துக்க புத்ரி மட்டுமல்ல, வெற்றி நாயகியும் கூட... ‘ஊர்வசி’ சாரதா



செல்லுலாய்ட் பெண்கள்-63

மெலிந்த உடல் வாகு, நீள் வடிவ முகம், சிரிக்கும் கண்கள், பளீரிடும் பல் வரிசையுடன் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் மலர்ந்த சிரிப்பு, பளிச்சென்ற பளீரிடும் நிறம் இல்லை, கவர்ச்சிகரமான உடல்வாகோ, உடைகளோ அணிந்து நடித்தவரில்லை. என்றாலும் பெரும்பாலும் அவர் ஏற்றவை துயரார்ந்த அழுத்தமான வேடங்கள், சோகச் சித்திரமாய் நடமாடினாலும் அவர் நடித்த படங்கள் பலவும் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

அசல் வாழ்க்கையிலும் கூட விரும்பி அணிந்து கொள்வது மென் நிறங்கள் அதிகம் கொண்ட சேலைகளை மட்டுமே. ஆனால், தான் ஏற்று நடித்த கனமான பாத்திரங்களின் வழியாக இந்தியாவின் மிக உயரிய விருதான ‘ஊர்வசி’ விருதினை மூன்று முறை அறுவடை செய்தவர். பிறந்தது ஆந்திரம், தென்னிந்திய மொழிகளான தாய்மொழி தெலுங்குடன் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 300 படங்கள் வரை கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகும் குணச்சித்திர நடிப்பால் திரையில் ஒளிர்ந்தவர்.

தாயின் விருப்பத்தால் கற்றுத் தேர்ந்த நாட்டியம்

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் தெனாலியில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று பிறந்தவர். இவரது பெற்றோர் வெங்கடேஸ்வர ராவ் - சத்தியவாணி தேவி; உடன் பிறந்தவர் ஒரு சகோதரர். பெற்றோர் இட்ட பெயர் சரஸ்வதி தேவி, பின்னர் திரைப்படங்களுக்காக வைக்கப்பட்ட பெயர் சாரதா.

பெற்றோர் இருவரும் பாரம்பரியமான நெசவாளிகள். இளமைப்பருவம் ஏழ்மையும் வறுமையும் நிறைந்ததாகவே இருந்துள்ளது சரஸ்வதி தேவிக்கு. பள்ளிக்கு அனுப்புவதற்குக் கூட இயலாத நிலை. ஆனால், எப்படியாவது தன் மகளுக்கு நாட்டியம் கற்பிக்க வேண்டும் என்பது அவரது தாயாரின் பெரு விருப்பமாக இருந்தது. அதுவே பின்னர் மகள் திரைப்பட நடிகையாகவும் வேண்டும் என்ற வடிவத்தையும் எடுத்தது.

தாயாரின் விருப்பமே இங்கு முதன்மையானது. கண்டிப்பு நிறைந்த குருவிடம் குருகுல முறையில் அங்கேயே அவருக்குத் தேவையான பணிவிடைகள் மற்றும் வேலைகளைச் செய்து கொடுத்து பலனாக தன் 6 வயதில் நாட்டியத்தைக் கற்றுக் கொண்டார். கற்றுக் கொண்ட வித்தை தசரா பண்டிகைக் காலங்களிலும் பிற கோயில் நிகழ்ச்சிகளிலும் கோயில்களில் நடனமாடுவதன் மூலம் வெளிப்பட்டது.

ஊர் மக்களின் ஒருமித்த பாராட்டுகளையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. மகள் சரஸ்வதி இவ்வாறு நடனமாடுவதில் தந்தையாருக்குப் பெரிதாக விருப்பம் ஏதும் இல்லை. அதனால் அவர் மகளின் நாட்டியத்தை அங்கீகரிக்கவும் இல்லை; பாராட்டி ஊக்குவிக்கவும் இல்லை. அதே நேரத்தில் ஆடக்கூடாது என தடை விதிக்கவும் இல்லை.

இந்திய மக்கள் நாடக மன்றம் அளித்த வாய்ப்பு

பெயருக்கு ஏற்றாற்போல் சிறுமி சரஸ்வதி கலைகளில் ஆர்வமுடன் இருந்ததும் நாட்டியத்தில் மனமுவந்து ஈடுபட்டு வந்ததும் நாடக உலகினர் பலரையும் கவர்ந்து இழுத்தது. நாடகங்களில் நடிக்கலாமே என சிலர் அணுகியபோது தந்தையார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நல்ல ஊதியம் தருவதாக அவர்கள் சொன்னபோது அதை ஏற்று நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஒத்திகைக்காகவும் பயிற்சிப் பட்டறைக்காகவும் தங்கள் மகளை அனுப்பி வைக்கவும் சம்மதித்தனர்.

இயக்குநர் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கையில் கொடுத்து வசனங்களை எழுதிப் பார்க்கும்படி சொன்ன பயிற்சி, சரஸ்வதிக்குப் பெரும் அதிர்ச்சியையளித்தது. ஏனெனில் பள்ளிப் படிப்பு இல்லாததால் அதை அவரால் ஏற்றுச் செய்ய இயலவில்லை.  அதனால் அவர் மீண்டும் வீட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். சென்னையில் உள்ள கண்டிப்புக்குப் பெயர் பெற்ற பாட்டி கனகம்மாள் பாதுகாப்பில் ஐந்தாண்டுகள் அவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அதிலேயே அவர் நன்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்ற IPTA (Indian People’s Theatre Association) என்ற இந்திய மக்கள் நாடக மன்றத்தினர் சரஸ்வதியைத் தங்கள் நாடகத்தில் நடிப்பதற்காக அணுகினர். முதன் முதலாக அவர் நடித்த அண்ணா செல்லலு (அண்ணன் தங்கை) என்ற அந்த நாடகம் மிகப் பெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.

13 வயதிலேயே நல்ல நடிகை என்றும் பெயரெடுத்தார். முன்னணி திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராஜா ராவ், அந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். சரஸ்வதியின் நடிப்புத்திறன் கண்டு வியந்தவர், தான் அடுத்துத் தயாரிக்கவிருக்கும் படத்தில் வாய்ப்பளிக்க விரும்பினார். சொந்த ஊரிலிருந்து சென்னை சென்று சேரத் தாமதமானதால் முதன்முதலாக நடிக்க்க் கிடைத்த அந்தப் பட வாய்ப்பு கைநழுவிப் போனது.

தமிழ் மண்ணில் நூறுமுறை மேடையேற்றம் கண்ட ’ரக்தக் கண்ணீரு’

தன்னுடைய நண்பருக்கு சரஸ்வதியை அறிமுகப்படுத்தி வைக்க ராஜா ராவ் தவறவில்லை. அந்த அறிமுகம் சரஸ்வதியின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தித் தந்தது. 1955ல் என்.டி.ராமாராவ், சாவித்திரி, சௌகார் ஜானகி நடித்த ‘கன்யா சுக்லம்’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தலைகாட்டும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் நாடகங்களுக்கே திரும்பினார்.

தமிழில் எம்.ஆர்.ராதா நடத்தி அவர் நடிப்பில் மிகப் பிரபலமான ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம் தெலுங்கில் ’ரக்தக் கண்ணீரு’ என நடத்தப்பட்டபோது, அதில் முக்கியமான பாத்திரம் சரஸ்வதிக்கு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 100 முறைக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகம் அது. தெலுங்குத் திரையுலகிலும் அது ஒரு திருப்புமுனையை சாரதாவுக்கு ஏற்படுத்திப் பெயர் வாங்கிக் கொடுத்தது.

மீண்டும் 1959ல் திரையுலகில் நுழையும் வாய்ப்பையும் அளித்தது. அப்போது ஏராளமான சரஸ்வதிகள் தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த ‘தெனாலி சரஸ்வதி’யின் பெயரை சாரதா என்றும் மாற்றினார். இயக்குநர் எல்.வி.பிரசாத் தன் படங்களில் பெரியளவில் வாய்ப்புகள் அளித்ததை விட நவரசங்களையும் வெளிப்படுத்தும் விதமாக நடிப்புப் பயிற்சி அளிப்பதிலேயே கவனம் செலுத்தினார். பலரும் அவ்வாறு அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். பிரசாத்திடம் பெற்ற பயிற்சி வீண் போகவில்லை என்பதை பின்னர் சாரதாவுக்குக் கிடைத்த வேடங்களும் அவரது நடிப்பும் நிரூபித்தன.

1961ல் நாகேஸ்வர ராவ் இரட்டை வேடத்தில் நடித்த ‘இத்தரு மித்ரலு’ படத்தில்தான் பிரதான வேடமேற்று நடித்தார் சாரதா. பெரும் வெற்றி பெற்ற அப்படத்தின் மூலமாகவே தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1965க்குப் பின்னரே தன்னைத் திறன் வாய்ந்த நடிகை என நிரூபிக்கும் பல வாய்ப்புகள் வரத் தொடங்கின. முதல் மலையாளப் படம் ‘இனப்ராவுகள்’, அதில் ரஹேல் என்ற பெயருடன் அறிமுகமானார், ஆனால் அப்பெயர் நீடித்து நிலைக்கவில்லை. ஏற்ற பாத்திரத்தின் பெயரும் அதுவே. தான் நடித்த பாத்திரங்களில் தனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் அதுவும் ஒன்று என நடிகை சாரதா குறிப்பிட்டுள்ளார்.  

தமிழில் கிடைத்த மோதிரக் கை குட்டு

ஒருமுறை நடிகர் சிவாஜி கணேசன் ‘திப்பதி’ என்ற தெலுங்கு நாடகத்துக்குத் தலைமை ஏற்கச் சென்றிருந்தார். அந்த நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த பெண்ணின் நடிப்பு அவரைக் கவரவே, அவரைத் தன் சொந்தப் படத்தில் தமிழில் நடிக்க வைக்க விரும்பினார். அவர்தான் நடிகை சாரதா. அந்தப் படம் 1963ல் வெளியான  ‘குங்குமம்’. அதில் இரண்டாவது நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆனால், இப்படத்தில் நடித்த மற்றொரு நாயகியான விஜயகுமாரியோ, சாரதாவே இப்படத்தின் நாயகி என்று சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார்.

சிறப்பான அறிமுகம் என்றாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் சாரதாவுக்குக் கிடைக்கவில்லை. நடிகர் திலகம் வியந்து பாராட்டி தன் படத்தில் அறிமுகப் படுத்தியும் கூட சாரதா தமிழில் ஜொலிக்கவில்லை என்பது சோகம். ஆனால், இப்படத்தில் இடம் பெற்ற ‘தூங்காத கண்ணென்று ஒன்று’, ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா’ இரு பாடல்களும் எப்போதும் சாரதாவை நினைவூட்டிக் கொண்டிருக்கும் பாடல்கள்.  

1964ல் வெளியான ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ படத்திலும் குதிரைக்காரரின் மகளாக லாயத்தில் குதிரைகளைப் பராமரிக்கும் பெண்ணாக நடித்தார். கதாநாயகன் ஜெமினி கணேசனை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரம். இந்தப் படம் பெரிதாக ஓடவும் இல்லை.‘அருணகிரிநாதர்’ படத்திலோ காமவெறி கொண்டு திரியும் அருணகிரிநாதரைத் திருமணம் செய்து கொண்டு துன்பத்தில் உழலும் பாத்திரம். இப்படமும் வந்த சுவடு தெரியாமல் போனது.

சாரதாவுக்கான பாத்திரங்கள் தமிழில் உருப் பெறவில்லை

70களில் வெளியான ‘ஞான ஒளி’யில் பூண்டி மாதா கோயிலில் மணியடிக்கும் அந்தோணியின் (சிவாஜி கணேசன்) மகள் மேரி. அழகான இளமையான மேரி இளமை வேகத்தில் காதலனிடம் தன்னை இழந்து, தந்தையின் கோபத்துக்கும் ஆளாகி, தந்தையின் கையாலேயே அறியாமல் அவன் கொல்லப்பட, திருமணத்துக்கு முன்னதாகவே கருத்தரித்து, காலமெல்லாம் விதவைக் கோலமேற்று, பள்ளியில் ஆசிரியர் தொழில் செய்து மகளுடன் காலம் தள்ளும் பாத்திரம். பி.மாதவன் இயக்கத்தில் வெளியான இப்படம் சாரதாவுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது.

இது மக்களை வெகுவாகச் சென்றடைந்த வெற்றிப் படமும் கூட. போலீஸின் கழுகுக் கண்களுக்குத் தப்பி லட்சாதிபதி அருண் வேடத்தில் இருக்கும் அந்தோணியை, தன் தகப்பனைப் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தாலும் அவர் தன் தந்தை என்று உரிமை கொண்டாட முடியாத மகளின் தவிப்பை மனநிலையை வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சாரதாவின் நடிப்பு பற்றி தனியாக வேறு சொல்ல வேண்டுமா? சிவாஜி கணேசனின் ஆர்ப்பாட்டமான நடிப்புக்கு முன் சாரதாவின் அலட்டல் இல்லாத நடிப்பும் பேசப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் அவரது மாற்றுத் திறனாளித் தங்கை சீதாவாக நடித்தார். இந்தப் படமும் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஓடி வசூலிலும் வெற்றி பெற்ற படம். ஆனால், சாரதாவின் நடிப்புப் பசிக்குத் தீனி போடும் அளவுக்கு இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஏதுமில்லை.

அதையும் சாரதா சிறப்பாகவே செய்தார். இவை அனைத்துமே படங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவியதே தவிர, சாரதா போன்ற ஒரு திறமையான நடிகைக்கு எந்த விதத்திலும் பலன் தராது. இதே பாணியில் ’சிவாஜி கணேசனுடன் ‘என்னைப் போல் ஒருவன்’ படத்திலும் நடித்தார். இரட்டை வேட சிவாஜிக்கு மனைவியாக. பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த இப்படம் வந்தது தெரியாமலே பெட்டிக்குள் முடங்கியது.

1979ல் ஜெயகாந்தன் தன் ஐந்து சிறுகதைகளை ஒருங்கிணைத்து உருவாக்கி அவரே இயக்கிய படம் ‘புதுச்செருப்பு கடிக்கும்’. பிரிமியர் ஷோவாக ஃபிலிம் சேம்பரில் அது திரையிடப்பட்டபோது பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உண்மையிலேயே அற்புதமானதொரு படம். துரதிருஷ்டவசமாக அது மக்கள் பார்வைக்கு வெளியாகவே இல்லை. அது வெளியாகி இருந்தால், நிச்சயமாக சாரதா தமிழ்ப் படத்துக்கான ஒரு விருதையும் பெற்றிருப்பார்.

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ தொடர்கதையாக விகடனில் வெளியானபோது, அதற்கான படங்களை ஓவியர் கோபுலு வரைந்தார். நாடக நடிகை, கதாநாயகி கல்யாணியின் உருவம் தலையில் கட்டிய ஸ்கார்ஃப், ஒடிசலான உருவம், முகத்தோற்றம், அதிலும் ஆளுயரக் கண்ணாடியின் முன் அமர்ந்து கல்யாணி ஒப்பனை செய்து கொள்ளும் ஒரு படம் அனைத்தும் ஏறக்குறைய நடிகை சாரதாவை நினைவூட்டும் விதமாகவே இருக்கும்.
ஆனால், அது திரை வடிவம் பெற்றபோது அந்தப் பாத்திரம் ஏற்றவர் லட்சுமி. சாரதாவையே ஏன் நடிக்க வைத்திருக்கக்கூடாது என்ற எண்ண ஓட்டம் எனக்குள் அலை பாய்ந்தது.

‘புதுச்செருப்பு கடிக்கும்’ படத்தில் சாரதா நடித்திருந்தும் படம் வெளியாகவில்லை என்பது பற்றி என்ன சொல்ல? தமிழ்ப் படங்களில் சாரதாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, அவருக்கான பாத்திரத்தை உருவாக்க வேண்டுமென யாரும் நினைக்கவில்லை. இறுதியாக அப்படி அவர் நடித்த படமோ வெளியாகவே இல்லை என்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது.  80களில் வெளியான ‘மிஸ்டர் பாரத்’ சூப்பர் ஸ்டாரின் படமாக வில்லன் சத்யராஜின் படமாக மட்டுமே இருந்தது.

பெண்ணின் மாண்பைப் பேசிய துலாபாரம்

தமிழில் துலாபாரம் மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட படம் என்றாலும் என்றென்றைக்கும் நினைந்து மகிழவும் பாராட்டுதலுக்கும் உரிய ஒரு படம். அத்துடன் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த, அதிசயிக்க வைத்த திரைப்படமும் கூட. நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றிப்படமாகவே ஓடி வசூல் ரீதியாகவும் ஜெயித்த படம். தொழிலாளர்கள், முதலாளி வர்க்கத்தின் துரோகம், தொழிற்சங்கம், கம்யூனிஸம், வர்க்க பேதம், வறுமை, பட்டினி, காதல், நட்பின் மேன்மை அனைத்தையும் பேசிய ஒரு படம்.

அத்துடன் பெண்கள் இருவரின் ஆத்மார்த்தமான நட்பையும் தன் வாழ்க்கை குறித்து ஒரு பெண் தானே முடிவெடுக்கும் அதிகாரமும் காதலில் தோல்வியுற்றதால் துவண்டு போய் தற்கொலை முடிவையோ, ஒருமுறைதான் காதல் வரும் என்று அபத்தமாக வசனம் பேசி தனித்தே வாழ்வது என்றோ சிந்திக்காமல் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தன்னிலை உணர்ந்து எளிய, மனிதாபிமானம் கொண்ட ஒருவனைக் கைப்பிடிப்பது என்ற முடிவை எடுக்கும் சுய சிந்தனை கொண்டவளாகவும் கதாநாயகி விஜயா படைக்கப்பட்டிருந்தது மிகச் சிறப்பு. அத்துடன் வறுமையின் பிடியில் சிக்கி இருந்தபோதும் சுய மரியாதை மிக்கவளாகவும் எத்தகைய இடர்ப்பாடு மிகுந்த நேரத்திலும் பணத்துக்கு அடிமையாகாதவளாகவும் சித்திரிக்கப்பட்டிருந்ததும் சிறப்பு.

அதேபோலவே உற்ற தோழியும் வழக்கறிஞர் தொழிலை நேர்மையுடன் நடத்த வேண்டும் என்ற கொள்கையையும் கொண்டு, திருமணத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் தன் விருப்பம் போல் தன் வாழ்க்கையைக் கொண்டு செலுத்தும் வத்ஸலா பாத்திரம். 60களில் இம்மாதிரியான பெண் பாத்திர வார்ப்பு என்பதும் அரிதிலும் அரிதானது. இரண்டு பாத்திரங்களின் வார்ப்புமே அற்புதமானவை.  

நான்கு மொழிகளிலும் நாயகி சாரதா

துலாபாரம் 1968 (மலையாளம்), துலாபாரம் 1969 (தமிழ்), மனுஷலு மாறாலி (Manushalu Maaraali 1970), சமஜ் கோ பதல் டாலோ (Samaj Ko Badhal Daalo 1970). தமிழில் துலாபாரம் வெளியாகி 50 ஆண்டுகளாகிறது. இந்த ஆண்டு பொன் விழா. அந்தந்த மொழிகளில் பிரேம் நஸீர், ஏ.வி.எம்.ராஜன், ஷோபன் பாபு, அஜய் சஹானி என பிரதேச நாயகர்கள் மாறினாலும் நாயகி சாரதா ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாத்திரத்தை அந்த அளவுக்கு உள்வாங்கி சோக ரசம் ததும்ப உயிரூட்டியிருந்தார்.

அதேபோல மலையாளத்தில் தோழி வத்ஸலா பாத்திரத்தை ஏற்றவர் ஷீலா. ஆனால், பிற மூன்று மொழிகளிலும் அப்பாத்திரத்தை ஏற்றவர் காஞ்சனா. இருவருமே அந்தப் பாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருந்தார்கள். தமிழில் டி.ஆர். ராமண்ணா தயாரித்திருந்தாலும் திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை மல்லியம் ராஜகோபால், இயக்கத்தை மூல மொழியில் இயக்கிய வின்சென்ட் இருவர் வசமும் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். தெலுங்கிலும் இந்தியிலும் பாரம்பரியம் மிக்க, சினிமா வியாபாரத்துக்குப் பெயர் போன நிறுவனமான ஜெமினி தயாரித்தது.

மதுசூதன் ராவ் இயக்கினார். அதனால் வியாபாரத்துக்காகவும் நகைச்சுவைக்காகவும் கவர்ச்சி நடனங்கள் உட்பட அதில் புதிதாகச் சில பகுதிகள் எழுதிச் சேர்க்கப்பட்டிருந்தன. இசையும் பாடல்களும் ஒளிப்பதிவும் அனைத்து மொழிகளிலும் குறிப்பிடப்பட வேண்டியவை. அதே போலவே பிற பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும் தங்கள் பொறுப்புஉணர்ந்து சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

கேரளத் திரையின் துக்க புத்ரி

மலையாள திரைப்படங்களைப் பொறுத்தவரை ‘துக்க புத்ரி’ என்றே சாரதா கொண்டாடப்படுகிறார். அந்த அளவு துயரம் தோய்ந்த பல பாத்திரங்களை ஏற்றுத் தன் நடிப்பால் மெருகேற்றியவர். துலாபாரம் மட்டுமல்லாமல், அதற்கும் முன்னதாகவே சகுந்தலா, முறப்பெண்ணு, உத்யோகஸ்தா, இருட்டிண்டெ ஆத்மாவு போன்ற படங்களும் பின்னர் ஸ்வயம்வரம், எலிப்பத்தாயம், மழத்துளிக்கிலுக்கம், ராப்பகல், நாயிகா, மின்னா மினுங்கிண்டெ நுறுங்குவட்டம் போன்ற பல மலையாளப் படங்கள் நிரூபித்தன.

மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக, கொண்டாடப்படக் கூடியவராகவும் சாரதா திகழ்கிறார். அதே வேளையில் தமிழ்த் திரையுலகம் சாரதாவின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

சொந்த வாழ்வும் அரசியல் பிரவேசமும்

1960களின் இறுதியில் தெலுங்கு நடிகர் சலம் - சாரதாவின் வாழ்க்கைத் துணையானார். ஆனால், தொடர்ந்து துணையாக இருக்க இயலாததால், இருவரும் மணவிலக்கு பெற்று பிரிந்தனர். இப்போது தன் அண்ணன் பிள்ளைகளுக்கு ஆதரவாக அவர்களுடன் இருக்கிறார் சாரதா.
கேரளத்தில் திரைத்துறை சார்ந்த ஏழ்மை நிலையிலிருக்கும் வயதான பெண்களுக்கு உதவி செய்யும் ஜஸ்டிஸ் ஹேமா வாரிய உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார்.

அரசியலிலும் சாரதா பங்கேற்றார். என்.டி.ஆர். மறைவுக்குப் பின் சந்திரபாபு நாயுடு அழைப்பின் பேரில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தான் பிறந்த தெனாலி பகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது கட்சியில் இருந்தாலும், முன்பு போல் செயல்பட
முடியவில்லை.

நடிப்புக்குத் தேடி வந்த விருதுகள்

மூன்று முறை ஊர்வசி விருது பெற்றவர். சிறந்த நடிகைக்கு அளிக்கப்படும் தேசிய விருது அப்பெயராலேயே முன்னர் வழங்கப்பட்டு வந்தது. துலாபாரம்(1968 - மலையாளம்), ஸ்வயம்வரம் (1972 - மலையாளம்), நிமஜ்ஜனம் (1977 - தெலுங்கு) போன்ற படங்களுக்கு இருமுறை மலையாளத்திலும் ஒரு முறை தெலுங்கிலும் என கிடைத்த இவ்விருதுகள் பெருமைக்குரியவை.

இவை தவிர தமிழக அரசின் கலைமாமணி விருது, 1970ல் கேரள மாநில சிறந்த நடிகைக்கான விருது, அதே ஆண்டில் பெங்கால் ஃபிலிம் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருது, 1984ல் ஆந்திர மாநில சிறந்த நடிகைக்கான நந்தி விருது, 1987ல் சிறந்த மலையாள நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது, 1997ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010 வாழ்நாள் சாதனையாளருக்கான என்.டி.ஆர். தேசிய விருதும் பெற்றவர்.

(ரசிப்போம்! )

சாரதா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

குங்குமம், துளசி மாடம், அருணகிரி
நாதர், வாழ்க்கை வாழ்வதற்கே, துலாபாரம், ஞான ஒளி, தாய் பிறந்தாள், நினைத்ததை முடிப்பவன், மழை மேகம், என்னைப் போல் ஒருவன், அவள் தந்த உறவு, சக்கரவர்த்தி, புதுச்செருப்பு கடிக்கும், சரித்திர நாயகன், மிஸ்டர் பாரத், அந்தப்புரம்.

ஸ்டில்ஸ் ஞானம்