பெண்களின் பல் நலம் பேணுவோம்!



பொதுவாக பெண்களை தாக்கும் பிரச்னை என்று பட்டியலிட்டால் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளாக இருக்கும். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு பற்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது. ‘‘பற்களில் வலி, சொத்தை, ஈறுகளில் பிரச்சனை இருந்தால் மட்டுமே தான் பல் டாக்டரை அணுகுவோம். உடம்பிற்கு எப்படி மாஸ்டர் செக்கப் செய்கிறோமோ அதே போல் பிரச்னை இருந்தாலும், இல்லை என்றாலும், வருடத்திற்கு ஒரு முறை பல் டாக்டரை அணுகி, உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக உள்ளதா என்று கவனித்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் பல் நிபுணர் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்.

‘‘ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்கள் உடம்பில் நாளமில்லா சுரப்பிகள் (endocrine system) மற்றும் நொதிகள் (enzymes) வித்தியாசமானவை. மேலும் இவர்கள் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களும் மாறுபடும். பெண்கள் பூபெய்த காலத்தில் துவங்கி அவர்களின் மாதவிடாய் நாட்கள், கர்ப்ப காலம் மற்றும் மெனோபாஸ் காலம் என அவர்கள் உடலில் பலவித ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் மாறுதல்கள் ஏற்படும். அது பற்கள் மற்றும் ஈறுகளையும் தாக்கும்.

பெண்கள் முதன் முதலில் பூப்பெய்தும் போது, அவர்கள் பற்களில் வலி ஏற்படும். ஈறுகள் சிவப்பாக மாறும். இது நாளமில்லா சுரப்பிகளால் ஏற்படும் மாற்றங்கள். ஆனால் நாம் யாரும் இதை கவனித்து இருக்க மாட்டோம். சாதாரண வலி என்று நினைத்து விடுவோம். மேலும் இந்த வலி அதிகமாக இருந்தால் மட்டுமே நாம் கவனத்தில் கொள்வோம். அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும். இதற்கு பெரிய அளவில் சிகிச்சை எல்லாம் கிடையாது. ஈறுகளில் உள்ள வீக்கம் குறைய மருந்துகள் உள்ளது. அதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மிதமான சுடு தண்ணீரில் கல் உப்பை சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.

இது பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்னை உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள். இதை நாம் முன்பே கணித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லை என்றால் பத்து வருடம் கழித்து தான் அதன் பாதிப்பு நமக்கு தெரிய வரும். அதில் இருந்து பற்களை பாதுகாக்க ஆரம்ப நிலையிலேயே பிரச்னையை அறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ளலாம்.

அடுத்த நிலை மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய். இந்த நேரத்தில் பற்கள் வலிமையாக இல்லாமல் இருந்தால், ஈறுகள் வீங்கி சிவப்பாக மாறும். சிலருக்கு தொட்டாலே ரத்தம் கசியும். இதற்கும் மருத்துவ ஆலோசனை மூலம் தீர்வு காணமுடியும். பெண்களின் மிகவும் முக்கியமான காலகட்டம் அவர்களின் கர்ப்பகாலம். குழந்தையின் ஆரோக்கியத்தின் மேல் மட்டுமே இவர்களின் முழு கவனம் இருக்கும்.

அந்த சமயத்தில் கர்ப்பம் குறித்து கவனமாக இருந்தாலும், பெண்கள் அவர்கள் பற்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்திற்கு பிளான் செய்வதாக இருந்தால், அதற்கு முன் பல் நிபுணரை அணுகி பல் சொத்தை இருந்தால் அதை சீர் செய்து கொள்ள வேண்டும். காரணம் இந்த சமயத்தில் சின்னதாக இருக்கும் பல் சொத்தை பெரியதாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் ஏற்படும் பாக்டீரியல் தொற்றால் ஈறு பலவீனமாகும். மேலும் இது குழந்தையையும் பாதிக்கும். சில சமயம் குழந்தை குறைபிரசவத்தில் பிறக்க வாய்ப்புள்ளது.

அல்லது குழந்தைகளின் பற்களில் கரை படிய வாய்ப்புள்ளது. இது கருவிலேயே பாதிக்கும் என்பதால் கரையை நீக்க முடியாது, அதனை மறைக்க அனைத்து பற்களுக்கும் கேப் போட வேண்டும். கடைசியாக மெனோபாஸ் காலம். இந்த சமயத்தில் ஏற்படும் அதீத ஹார்மோன் மாற்றத்தினால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். மேலும் பற்களுக்கும் வயசாகி இருப்பதால், பல்லும் பலவீனமாகும். சிலருக்கு வயது காரணமாக நீரழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்னைகள் இருக்கும். இவை அனைத்தும் பற்களை பாதிக்கும். அதனால் வருடம் ஒரு முறை முறையாக பற்கள் மற்றும் ஈறுகளை செக்கப் செய்து கொள்ள வேண்டும்’’ என்றவர் பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

‘‘முதலில் ஓரல் ஹைஜீன் அவசியம். விட்டமின் மற்றும் மினரல் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால், பற்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்படாது. தினமும் பிளாசிங் முறையில் பற்களின் இடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் பல் இடுக்குகளில் உள்ள உணவுகளை நீக்கி பற்களை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

தினமும் இரவு படுக்கும் முன் பிளாசிங் செய்து வந்தால் பற்களின் ஆயுள் 10 வருடம் அதிகமாகும். பற்களில் ரத்தக்கசிவு மற்றும் பல் சொத்தை இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். பொதுவாக இனிப்பு, ஐஸ்கிரீம், ஏரியேடெட் பானங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வது வழக்கம்.

என்னைக் கேட்டால், எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் சாப்பிட்டவுடன் பற்களை பிரஷ் செய்திடுங்கள். அவ்வாறு முடியாத பட்சத்தில் மவுத்வாஷ் கொண்டோ அல்லது தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்கலாம். இதனால் பற்களில் தங்கி இருக்கும் பாக்டீரியா தாக்கம் குறையும். பற்கள் பலவீனமாக இருந்தால் கடினமான உணவுகளை சாப்பிடக் கூடாது. பல் எனாமல் பாதிப்பு இருந்தால், அதிக சூடாகவோ அல்லது குளிர்ந்த உணவினை தவிர்க்க வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்.

ரித்திகா