்வதால் அவர் சொல்வதைத்தான் நீதிபதிகள் கேட்பார்களா? எனது குழந்தைகளுக்கு தங்கள் தாத்தா சம்பாதித்த சொத்தில் உரிமை இல்லையா?காலமெல்லாம் அடி, உதை என்று வாழ்வதை விட விவாகரத்து செய்து விடலாமா? தனியாக வாழ்வது எளிதாக இருக்குமா? என்ன செய்வது தோழி ? எனது பிள்ளைகள் எதிர்காலம் நன்றாக இருக்க, முடிந்தால் நானும் நிம்மதியாக வாழ வழிகாட்டுங்கள் தோழி?இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,நீங்கள் இப்போது குழப்பத்தில், கடினமான சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அவசரப்பட்டு முடிவு எடுக்கக்
கூடாது. நிதானமாக யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். இப்போது உங்கள் முன் 2 தீர்வுகள் உள்ளன. ஒன்று இதே வாழ்க்கையை தொடர்வது... அல்லது அவரை பிரிந்து, உங்கள் குழந்தைகளுடன் தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வது. எது சரியாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அப்படி எடுக்கும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்சேர்ந்து வாழ்வதில் என்னென்ன பிரச்னைகள்? கணவரை, மாமியார் வீட்டிலிருந்து விலகி விவாகரத்து வாங்கிக் ெகாண்டு வாழ்வதால் என்ன பிரச்னைகள் என்பதை பார்ப்போம்.

விவாகரத்து வேண்டாம், ஆனால் தனித்து வாழலாம் என்றால் அங்கிருந்து தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். சரி விவாகரத்துக்கு விண்ணப்பித்ததும் உடனே கிடைத்து விடாது. ஆனால் அதற்கு முயற்சிப்பதற்கு முன்பு எதிர்கொள்ள வேண்டிய சவால்களை ெதரிந்து கொள்ளுங்கள். முதல் சவால் உங்கள் அம்மா வீட்டில் இருப்பது... அது சரியாக இருக்காது. அங்கு சூழல் மாறிவிட்டது என்பதை நீங்களே சரியாக புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் தனியாக இருக்க வேண்டும். அதற்கு இடம் வேண்டும். தனியாக குடும்பம் நடத்த, பிள்ளைகளை படிக்க வைக்க, வருமானம், வசதிகள் வேண்டும். அவைதான் உங்கள் தயக்கத்துக்கு காரணம்.

அதனால் இந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஒரு வழக்கறிஞரை பாருங்கள். உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் என்னென்ன சட்ட உரிமைகள் இருக்கிறது என்பதை ெதரிந்து கொள்ளலாம். அந்த உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்கலாம். உதாரணத்துக்கு ஜீவனாம்சம், குழந்தைகள் படிப்புக்கான செலவுகள், சொத்து உரிமை குறித்து வக்கீல் மூலம் அறியலாம். உங்கள் மாமியார் வீட்டில் நடந்த கொடுமைகளுக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகார்கள், விசாரணைகள் ஆதாரமாக இருக்கும்.

உங்கள் திருமணம் ரத்தாகும் வரை அவர்கள் வீட்டிலிருந்தும், ஐகோர்ட் மருமகனிடமிருந்தும் மிரட்டல்கள் வரலாம். கலங்காதீர்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. விவாகரத்து வேலைகளை ஆரம்பிக்கும் போதே எதிர்காலத்தை திட்டமிடுங்கள். உங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு உடனடியாக ஒரு வேலை வேண்டும். முதலில் தேவையான ஊதியம் கிடைக்காமல் இருக்கலாம்.  பின்னர் சரியாகும். அதுவரை அம்மா வீட்டில் இருக்க முடியுமா என்றும் பாருங்கள்.

துணிந்து விட்டீர்கள் என்றால் உங்கள் பயணம் சிறப்பாக இருக்கும். ஆரம்பத்தில் சிரமங்கள் வந்தாலும், பின்னாடி சாதிப்பீர்கள். மாமியார் வீட்டுச் சூழலில் வாழ்ந்தால் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. வீட்டு பிரச்னைகள் அவர்களை பாதிக்கும். அவர்களால் நிம்மதியாக படிக்க முடியாது. மனதளவில் பாதிப்பு ஏற்படும்.

இவ்வளவு விஷயங்களையும் ஆலோசித்து, சரியான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். சோதனைகளை தாண்டி வரும் போதுதான், உங்கள் மனதிலும் நானும் ெஜயித்து விட்டேன் என்ற எண்ணம் வரும். சோர்ந்து போக வேண்டாம். வெற்றி பெறுபவர்கள் ‘கஷ்டமாக இருக்கும், ஆனால் கட்டாயம் முடியும்’ என்று நினைப்பார்கள். உங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.

மனநல ஆலோசகர்

உங்கள் பிரச்னை தொடர்பாக நீங்கள் கொடுத்த புகாரை திரும்ப பெறாமல் இருப்பது நல்லது. ஏற்கனவே நீங்கள்  புகார் தருவதும், பின்னர் அதனை திரும்ப பெறுவதும் என்று இருந்திருக்கிறீர்கள். எப்படியாவது வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் புகாரை திரும்ப பெற்று இருக்கிறீர்கள்.  இருந்தாலும் அடிக்கடி புகாரை திரும்ப பெறுவது அந்த புகார்கள் மீதான உண்மைதன்மை குறித்து கேள்விகள் எழும். இனி அப்படி செய்யாதீர்கள்.
புகாரை காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும். அதே நேரத்தில் நீங்கள் சேர்ந்து வாழ்வது என்றால் புகாரை திரும்ப பெறலாம். ஆனால் காவல்துறையினரிடம் உங்கள் கணவர், ‘இனி உங்களையும், குழந்தைகளையும் அடிக்க மாட்டேன், துன்புறுத்த மாட்டேன்’ என்று எழுதி கொடுக்கட்டும்.

உங்கள் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அம்மா வீட்டில் இப்போது வாழ்ந்தாலும், உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் உங்கள் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்கலாம்். இல்லை இத்தனை அடி உதையும் வாங்கிக் கொண்டு வாழ வேண்டுமா, விவாகரத்து கேட்பதாக முடிவு செய்தாலும், வழக்கு நடக்கும் போதே நீங்கள் வாழ்க்கையை நடத்த, பிள்ளைகளை படிக்க வைக்க ஜீவனாம்சம் வாங்கலாம்.
உங்கள் மாமனார் சுயமாக சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானலும் எழுதி வைக்கலாம். அதை தாத்தா சொத்து என்று உங்கள் பிள்ளைகள் உரிமை கோர முடியாது. ஒருவேளை அவர் உயிரோடு இல்லாமல், அவர் சொத்தை யார் பெயருக்கும் எழுதி வைக்காமல் இருந்தால் உரிமை  கோரலாம்.

ஐகோர்ட்டில் வேலை செய்யும் மருமகன் மிரட்டுவதாக சொல்லி இருக்கிறீர்கள். அவர் மிரட்டலுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். அவர் அங்கு வக்கீலாக இருக்கிறாரா, இல்லை வேலை  செய்கிறாரா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அவர் வக்கீலாக இருந்தால் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு புகார் செய்யலாம். வேலை செய்பவராக இருந்தால் உயர்நீதி மன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீங்களே புகார் அனுப்பலாம்.
சட்டத்தை தாங்கள் எடுத்துக் கொள்ள நீதித்துறை யாரையும் அனுமதிக்காது. கூடவே இந்த முடிவுகளை எடுக்கும் முன்பு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...