உங்கள் குழந்தையின் உணவு என்ன?



நோய் எதிர்ப்பு சக்திக்கு...

பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போ தெல்லாம் ஒரே ஒரு தம்ளர் பால் அல்லது பூஸ்ட் மதியம் பிரெட் சாண்ட்விச் அல்லது நூடுல்ஸ், இரவு தோசையோ, இட்லியோ. இப்படி ஒப்பேற்றி விடுகிறோம். இதனால் சக்தி கிடைக்குமா குழந்தைக்கு? இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி வேண்டாமா? சிறு சிறு மாற்றங்களே போதும். நமது பாரம்பரிய உணவான இட்லி, தோசை, அடை, இடியாப்பம், கொத்துமல்லி, தக்காளி, தேங்காய் சட்னியுடன் காலை டிப்பனாக கொடுங்கள். அரிசி, உளுந்து, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய பருப்பு வகை சேர்ந்த உணவுகளை ஆவியில் வேக வைத்ததினால் உடல் வளர்ச்சியை தூண்டும். பித்தம் தணிக்கும் கொத்துமல்லி, சி விட்டமின் கொண்ட தக்காளி, ஊட்டம் தரும் தேங்காய் என ஏதேனும் மாறி மாறி சேருவதால் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும்.

மதியம் கதம்ப காய்கறிக்கூட்டு, சாம்பார், எலுமிச்சை, புதினா, தக்காளி சாத வகைகள், அந்த பிஞ்சு உடலுக்கான புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து, தாது என்று எல்லாவற்றையும் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தோற்றுவிக்கும். இரவில் எட்டு மணிக்குள் இரவு சாப்பாடு முடித்தல் மிகவும் நல்லது. இடியாப்பம், சப்பாத்தி, தோசை இவற்றை சட்னிகளுடன் தரலாம். இவை உடலை சோர்வடைய விடாமல் பாதுகாத்து நிற்கும்.

உறங்கப்போகும்போது, ஏதேனும் ஒரு பழம், ஒரு தம்ளர் பால் தந்தால் அயர்ந்த உறக்கம் வரும். காலையில் எழுந்ததுமே மலச்சிக்கல் இன்றி காலைக்கடன் சுலபமாக முடிக்கும் குழந்தை. தினமும் இஞ்சிச்சாற்றிலும், எலுமிச்சை சாற்றிலும் தேன் விட்டு ஒரு ஸ்பூன் தரலாம். நோயெதிர்ப்புச் சக்தி அபரிமிதமாகக் கிடைக்கும். முளை கட்டிய தானிய வகைகளை அவித்து சுண்டல், சாலட்டாக மாலை நேரத்தில் ஸ்நாக்சாக பயன்படுத்தினால், நார்ச்சத்துடன், ஞாபக சக்தியும் வளரும்.

நாம் சாத்துக்குடி, ஆரஞ்ச், எலுமிச்சை இவற்றை சளி பிடிக்குமோ என்று தவிர்ப்போம். அது தவறு. இவற்றில் விட்டமின் சி அதிகம். இதில் உள்ள விட்டமின் ‘சி’ உடலின் அமினோ அமிலங்களை அதிகரிக்க வைத்து, உடல் திசுக்களை பழுதுபார்த்து புதுப்பிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் ஜூசை கலந்து தரலாம். இருமல் குணமாகிவிடும். சருமமும் பொலிவடையும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தித் திறன் அதிகமாக இருந்தால்தான் அடிக்கடி சளி, இருமல், ஜுரம் ஆகியவை வராது. குறிப்பாக எனர்ஜி லெவல் அதிகரிக்கும். இளஞ்சூரியனைக் காப்போம்! வரும் தலைமுறையின் நலம் பேணுவோம்.

- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.