சித்ரா பௌர்ணமி சிறப்புகள்



நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள்தான் சித்ரா பௌர்ணமி. மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை. அதில் சூரியன் வரும் பொழுது ஆண்டு தொடங்குவதாக பஞ்சாங்கம் அறிவிக்கின்றது. அந்த  சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும்  பௌர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார். இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழி பிறக்கின்றது.

பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும்தான். அந்த விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலனை வழங்கும் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாகத்தான் உணரமுடியும். இது போன்ற சந்திர பலம் பெற்ற நாட்களில் கடல் தண்ணீர் மேல்நோக்கிப் பொங்கி எழும். கடல் அலை சீறிப்பாயும் அந்த நாளில் நாம் விரதமிருந்தால் அலைபாயும் மனதில் அமைதி கிடைக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நாட்களில் ஓர் அற்புதமான நாள்தான் சித்ரா பௌர்ணமி.

சந்திரனை நிவாசன் தனது பாதங்களின் அடியிலும், சிவபெருமான் பிறை நிலவாகத் தன் தலையிலும் கொண்டுள்ளார். அம்பாளோ பக்தனுக்கு இறங்கித் தனது காது தோட்டை எறிந்து வானில் சந்திரனை உருவாக்கியவள். சந்திர சகோதரி எனப் போற்றப்படுபவள் மகாலஷ்மி. பெண் ஜாதகத்தில் சந்திரன் சிறப்பிடம் பெற்றால் அவள் மிக அழகாக இருப்பாள் என்று அப்பெண்ணை பார்க்காமலேயே சொல்லிவிடலாம் என்பது நம்பிக்கை. இப்படி பல பெருமைகளைக் கொண்ட சந்திரன் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களிலும் முழு நிலவாய் தோன்றும் நாள்தான் பெளர்ணமி. சித்திரை மாதத்தில் தோன்றும் சந்திரன் அறுபத்துநான்கு கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி, ஆண்டின் அரிதான பெளர்ணமியாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

எம தர்மராஜனின் தம்பி சித்ரகுப்தன். இவர் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை அவர்களின் காலம் முடிந்த பிறகு கடவுளுக்கு தெரிவித்து, அவரவருக்கு தக்க பலன்களை அளிக்கக் கூடியவர். இந்த நாளில் சித்ரகுப்தனின் அருள் பெற வேண்டியும், விசேஷ பூஜைகளுடன் சிவபெருமானை வழிபடும் நாளாகவும் சித்ரா பெளர்ணமி சிறப்பு பெறுகிறது. நாம் செய்த பாவ புண்ணியங்களை பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு, கொண்டாடும் விழாவாகவும் இந்தப் பெளர்ணமி அமைகின்றது. மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக மாற்றவும் செய்யும்படி கும்பிட வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய பாவத்தின் அளவு குறைந்து புண்ணியக் கணக்கின் அளவு கூடும்.

சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் சிறப்பு கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையில் தனிச் சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள் இல்லத்திலேயே நினைத்து விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் மற்றும் செல்வம் விருத்தியாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் சித்ரா பெளர்ணமி அன்று பொங்கல் வைத்து மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து
குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட்டு வழிபட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்ரகுப்தன் படியளப்பு’ என்று எழுதி வைப்பர்.

சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலைவாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள், தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.

இந்த வழிபாட்டின்போது, “சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

அம்பாளின் படைப்பு

பிரம்மனே படைப்புத் தொழிலுக்கு அதிபதி. மூவுலகிலும் அவர் படைத்தவையே காணக் கிடைத்தாலும் விநாயகரும், சித்ரகுப்தனும் பார்வதி தேவியால் உண்டாக்கப்பட்டவர்கள். இதில் சித்ரகுப்தன் உருவான நேரம் பார்வதி ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்ததால், ஒரு மணைப்பலகையில் அழகிய சிறுவனை வரைந்தாள். இந்த ஓவியம் உயிர்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பார்வதியும் அவளது தோழிகளும் எண்ணினர். சிவனருளால் உயிர்த்தெழுந்தது ஓவியம். அழகிய அச்சிறுவனுக்கு சித்ரகுப்தன் என பார்வதியும், சிவனும் பெயரிட்டனர். எமனுக்கு உதவியாளனாக மனிதர்களின் பாவ புண்ணியங்களை பதிவிடும் பதவியையும் அளித்தார்.சித்ரகுப்தனை வணங்கினால் சிந்தனையில் தூய்மை ஏற்படுவதால் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

சந்திர பலன்கள்

மனித வாழ்வில் அனைத்து நலனுக்கும் சந்திரனும் முக்கியக் காரணமாகிறான் என்பது நம்பிக்கை. மண், மனை, வாகனம் உட்பட அனைத்து சுகத்தையும் அளிப்பவன். எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள். அந்த எண்ணத்தை உருவாக்குபவனும் சந்திர பகவானே. மேலும் தாய்வழிச் சொத்து, வாகன யோகம், சுகமான வாழ்க்கை, நல்ல குண நலன், கலைத் துறையில் சிறந்து விளங்குவது, மன நிம்மதி, மன உறுதி, தன்னம்பிக்கை ஆகியவை சந்திரனால் கிடைக்கும் நன்மைகள்.

இதனால்தான் சந்திரனின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, பிற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு சந்திரமானசம் என்று பெயர். தமிழகத்தில், சந்திரனுக்கு ஒளி அளிக்கும் சூரியனின் காலத்தைக் கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு செளரமானசம் என்பார்கள்.

பெளர்ணமி அன்று விரதம் இருக்க விரும்புபவர்கள் சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமி அன்று முதல் துவங்கலாம். விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும். தொடர்ந்து பதினாறு பெளர்ணமிகள் வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சீனு