தன்னம்பிக்கையே வெற்றிக்குக் காரணம்பெங்களூரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அளவில், ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த பெருமையை பெற்றார் 19 வயது சிம்ரன் ஹென்றி. ஆண்கள் விளையாடும் போட்டி களைப் போல் பெண்கள் அணியின் போட்டிகள் கொண்டாடப்படுவதில்லை. திறமையான பெண் போட்டியாளர்களை ஊடகங்கள் வெளி உலகிற்கு கொண்டு செல்வதில்லை என்கிற  குற்றச்சாட்டையே போட்டியாளர்கள் முன்வைக்கின்றனர்.

தென்மண்டல பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி பல்கலைக்கழக அணியுடன் விளையாடிய முதல்-கால் இறுதி போட்டியில் 72 பந்துகளில் 194 ரன் அடித்தார் 19 வயது சிம்ரன் ஹென்றி. தனிப்பட்ட சாதனை மட்டும் இல்லாமல், ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த ஜோடி என்ற பெருமையையும் அந்த போட்டியில் மோனிஷா என்கிற வீராங்கனையுடன் 241 ரன் சேர்த்து பெற்றுத் தந்தார்.

“மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீட் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்தான் என்னுடைய முன்மாதிரி. ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்காவின் அட்டகாசமான வீரர் டிவில்லியர்ஸ் எனக்குப் பிடித்த வீரர்கள்.

இந்தப் போட்டியில்  எப்பொழுதும் தொடங்குவதுபோல் தான் தொடங்கினேன். கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. அடிக்கடி நன்னயா பல்கலைக் கழகத்திடம் (ஆந்திரப்பிரதேசம்) 107 ரன் அடித்தேன். திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திடம் (வேலூர்) 88 ரன் அடித்தேன். செட்டில் ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்வேன். இந்தப் போட்டியில் நான் 18 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்தேன். என்னுடைய தன்னம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம். கிரிக்கெட் போட்டிகளில்  பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆர்வம் உள்ள அனைவரும் முழு உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்றார்.

- ஜெ.சதீஷ்