இருமனம் கொண்ட திருமண வாழ்வில்ஆரத்தித் தட்டு… சீர்வரிசை தட்டு…
‘‘திருமண வைபவத்தில் வீட்டில்  இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட ஆரத்தித் தட்டு மட்டும் சீர்வரிசை  தட்டுக்கள் இன்று திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களால் மிகவும் அழகியல்  சார்ந்த விசயங்களாகவும், ஆடம்பரம் கலந்த நிகழ்வுகளாகவும் மாற்றப்பட்டு  முக்கியமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பினை தரும் ஒரு துறையாக வளர்ந்து  பிரமாண்டம் காட்டி நிற்கிறது.

முன்பெல்லாம் ஆரத்தி எடுப்பது என்றால் தண்ணீரில் சிறிது சுண்ணாம்பு கலந்து, அத்தோடு மஞ்சள் பொடி சேர்த்து அதில் இரண்டு வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு சூடம் ஏற்றி வைத்து வீட்டுப் பெண்கள் இருவர் அல்லது மூவர் ஆரத்தி எடுக்க மணமக்களை வரவேற்பார்கள். பதிலுக்கு மாப்பிள்ளை தன் கெத்தைக் காட்டுவதற்காக தன்னால் முடிந்த பணத்தை அன்பளிப்பாக ஆரத்தி தட்டில் போடுவார்.

அதே நிகழ்வுதான். இன்றும் அதே பாரம்பரியத்தை மாற்றாமல் அதில் கொஞ்சம் கற்பனையும் ரசனையும் கலந்து, வித்தியாசப்படுத்துகிறார்கள். மிக மிக ஆடம்பரமாக, மணமக்கள் இதயத்தையும், வந்திருக்கும் உற்றார் உறவினர்களின் மனங்களையும் கொள்ளை கொள்ளும் விதமாக, பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இருக்கும் தட்டுக்களில் தங்களுக்கு உரிய அழகியல் உணர்வையும், கலை ஆர்வத்தையும் புகுத்தி, புதுமைகளைக் காட்டுவதோடு, திருமணத்திற்காக வீட்டிற்கு வந்திருக்கும் அத்தனை உறவுக்காரப் பெண்கள் கைகளிலும் ஏதாவது ஒரு தட்டைக்  கொடுத்து மணமக்களை வரவேற்க வைத்து குஷிப்படுத்தி விடுகின்றனர்.

“First impression is the best impression…”. திருமணம் நடக்கப்போகும் பொண்ணும் மாப்பிள்ளையும் உள்ளே நுழையும்போது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், குதூகலமான உணர்வினைக் கொண்டுவரவும்,  மிகவும் ஆடம்பரமான வரவேற்பை வீட்டிலிருக்கும் உறவுப் பெண்கள் பரவசத்துடன் கூடிக் கொடுத்தால் மணமாகப்போகும் புதுமணத் தம்பதியர் மகிழ்ச்சியில் பூரித்துப்போய் விடுவார்கள். ஏனெனில் இது அவர்களுக்கான நாள். திருமணம் என்பது அவர்கள் வாழ்வில் ஒரு முறை வருவது. எங்கெல்லாம் கிரியேட்டிவைக் காட்ட முடியுமோ அங்கெல்லாம் அதை பயன்படுத்தி விடுவோம்” என்கிறார் கிருஷ்ணப் ப்ரியா.

‘‘முன்பெல்லாம் மணமகன் வரும்போது மச்சினன் முறையில் உள்ள பெண்ணின் உடன் பிறந்த அண்ணன் அல்லது தம்பி மாப்பிள்ளைக்கு மாலை போடுவார். வீட்டில் இருக்கும் பெண்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே ஆரத்தி எடுத்து மணமகனை அல்லது மணமக்களை வரவேற்பார்கள். ஆனால் இப்போது திருமண வீட்டார் குறைந்தது பதினொன்று, இருபத்தியொன்று என வீட்டிற்கு வந்திருக்கும் அத்தனை உறவுக்கார பெண்கள் கைகளிலும் ஆரத்தி தட்டில் ஒன்றைக் கொடுத்து விடுகின்றனர்.

அத்துடன் நிறைய பெண்கள் கூடி ஆளுக்கொரு தட்டை கையிலேந்தி மணமக்களை வரவேற்பதும் ஒரு அழகியல்தானே. இந்தக் குடும்பத்தில் நீங்களும் ஒருவர் என்ற முக்கியத்துவத்தை வந்திருக்கும் உறவுப் பெண்களுக்குத் தருவதால் உறவுகளுக்கும் அது ஒரு மகிழ்ச்சி, ஆனந்தமே” என்கிறார் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் இத்துறையில் இயங்கும் இவர். ஒரு தட்டில் கலசம் வைப்பது, விளக்கு களை வைப்பது, தேங்காய் வைப்பது, மா இலைகளை வைப்பது, பழங்களைப் பரப்புவது, பூ, மாலை, மணமக்கள் உடைகள், உணவுப் பொருட்கள், தானிய
வகைகள், அழகு சாதனப் பொருட்கள், ஆபரணங்கள், பூக்கள், வெற்றிலை பாக்கு, உலர் பழங்கள் எதை தட்டில் வைப்பதாக இருந்தாலும் அதையே அப்படியே வைக்காமல் அதில் எந்தமாதிரியாக வித்தியாசப்படுத்தி காட்டுகிறோம் என்பதில்தான் இருக்கிறது எங்களின் தொழில் சூட்சுமம்.

பெண்கள் மணமக்களை வரவேற்க கையில் வைத்திருக்கும் ஆரத்தி தட்டையோ, கையில் ஏந்தி வந்து பரப்பி வைக்கும் வரிசை தட்டுக் களையோ பார்க்கும் நொடியிலே அது விதவிதமாக அழகாக வித்தியாசம் காட்டித் தெரிய வேண்டும். அந்த நிகழ்வுக்காக ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து மெனக்கெடு வோம். பலவிதங்களில் எங்கள் உழைப்பையும் நேரத்தையும் அதற்கு அர்ப்பணித்து அலங்காரப்படுத்துவோம்.

பலவிதங்களில் வண்ண வண்ணக் கற்கள், அழகான வண்ண மணிகள், கோல்டன் நிற ரிப்பன், கலர் கலரான வலைகள், தஞ்சாவூர் பெயின்டிங் செய்த தட்டுகள், அதற்கு பயன்படுத்தும் குந்தன்ஸ், அழகான கோல்டன் மற்றும் வொயிட் மெட்டல் தட்டுக்கள், அவற்றில் பலவித வடிவங்கள், மெல்லிய மூங்கிலால் தயாரான கூடைகள் என பார்த்துப் பார்த்து வாங்கி அவைகளை எங்களின் கிரியேட்டிவ் மூடுக்கு ஏற்ப அழகாக்குவோம். வெள்ளித் தட்டுகளில் முத்துக்களை அழகாக ஒட்டுவோம். ஒயிட் மெட்டல் தட்டுக்களில் ஸ்டோன், குந்தன் போன்றவைகளைக் கொண்டு அழகுபடுத்துவோம்.

பெண் மாப்பிள்ளை முகங்களை  வைத்தும் அழகுபடுத்துவோம். தென்னங் குருத்து, பாக்கு மட்டை குருத்து போன்றவற்றைப் பயன்படுத்திக்கூட தட்டுக்களை அழகாக்குவோம். ஆரத்தி தட்டுக்களில் வைக்கப்படும் அகல் விளக்குகளில் எண்ணை விட்டு திரி போடுவது எல்லாம் இப்போது செய்வதில்லை. மிகப் பெரிய ராட்சச மின் விசிறிகள், ஏ.சி. வசதி உடைய மண்டபமாக இருந்தால் விளக்கு அணைய நேரிடும். அதற்கு பதிலாக பேட்டரி அகல் விளக்கை வைத்துவிடுவோம்.

மின் காற்று, குளிர்சாதன வசதி நிறைய உள்ள மண்டபங்களில் விளக்கு அணையாமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும். அணைந்துவிடும் என்ற பிரச்சனையும் இல்லை. மணமக்கள் வீட்டார் தங்கள் பட்ஜெட்டை சொல்லிவிட்டால் அதற்கு ஏற்ற மாதிரி அழகுபடுத்தி புதுமை காட்டுவோம். தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை போன்ற பழங்களைக்கூட வித்தியாசப்படுத்தி காட்டிவிடுவோம். சாக்லெட், பிஸ்கெட், நட்ஸ், எல்லாத்தையும் நம் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ற மாதிரி அழகாக தட்டில் வைத்து கவர் செய்து காட்டுவோம்.

முஸ்லீம் மதத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்ணிற்கு சீர் எடுத்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் சீர்வரிசையை வெளியில் தெரியாது மூடி வைத்தபடி எடுத்து வருவார்கள். தட்டை கலர் துணிகளால் மூடிவிடுவார்கள். துணி ஓரம் எல்லாம் ஜரிகை வைத்து தைத்து துணிகளில் தங்கள் கிரியேட்டிவினை காட்டுவார்கள்.

(கனவுகள் தொடரும்!)

திருமண நிகழ்வில் குறைவான விலையில் செய்யப்படும் ஆரத்தித் தட்டு மற்றும் சீர்வரிசை தட்டுகளும் உண்டு. அதிக விலையில் ஆடம்பரமாகச் செய்யப்படும் ஆரத்தித் தட்டு சீர்வரிசை தட்டுகளும் உண்டு. அவரவர் வசதியையும் ஆடம்பரத்தையும் பொறுத்தே விலையினை முடிவு செய்கிறோம். 250ல் இருந்து 5000ம் வரை ஆரத்தி தட்டு சீர் வரிசை தட்டுகளைப் பண்ணலாம்.

கிருஷ்ண ப்ரியா, ஆர்ட் டெக்கரேட்டர்
பள்ளியில் படிக்கும்போதே எல்லா கலை சார்ந்த வேலைகளையும் (Craft work) மிக ஈடுபாட்டோடு செய்வேன். பட்டப் படிப்பை சென்னை மீனாட்சி கலைக் கல்லூரியில் முடித்தேன். என் அப்பா விஜய் ஆதித்யா ஒரு ஓவியர். அரும்பு, கல்கி, விகடன் குழுமத்தில் பணியாற்றியவர். நிறைய காமிக்ஸ் புத்தகங்களுக்கு படம் வரைந்திருக்கிறார். இயக்குநர் பாலச்சந்தரிடமும் பணியாற்றியவர்.

தற்போது அவர் உயிருடன் இல்லை.  நடிகர் வாகை சந்திரசேகரின் நெருங்கிய நண்பர். என் கணவரும் ஒரு ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். நிறைய தமிழ்ப் படங்களில் செட்டுக்களை அமைத்திருக்கிறார். நிறைய படங்களில் உதவி ஆர்ட் இயக்குநராக பணியில் இருக்கிறார். எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்திற்கு என் கணவரும் பக்க பலமாக உள்ளார். இருவரும் சேர்ந்தே பல ஆர்ட் வேலைகளை செய்கிறோம்.

ஆரத்தி தட்டை டேபிள் மேல் வைத்து அழகுபடுத்தி வரிசைப் படுத்துவதே பார்க்க அழகாய் தோன்றும். பழங்கள், இனிப்பு வகைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி தட்டுக்களை எல்லாம் கிஃப்ட் கவர் பண்ணி சீர்வரிசையாக கொடுக்கும்போது பார்க்க வண்ணமயமாய் அழகாய் தோன்றும். இவற்றை தயார் செய்த நமக்கு, வந்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பாராட்டு கிடைத்துக்கொண்டே இருக்கும். தீம் திருமணம் என்றால் தட்டுக்களிலும் தீம் கான்செப்ட்டை புகுத்திவிடுவோம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு எண்ணங்களுடன் ஏற்கனவே செய்த ஒன்று திரும்பாமல் பார்த்துக்கொள்வதே எனது வெற்றியின் ரகசியம்.

லதா, சென்னை
ஆரத்தி தட்டு மற்றும் சீர் வரிசை தட்டுக்களை தயார் செய்து வாடகைக்கும் தருகிறேன். எனது கலை ஆர்வத்தை பார்த்து எனது உறவினர் மற்றும் நண்பர்கள் என்னிடம் தொடர்ந்து ஆர்டர் தருகிறார்கள். இருபத்தி ஐந்து ஆண்டு களாக இத் தொழிலில் இருக்கிறேன். பதினொன்று, இருபத்தியொன்று என அவர்களின் வசதிக்கேற்ப தட்டுக்களை தயார் செய்வதுடன் அவர்களுக்கேற்ற பட்ஜெட்டில் தயாரிப்பதுமே இதில் முக்கியம். அவர்களுக்கே தட்டுக்கள் வேண்டும் என்றால் தயார் செய்து அப்படியே கொடுத்துவிடுவேன். இல்லை வாடகைக்கு வேண்டும் என்றால் அதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொறுத்தும் வாடகை உண்டு. சீர் தட்டு 250ல் துவங்கி அவரவர் வசதிக்கேற்ப தயார் செய்து தருகிறேன்.