கிராமத்தில் திறமை மறைந்திருக்கு!



எதற்காக ஓடுகிறோம்? யாருக்காக ஓடுகிறோம்? மன அழுத்தம் இல்லாத வேலை இன்று எங்கு இருக்கிறது? என்ற கேள்விகளை தனக்குள்ளே தொடுத்து, அந்த பரிட்சையில் வெற்றியும் கண்டிருக்கிறார் இளம் தொழில் முனைவோர் நிவேதிதா. “ஃபேஸ்புக், ஃப்ளிப்கார்ட் போன்ற வெற்றி கரமான தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்முனைவோரின் வயது 20 முதல் 30 வயதிற்குள் இருக்கிறது. இவர்களைப் போன்ற ஆளுமைகள்தான் எனக்கு முன்னுதாரணம்” என்று கூறும் நிவேதிதா கோயம்புத்தூரைப் பூர்விகமாகக் கொண்டவர்.

“சிறு வயதிலிருந்தே சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாக இருந்தது. கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் படித்த பின், பிசினஸ் அட்மினிஸ்டேஷனிலும் டிகிரி முடித்தேன். படிப்பிற்குப் பிறகு எல்லோரும் போல் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமென்று, ஐ.டி நிறுவனத்தில் ேவலைக்கு ேசர்ந்தேன். ஆறு மாசம் தான் வேலைப் பார்த்தேன். அந்த வேலை எனக்கு சுத்தமா செட்டாகல.

அதனால் என் கனவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிச்சேன். Sporada Technologies India Pvt Ltd என்ற பெயரில் ஐ.டி நிறுவனத்தை 2014ம் ஆண்டு துவங்கினேன். இதில் வெப்சைட் டெவலப்மெண்ட், ஆப் டெவலப்மெண்ட், சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் போன்ற வேலைகளை செய்து வருகிறோம். இதனோடு மீடியா ஆப்பும் கிரியேட் செய்கிறோம். அதில், மோஷன், 3டி, 2டி, VFX  போன்ற பணிகளும் அடங்கும்’’ என்ற நிவேதிதா அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்மூர் பாரம்பரிய மற்றும் பிரபலமான உணவுகளை மற்ற மாநிலங்களுக்கு சப்ளை செய்து வருகிறார்.

“வேலைக்காக இன்று பலபேர் வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். என்னதான் வெளிநாடுகளில் வகை வகையான உணவுகள் இருந்தாலும், எதுவுமே நம்மூர் உணவுக்கு ஈடாகாது. காரணம் நம்முடைய சுவைக்கு ஏற்ப உணவுகள் அங்கு கிடைப்பதில்லை. விடுமுறைக்கு வருபவர்கள் இங்கிருந்து தான் மசாலா பொடிகள் எல்லாம் எடுத்துச் செல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு தான் நம்ம ஊர் உணவு எல்லாருக்கும் கொண்டு போக வேண்டுமென்று நினைச்சேன்.

ஸ்வீட், ஸ்நாக்ஸ், மசாலா பொருட்களை ரீட்டைல்ல ஆகவும், ஹோல் சேலாகவும் ‘ஸ்நேக்ஸ் பசார்’ என்ற பெயரில் எக்ஸ்போர்ட் செய்யலாம் என்று முடிவு செய்து அதனை செய்து  வருகிறோம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் என்னென்ன சிறப்பு என்பதை அறிந்து, கஸ்டமர்ஸ் என்ன கேட்கிறார்களோ அதை வாங்கிக் கொடுக்கிறோம். ஒரு பொருள் ஆர்டர் செய்த 48 மணி நேரத்தில் டெலிவரி கொடுத்திடுவோம். இதனை மற்ற மாநிலங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் கொடுத்து வருகிறோம். வெளிநாட்டை பொறுத்தவரை சில இடங்களில் உணவு பொருட்கள் என்றால் கஸ்டம்ஸ்ல ரொம்ப ஸ்ட்ரிட்டா இருப்பாங்க. அப்படிப்பட்ட நாடுகளுக்கு டெலிவரி செய்ய 72 மணி நேரம் ஆகிடும்.

சிறுதொழில், வீட்டிலிருந்து பிசினஸ் செய்பவர்களுக்காக, ஃபேஸ்புக் ஃபோரம் ஒன்று ஓப்பன் பண்ணி இருக்கோம். இதில் இரண்டு லட்சம் பேர் இருக்காங்க. இணையம் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இருவரும் நேரடியாக தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியும். இணையம் என்பதால், அதில் பல சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் அதில் உள்ளவர்கள் சரியானவர்கள்தானா என்பதை அடிக்கடி மேற்பார்வை செய்து கொள்வேன். எனக்கு சரியில்லை என்று பட்டால் அவர்களை நான் பிளாக் ெசய்திடுவேன்’’ என்றவர் ஐ.டி துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை குறித்து விளக்கினார்.

‘‘படிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிக்கணும்ன்னு ஒரு பேஷனோடுதான் எல்லோரும் வராங்க. அதற்கு மேல் குடும்பத்தை சப்போர்ட் பண்ண வேண்டிய தேவையும் இருக்கிறது. பெரும்பாலானோர் வாழ்க்கை இ.எம்.ஐ-யில் தான் ஓடுது. என்னதான் ஆர்வத்தோடு வந்தாலும் உள்ளே இருக்கும் ஸ்ட்ரெஸ் ரொம்ப ரொம்ப அதிகம். ஏதாவது ஒரு தப்பு செய்தால் அதுவும் அது பெண்ணாக இருந்தால் அவர்களை இழிவுபடுத்துவது இந்த துறையில் மிகவும் சுலபம். ஒரு கட்டத்திற்கு மேல் அதனை ஒரு பெண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வேலை, வீடு என எல்லா இடங்களிலும் பிரச்சினை எளிமையாகப் பெண்களை நெருங்கிவிடுகிறது.

இந்த துறையில் பெண்கள் மட்டும் இல்லை முதலாளியும் மனஉளைச்சலுடன் தான் இருப்பார். அதை அவர் தொழிலாளி ேமல் தான் திணிப்பார். இன்றைய சூழலில் ஸ்ட்ரெஸ் இல்லாத வேலையே கிடையாதுன்னு சொல்லலாம். மேலும் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  பலரால் சின்ன பிரச்னைகளை கூட எப்படி கையாள்வதுன்னு தெரிவதில்லை. ஸ்ட்ரெஸ் ஹேண்டலிங்தான் சவாலான விஷயமாக இருக்கிறது.

இதற்கு ஒரே வழி, அவர்களை அவர்களாலேயே ஃபிரி செய்து கொள்வதுதான். ஓவர் திங்கிங், எதிர்பார்ப்பு மற்றும் அதிகமான தேவைகளை குறைத்துக் கொண்டாலே இந்தப் பிரச்னையை தவிர்க்கலாம். நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரை மணி நேரம் நம்முடைய ரிலாக்சேஷனுக்காக ஒதுக்கினாலே போதும்’’ என்ற நிவேதிதா தன் நிறுவனத்தில் கிராமப்புற மக்களுக்காக வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

‘‘கிராமத்தில்தான் கடின உழைப்பாளிகளும், திறமைசாலிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது இந்த ஜனநாயகத்தில் இருக்கும் ஒவ்வொரு தொழில் முனைவோர்களின் முக்கிய கடமை’’ என்றார் நிவேதிதா.

அன்னம் அரசு