கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!



புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் கொள்கை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாக எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி எடுத்துவைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்…

‘‘காலத்திற்கேற்ப புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவது, சட்டங்களை இயற்றுவது, நடைமுறைப்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமை. அந்த வகையில் டாக்டர் கோத்தாரி தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழுவின் அறிக்கையின்படி 1968 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு முதல் தேசியக் கல்விக் கொள்கையை  நடைமுறைப்படுத்தியது.

அடுத்ததாக 1986 ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு இரண்டாவதாக தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. 1992 ஆம் ஆண்டில் பிரதமர் நர்சிம்மராவ் தலைமையிலான அரசு 1986 தேசியக் கல்விக் கொள்கையில் சில திருத்தங்களை செய்து நடைமுறைப்படுத்தியது.

2004 ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2009 ஆம் ஆண்டில் 6 முதல் 14 வயதுக்கான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றியது. 2014ல் நடந்த 16 ஆவது மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக 2015 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2016ல் தனது வரைவு அறிக்கையை அளித்தது. மத்திய அரசு வரைவு அறிக்கையை முழுமையாக வெளியிடாமல், ‘‘தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியது.

மீண்டும் 2017-ல் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கென இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இக்குழு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 17 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து மீண்டும் நரேந்திரமோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகே பொதுமக்களின் கருத்துக்கேட்புக்காக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்துகளை ஜூன் 30 ஆம் தேதிக்குள் கூறவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு முன்வைத்த மும்மொழித் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் பரவலாக எழுந்தன. இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி மொழி மூன்றாவது மொழியாகக் கட்டாயமாகக் கற்பிக்கப்படவேண்டும் என்பது வரைவு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் உருவானதன் விளைவாக அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திருத்தியது.

இந்தி பேசாத மாநிலங்களில் ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாகப் படிக்கவேண்டும் என்று திருத்தம் செய்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கையை திருத்தி வெளியிட்டதற்கு கல்விக் கொள்கை வரைவு அறிக்கை உருவாக்கக் குழுவினரே எதிர்ப்புத் தெரிவித்ததும் நடந்தது. முதல்கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.

வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிடவேண்டும்; 484 பக்க அறிக்கையை வாசித்துக் கருத்துச் சொல்வதற்கான காலத்தை ஆறு மாதமாக நீட்டிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது ஜூலை 31 வரை கருத்துத் தெரிவிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கையை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே இந்தி மற்றும் ஆங்கிலம் மொழி அறிவுடையவர்கள் மட்டுமே கருத்துத் தெரிவிக்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் எழுத்தாளர்கள், கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்துள்ளனர். இதன் விளைவாக தமிழகம் முழுவதும் கல்விக் கொள்கை வரைவு குறித்தான கருத்தரங்குகள், விவாதங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

‘‘இந்தியாவின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது” என்று 1966 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டாக்டர் கோத்தாரி தலைமையிலான அறிக்கை கூறியது. கல்வியில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகள் உருவாவதை ஒழிக்க பொதுப்பள்ளி முறை, அருகமைப்பள்ளி முறையை வலியுறுத்தியது.

இக்குழு தான் 10 ஆண்டு பள்ளிப்படிப்பு, 2 ஆண்டு மேல்நிலைப் பள்ளிப்படிப்பு, 3 ஆண்டு பட்டப்படிப்பு (10+2+3) முறையைப் பரிந்துரைத்தது. இன்று வரை நாடு முழுதும் இம்முறையே வெற்றிகரமாகப் பின்பற்றப்படுகிறது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை வரைவு இதை 5 ஆண்டு அடிப்படை நிலை, 3 ஆண்டு ஆயத்த நிலை, 3 ஆண்டு உயர் நிலை, 4 ஆண்டு மேல்நிலை (5+3+3+4) என்ற முறையில் பள்ளிப்படிப்பை மாற்றியமைக்கப் பரிந்துரைத்துள்ளது. இப்பள்ளி அமைப்பு முறை மாற்றம் மூலம் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என்று கூற முடியாது.

தொடக்கக் கல்வி நிலையில் 5 ஆம் வகுப்பை முடிக்கும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள்  அடிப்படை எழுத்தறிவும் கணித அறிவும் பெற முடியாத ஆபத்தைத் தேசியக் கல்விக் குழு வரைவு தெரிவிக்கிறது. நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருவதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இப்பள்ளிகளில் கல்வித் தரம் உயர வகுப்புக்கு ஓர் ஆசிரியர் மற்றும் பாடத்திற்கு ஓர் ஆசிரியர் நியமிக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்படவில்லை. மாறாக பள்ளிகள் இணைப்பு மூலமாக கற்பித்தல் பகிர்வு நடக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

இவ்வறிக்கையின் முன்னுரையில், 1948ம் ஆண்டில் உலக நாடுகள் கையெழுத்திட்ட அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள “கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை, குறைந்தது தொடக்கக் கல்வி இலவசமாக வழங்கவேண்டும்” என்ற தீர்மானம் 26ல் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இதை நம்முடைய மத்திய, மாநில அரசுகள் பின்பற்றவேண்டும் என்பதை அறிக்கை வலியுறுத்தவில்லை.

மாறாக தனியார் பள்ளிகளே கட்டணத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 3 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட எல்லோரையும் கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே 2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உரிமைச் சட்டமே முழுமையாக நடைமுறையாகாமல் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி மாநிலப் பட்டியலில் இருந்த போதே மூன்று கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, பள்ளியில் மதிய உணவு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டு கல்வியில் தமிழகம் இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத சமச்சீர்க் கல்விப் பொதுப் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டுக் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ற தனித்தன்மையான கொள்கைகளை உருவாக்க 1976 க்கு முன்பு இருந்தது போல் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். இந்தியா முழுவதும் ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பது இல்லாத போது தேசியக் கல்வி கொள்கை வரைவு வலியுறுத்தும் இந்தியா மையமான ஒரே கல்வி முறை என்பது நமது அரசியலமைப்பின் இதயமாக உள்ள கூட்டாட்சி நெறிக்கு எதிரானது’’ என்றார் சு.மூர்த்தி.                                                

சுயம்புலிங்கம்