டயட் மேனியாகிச்சன் டைரீஸ்

டயட் மேனியாவின் லோ கார்போ டயட் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். பெயரே சொல்வது போல கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தை குறைவாக எடுத்துக்கொள்வதே லோ கார்போ டயட். பேலியோவில் கார்ப் முழுமையாக நீக்கப்படுகிறது. லோ கார்போவிலோ சற்று குறைவாக சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பல மருத்துவர்கள் லோ கார்போ டயட்டையே எடைகுறைப்புக்காகப் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் இந்த டயட்டை டாக்டர்ஸ் டார்லிங் எனலாம்.

சர்க்கரை நிறைந்துள்ள கார்போ பொருட்களை இது பிரதானமாக கட்டுப்படுத்தச் சொல்கிறது. புரோட்டின்களையும் கொழுப்புச்சத்தையும் பிற சத்துக்கள் உள்ள காய்கறிகளையும் நன்கு எடுத்துக்கொள்ள சொல்கிறது இந்த டயட். லோ கார்போ டயட்டில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் உடல் எடை, உடற்பயிற்சிக்கு ஏற்ப இந்த டயட் மாறுபடும். இங்கு மாதிரி டயட் பிளான் ஒன்று கொடுக்கிறோம். இது பொதுவான கைடு லைன்தான். இதுவே ஒவ்வொருவருக்குமானது அல்ல.

சாப்பிட வேண்டியவை: அசைவம், முட்டை, காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பால் பொருட்கள், ஆரோக்கியமான எண்ணெய்கள், குளூட்டான் இல்லாத தானியங்கள், சிறு தானியங்கள்.தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, செயற்கை இனிப்பு, விதை எண்ணெய்கள், ட்ரான்ஸ் ஃபேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள். பொதுவாக இவற்றை ஆறு வகையாக பிரிக்கலாம்.

சர்க்கரை உணவுகள்: குளிர் பானங்கள், பழச்சாறு, செயற்கையான பழச்சாறுகள், மிட்டாய், சாக்லெட், ஐஸ்க்ரீம் உட்பட பிற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்.
தோல் நீக்கப்பட்ட தானியங்கள்: கோதுமை, அரிசி, பார்லி, ரொட்டி, பாஸ்டா.
ட்ரான்ஸ் பேட்ஸ்: ஹைட்ரேஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள்.
கொழுப்பு குறைந்த பால் பொருட்கள்: பால், தயிர், மோர்.
ப்ராசஸ்டு ஃபுட்: செயற்கையான சுவையூட்டிகள், பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள்.
ஸ்டார்ச் காய்கறிகள்: லோ கார்போ டயட்டில் ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகளை குறைவாக சாப்பிடலாம்.
ஒரு வாரத்துக்கான ஃபுட் சார்ட்திங்கள்
காலை உணவு: ஆம்லெட்டுடன் பல்வேறு காய்கறிகள் இவற்றை தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெயில்
தாளிக்கலாம்.
மதியம்: காய்கறி, யோகர்ட், கொஞ்சம் சிறுதானியம், நட்ஸ்.
இரவு: பன் இல்லாத சீஸ் பர்க்கர், காய்கறிகள் மற்றும் சாஸ் நிறைந்தது.
செவ்வாய்
காலை: முட்டைகள், கொழுப்பு நிறைந்த ஏதேனும் ஒரு அசைவம்.
மதியம்: நேற்று இரவு சாப்பிட்ட பர்கர், வெஜ்ஜிகளில் கொஞ்சம்.
இரவு: மீன், வெண்ணெயில் தாளித்த காய்கறிகள்.
புதன்:
காலை: முட்டைகள் மற்றும் வெண்ணெயில் தாளித்த காய்கறிகள். (தேங்காய்
எண்ணெயிலும் தாளிக்கலாம்)
மதியம்: பழக் கலவை சிறிது ஆலிவ்
எண்ணெய் கலந்து.
இரவு: கிரில்டு சிக்கன் மற்றும் காய்கறிகள்.
வியாழன்
காய்கறிகள்: ஆம்லெட் மற்றும் காய்கறிகள் தேங்காய் எண்ணெயில் தாளித்தது.
மதியம்: இளநீருடன் ஒரு ஸ்மூத்தி, நட்ஸ் கொஞ்சம் புரோட்டின் உணவுகள்.
இரவு: காய்கறிகளுடன் கொஞ்சம்
அசைவம்.
வெள்ளி
காலை: மாமிசம் மற்றும் முட்டை
மதியம்: சிக்கன் சாலெட் கொஞ்சம்
ஆலிவ் எண்ணெயுடன்
இரவு: சாப்ஸ் மற்றும் காய்கறிகள்.
சனி
காலை: ஆம்லெட் மற்றும் காய்கறிகள்.
மதியம்: யோகர்ட், காய்கறிகள், பழங்கள், தேங்காய் மற்றும் வால்நட்.
இரவு: கோலா உருண்டை மற்றும்
காய்கறிகள்.
ஞாயிறு
காலை: அசைவம் மற்றும் முட்டை
மதியம்: ஸ்மூத்தி, இளநீர், சாக்லெட் ஃப்ளேவர் புரோட்டின்கள்.
இரவு: க்ரில்டு சிக்கன் மற்றும் கீரைகள் அல்லது காய்கறிகள்.

எக்ஸ்பர்ட் விசிட்

நாம் உறங்கும்போதும் உறங்காத நதி ஒன்று நமக்குள் உண்டு. அதன் பெயர் ரத்த ஓட்டம். ரத்த ஓட்டம்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற பெரிய உறுப்புகளுக்கு ஆக்சிஜனைச் சுமந்து சென்று அவற்றை உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கிறது. அவற்றுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி உடல் சுழற்சி எனும் அடிப்படையான விஷயத்துக்கு அச்சாணியாக உள்ளது. இந்த ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும்  உணவுகள் என்னென்ன என்று சொல்கிறார் உணவியல் நிபுணர் ஷிகா.

1.பூண்டு
நம் மரபில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு செயல்படு உணவு (Functiional food) பூண்டு. இதில் உள்ள அல்லிசின்  (Allicin) என்ற வேதிப்பொருள், ரத்த ஓட்டத்தைச் சீராகவைப்பதோடு, உடலில் கொழுப்புச்சத்தைக் கட்டுப்படுத்தி,  இதயத்தையும், மூளையையும், செரிமான மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

2.சின்ன வெங்காயம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சின்ன வெங்காயம், ரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்க் கிருமித் தாக்குதலைத் தடுக்கிறது. மேம்பட்ட  உடல் சுழற்சிக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் நம்மைக் காக்கிறது.

3.கேரட்
கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் நம் ரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரத்த உற்பத்தியிலும், சிகப்பு அணுக்கள் உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக, புற்றுநோய் கிருமிகள் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்கிறது.

4.ஆரஞ்சு
சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி மிகுந்த இந்தப் பழம், ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. காற்று மற்றும் நீர் மூலமாகப் பரவும் நோய்க் கிருமிகளிடம் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.  

5.நட்ஸ்
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற உள்ளிட்ட நட்ஸில்  உள்ள வைட்டமின் இ, ரத்த வெள்ளை அணுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  

6.கோதுமை
கோதுமையில் மாவுச்சத்து சற்று குறைவு என்பதால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியிலும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பி விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் பயன்படுகிறது.

7. மீன்கள், இறால், நண்டு

சிலவகை மீன்களில் ஒமேகா 3 மிகுந்துள்ளன. இது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால், உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. இதயம், மூளை வலுவடைகிறது. மேலும், அழிந்துபோன செல்களால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

8.தேநீர்
தேநீரில் உள்ள மக்னீசியம், நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுக்கலாம். மூளையை சுறுசுறுப்பாக்கி, நம்மை துடிப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தேநீர் பருகுவதில் தவறு இல்லை.

9.பாலாடைக்கட்டி
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியத்துடன் சேர்ந்துகொண்டு ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை மேம்படுகிறது. மேலும் இதில் உள்ள புரோபயாடிக் செரிமான மண்டலத்தைப் பாதுகாத்து, உடலை
ஆரோக்கியமாக்குகிறது.

10.முட்டைக்கோஸ்
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம்பெற முட்டைக்கோஸில் உள்ள ‘குளுட்டோமைன்’ என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் ரத்தத்தில் கலந்து உள்ள நோய்த்தொற்றுக் கிருமிகள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு.

11.மாதுளை
மாதுளைச் சாறு ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த உறைவுகளில் இருந்து காக்கிறது. தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தலாம்.

12.நன்னாரி வேர்
மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிறந்தது. மேலும், இந்த வேரில் ஆன்டி-செப்டிக் பொருள் நிறைவாக உள்ளது. இது, ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

13.கற்றாழை
கற்றாழைச் சோற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, ரத்தத்தில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும்.  ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும், கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக்குகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகிறது.

14.பீட்ரூட்
இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்குத் தேவையான அளவு ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் புரோட்டின் இருக்கிறது. இதை உண்பதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட்டின் மேல் இருக்கும் தண்டில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் மிகுந்து இருக்கின்றன. இவை, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.

15.கீரைகள்
கீரைகளில் பல்வேறு வகையான வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், தாதுஉப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், செரிமான மண்டலத்தைச் சரியாக இயங்கச் செய்து ஆரோக்கியத்தைக் காக்கின்றன.

16.இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால், ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. செரிமானத்தை சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

சாமையின் பூர்வீகம் சிந்து சமவெளி

சாமை தமிழ் நிலத்தின் முக்கியமான சிறுதானியங்களில் ஒன்று. சாமையை காலங் காலமாய் உண்டு உடல் வலுவோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். சாமை முல்லைத் திணையோடு தொடர்புடைய உணவுப் பொருள். காடும் காடு சார்ந்த நிலப்பகுதியும் முல்லை எனப்படும். இந்த முல்லை நிலங்களைத் திருத்தியே பிற்பாடு மருதம் எனும் விவசாய நிலம் சமைத்தனர் நம் முப்பாட்டன்கள். முல்லை திருத்தாது இருந்த வனப் பகுதிகளில் மேய்ச்சல் சமூக மக்களே அதிகம் வாழ்ந்தனர். மேய்ச்சல் நில மக்கள் என்றாலும் அங்கும் பயிர்த் தொழில் நடந்தது. அப்பகுதியில் இயற்கையாய் விளைந்த சாமையும் வரகுமே அவர்களின் அன்றாட உணவாய் இருந்தது என்று தொல்காப்பியம் சொல்கிறது.

சாமையின் பூர்வீகம் சங்க காலத் தமிழ் நிலம் அல்ல. சிந்து சமவெளி நாகரிகம்தான் என்பதைத் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. மறைந்த ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் சிந்து சமவெளிப் பகுதிகளில் கிடைத்த சித்திர எழுத்துகளை வாசிக்க முயன்று இதை உண்மை என்று கருதுகிறார்கள்.

ஹராப்பா என்ற பகுதியில் கிடைத்திருக்கும் அகழாய்வுகளில் சாமை அரிசிகள் நிறைய கிடைத்திருக்கின்றன. சுமார் இரண்டாயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அகழ் பொருட்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமை நெல் மணிகள் கிடைத்துள்ளன. இது ஒட்டுமொத்த சிந்து சமவெளி அகழாய்வுகளிலும் இதுவரை கிடைத்துள்ள தானியங்களில் ஐந்து சதவீதம் என்று வியக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த அகழாய்வின் உண்மைகளோடு தொல்காப்பியம் சொல்லும் குறிஞ்சித் திணை கருத்தியலையும் இணைத்து சிந்தித்தால் சிந்து சமவெளி ஆய்வுகளில் பல புதிய திறப்புகள் கிடைக்கக்கூடும். இப்படியாக, மண்ணில் புதைந்து கிடந்த இந்த சாமை மணிகள் வெளிப்பட்டு தமிழர் வரலாற்றின் மீதும் இந்தியாவின் விவசாய வரலாற்றின் மீதும் புதிய வெளிச்சம் பாய்த்துள்ளது.

ஃபுட் மித்ஸ்

காய்கறிகளை, பழங்களை கழுவித்தான் சாப்பிட வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர் கழுவாமல் அப்படியே சாப்பிட்டால்தான் சத்து என்பார்கள். உண்மையில் கழுவிவிட்டு சாப்பிடுவதே நல்லது. கழுவும்போது அதன் சத்துகளில் மிகச் சிறிய அளவில் மாற்றம் நிகழ்கிறது என்பது உண்மைதான்.

கழுவாதபோதோ அதன் மீது கொட்டப்படும் கெமிக்கல்களில் இருந்து சூழலியலில் காணப்படும் நுண்ணுயிர்கள் வரை  உள்ள பல விஷயங்கள் நம் வயிற்றில் செல்ல வாய்ப்பிருக்கின்றன. எனவே, சிறிது சத்து சேதாரம் ஆனாலும் பரவாயில்லை கழுவியே சாப்பிடுங்கள்.

உணவு விதி #29

நன்கு உண்ணும் விலங்குகளை உண்ணுங்கள். இது ஒரு முக்கியமான விதி. எல்லாவகையான உணவுகளையும் நன்கு உண்ணும் விலங்குகளை உண்பதன் மூலம் அந்த மூலப்பொருட்களின் சத்தும் ஏதோ ஒரு வகையில் நம்மை வந்து சேர்கிறது என்று நவீன உணவியல் கூறுகிறது. எனவே, நன்கு உண்ணும் விலங்குகளையே தேர்ந்தெடுங்கள்.

ஃபுட் சயின்ஸ்

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களைத் தொடர்ந்து இந்த இதழில் வைட்டமின் சி பற்றி பார்ப்போம். இதனை அஸ்கார்பிக் அமிலம் என்பார்கள். மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் என அனைத்து உயிர்களுக்கும் ஓர் இன்றியமையாத ஊட்டச்சத்து வைட்டமின் சி. வளர்சிதை மாற்றத்துக்கு இது மிகவும் அவசியம். இது பெரும்பாலான உயிரினங்களிலும் உட்புறத்திலேயே உருவாக்கப்படுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டினால் மனிதர்களுக்கு சரும நோய் ஏற்படுகிறது.

அஸ்கார்பேட் (ascorbate) அயனி, வைட்டமின் சியின் ஃபார்மகோஃபோராகும். ஆக்ஸிஜனேற்ற உளைச்சலிலிருந்து உடலை பாதுகாப்பதன் காரணத்தினால் உயிரினங்களில் அஸ்கார்பேட் ஓர் ஆக்ஸிஜனேற்றப் பகையாக செயல்புரிகிறது. நொதி சார்ந்த விளைவுகளுக்கு இது மிகவும் முக்கியமான துணைக்காரணியாக உள்ளது.

உணவுப் பொருட்களில் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள் ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 1933 ஆம் ஆண்டில், அஸ்கார்பிக் அமிலம் பிரிக்கப்பட்டது. 1934 ஆம் ஆண்டில் இது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. வைட்டமின் சி பயன்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு ஆகியவை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகவே இருக்கின்றன. ஒரு நாளில் 45 முதல் 95 மி.கி வரை RDI இருக்கலாம்.

ஆனால் அந்த கொடுக்கப்பட்ட வரம்பிற்குள் ஒரு சரியான அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பரிந்துரைக்கப்படும் மிக-அதிக-மருந்தளவானது ஒரு நாளுக்கு 200லிருந்து 2000 மில்லி கிராமுக்கும் அதிகமாக இருக்கலாம்.

68 நம்பத்தக்க ஆக்ஸிஜனேற்றப் பகை சேர்க்கை ஆராய்ச்சிகளின் மெட்டா-பகுப்பாய்வு சமீபத்தில் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 232,606 தனிநபர்கள் பங்கேற்றனர். அந்த ஆய்வில் அஸ்கார்பேட்டை கூடுதல் சேர்க்கையாக எடுத்துக்கொள்வதனால் எதிர்பார்த்த அளவிற்கு பலன் கிடைக்கவில்லை என்ற முடிவு வெளியாகியுள்ளது.

இளங்கோ கிருஷ்ணன்