பழைய நியூஸ் பேப்பரை என்ன செய்யலாம்?



வாசகர் பகுதி

* எப்போதாவது பயன்படுத்தும் ஃபிளாஸ்க்குகள், ஹாட்பேக்குகள், வாடை அடிக்கும் டப்பாக்கள் போன்ற வற்றின் உள்ளே பேப்பரைச் சுருட்டி வைத்துவிட்டால், சில நாட்கள் கழித்துத் திறந்தால் நாற்றம் இருக்காது.

* வாழை இலை, மஞ்சள் கொத்து போன்றவற்றை பேப்பரில் சுற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வீட்டுக்குள் செயற்கைச் செடிகளை வைக்கும்போது மணலுக்குப் பதிலாக செய்தித்தாள்களை, கிரிக்கெட் பந்துகள்போல உருட்டி பூந்தொட்டியில் போட்டு விடுங்கள். மேலே சிறு சிறு கற்கள் போட்டு நிரப்பினால் தொட்டி அதிக கனமிருக்காது.

* ஜன்னல்களின் கண்ணாடிப் பகுதி அழுக்காக இருக்கிறதா? பழைய நியூஸ் பேப்பரை தண்ணீரில் நனைத்து, ஜன்னல் கண்ணாடி முழுவதும் மறையும்படி விரித்து ஒட்டி, சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து, துணியால் துடைத்துவிட்டால் உங்க வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் பளபளக்கும்.

* பட்டு மற்றும் டிசைனர் புடவைகள் பீரோவில் அடுக்கும்போது, நியூஸ் பேப்பரில் சுற்றி, இடையில் வேப்பங் கொழுந்தையோ அல்லது வசம்புத் துண்டையோ வைத்து அடுக்கி விட்டால் பூச்சி, கரையான் போன்றவை நெருங்கவே நெருங்காது.

* வீட்டில் ஏ.சி. பொருத்தும் இடங்களில் அல்லது கேபிள் ஒயர் நுழைக்கும் இடங்களில் இருக்கும் இடைவெளிகளில் நியூஸ் பேப்பரை நன்றாகச்சுருட்டி, உள்ளே வைத்து, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பேப்பரை கத்தரித்து விடுங்கள். பின்னர் செல்லோ டேப் கொண்டு ஒரு வெள்ளைத் தாளால் அந்த இடத்தை மூடிவிட்டால் பூச்சிகள் அடையாது.

* பேப்பரை இரண்டு அங்குல அளவுள்ள சதுரங்கள் அல்லது செவ்வகங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பாத்திரம் அல்லது டப்பாவின் வெளிப்புறம் கொஞ்சம் எண்ணெய்  பூசிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரும் ஃபெவிகாலும் சேர்த்துக் கரைத்துக்கொண்டு ஒவ்வொரு பேப்பர் துண்டுகளாக அதில் தொட்டு டப்பாவின் மேல் ஒட்டி விடுங்கள்.

இப்படி டப்பாவின் வெளிப்புறம் முழுவதும் ஒட்டி அதன்மேல் கலர் பேப்பர் ஒட்டி அலங்கரித்து, அப்படியே 12 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு பேப்பரைப் பிரித்தெடுத்தால் அந்த டப்பாவின் வடிவத்திலேயே பூஜாடி அல்லது பேனா ஸ்டாண்டு அழகாக நிற்கும்.

- எஸ்.நிரஞ்சனி, முகலிவாக்கம், சென்னை.

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

உடல் கட்டுக்கோப்பாக இருக்க சைக்கிள் பயிற்சி பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசி யேஷன் ஆய்வுப்படி தினமும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் மற்ற உடற்பயிற்சியில் கிடைப்பது போன்ற பலன் கிடைக்கிறது என்கிறார்கள். வாரத்திற்கு மூன்று முறை 20 நிமிடங்கள் சைக்கிள் பயிற்சி செய்தால் உடல் கட்டுக் கோப்பில் இருக்குமாம். சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி. அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ‘தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் அல்லது வாரத்தில் 3 அல்லது

4 முறை சீரான வேகத்தில் சைக்கிள் சவாரி செய்யுங்கள்’ என்கிறார்கள். முடியாதவர்கள் சைக்கிளை நிற்க வைத்து பெடலை மிதித்து உடற்பயிற்சி செய்யலாம். இப்படி செய்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்.

1. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
2. இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
3. பதற்றத்தையும், மன இறுக்கத்தையும் தணிக்கிறது.
4. நல்ல உறக்கம் உண்டாவதற்கு  உதவுகிறது. 
5. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.
6. எடையை சீராக வைத்திருக்க  உதவுகிறது.
7. தோலின் நிறத்தை மேம்படுத்துகிறது.
8. நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.

சைக்கிள் ஓட்டுங்கள் முதுகுவலி குறையும் முதுகுவலியா? கவலையே படாதீர்கள், சைக்கிள் ஓட்டுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு உங்களது சைக்கிள் இருக்கையை 10 முதல் 15 டிகிரி வரை முன்பக்கமாக சாய்த்து பொருத்திக் ெகாள்ள வேண்டும். அந்த மாதிரி சைக்கிளில் தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் சவாரி செய்ய வேண்டும். மூன்றே மாதத்தில் முதுகுவலி பறந்தோடிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

- எஸ். நிரஞ்சனி, முகலிவாக்கம், சென்னை.

பவளமல்லி பற்றி அறிவீர்களா?

* வெண்மையான இதழ்களையும், ஆரஞ்சு நிறக் காம்புகளையும் கொண்ட பவளமல்லி சிறு மர வகையைச் சேர்ந்ததாகும்.
* தென்கிழக்கு ஆசிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பவளமல்லி, தற்போது இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
* பவளமல்லியின் இலைகளை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து வடிகட்டி, தினமும் இருவேளை குடித்தால் முதுகு வலி, காய்ச்சல் குணமாகும்.
* இதன் வேரை மென்று தின்று
* வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும்.
* வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற பவளமல்லி இலைச்சாற்றுடன் சிறிது உப்பு, தேன் கலந்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
* பவளமல்லி இலையின் சாற்றை குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் பயன்படுத்தலாம்.
* இதன் விதையைப் பொடியாக்கி தேங்காய் எண்ெணயுடன் சேர்த்துக் குழைத்துத் தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும்.
* இதன் விதைகளை பவுடராக்கிச் சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள் தீரும்.
* இதன் இலைக் கொழுந்தை அரைத்து இஞ்சிச் சாற்றுடன் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
* இதயம் வலுவற்ற குழந்தைகள் மற்றும் உடம்பில் ரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கு இது நல்ல மருந்து.

- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)