அமெரிக்காவில் துணை மேயரானார் சென்னை பெண்உலகின் பல்வேறு  நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்ந்து பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியாட் நகரின் துணைமேயராக சென்னை யில் பிறந்த 38 வயதான ஷிஃபாலி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சியாட்டில் பொதுப் போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டமைப்பின் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஷிஃபாலி ரங்கநாதன்.  இவரது பெற்றோர் பிரதீப் ரங்கநாதன் - ஷெரில்.

சென்னையில் பிறந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பார்டு பள்ளியிலும், பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 2001ம் ஆண்டு சுற்றுச்சூழலியலில் முதுகலைப்பட்டம் படிப்பதற்காக அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஷிஃபாலி போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கியதற்காகவும், சமூக நீதி, புலம் பெயர்வோர், அகதிகள், பொது சுகாதாரம், மாணவர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளை நிர்வகித்ததன் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போக்குவரத்து தொடர்பான திட்டங்கள் வகுக்கும் குழுவின் முக்கிய அதிகாரியாக இவர் பணியாற்றி உள்ளார். மேலும் 40 வயதிற்குள்ளாக பிரபலமடைந்த 40 பிரபலங்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிஃபாலியின் திறமையும் கடுமையான உழைப்புமே வெற்றிக்கு காரணம். இவரது இந்த வெற்றியின் மூலம் இந்தியப்பெண்களுக்கு ஊக்கமும் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவரது தந்தை பிரதீப் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார். இதற்கு முன்பு ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதராக, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி தேர்வு செய்யப்பட்டார். அதே போல அமெரிக்க அரசின் சுகாதாரத்துறையில், மருத்துவச் சேவைகள் அமைப்பின் தலைவராக டாக்டர் சீமா வர்மா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.சதீஷ்