கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...



வாழ்வென்பது பெருங்கனவு!

எழுத்தாளர் லதா சரவணன்


கனவுகள் நாம் உறங்கும்போது நம்மையறியாமல் தொட்டு வீசிவிட்டுச் செல்லும் தென்றல். சில நேரம் அர்த்தமானதாகவும், பலநேரம் அர்த்தமில்லாமலும் ஏதோ ஓர் உணர்வை நமக்காக ஏந்திக்கொண்டு நிற்கும் பரிகாசக்காரன். பள்ளிப் படிப்பின்போது, ஆசிரியரின் மேல் கொண்ட காதலால் ஆசிரியராக வேண்டும் என்ற கனவு. பெற்றோர்களின் விருப்பமோ எஞ்சினியர், டாக்டர் எனும் கனவு. ஆனால் பலித்தது என்னவோ எழுத்தாளர் என்னும் கனவுதான் என தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் லதா சரவணன்.

‘‘என் கனவுகள் தடதடக்கும் ரயில் வண்டிகள் ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் நின்று பயணிகளை ஏற்றியிறக்கிச் செல்வதைப்போல தடம் மாறியிருக்கிறது. இது எனக்கு மட்டும் இல்லை வெற்றி பெற்ற எல்லாருக்கும் இரண்டு அல்லது மூன்று கனவுகள் இருக்கும். அதில் எது தனக்கானது என்பதை அறிய சுயபரிசோதனை நடத்தும்போதுதான் ஒன்று உயிர்பெறுகிறது மற்றது இறக்கிறது.

80-களில் ஆதிக்கம் மிகுந்த சைக்கிள் கடையின் உரிமையாளர் அப்பா, அந்த ஏரியாவில் பிரசித்தியான அறிமுகம். மோட்டார் சைக்கிளின் ஆதிக்கம் கெளரவமாகிப்போனபோது 20 முப்பது பேர் வேலை பார்த்த அந்தக் கடை நிர்வாகம் படுத்தது. என் முதல் கனவு அடுத்தவேளை உணவுதான். இது எனக்கு மட்டும் அல்ல வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அநேக பிள்ளையின் கனவுதான். பகிர்ந்து கொண்ட பள்ளி உணவின் உறங்காத வயிறு நான்கு மணிக்குமேல் அப்பா கொண்டு வரும் நாற்பது ஐம்பது ரூபாயில் தன் கனவை தினமும் முடித்துக்கொள்ளும். அன்றைய கனவு வெறும் உப்புமாவோ, பிரியாணியோதான்.

தட்டுத் தடுமாறி முடித்த பள்ளிப்படிப்பில் கலர்கலராய் உடையுடுத்தி புத்தகத்தின் அணைப்போடு கல்லூரியில் சேர்ந்து கலாட்டாக்களோடு கல்வியும் பெற வேண்டும் என்ற கனவு நிராசையாய் போனது. நிஜம் கண்களில் அறைந்தது. மாதம் 700 ரூபாய் வேலைக்கு ஒரு கம்பெனியில் தட்டச்சு செய்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தேன்.

தொழில்முறை படிப்பு தினந்தோறும் அலுவலகத்தில் நடைபெறும் அத்தனை விஷயங்களை ஊன்றி கவனிக்கத் தொடங்கினேன். நிச்சயம் ஒரு நாள் நானும் முதலாளி என்ற அந்தஸ்தில் வருவேன். அப்போது நான் செய்ய வேண்டியவையும், வேண்டாததையும் என்னவென்று எனக்குள்ளே கணக்கிட்டுக் கொண்டேன். அப்போதைய கனவு என் நூற்றுக்கணக்கான கனவுகளை அழித்தது. பணத்தை பார்த்ததும், அடைந்துவிட்டேன் என்று ஏளனமாய் சிரிக்கவேண்டும் என்று தோன்றும்.

காரணம் நமக்கு எது தேவையோ அதை கவனமாக கடவுள் மறுத்தாலும், அதற்காக நாம் மெனக்கெடுவோம்! ஜாப்டைப்பிங், டியூசன் எடுத்தல், ஒரு ரூபாய்க்கு ஒரு முழம் என்று பூக்கட்டுதல் என்று எத்தனையோ வேலைகளுக்குள் என் கனவுகள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டன.

அவை கானலாக காணாமலேயே போய்விடுமோ என்று என் கண்கள் கனத்த போதுதான், துணிக்கடை நிறுவனத்தில் கணக்குப்பிரிவில் வேலை கிடைத்தது. எனக்கு கீழ் மூன்று பேர்கள் அவர்களுக்கு ஒரு குட்டி அதிகாரியைப்போல நான். இன்னும் என்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்காலத்தை நோக்கி இலக்கில்லாமல் நான் பயணிக்கவேண்டும் என்று மட்டுமே என் மனதில் ஒளித்துக் கொண்டு இருந்தது. தேனின் சில துளி இனிப்பை சுவைத்து உயிருக்குப் போராடும் மனிதனின் நிலைப் போலத்தான் என் கனவுகளும் இருந்தது.

ஒரு முயலிடம் நரி கேட்டது, ‘‘எனக்கு பகைவனிடம் இருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும், உனக்கு என்ன தெரியும்’’ என்று. முயலோ ‘‘எனக்கு ஒரேயொரு தந்திரம் தான் தெரியும்’’ என்று சொல்லி முடிக்கவும், வேடன் அவர்களைத் துரத்திக்கொண்டு வர முயல் தனக்குத் தெரிந்த ஓட்டம் என்னும் தந்திரத்தை கையாண்டது, நரியோ நூறில் எதை தேர்ந்தெடுப்பது என்று யோசித்தே வேடனிடம் சிக்கியது. அப்படித்தான் சிலர் இலக்கினை சரிவர உணராமல் ஒருநாள் தடுமாறுவார்கள் அந்த தடுமாற்றத்தில் தன் குறிக்கோளை தீர்மானித்து அதற்காக மட்டும் போராடி வெற்றி பெற்று சாதிப்பது.

இன்னொன்று அப்படி சாதித்து பின் ஏன் இதனை அடைந்தோம் என்பதையே மறந்து வாழ்வதைப்போல இலக்கில்லாமல் வாழ்க்கை விதித்த வழியைத் தேடி நம்மை நாமே தேற்றிக்கொண்டு அதன் போக்கிலேயே வாழத் தொடங்குவது.சில கனவுகள் பொருளாதாரத்தினால் பொசுக்கப்பட்டன.  சில  கனவுகள் அற்பமாய் எண்ணிபுறம் தள்ளப்பட்டன. இளமையில்இருந்தே பத்திரிகைத் துறையில் பணியாற்றிட வேண்டும் என்பது என் தீராத ஆசை. என் 20வது வயதில் அடுத்த கட்ட நகர்வு என்ன? கல்யாணமா? வேலையா? நான் வேலையைத் தேர்ந்தெடுத்தேன்.

மற்ற நேரங்களில் காலண்டர் பேப்பரில் கூட இரண்டு வரிகளைக் கிறுக்கினேன். மார்க்கெட்டில் பழைய பேப்பர் கடையில் எடைக்குப்போடப்படும் புத்தகங்களை சில்லரைக்காசுக்கு வாங்கிப் படித்தேன். அந்த வாசிப்பு தான் என்னுள் எழுத வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. இதுதான் என் இலக்கு என் நெடுநாளைய கனவு என்று உணர்ந்து கொண்டு ஒரேயொரு தந்திரம் அறிந்த முயலானேன். என் பெயரை மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு சிறு சிறு கவிதைகள் எழுதினேன்.

இருபது ரூபாய் சன்மானத்தோடு பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள் ஊக்கத்தைக் கொடுத்தது. பத்திரிகையில் எனது முதல் சிறுகதை, அதைப் பாராட்டி  வந்த  குட்டி குட்டி போஸ்ட்டு கார்டுகள், 250 ரூபாய் பரிசு.... ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் அவற்றையெல்லாம் ஒட்டி வைத்து அழகு பார்த்தேன். ஒவ்வொரு முறை அதை பார்க்கும் ேபாது இது தான் என் இலக்கு என்று என மனதில் ஆணி அடித்தார் ேபால் பதிந்தது.

என் இலக்கை புரிந்து கொண்டபின், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எழுத தொடங்கினேன். திருமணம், குழந்தை என்றெல்லாம் தேக்கம் இருந்தபோதும், தண்ணீர் பிடிக்கும் குடம்,  தோசை சுட்டு வைக்கும் ஹாட்பேக், என் எழுத்தின் காகிதங்களை சுமக்கும் மேடைகளாயின. இப்படி வளர்ந்த எழுத்துக்குழந்தை பத்திரிகையாளர்களின் ஆதரவில் இன்று 43க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, கட்டுரை என்று இணையதளத்திலும், வெகு ஜனப்பத்திரிகைகளிலும் இன்னுமின்னும் கண்கள் சுருங்கி கனவுகள் விரிவடைகிறது.

தாகம் தீராத நிலத்தைப் போல என் கனவுகளின் பாரம் கண்களை அழுத்தவில்லை, மாறாக அது என்னை அரவணைத்துக் கொண்டது. நீண்டதாக ஒரு வார்த்தை பேசத் தெரியாத நான் வெறும் வார்த்தைகளைப் புரட்டி ஏடுகளில் வடிக்கத்தெரிந்த நான் இன்று ஒரு மேடையில் பேசும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன், அது என் கனவின் பயன்.

ஒரு குழந்தை பிறக்கும். வளர வளர அது என்னவாக வேண்டும் என்று சுற்றியுள்ளவரின் கனவுகளை சுமந்து கொண்டு தனக்கான சுயத்தை இழப்பதைப்போல, ஒருவேளை சாப்பிடக்கூட கஷ்டப்பட்ட என் நிலைமை மாறி இன்று 300 குடும்பங்களுக்கும் மேல் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். வடசென்னையின் அடையாளமாய் உயர்ந்து நிற்கும் ‘சாந்தி சாரீஸி’ன் உரிமையாளர் சரவணனின் துணைவியாய் சமூகம் மதிக்கும் ஒரு எழுத்தாளராய் என் கனவு மெய்பட நான் என்ன செய்தேன்.

இருபத்திநாலு மணிநேரமும் அதையே எண்ணி அதை நோக்கியே சுழலவில்லை. என் விருப்பத்தை நிறைவு செய்ய எனக்கான நேரத்தை ஒதுக்கிக்கொண்டேன். சரியான நேரத்தில் அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டேன்’’ என்றார் லதா சரவணன்.

தோ.திருத்துவராஜ்