அமிழ்தினும் இனிய குரல்



கேட்போரை லயித்துப் போக வைக்கும் மென்குரலுக்குச் சொந்தக்காரி ப்ரியங்கா. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் திரைப்படத்தில் அறிமுகமாகி வேகமாக வளர்ந்துவரும் பிரியங்கா தன் பன்னிரெண்டாவது வயதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார். பின்னாளில் தனக்கென ஒரு ரசிகர் படையே உருவாகும் என்று அப்போது அவர் யூகித்திருக்க மாட்டார்.

சமூக வலைத்தளங்களில் இவரது பாடல் வீடியோக்கள் அதிக பார்வைகளையும், விருப்பங்களையும் பெறுகின்றன. ஆயிரக்கணக்கில் அவை பகிரப்பட்டு உலகின் பல மூலைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன இவரது பாடல்கள். இறுதி ஆண்டு பல் மருத்துவம் படித்து வரும் ப்ரியங்காவோடு உரையாடினேன்...

இசைத் துறையை தேர்ந்தெடுக்கக் காரணம்?
என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே இசைத்துறையில் இயங்கிக்கிட்டிருக்காங்க. அப்பா நல்லதம்பி ஒரு கீபோர்டு ப்ளேயர். இசையமைப்பாளர் சங்கர் - கணேஷ்கிட்ட வேலை செஞ்சார். மற்ற இசை நிகழ்ச்சிகள்லயும் பங்கெடுத்துக்குவார். அம்மா காஞ்சனா ஒரு பாடகி. கர்நாடக சங்கீதம், மெல்லிசை ரெண்டும் கற்றுத் தேர்ந்தவங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ப்ரியங்கா மியூசிக் அகாடமி நடத்திக்கிட்டிருக்காங்க.

அதன் மூலமாக இசைப் பயிற்சி வகுப்புகள் நடத்துறாங்க. நான் இசைத்துறையை தேர்ந்தெடுக்கக் காரணமா இருந்தது இந்தக் குடும்பச் சூழல்தான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே பாஷ்யம்ங்கிற மாஸ்டர்கிட்ட கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். பயிற்சிக்காலத்தில்தான் தனியார் தொலைக்காட்சியோட பாடல் நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். அதுல டாப் 5 ஆக தேர்வானேன். மொத்தம் 8 ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்ட அப்புறம் மேற்கத்திய இசை கத்துக்கணும்னு தோணுச்சு. அகஸ்டின் பால்ங்கிற மாஸ்டர்கிட்ட மேற்கத்திய இசை கத்துக்கிட்டேன். அப்புறமாக அப்பாகிட்ட பியானோவும், கிதாரும் கத்துக்கிட்டேன். இன்னும் கத்துக்க நிறைய இருக்கு. கத்துக்குவேன்.

சினிமா வாய்ப்பு கிடைச்சது பற்றி...
‘அவன் - இவன்’ படத்தில் ‘ஒரு மலை ஓரம்’ பாடல்தான் சினிமாவுல் நான் பாடின முதல் பாடல். படத்தோட இயக்குனர் பாலா டிவி ஷோ பார்த்துட்டு என் குரல் பிடிச்சுப் போய் வர சொன்னார். யுவன் சங்கர் ராஜாகிட்ட கூட்டிட்டுப் போய் பாடுறதுக்கான வாய்ப்பு கொடுத்தார். முதல் வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்திக்கிட்டேன்னுதான் சொல்லணும். அதுக்கப்புறம் அடுத்தடுத்து தொடர்ச்சியா வாய்ப்புகள் வந்தது. இளையராஜா இசையில ‘நாச்சியார்’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரீதேவி நடிச்ச ‘மாம்’ படத்தில் ‘தமிழ்’ ‘தெலுங்கு’ ‘மலையாளம்’ மூன்று மொழியிலும் ஒரு பாடல் பாடியிருக்கேன். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘டான்ஸ் வித் மீ’ பாடல் பாடினேன். ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தில் ‘அபிமானியே’ பாடல் பாடி இருக்கேன். இமான் இசையில் ‘உச்சிதனை முகர்ந்தால்’,  யுவன் சங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ ஆகிய படங்கள்ல பாடியிருக்கேன்.

உங்க பாடலுக்கு கிடைக்குற வரவேற்பு எப்படி இருக்கு?
யூ ட்யூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைத்தளங்கள் எல்லாத்துலயும் என் குரல் நல்லாருக்குன்னு பாராட்டுகள் கிடைக்குது. பெரும்பாலும் பாசிட்டிவ் ஆன கருத்துகள்தான் வருது. நெகட்டிவ் கருத்துகள் அவ்வளவா வர்றதில்லை. நான் பாடறது சரியில்லைன்னு விமர்சிக்குறது பத்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அது நியாயமான விமர்சனமா இருக்கணும். அப்படி வைக்கப்படுற விமர்சனத்தை நான் ஏத்துக்குவேன். அதுக்குத் தகுந்தாற்போல் என்னை மாத்திக்க முயற்சி செய்வேன். சம்மந்தமே இல்லாமல் வெறுமனே சொல்லப்படுற நெகட்டிவான கருத்துகளைப் பத்தி எனக்குக் கவலை இல்லை.

இசை ஆர்வம் உங்களுக்கு அதிகம். படிப்பில் நீங்க எப்படி?
ரொம்ப நல்லாவே படிப்பேன். இசைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ அதே அளவு படிப்புக்கும் கொடுப்பேன். நல்ல பாடகி ஆகணும்னு சின்ன வயசுல ஆசைப்பட்ட மாதிரி, பல் மருத்துவராகணும்னும் ஆசைப்பட்டேன். அந்த இலக்கோடதான் படிச்சேன். பன்னிரெண்டாம் வகுப்பில் 1111 மார்க் எடுத்து மெரிட்டில் தேர்வானேன்.

பாட்டு - படிப்பு. ஒரே நேரத்துல இரண்டையும் எப்படி சமாளிக்குறீங்க?
கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கு. தேர்வு நேரத்தில் பாடல் நிகழ்ச்சியோ, பாடல் பதிவோ இருக்கும். நைட் ஃபுல்லா ஷூட் முடிச்சுட்டு காலைல வகுப்புக்குப் போற மாதிரி இருக்கும். ரெண்டுல ஏதாவது ஒன்னுன்னு சாய்ஸ்லாம் இல்லை. ரெண்டையும் பண்ணி ஆகணும். நெருக்கடியா இருந்தாலும் இந்த ரெண்டு குதிரையிலும் சவாரி பண்ணப் பிடிச்சிருக்கு.

இதைத் தாண்டின ஆர்வங்கள் என்னென்ன?
சின்ன வயசுல கேஸ்பர், லூனிடூன் ஆகிய கார்ட்டூன்களுக்கு டப்பிங் பண்ணியிருக்கேன். சில விளம்பரப்படங்களுக்கும் டப் பண்ணிருக்கேன். இனி பாடல் மட்டுமில்லாமல் டப்பிங்கும் பண்ணுவேன்.

உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்? எந்த இசையமைப்பாளர்கிட்ட வேலை செய்ய ஆசைப்படுறீங்க?
மூத்த பாடகர்கள் எல்லோருமே எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். இளைய ராஜா, ரஹ்மான், ஜீ.வி, யுவன் சங்கர் ராஜா, இமான் இவங்க இசையில திரும்பவும் பாடணும். அனிருத், சந்தோஷ் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள்கிட்ட வேலை செய்யணும்ங்கிற ஆசை இருக்கு. படங்களில் பாடுற பாட்டு மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சிகளிலும் மும்முரமா பாடிகிட்டிருக்கேன்.  மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் ராஜா சார் கூட ‘காதல் ஓவியம்‘ பாட்டு பாடினேன். சமீபத்தில் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். அப்புறம் சென்னையில் நடக்குற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்குறேன்.

குரல் வளம் கெடாம இருக்க என்னவெல்லாம் செய்றீங்க?
ஃப்ரிட்ஜ் வாட்டர் மட்டும் குடிக்க மாட்டேன். மத்தபடி ஐஸ் க்ரீம், சாக்லெட்லாம் சாப்பிடுவேன். ஒவ்வொரு முறையும் ரிகர்சல் பண்ணிட்டுத்தான் போவேன். அதுக்கு நேரம் இல்லாதபோது அப்படியே போய் பாடிருவேன்.

- கி.ச.திலீபன்