சுற்றுலாப் பயணிகள் விரும்பும் தாராவி



ஆசியாவின் 2.1 கிலோமீட்டர் சதுர சுற்றளவு கொண்ட மிகப்பெரிய குடிசைப்பகுதி. நெருக்கடியான சந்துகள், குறுகிய கால்வாய்கள், ஒரே கழிவறையை 1450 பேர் பயன்படுத்தும் அவலம். தென்ைனஓலைகள் மற்றும் தகர கொட்டகைகளால் வேயப்பட்ட வீடுகள் கொண்ட அதை ஒரு குட்டி தமிழ்நாடு என்று கூட சொல்லலாம்.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் ஒரு பகுதியான தாராவி தான் மேற்கண்ட வர்ணனைக்கு சொந்தமான இடம். தாராவியில் தமிழர்கள் மட்டுமில்ைல, தெலுங்கர்கள்,  மராத்தியர்கள், குஜராத்தி மற்றும் உத்தரப்பிரதேச மக்களும் அங்கு வாழ்கின்றனர். மண்பாண்டம், தோல் பதனிடும், எம்ப்ராய்டரி மற்றும் நெசவுத் தொழில் தான் அவர்களின் வாழ்வாதாரம். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ரஜினியின் ‘காலா’, ‘கல்லி பாய்’ போன்ற திரைப்படங்கள் தாராவி மக்களின் அன்றாட நிகழ்வை படம்பிடித்து காட்டியுள்ளன. குறிப்பாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் வெளியான பிறகு இந்தப் பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

பொதுவாக சுற்றுலா என்றாலே இயற்கை கொஞ்சும் இடங்களைதான் விரும்புவார்கள். ‘டிரிப் அட்வைசர்ஸ் டிராவலர்ஸ்’ என்ற சர்வதேச அமைப்பின் ஆய்வு அதை நிராகரித்துள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகள் எங்கெங்கு செல்ல விரும்புகிறார்கள் என குறிப்பிடப்பட்ட பட்டியலில் ‘தாராவி இன் மும்பை’ முதலிடத்தில் உள்ளது. இதேபோல ஆசியாவில் 2019ம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் முதல் 10 இடங்கள் பட்டியலிலும் தாராவி குடிசைப் பகுதி இடம் பெற்றுள்ளது. ‘ஓல்டு டெல்லி’ இரண்டாவது இடத்திலும் ‘தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை’ மூன்றாவது இடத்தில் உள்ளன.

மும்பை பெரும் நகராக வளர்ந்தாலும், மறுபக்கம் குடிசை பகுதியான தாராவியும் வளர்ந்தது. இங்குள்ள தொழில்கள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 6 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய். தாராவில் உற்பத்தியாகும் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகம் முழுவதும் ஏற்றுமதியாகின்றன. 15000க்கும் மேற்பட்ட குடிசை தொழிற்சாலைகள் தாராவியில் உள்ளன.

குண்டூசி, செருப்பு, சீப்பு, கண்ணாடி, விளக்கு, முறுக்கு என்று கிட்டத்தட்ட 5000 வகையான தொழில்கள் தாராவியில் உள்ளது. இதனால் தாராவி மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலாத் தலமாக உருவாகிவரும் தாராவி மக்களின் சுகாதாரத்தை மராட்டிய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அங்குள்ள சகோதர, சகோதரிகளும் நல்ல காற்றை சுவாசிக்க முடியும்.

கோமதி பாஸ்கரன்