ஜிம்முக்கு போகாமல் ஜம்முன்னு ஆகலாம் !
வாசகர் பகுதி
உடலை குறைக்கணுமா... உடனே அருகில் இருக்கும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். ஜிம்முக்கு போனால் தான் ஜம்முன்னு ஆகமுடியும் என்றில்லை. அங்கு போகாமலேயே உங்களின் உடலை ஸ்லிம்மாக வைத்துக் ெகாள்ளலாம். இதற்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே சில உடற்பயிற்சிகளை செய்தால் போதும்.
1) எழுந்தவுடன் கைகளை நன்றாகத் தூக்கி இறக்கி, பக்கவாட்டில் செலுத்தி கூடுதலாக குனிந்து நிமிர்ந்தும் கைக்கு பயிற்சி தந்தால் நாள் முழுவதும் ரத்த ஓட்டம் கைகளில் சீராக இருக்கும்.
2) பல் தேய்க்கும்போது, தூங்கி வழிந்தபடியே, வாஷ்பேஷினில் சாய்ந்தபடி நிற்காமல், மறு கையை இடுப்பில் வைத்து 50 தடவை, பஸ்கி எடுப்பது போல் உட்கார்ந்து எழுந்திருக்கலாம். கால்கள் புத்துணர்வு பெற்றுவிடும்.
3) அடுக்கு மாடி வீட்டில் வசிப்பவரா அல்லது அடுக்கு மாடி ஆபீஸில் பணிபுரிபவரா? லிப்ட்டை தவிர்த்து, படிக்கெட்டுகளில் ஏறி, இறங்க பழக்கவும். ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் குறையும். இடுப்பும் சிக்கென்றாகும்.
4) உங்க வீட்டு சுவரையே உடற்பயிற்சிக்கு பயன்படுத்தலாம். சுவற்றில் கைகளை வைத்து அதனை மடித்து, உடம்பை சுவரிடம் இணைக்கவும். பிறகு கைகளை விரிக்கவும். இதே போல் தினமும் 20 தடவை செய்யலாம். உடற்கட்டு வலுப்படும்.
5) அலுவலகங்களில் சாப்பாடு இடைவேளை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இருக்கும். அந்த சமயத்தில் சாப்பிட்டுவிட்டு அரட்டை அடிக்காமல், ஒரு பத்து நிமிடம் காலாற நடந்து வாருங்கள். இதன்மூலம் சாப்பிட்டபின் எழும் மதமதப்பையும் தவிர்க்கலாம். பிற்பகல் வேலைக்கும் ஒரு புதிய சுறுசுறுப்பு கிடைக்கும்.
6) இன்று செல்போனில் சிலர் மணிக்கணக்கில் பேசுகின்றனர். அப்படி பேசுபவர்கள் உட்கார்ந்து பேசாமல், நடந்தபடி பேசலாம். கால், கைகளை இயக்கியபடி பேசலாம்.
7) பஸ், எலெக்ட்ரிக் டிரெயின்களில் ஏறியவுடனேயே உட்கார துடிக்காமல் மாறாக நின்றபடியே பயணம் செய்யுங்கள். இதன்மூலம் உடலுக்கு ரத்த ஓட்டம் சீராகும்.
8) பாத்ரூமில் துணிகள் போட நீண்ட சுவருக்கு சுவர், கம்பி கட்டுவதற்கு பதில், இரும்பு குழாயை பதித்தால், வாளியில் தண்ணீர் நிரம்பும் வரை அதில் பார் பயிற்சி செய்யலாம்.
9) காலையில் சுறுசுறுப்பா எழுந்திருக்கணும்னா அலாரம் அவசியம். அதனை வைத்துவிட்டு, அடிக்க ஆரம்பித்ததும், நமக்கு எட்ட முடியாத அளவுக்கு தூரத்தில் வைத்து அலார சப்தம் கேட்டதும் டக்கென எழுந்து விடவும். அதுவே சுறுசுறுப்புக்கு முதல் படி.
10) வாயை விட்டு சிரிக்கணும். இது வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி, மனதிலும் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்.
- ராஜி ராதா, பெங்களூரூ.
|