பரதத்தை மெருகேற்றும் சிற்பங்கள்!



‘‘எல்லா பெண்களுக்கும் அம்மாதான் ரோல்மாடல். எனக்கும் அப்படித்தான். நான் இப்ப ஒரு பரத நடன கலைஞரா இருக்க காரணம் என் அம்மாதான்’’ என்று பேசத் துவங்கினார் லட்சுமி ராமசுவாமி. நடன கலையில் முதல் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். தற்போது ‘முத்ராலயா’ என்ற நடன பள்ளி மூலம் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘என் அம்மாக்கு சின்ன வயசில் நடனம் கற்றுக் கொள்ளணும்ன்னு ரொம்ப ஆசை. தாத்தா அதற்கு சம்மதம் கொடுக்கல. அம்மாக்கு நடனம் மேல் பெரிய தாபம். தனக்கு திருமணமாகி பெண் குழந்தை பிறந்தா கண்டிப்பா அவளை நடன கலைஞராக்க வேண்டும் என்பது தான் அவங்களின் லட்சியமாம்.

ஏழு வயசில் நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சேன். காரக்குறிச்சி வெங்கடநாராயணன் என்பவரிடம் சில காலம் பயின்றேன். அதன் பிறகு நாஞ்சில் மணி என்பவரிடம் மூன்று வருஷம் பயின்றேன். எனக்கு நடனத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியவர் டீச்சர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி. அவங்களிடம் நான் ஸ்தாத்திரய நடன அமைப்பு பற்றி தெரிந்து கொண்டேன்.

அதாவது ஒரு ஸ்டெப் அடுத்து அலாரிப்புன்னு நடனத்தை ஒவ்வொரு அடியாக சொல்லிக் கொடுத்தாங்க. அப்ப நான் 11 ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அவங்களின் நடன பயிற்றுவிக்கும் முறை மட்டும் இல்லை அவங்களையும் எனக்கு பிடிச்சு இருந்தது. அதனால் பள்ளி விட்டு வந்ததும் பயிற்சிக்கு போயிடுவேன். நான் அவங்களிடம் பயிற்சி எடுத்த பத்தே மாசத்தில் அரங்கேற்றம் செய்தாங்க’’ என்றவர் அந்த நாள் அவர் வாழ்வில் இன்றும் பசுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

‘‘1987ம்  ஆண்டு திருநெல்வேலியில் உள்ள நெல்லை சங்கீத சபாவில் அரங்கேற்றம் நடந்தது. அந்த காலத்தில் அதுவும் திருநெல்வேலியில் அரங்கேற்றம் செய்வது பெரிய விஷயம். அப்பா, அம்மா அந்த ஊரில் ரொம்ப வருஷம் இருந்ததால கல்யாணத்துக்கு வரும் கூட்டத்தை விட நிறைய பேர் வந்தாங்க. பலர் அமர இடம் இல்லாமல் நின்றுக் கொண்டே என் அரங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்தாங்க.

தில்லானா முடிஞ்சும் கூட்டம் கலையல. மூணு மணி நேரம் நடந்த என் அரங்கேற்ற நிகழ்ச்சியை இப்ப நினைச்சா கூட எனக்கு மெய்சிலிர்த்திடும். இப்பெல்லாம் ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சி நடப்பதே பெரிய விஷயம். அதற்கு மேல் கலைஞராலும் ஆடமுடிவதில்லை. பார்வையாளர்களுக்கும் பொறுமை இருப்பதில்லை. இதில் என்ன ஒரு சிறப்புன்னா, என் அரங்கேற்றம் முடிஞ்சு ஒரே வாரத்தில் எனக்கு +2 போர்ட் எக்சாம் ஆரம்பம். நடனத்தால் படிப்பு கெடும்ன்னு எங்க வீட்டில யாரும் நினைக்கல. ஊக்குவிச்சாங்கலே தவிர என்னை கட்டிப்போடல. தேர்வில் நான்
87% பெற்று தேர்ச்சி பெற்றேன்.

இதை ஏன் சொல்றேன்னா இன்றைய தலைமுறையினர் படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துறாங்க. பெற்றோர்களும் அவங்கள படிக்க சொல்லியே மனஉளைச்சலுக்கு ஆளாக்கிடுறாங்க. ஒரு மாணவி +2 வகுப்பு என்பதால், நடனம் பயில்வதை பாதியிலேயே நிறுத்திட்டாள். அத்துடன் அவளுடைய கலைத் திறமைக்கு முழுக்கு போட்டாச்சு.

எந்த ஒரு குழந்தையாளும் 24 மணி நேரமும் படிக்க முடியாது. கலை என்பது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். கலை மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் கவனம் சிதறாமல் செயல்பட முடியும். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும் உதவும்’’ என்றவர் ஓடியாட வேண்டிய வயசில் படிப்பு என்ற சங்கிலியால் அவர்களை கட்டிப்போடுவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்.

‘‘என்னை பொறுத்தவரை ஆடும் போது ஆடணும், படிக்கும் நேரத்தில் படிச்சிடணும். வெறும் புத்தகத்தையே மட்டும் படிச்சா அறிவு வளர்ந்திடாது. நம்மை சுத்தி என்ன நடக்குது, சமூக நிகழ்வுகள் என்ன என்று தெரிந்து கொள்ளணும். என் புத்தகம், என் வாழ்க்கை, என் பணம்ன்னு இல்லாமல், மற்றவர்களுக்கும் உதவி செய்யணும். நடன பள்ளியும் ஒரு டீம் வர்க்தான். அதனால் இங்கு நான் என் சீனியர் மாணவர்களை ஜூனியர் மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொல்லுவேன்.

கல்விைய பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் சந்தோஷத்துக்கு  அளவே இருக்காது’’ என்றவர் இலங்கையில் எல்லா மாணவர்களும்
ஏதாவது ஒரு கலை திறனை கற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறினார். ‘‘இலங்கையில் +2 முடிச்சதும் அவங்க விரும்பும் கலைத்துறையை தேர்வு செய்து படிக்கலாம். பட்டம் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக அங்கு வேலையும் உண்டு.

ஆனா இங்கு அப்படி இல்லை. கலை சார்ந்த படிப்புக்கு அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. பொறியியல் படிச்சா, ஏதாவது ஒரு ஐ.டி துறையில் வேலை கிடைக்கும். ஆனால் கலை சார்ந்த படிப்புக்கு? நான் சென்னை பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் கெஸ்ட் லெக்சரரா இருக்கேன். ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் ஆறு இலங்கை மாணவர்கள் இங்கு படிக்க வராங்க. படிப்பு முடிச்ச கையோடு அவங்களுக்கு வேலை காத்திருக்கு. இங்கு அதற்கான மதிப்பு இல்லை என்று நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

பரதத்தில் 2012ல் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் மாணவின்னு நான் என்னை பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அதற்கான அங்கீகாரம் இங்கு பெரிய அளவில் நமக்கு கிடைப்பதில்லை. நான் அமெரிக்காவில் ஆர்ட்ஸ் அட்மினிஸ்டிரேஷனில் ஃபெல்லோஷிப் செய்தேன். அவர்கள் நம்முடைய கலைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டில் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை’’‘‘கல்லூரி படிப்புக்கு பிறகு, கல்யாண மாகி சென்னைக்கு வந்தேன்.

கல்யாணம், குழந்தைன்னு இரண்டு வருஷம் காலில் சலங்கை கட்ட நேரமில்லாமல் போனது. அதன் பிறகு சித்ரா என்ற நடன கலைஞரிடம் பல சிரமங்கள் நடுவில் தான் பயிற்சி எடுத்தேன். 11 மாச கைக்குழந்தையுடன் நடனம் கத்துக்கணும். சென்னையில் நடன பயிற்சிக்கு ஆகும் செலவும் கொஞ்சம் அதிகம். அதை சமாளிக்கணும். நான் வேலைக்கு போகவில்லை.

இப்படி எல்லாத்தையும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. ஆனால் இதை எல்லாம் தாண்டி எனக்கு நடனம் மேல் இருந்த ஆர்வம் தான் அதை மேலும் கத்துக்கணும்ன்னு என் ஆவலை தூண்டியது. காரணம் என்னுடைய பயிற்சியாளர் சித்ரா அக்கா. நான் இப்ப ஒரு நடன பயிற்சியாளரா இருக்க அவங்க தான் காரணம். என்னிடம் இருக்கும் ஆசிரியர் திறமையை கண்டறிந்து என்னை பயிற்சியாளரா மாற்றினாங்க. மாதா, பிதா, குருன்னு
சொல்வதற்கு இவங்க பெரிய உதாரணம். தமிழ்நாடு கலையின் முக்கிய மாநிலம்.

ஆனால் இங்கு கலையை குறித்து எந்த டாக்குமென்டேஷன் கிடையாது. அது எவ்வளவு முக்கியம்ன்னு இப்ப தெரியுது. அதற்கான விழிப்புணர்வு இங்க இல்லை என்று நினைக்கும் போது வருத்தமா இருக்கு’’ என்றவர் தன் நடனம் மூலம் சமூதாயம் சார்ந்த பல செய்திகளை மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறார்.

‘‘1994ல் என்னுடைய நடன பள்ளியை துவங்கினேன். ஒவ்வொரு நடனம் மூலம் சமூகம் சார்ந்த செய்தியை மக்களுக்கு கொண்டு சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கேன். தமிழ் பாடலுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறேன். சங்க இலக்கியங்களை நடனம் மூலம் மேடைக்கு கொண்டு வந்திருக்கேன். ஒரு கலைஞனா எதிர்கால திட்டம் நிறைய இருக்கு. மாதம் ஒருமுறை சமூகம் சார்ந்த ஏதாவது ஒரு நடன நிகழ்ச்சி செய்யணும். கலை சார்ந்த செமினார் நடத்தணும்.

கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு நடன பயிற்சி அளிக்கணும். கலை ஒரு பெரிய கடல். அந்த கடலை நாம் தான் தேடிப் போகணும். அதனால் கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்குள்ள சிற்பங்கள் மூலம் கலையை மேலும் மெருகேற்ற இருக்கிறேன்.

நான் எழுதிய ‘ஷால்வி நோ நாட்டியா’ புத்தகத்தை ஈபுத்தகமாக மாற்ற எண்ணம் உள்ளது. இன்னும் நிறைய விஷயங்களை யோசிச்சு செய்யணும். நாங்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க தான். எனக்கு நடன பயிற்சி அளிக்க அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. நடனம் மேல் ஆர்வம் இருக்கும், ஆனால் வசதி இருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளை தேர்வு செய்து இலவசமா சொல்லிக் கொடுக்கிறேன். இப்படி கலையை வளர்க்க நிறைய வழிகளை என்னால் முடிந்த வரை செய்து கொண்டு இருக்கிறேன்’’ என்றார் பரத கலைஞர் லட்சுமி ராமசுவாமி.

ப்ரியா