காதலித்த பெண்ணையே கொள்வது ஏன்?அண்மையில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் காதலித்து திருமணம் செய்து கொள்ள மறுத்த இந்துஜா என்கிற இளம் பெண்ணை காதலனே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் முரளியிடம் பேசிய போது, “குற்றவாளி ஆகாஷை சம்பவம் நடந்த அடுத்த நாளே கைது செய்துவிட்டோம். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில் வேறு எந்தெந்த வழக்குகள் அவர் மீது போடப்படும் என்று தெரியும்” என்றார்.

இந்திய நாட்டில் அடக்குமுறைகள் தொடங்கும் முதல் இடம்  பெண். சாதி, மதம், அரசியல் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் போராடி பெற வேண்டிய சூழ்நிலைதான் இன்று வரை இருக்கிறது. காதல் என்பது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று என்றாலும் காதலித்தவரையே திருமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

ஒரு உறவில் எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் இணை சரியில்லை என்று தோன்றும்பட்சத்தில் விலகிக்கொள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமை உண்டு. அதுநாள் வரை சுரண்டுதலுக்கு ஆளாகியவராய் எவரேனும் ஒருவர் இருந்தால் அடுத்தவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்ட முடியும். இந்த அடிப்படை கூட தெரியாத ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் நடத்தும் தாக்குதல்கள் இந்தியாவில் ஏராளம். இதன் உச்சம்தான் உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்கிறது. 

தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற மனநிலையை அடையும்போது வெறிச் செயல் இங்கு எளிதாக அரங்கேறுகிறது. காதல் பற்றிய புரிதலை இன்றைய இளைய சமூகத்தினரிடம் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. விரும்பிய பெண்ணையே் கொல்லத் தூண்டும் உளவியல் குறித்து மனநல மருத்துவர் ரம்யா சம்பத்திடம் பேசினேன்.

“காதலித்த பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் நன்றாக இருந்தால் போதும் என  அவர்களுடைய நலனை விரும்பும் காலம் மாறி, தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற மனநிலைக்கு இன்றைய இளைய தலைமுறைகள் வந்துவிட்டனர். அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய Empathy என்று சொல்லக்கூடிய உளவியல் சார்ந்த விஷயங்கள் இந்த சமூகத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது.

தன்னுடைய சூழ்நிலையை மட்டும் சிந்தித்து, சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த நேரத்தில் அவன் செய்யும் கொடுஞ்செயலின் விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை. அதன் விளைவாகவே காதலித்த பெண்ணையே கொலை செய்யத் தூண்டுகிறது. இந்த சம்பவத்தை நாம் தனிநபர் பிரச்சனையாக பார்க்கமுடியாது. அவர் இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டதற்கு இந்த சமூகமும் ஒரு காரணம். 

இன்று குழந்தைகளுக்கு  வீடியோ கேம், செல்போனை காண்பித்துதான் உணவு ஊட்டப்படுகிறது.  இதில் அவர்கள் அதிகம் பார்க்கின்ற விஷயம், வன்முறை. 18 வயதுக்குட் பட்ட குழந்தைகள் சராசரியாக 15 ஆயிரத்துக்கும் மேலாக வன்முறை காட்சிகளை பார்த்திருப்பார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் வன்முறை என்பது தவறு என்பதை கடந்து இதுதான் யதார்த்தம் என்று நம்பக்கூடிய கட்டத்திற்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். இதனால்தான் விரும்புகின்ற பொருளை வன்முறை மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

அதன் நீட்சிதான் காதலில் கூட வன்முறையை கையில் எடுக்க ஒரு காரணமாக அமைகிறது. காதல் ஒரு முறைதான் ஏற்படும் என்கிற மாதிரியும் அந்த காதல் நிராகரிக்கப்படும் போது இதுதான் வாழ்வின் எல்லை என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள் அதுவே அவர்களை கொலை செய்யவும் அனுமதிக்கிறது. எப்படி இருந்தாலும் தவறு செய்கிறவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும், அதுவே நீதி”  என்கிறார் ரம்யா சம்பத்.

- ஜெ.சதீஷ்

செல்வி தனலட்சுமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
“இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆதம்பாக்கம் சென்றோம். ஆகாஷ் ஒரு நாள் இந்துஜாவின் வீட்டிற்கு வந்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறை இந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையம் சென்ற போது உயர் அதிகாரிகள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டனர். ஆகாஷ் மீது 301 வழக்கு மட்டும் போடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில்  காவல் துறை மிக மோசமாக செயல்பட்டிருக்கிறது. சாதாரண கடன் பிரச்சனை, திருட்டு வழக்குகளில் கைது செய்யப்படுகிறவர்களை அடிக்கிறார்கள். ஆனால் பெட்ரோல் ஊற்றி எரித்து ஓர் உயிர் போயிருக்கிறது. இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குற்றவாளியை காப்பாற்றும் நடவடிக்கையில் காவல் துறை ஈடுபடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை தனி நபர் பிரச்சனையாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இது சமூகம் சார்ந்த பிரச்சனையாகவே பார்க்க வேண்டும்.

கொலை செய்வது கொடூரமான செயல். இப்படியான செயலை செய்யும் நபர் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்கிற தைரியத்தில் செய்கிறார் என்றால் சாதிரீதியாக ஆதிக்க மனோபாவம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். இருவரும் காதலித்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், காதலித்தவரையே கொலை செய்யத் தூண்டுமா ஆத்திரம் என்கிற கேள்வி எழுகிறது.

இதுதான் தீர்வு என்றால் திருமணமாகி, கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்களைக் கைவிட்டு தனிமைப்படுத்தும் ஆண்களும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள். பெண்களும் இது போன்ற ஆண்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று புறப்பட்டால் சட்டம், சமுதாய ஒழுங்கு இதெல்லாம் எதற்கு என்கிற கேள்வி எழுகிறது. தனிநபரே ஒருவரை ஒருவர் தாக்குதல்  ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைதான் உருவாகும். சமகாலத்தில் வாழக்கூடிய பெண்களுக்கு  ஆண்-பெண் உறவு பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது”