‘தஞ்சையில் பிறந்தாலும் நான் சென்னை பொண்ணு!’



தன்ஷிகா

‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. தன்னுடைய முதல் படத்தில் துணிச்சலான கல்லூரி மாணவியாக வலம் வந்தவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து அசத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தெலுங்கு, மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையால் தனி அடையாளத்தை பதித்து வருகிறார். பிஸியான படப்பிடிப்பின் இடைவேளையில் சாய் தன்ஷிகாவிடம் பேசினேன்.

சினிமா பிரவேசம் எப்படி? 
“நான் பிறந்தது தஞ்சாவூர் என்றாலும், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் என்னுடைய ஊர் சென்னை என்றுதான் சொல்லுவேன். பள்ளியில் படிக்கும்போது படிப்பு மட்டும் இல்லாமல், நடனம், நாடகம், விளையாட்டு  இப்படி எல்லாவற்றிலும் முன்னிலையில் இருந்தேன்.  எல்லோருக்கும் இருக்கக்கூடிய சினிமா ஆர்வம் எனக்கும் இருந்தது. அப்போது எனக்கு வயது 17. திரைப்படத் துறையில் இருக்கும் என்னுடைய உறவினருடன் சென்னை டிரேட் சென்டரில் நடந்த கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.

அந்த கண்காட்சியில் எதிர்பாராதவிதமாக  இயக்குநர் ஜனநாதன் அய்யாவை சந்தித்தோம். அந்த சந்திப்பின்போது ‘நடிப்பதற்கு உனக்கு ஆர்வம் இருக்கா’ என்று கேட்டார். நான் ‘ஆர்வம் இருக்கிறது’ என்றேன். ஒரு ஆடிஷன் வைத்து  அவருடைய படைப்பான ‘பேராண்மை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. இப்படிதான் என்னுடைய திரையுலகப் பயணம் தொடங்கியது.

திரைப்படத் துறைக்கு வரவில்லையென்றால் எந்தத் துறையில் பயணித்து இருப்பீர்கள்?
எனக்கு கணினி பொறியாளராக ஆக வேண்டும் என்பது சின்ன வயது கனவு. எல்லா பாடங்களைவிடவும் கணினி தொடர்பான பாடங்களில் அதிக மதிப்பெண் எடுப்பேன். ஒரு வேளை நான் சினிமா துறைக்கு வரவில்லை என்றால் கணினி பொறியாளராக ஆகியிருப்பேன்.

பொழுதுபோக்கு?
என்னுடைய பொழுதுபோக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். இப்போது என்னுடைய பொழுதுபோக்கு ஷாப்பிங் போவதுதான். இதைத் தவிர சிலம்பம், டென்னிஸ் விளையாடுவேன். 

ஸ்போர்ட்ஸ்ல உங்களுக்கு ஆர்வம் அதிகம் என்று கேள்விப்பட்டோமே?
படிப்பு எனக்கு இரண்டாம் நிலைதான். முதலில் நான் நேசித்தது விளையாட்டுத் துறைதான். சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் எனக்கு ஆர்வம் இருந்தது. கைப்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் என எல்லா விளையாட்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறேன். என்னுடைய பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்யும்போது, என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியர், ‘நல்லா படிக்கிற பொண்ணு ஸ்போர்ட்ஸ்லையும் நல்ல திறமையானவர். ஏன் படிப்பை நிறுத்த வேண்டும்?’ என்று கேட்டார். முதல் படம் ‘பேராண்மை’ கூட ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதையாக இருந்ததே நான் நடிப்பதற்கு ஒரு காரணம்.

உங்களுடைய படங்களில் உங்களுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எது?
முதல் படமான ‘பேராண்மை’யே எனக்கு திருப்புமுனையான படம்தான். என்னுடைய எதிர்காலத்தை தீர்மானித்த படம். தொடர்ந்து நான் சினிமா துறையில் இருப்பதற்கு காரணமாக அமைந்த வெற்றிப்படம். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. 

திரைத்துறையில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? 
இந்தத் துறையில் பலதரப்பட்ட மனிதர்களை பார்க்க முடிந்தது. அவர்களுடனான உரையாடல்கள் பல அனுபவங்களை கற்றுக்கொடுத்தன. 35 வயதில் கிடைக்கக்கூடிய பக்குவத்தை நான் சீக்கிரமாகவே கற்றுக்கொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்கிறார்களே, ஏன்?
முடிந்த அளவிற்கு நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்கிற உணர்வு எனக்கு உண்டு. பிறந்தநாள் கொண்டாட்டங்களில் செலவழிக்கக்கூடிய பணத்தை தேவை உள்ளவர்களுக்கு உதவலாம் என்று கடந்த 4 ஆண்டுகளாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டேன்.

‘கபாலி’ படத்தில் நடித்த அனுபவம்? 
பொருளாதாரரீதியாக எனக்கு வெற்றியை பெற்றுத்தந்த மிக முக்கியமான படம் ‘கபாலி’. சினிமா துறையில் எப்போதும் நடிகர்களை கவனித்துக்கொண்டு இருக்கும் இயக்குனர்களில் ரஞ்சித் சாரும் ஒருவர். ரொம்பவும் இயல்பான மனிதர். அவரோடு பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களை எல்லாம் கவனித்து வந்திருக்கிறார். அவருடைய குழு, யாரெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்து  அவர்களின் பெயரை பட்டியலிட்டு தேர்வு செய்தனர்.

அந்த பெயர் பட்டியலில் நான் தேர்வானேன். இப்படிதான் ‘கபாலி’ படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவின் இன்னொரு பக்கத்தை பார்த்தது போல் இருந்தது. யதார்த்த வாழ்வியலை சொல்லும் நல்ல இயக்குனர் ரஞ்சித் சார். ரஜினி சாரோடு நடிக்கப்போகிறேன் என்று தெரிந்தவுடன் இந்த படம் குறித்து பேசும் போதே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

இன்றைய தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் இருக்கும்போது ரஜினி சாரோடு நடிக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது சாதனை என்றுதான் சொல்லுவேன். இயல்பான மனிதர், எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அமைதியாக இருப்பார். அதே போல நகைச்சுவை உணர்வு அதிகம் உடையவர். ‘கபாலி’ படக்குழுவைப் பொறுத்தவரை யதார்த்தமாக பழகக்கூடியவர்கள். நான் உதவி இயக்குனர், நான் கேமராமேன் என்பதெல்லாம் இல்லாமல் நண்பர்களாக உரையாடும் ஒரு சிறந்த குழு. மச்சி இது சரியில்லை, அத மாத்திடுனு ரொம்ப இயல்பாக ஒருவரை அணுகக்கூடிய குழு என்றால் அது ரஞ்சித் சாரோட குழுதான்.

பெரிய படம் என்பதால் அணுகுமுறை என்ன மாதிரி இருக்கும் என்று எனக்கு பயம் இருந்தது. ஆனால் அதெல்லாம் இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருந்தது. ‘கபாலி’ படத்திற்கு முன்பு நான் சில படங்கள் நடித்திருக்கிறேன். ‘கபாலி’க்குப் பிறகும் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதில் வெற்றி-தோல்வி இரண்டையும் நான் சந்தித்து இருக்கிறேன். நல்ல இயக்குனர்களிடம் நான் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் மிக முக்கியமானவர் ரஞ்சித் சார்.

எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கப் பிடிக்கும்?
எனக்கு நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதையோடு கூடிய வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக நடிப்பேன்.
 
‘அரவான்’, ‘பரதேசி’ திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
‘பேராண்மை’ படம் நடிக்கும்போது சினிமா துறை எனக்குப் புதிது. சவாலாக இருந்தது. அதைவிட பெரிய சவாலாக இருந்தவை இந்த இரண்டு படங்கள். நல்ல கதையும், நல்ல கதாபாத்திரமும் இருந்தால் நடிப்பதற்கு நான் தயாராக இருந்தேன். இரண்டு படங்களின் கதைகளும் எனக்கு பிடித்திருந்தன.

புது அனுபவம் கிடைத்த படங்கள். ‘பரதேசி’ படத்தில் பாலா சாரோடு பணியாற்றும் போது அவருடைய அணுகுமுறை எப்படி இருக்குமோ, கடினமாக இருக்குமோ என்று சிறிய பயம் இருந்தது. அதற்கு முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். எளிமையான மனிதர். பணியாளர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள மனிதநேயம் மிக்கவர் பாலா சார். அவரிடத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். 

மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறீர்களே?
மலையாளம், கன்னடம், தெலுங்கு, மொழிப் படங்களில் நடித்து வருகிறேன். வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் எனக்கு மொழிப் பிரச்சனை இருக்கிறது, விரைவில் அந்த மொழிகளை கற்றுக்கொள்வேன். ‘மேளா’ என்னும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதுவரை அர்த்தபூர்வமான, பாசம், திரில்லர் என பலவகை படங்களில் நடித்து வந்தேன். இந்தப் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

தமிழ் சினிமாவிற்கும் பிற மொழி சினிமாவிற்கும்  நீங்கள் கண்ட வேறுபாடு என்ன?
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நிறைய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் நல்ல கருத்துகளை சொல்லக்கூடிய படங்கள் மக்களிடத்தில் முழுமையாக சென்றடைவதில் சிக்கல் இருக்கிறது. ஒரு படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்தில் வேறொரு படம் வருவதால் தியேட்டரில் அந்தப் படம் எடுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் எடுக்கப்படும் படங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்கு கால அவகாசம் கிடைக்கிறது. இது தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைதான்.

எந்த மொழிப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
மற்ற மொழிப் படங்களில் நடித்தாலும் தமிழ் மொழி படங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.

- ஜெ.சதீஷ்