தடயம்



ஒரு மழை நாளில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தன் காதலியை 35 வருடங்கள் கழித்து பார்க்க வருகிறான் காதலன். நோயால் பாதிக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்து வரும் அவளுடன் அவன் இருக்கும் அந்த ஒரு மணி நேரம் தான் ‘தடயம்’... இருவரும் திருமணமாகி அவரவர் வாழ்க்கையை தேர்வு செய்த பிறகும், தன் காதலியின் நிலையை அறிந்து அவளை தேடி வரும் அந்த உணர்வினை அழகாக படம் பிடித்துள்ளார் தமயந்தி.

கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், திரைப்பட பாடலாசிரியர்.. தற்போது இயக்குனர் என தமயந்தி பன்முகங்கள் கொண்டவர். திருநெல்வேலி சொந்த ஊர். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். அப்பா இவரின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு ஒரு புத்தகம் பரிசாக கொடுப்பது வழக்கம். அதனாலேயே இவருக்கும் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் அதிகமானது. சிறு வயதிலேயே கவிதை, சிறுகதை என எழுத ஆரம்பித்தார். புத்தகம் படிப்பது போல், ரேடியோவில் பாடல்கள் கேட்பதும் இவருக்கு பிடிக்கும்.

இலக்கியத்தின் மேல் ஏற்பட்ட ஆவல் காரணத்தால், நண்பர்களுடன் இணைந்து கையெழுத்து பிரதி ஒன்றை ஆரம்பித்தார். வார இதழ்களில் சிறுகதைகளும் எழுதினார். இவர் எழுதிய சிறுகதைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு ‘தமயந்தியின் சிறுகதைகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

திருநெல்வேலியில் எஃப்.எம் ஒன்றில் அறிவிப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர், திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்தவர் தொடர்ந்து ஊடகங்களில் பணியாற்றினார்.
இவரின் ‘அனல்மின் மனங்கள்’ சிறுகதை ‘கழுவேண்ணம்’ என்ற பெயரில் குறும்படமாக வெளியானது. இயக்குனர் மீரா கதிரவன் இயக்கிய ‘விழித்திரு’ படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். பரத் பாலாவின் படத்திற்கு ஸ்கிரீன் பிளே செய்துள்ளார். அதன் வரிசையில் தான் இவரின் மற்றொரு படைப்பு ‘தடயம்’...

“சினிமா துறை எனக்கு புதுசில்லை. குறும்படங்கள், இயக்கி இருக்கேன். சினிமாவில் பாடல்கள் எழுதி வருகிறேன். ஸ்கிரிப்ட்டும் எழுதுகிறேன். ஆனால் ‘தடயம்’ என் வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமான படம்ன்னு சொல்லலாம். 2017ம் ஆண்டு இது கதையாக வார இதழ் ஒன்றில் வெளியானது. அதை படித்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அதை படமாக இயக்குவதாக சொன்னார்.

ஆனால் அந்த சமயத்தில் படமாக்க முடியாமல் தள்ளிப்போனது. நான் படங்களில் ஸ்கிரிப்ட், பாடல்கள் எழுதி இருக்கேன்... ஆனால் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது இல்லை. அதற்கான விதையை தூவியவர் இயக்குனர் சக்திவேல் அவர்கள் தான். அவர் சொன்ன வார்த்தை தான் நாம் ஏன் இயக்கக்கூடாதுன்னு என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது’’ என்றவர் அதற்கான காரணத்தை அவரே விவரித்தார்.

“தடயம்’ கமர்ஷியல் படம் கிடையாது. ஒரு பையன் மதன் முன்னாள் காதலியை சந்திக்க போகிறான். இது தான் ஒன்லைன்னு சொன்னா எந்த தயாரிப்பாளரும் முன் வரமாட்டாங்க. எந்த ஒரு மசாலா கலவையும் இல்லை. அப்பதான் ஏன் இதை கிரவுட் பண்டிங் மூலமா செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படி செய்தாலும் யார் பணம் தருவாங்க.

அந்த சமயம் என் பள்ளி தோழி சித்ரா தேவி என்பவரிடம் இது குறித்து பேசிக் கொண்டு இருந்தேன். அவள் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு எடுத்த ஆசிரியரிடம் இது குறித்து கூற, அமெரிக்காவில் இருந்தவர் உடனடியாக எனக்கு 25 ஆயிரம் ரூபாய் டிரான்ஸ்பர் செய்தார். அது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என ரூ.500 முதல் துவங்கி... 4.9 லட்சம் ரூபாய் வரை இந்த படம் இயக்குவதற்காக கிடைச்சது’’ என்றவர் தன் படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் குழுவினர்களை
அறிமுகம் செய்தார்.

‘‘என் படத்தின் கதாநாயகி எனக்கு ரொம்பவே பிடிச்ச நடிகை கனி குஸ்ருதி, மலையாள தியேட்டர் ஆர்டிஸ்ட். தமிழில் ‘மா’ என்ற குறும்படத்தில் நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட கதை சொன்ன போது மறுப்பேதும் சொல்லாமல் நடிக்க சம்மதிச்சுட்டாங்க. கதாநாயகன் கணபதி முருகேசன், என் நண்பர். அவங்ககிட்ட கதையை படிச்சி காண்பிச்சேன், ஓகே சொல்லிட்டாங்க.

ஒரு கேன்சர் நோயாளியாவே மாறி இருந்தாங்க. அவங்களுக்குள்ளே அந்த ரசவாதம் எப்படி நடக்கும்னு தெரியல. ஹீரோ கணபதி முருகேசன் என் நண்பர். நான் ஒரு தனியார் செய்தி சேனலில் வேலைப் பார்த்த போது அங்கு ஆக்டிங் பயிற்சியாளரா இருந்தார். அவருடைய கண்கள் மிகவும் அழகா இருக்கும். எனக்கு இந்த படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் இவர்கள் இருவர் தான் என் மனத்திரையில் வந்தாங்க.

படத்தின் மற்றொரு பலம் அதன் இசை மற்றும் எடிட்டிங். ஜஸ்டின் கெனன்னியா தான் இசை அமைச்சிருக்கார். இரண்டு பாடல்கள் உண்டு. இந்த படத்தின் முக்கியமான இசை மழை தான். ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அழகாக மழையின் சத்தத்தை பின்னணி இசையாக பொருத்தியிருப்பார். எடிட்டர் பிரவீன், போஸ்ட் புரொடக் ஷன் போது மிகவும் உறுதுணையாக இருந்தார். அழகாக எடிட் செய்து கதையின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார்’’ என்றவர் ஷூட்டிங்கின் போது சந்தித்த பிரச்னைகள் மற்றும் காம்பிரமைஸ் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘கிரவுட் பண்டிங் மூலமா கிடைச்ச பணத்தை கொண்டு தான் நான் படம் செய்யணும். அதனால் சில இடங்களில் நான் காம்பிரமைஸ் செய்து தான் ஆகணும். ஏழு நாள் தான் ஷூட்டிங். சவுபா அவர்களின் தோட்டத்தில் தான் ஷூட் செய்தோம். ஒரே ஒரு மழைப் பாடல் மட்டும் சென்னையில் ஷூட் செய்தோம். இத கிரவுட் பண்டிங் என்பதால் பொருளாதார ரீதியாதான் சின்னச் சின்ன பிரச்னைகள் வரும். 25 பேர் கொண்ட க்ரூப்.

அவங்களுக்கு இரண்டு வேலை சாப்பாடு மற்றும் டீ ஏற்பாடு செய்யணும். பணம் அனுப்பறேன்னு சொல்லி இருப்பாங்க. சில காரணங்களால் தாமதமாகும். அப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கும். என்னுடைய ஸ்கிரிப்ட்டில் கதாநாயகியின் படுக்கைக்கு அருகே ஒரு ஜன்னல் இருக்கும். அதில் மழை பெய்து கொண்டு இருப்பது போல் காட்சி அமைச்சு இருந்தேன். மழையை என்னால் ஏற்படுத்த முடியல. அதனால் ஜன்னல் கண்ணாடி கதவினை அதற்கு ஏற்ப மாற்றி அமைச்சேன்.

இரண்டாவது நான் பண உதவி கேட்ட போது, இதற்கு முன் படம் செய்வதாக பணம் உதவி செய்தோம். ஆனால் அவங்க படம் செய்யல. நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு வெளிப்படையா கேட்டாங்க. அதனாலேயே எந்த காரணம் கொண்டும் இந்த படத்தை நிறுத்த கூடாது, கண்டிப்பா வெளியிடணும்ன்னு நான் ரொம்பவே தெளிவா இருந்தேன். என்னுடைய படம் வெளியானால், இது போன்ற கிரவுட் பண்டிங் மூலம் பலர் படம் இயக்க முன் வரலாம்.

எனக்கு கதை எழுதும் போதே ஒரு பயம் இருந்தது. இது ஆண் சார்ந்த உலகம். ஆண் சார்ந்த காதலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. அப்படி இருக்கும் போது ஒரு பெண் சார்ந்த காதலை எப்படி ஏத்துப்பாங்கன்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கதை இதழில் வெளியானதும், ஒரு பெண்மணி என்னை அழைத்து பேசினார். அவர் கதையை படித்துவிட்டு தன் முன்னாள் காதலனை சந்தித்து வந்துள்ளார். இதெல்லாம் நடக்கக்கூடிய சம்பவம் தான். ஆனால் நாம் அதை வெளிப்படையாக செல்லிக் கொள்வதில்லை. அந்த உணர்வுகளையும் தடயம் மூலம் கொண்டு வந்து இருக்கேன்’’ என்றவரின் அடுத்த படம் பயணம் சார்ந்ததாம்.

‘‘அடுத்து ஒரு முழு நீள படம் இயக்க இருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பயணம் சார்ந்த படம். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடி செய்திட்டு இருக்கேன். தடயம் பிஹைண்ட்வுட்சில் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இது புதுவிதமான சினிமா டிரண்ட். இது தான் எதிர்கால சினிமா டிரண்டாக அமையும்’’ என்றார் இயக்குனர் தமயந்தி.                                       

ப்ரியா