தமிழ்ப் படங்களில் நடிக்கவே விருப்பம்



-‘அறம்’ சுனுலட்சுமி

‘அறம்’  திரைப்படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்திருக்கிறார் சுனுலட்சுமி. அரசுடைய கண் பார்வைக்கு எட்டாத ஒரு குக்கிராமத்தில் வாழும் ஏழைப் பெண்ணாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, மக்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. தமிழக மக்களின் மனதில் சுமதியாக இடம்பிடித்த சுனுலட்சுமி கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவருடைய திரைப்பயணம் குறித்து அவரிடம் பேசினேன்.

“நான் பிறந்தது, படித்தது எல்லாம் கேரள மாநிலம்  எர்ணாகுளம். அப்பா பிசினஸ் மேன். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். எனக்கு ரெண்டு தங்கைகள் இருக்காங்க. சின்ன வயதிலிருந்தே டான்ஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கேன். கல்லூரியில் படிக்கும்போது நண்பர்கள் இயக்கிய குறும்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உரையாடத் துவங்கினார்.

சினிமா துறைக்கு வந்தது குறித்து?
நான் மலையாளி என்றாலும் என்னுடைய முதல் படம் தமிழ்தான்.  ‘செங்காத்து பூமியிலே’ என்ற படம் மூலம் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து ‘டூரிங் டாக்கீஸ்’, ‘அறம்’ என அடுத்தடுத்து படங்கள் தமிழில் நடித்தேன். ‘தாராவி’, ‘கரிச்சாங் குருவி’,  ‘சாவி’ என மூன்று படங்கள் வெளிவர இருக்கின்றன. சவால்கள் நிறைந்த படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

‘அறம்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம்? 
நான் எத்தனைப் படங்கள் நடித்தாலும் ‘அறம்’ படத்தில் நடித்தது போன்ற அனுபவம் கிடைக்குமா என்று தெரியாது. நான் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான கதை. என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். என்னை பார்ப்பவர்கள் எல்லாம் சுமதி என்றுதான் கூப்பிடுகிறார்கள். நான் சுமதியாகத்தான் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் கதாநாயகியாக டான்ஸ், காதல் என திருமணம் ஆகாத கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன்.

இந்தப் படத்தில் முற்றிலுமாக வேறு பாத்திரத்தில் நடித்தேன். மாறுபட்ட பாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது.  இயக்குனர் கோபி சார் ரொம்ப இயல்பான மனிதர். கடினமாக உழைப்பவர். நமக்குத் தெரியாத விஷயங்களை கற்றுக்கொடுப்பவர். நல்ல ஆசிரியர் என்று சொல்லுவேன். நயன்தாரா மேடம் தமிழ்த் திரையுலகின்  லேடி சூப்பர் ஸ்டார். அதற்கான எந்த பந்தாவும் அவரிடத்தில் இல்லை, இயல்பாக எளிமையாக பழகக்கூடியவர். என் நடிப்பைப் பார்த்துவிட்டு ‘நல்லா நடிக்குறீங்க’ என பாராட்டுனாங்க. அவங்க கூட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
  
தமிழ் எப்படி கற்றுக்கொண்டீர்கள்?
என்னுடைய முதல் படம் தமிழ் மொழியில்தான். மலையாளி என்பதால் மொழிப் பிரச்சனை இருந்தது. படப்பிடிப்பின் போது எனக்கு கொடுக்கப்படும் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து கொள்வேன். இப்படித்தான் ஒவ்வொருமுறையும் நடக்கும். இப்போ தமிழ் பேச கற்றுக்கொண்டேன்.

ஆனால் படிக்கத் தெரியாது. தமிழ் மொழி பிடிக்கும், தமிழ் மக்களை பிடிக்கும், தமிழ்நாட்டில் எல்லாம் பிடிக்கும், ஆனால் சாப்பாடு மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கேரள உணவு கிடைப்பதில்லை. தமிழ் மக்கள் காட்டுகின்ற பாசம், என்னுடைய திறமைக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய ஆதரவு எனக்கு நல்ல ஊக்கத்தைக் கொடுக்கிறது. கேரளாவில் அது மிகக்குறைவு. என்னைப் பொறுத்தவரை தமிழ்ப் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.
  
என்ன மாதிரி படங்கள் நடிக்க பிடிக்கும்?
கல்லூரி மாணவியாக, என்னை யதார்த்தமாக காட்டக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது குழுவுடன் வேலை செய்வது புது அனுபவங்களை தருகிறது. ஒரு படம் வெற்றி பெற்றால் அதை  எல்லோரும் கொண்டாடுவார்கள். அது மக்கள் விரும்பும் படமாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
 
உங்களுக்குப் பிடித்த நடிகர்கள்?
விஜய் சேதுபதி சார் கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு. மலையாளத்தில் நிவின் பாலி, துல்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
 
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
சமையல் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடல்கள் கேட்பது, ஓவியம், கார் ஓட்டுவது இவைதான் என்னுடைய பொழுதுபோக்கு.
  
நீங்கள் சமைப்பதில் விரும்பி உண்ணும் உணவு எது?
என் சமையலில் ரொம்ப ஸ்பெஷல் மாட்டுக்கறியும் நெய்சோறும்தான் விரும்பி சாப்பிடுவேன்.

- ஜெ.சதீஷ்