எழுத்தாளர் to வில்லன்
- கி.ச.திலீபன்
வேலராமமூர்த்தி
வில்லன் கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்திப்போகும்படியான மிடுக்கும், தோரணையும் வேலராமமூர்த்திக்கு இயல்பிலேயே வாய்க்கப்பெற்றிருக்கிறது. ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தில் வீரத்தேவன் கதாப்பாத்திரமாய் பார்வையிலேயே மிரட்டியவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.
நான்கு ஆண்டுகளில் 11 படங்கள் நடித்துள்ளவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு நடிகராகவே பரவலாக அறியப்படும் வேலராமமூர்த்தி முதலில் ஒரு எழுத்தாளர். அதிக எண்ணிக்கையிலான கதைகளை இவர் எழுதவில்லை என்றாலும் இலக்கியத் தரம் மிக்க ஆக்கங்களை அளித்திருக்கிறார். இவருடன் நாம் மேற்கொண்டநேர்காணல்...
உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு உங்களுக்கு எழுத்து வசப்பட்டது குறித்து... ஒரு வாரப் பத்திரிகையில் ‘கூட்டாஞ்சோறு’ என்கிற தலைப்பில் தொடராக வெளிவந்ததுதான் ‘குற்றப்பரம்பரை’.
பிரிட்டிஷ் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ரேகைச்சட்டத்தால் பிறமலைக்கள்ளர் மற்றும் கொண்டையன்கோட்டை மறவர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். தினசரி மாலையில் இச்சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் காவல் நிலையத்துக்குச் சென்று ‘ரேகை’ வைத்து விட்டு இரவு முழுவதும் அங்கேயே இருக்க வேண்டும்.
ஆண்கள் இல்லாத இரவு வேளையில் அச்சமூகப் பெண்களை வெள்ளையர் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தினார்கள். அதனை எதிர்த்த போராட்டம் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நடந்தது. அந்த போராட்ட வரலாற்றைப் பதிவு செய்ததுதான் ‘குற்றப்பரம்பரை’. எனது ‘பட்டத்து யானை’ நாவலும் ஒரு வார இதழில் தொடராக வெளியானதுதான்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம்தான் என் சொந்த ஊர். தமிழ்நாட்டிலேயே மிகவும் பின் தங்கிய வறட்சியான கிராமம் அது. தினசரி/வார பத்திரிகைகள் கூட அரிதாகவே வரும் அக்கிராமத்தில் அரசு நூலகம் ஒன்று இயங்கி வந்தது. பள்ளிக் காலத்தில் என் சக மாணவர்கள் எல்லோரும் துப்பறியும் கதைகள், கன்னித்தீவு ஆகியவற்றைப் படித்துக் கொண்டிருந்த போது நான் சோவியத் (ரஷ்யா) இலக்கியங்களையும், மலையாள இலக்கியங்களையும் வாசித்தேன்.
கி.கேசவ தேவ் எழுதிய ‘அண்டை வீட்டார்’, தகழி சிவசங்கரம்பிள்ளையின் ‘செம்மீன்’, மக்சீம் கார்க்கியின் ‘தாய்’ போன்ற நாவல்கள் எனக்குள் பெருத்த அதிர்வை ஏற்படுத்தியவை. புஷ்கின், அண்டன் செக்காவ், தஸ்தொவ்ஸ்கி என ரஷ்ய இலக்கியவாதிகளை எல்லாம் வாசித்தேன் என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்தான். நான் முதலில் ஜெயகாந்தனின் வாசகனாக இருந்தேன்.
விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும், அவலங்களையும் எழுத்தாக்கியவர். அவருடைய எழுத்துகளை தொடர்ச்சியாக வாசித்ததன் வாயிலாகத்தான் எனக்கு ரஷ்ய இலக்கியங்கள் பற்றிய அறிதல் ஏற்பட்டது. 8ம் வகுப்பு படிக்கிற காலத்திலே ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய ‘மார்க்சிய மெய்ஞானம்’ படித்தேன். எனது வாசிப்பு என்னை இடதுசாரி சிந்தனைக்குள் கொண்டு சென்றது.
நான் வாசிக்கத் தொடங்கிய 60களின் காலகட்டம் மிக முக்கியமானது. 65ம் ஆண்டு மொழிப்போராட்டத்துக்குப் பிறகு திராவிட இயக்கங்கள் வளர்ந்து வந்தன. திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப்பேச்சு, எழுத்து மற்றும் கண்ணதாசனின் கவிதைகள் என தமிழ் வளர்க்கப்பட்ட காலம் என்பதால் இயல்பிலேயே மொழி மீதான பற்று அதிகமாக இருந்தது.
அதனோடு வாசிப்பும் இணைந்ததால் மொழியறிவு செழுமையானது. பி.யு.சி படிப்பு முடித்ததும் ராணுவத்துக்குச் சென்று விட்டேன். அதை ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். என் நண்பனொருவன் வீட்டில் சண்டை போட்டு விட்டு ஊரை விட்டு ஓடிப்போகும்போது என்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய் விட்டான். வீட்டிலிருந்து 40 ரூபாயைக் களவாண்டுதான் சென்னைக்குச் சென்றோம்.
ஒரு மாத காலம் சென்னையில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள் என தகவல் தெரிய வந்ததும் அதில் இணைந்து விட்டேன். முரட்டுத்தனமான வேலை மீது எனக்கு இயல்பிலேயே ஆர்வம் இருந்தது. மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் எனக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ் மொழியைப் பேசுவதற்கு ஆட்களே இல்லை என்பதான சூழல். மொழியை வெளிப்படுத்த முடியாமல் தவித்த போது அதன் மீதான பற்று இன்னமும் அதிகமானது. 1969ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த நான் 1974ம் ஆண்டு ராணுவத்திலிருந்து வெளியேறி ஊர் திரும்பி விட்டேன்.
60 மற்றும் 70களை தமிழ் பத்திரிகை உலகின் பொற்காலம் என்றே குறிப்பிடலாம். அக்காலகட்டத்தில் 1974ம் ஆண்டு எனது முதல் சிறுகதையான ‘கழுதை விற்ற பணம்’ செம்மலர் இதழில் வெளியானது. இடதுசாரி சிந்தனையால் வளர்ந்தவன் என்பதால் எனது எழுத்துகளும் அது சார் சிந்தனை உடையவையாகவே இருக்கும். வலியவன் அரசு மரங்களை வெட்டி சம்பாதிக்கிறான்.
அவனை கேள்வி கேட்கவோ, தண்டிக்கவோ யாருமில்லை. ஆனால் ஒரு சலவைத் தொழிலாளி தான் துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக வேலி முள்ளை வெட்டி எடுக்கிறான். இது பெரும் குற்றமாகக் கருதப்பட்டு அவனுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
தனது கழுதையை விற்று அந்த அபராதத்தை கட்டுவான் அந்த சலவைத் தொழிலாளி. இடது சாரி சிந்தனை கொண்ட இச்சிறுகதை வெளிவந்த காலத்திலேயே பரவலாக கவனிக்கப்பட்டது. எனது எழுத்துப் பயணம் தொடங்கிய 45 ஆண்டுகளில் இதுவரையிலும் மொத்தம் 45 சிறுகதைகள்தான் எழுதியிருக்கிறேன்.
உங்கள் நாவல்கள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவைகளா? இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு மிகக்குறைவு. வ.உ.சி, வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா என விரல் விட்டு எண்ணுமளவுக்குதான் போராட்ட வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.
முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பே 1790களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘சித்திரங்குடி மயிலப்பன்’ வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருக்கிறார். மறைக்கப்பட்ட இந்த வரலாற்றை ஆய்வு செய்து போராளி மயிலப்பனின் வரலாற்றை புனைவு வடிவமாகக் கொடுத்ததுதான் ‘பட்டத்து யானை’ ராமநாதபுரம் என்கிற இந்த வறண்ட பூமி எத்தனை தியாகிகளைக் கொடுத்திருக்கிறது என்பதுதான் அதன் அடிநாதம்.
மதயானைக்கூட்டத்தில் வீரத்தேவனாகவே வாழ்ந்திருக்கிறீர்கள். நடிப்பின் மீதான ஆர்வமும் உங்கள் இயல்பில் இருந்ததுதானா? ‘மதயானைக்கூட்டம்’ பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பரமக்குடிக்காரர். எனது கதைகளின் வாயிலாக என்னை அறிந்திருக்கிறார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர் ‘மதயானைக்கூட்டம்’ படம் இயக்க வந்த போது போனில் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு நல்ல கதாப்பாத்திரம் இருக்கிறது. அதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டார்.
ஆரம்பத்தில் அதை நான் மறுத்து விட்டேன். எழுத்தாளனாக எனக்கென உருவாகியிருக்கும் பிம்பம் இதன் மூலம் சிதைந்து விடுமோ என்கிற அச்சமே அதற்குக் காரணம். இரண்டரை மாதங்களாக என்னை தொடர்பு கொண்டு கொண்டே இருந்தார்.
சென்னைக்கு நான் வந்த போது என்னை நேரில் சந்தித்து படத்தின் கதையையும் எனது பாத்திரத்தையும் கூறினார். கேட்ட மாத்திரத்தில் எனக்குப் பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அத்தோடு நான் சினிமாவில் மாட்டிக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறந்த வில்லன் நடிகர் பிரிவில் தேசிய விருதுக்கான பரிந்துரையில் ‘வீரத்தேவன்’ கதாப்பாத்திரத்தில் நடித்த என் பெயரும் இருந்தது. விருது கிடைக்கவில்லை என்றாலும் முதல் படத்திலேயே தேசிய விருது பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘மதயானைக்கூட்டம்’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை. விமர்சன ரீதியாகப் பார்த்தால் அது சாதிப் பெருமை பேசும் திரைப்படமாக பார்க்கப்பட்டது பற்றி ஒரு எழுத்தாளராக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது சாதிப் பெருமை பேசும் படம் என்பது தவறான கருத்து.
உண்மையில் சாதி என்னும் வெற்றுப் பெருமிதத்துக்காக எப்படி மனிதர்கள் அடித்துக் கொண்டு அழிகிறார்கள் என்கிற அவலத்தை அத்திரைப்படம் ஆவணமாக்கியுள்ளது. ‘வீரத்தேவன்’ கதாப்பாத்திரத்தில் நான் நடித்தபோது எனக்கும் இதே பயம் இருந்தது. இடது சாரி சிந்தனையில் வளர்ந்த நான் சாதிப்பெருமை பேசும் படத்தில் நடித்தால் என்னவாவது என்று. ஆனால் விக்ரம் சுகுமாரன் அதற்கு நேரெதிராகப் படம் எடுத்திருக்கிறார்.
சாதிவெறிக்கு எதிரான ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என இடதுசாரி பத்திரிகைகளில் கட்டுரை எழுதப்பட்டது. அத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஆனால் விமர்சன ரீதியாக அத்திரைப்படத்தை பாராட்டாத ஆட்களே இல்லை என்றுதான் சொல்வேன். இயக்குனர் பாலாவும் என்னிடம் இத்திரைப்படம் குறித்து வியந்து பேசியிருக்கிறார். ‘வீரத்தேவன்’ கதாப்பாத்திரம்தான் என் திரையுலக வாழ்வின் மாஸ்டர் பீஸாக இருக்கும். விக்ரம் சுகுமாரன் என்னை நடிக்க வைக்கவில்லை வீரத்தேவனாகவே வாழவைத்தார்.
அந்த நடை, பார்வை, தோரணை எல்லாம் என் இயல்பிலேயே இருப்பதுதான். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். வீரத்தேவன் பாத்திரம் போல் ‘கிடாரி’ படத்தின் ‘கொம்பையா பாண்டியன்’ கதாப்பாத்திரமும் முக்கியமானது. இதுவரை நடித்த 11 படங்களில் இந்த இரு கதாப்பாத்திரங்களும் நன்கு கவனிக்கப்பட்டிருக்கின்றன.
இலக்கியம், சினிமா இந்த இரண்டு ஊடகங்களுக்கான வேறுபாட்டை எவ்வாறு உணர்கிறீர்கள்? இரண்டும் வெவ்வேறான ஊடகங்கள் என்றாலும் இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. சினிமாவின் கதை இலக்கியம்தான். திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பே நிறைய வீதி நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.
‘கருவக்காட்டு கலைக்குழு’ மூலமாக பல பகுதிகளில் அந்நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறோம். மட்டு மல்லாமல் நூறு வீரத்தேவன்களையும், நூறு கொம்பையா பாண்டியன்களையும் எனது கதைகளில் நான் எழுதியிருக்கிறேன் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்துக்குள் என்னை எளிதாகப் பொருத்திக்கொள்ள முடிகிறது. ரீடேக்கே கிடையாது. ஒரே டேக்கில் நடித்து முடிப்பதுதான் என் வழக்கம். ரீடேக்குக்கு என்னிடம் அவசியமே இல்லை.
நடிக்க ஆரம்பித்ததற்கு பிற்பாடு எழுதினீர்களா?
சினிமா சார்ந்த எழுத்துப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். பத்திரிகைகளுக்கான எழுத்துப் பணிகளைத் தொடரவில்லை. குற்றப் பரம்பரைக்கான திரைக்கதை எழுதும் பணிக்கு இடையேதான் கிடாரியில் நடிக்க வேண்டி வந்தது.
நான் கிடாரியில் நடிக்கச் செல்ல, பாலாவும் நாச்சியார் பட இயக்கத்தில் இறங்கி விட்டார். அப்படத்தை முடித்ததும் குற்றப்பரம்பரை பணிகள் ஆரம்பிக்கவுள்ளது. எனது இரண்டு சிறுகதைகளை படமாக்குவதற்கான அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கான திரைக்கதை எழுதும் பணிகளும் இருக்கின்றன.
என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? முதல் முறையாக ‘வில்லன்’ எனும் மலையாளப்படத்தில் நடிக்கிறேன். மோகன்லால் மற்றும் விஷால் நடிக்கும் இப்படத்தில் விஷாலின் தந்தையாக நடித்திருக்கிறேன். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷின் தந்தையாகவும், ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரமின் தந்தையாகவும் நடித்திருக்கிறேன்.
பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’யில் ஒரு பாத்திரத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறேன். ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இயக்கத்தில் ‘மதுர வீரன்’. ‘அறம்’ படத்தில் நயன்தாராவுக்கு எதிர்நாயகப் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ‘பதுங்கிப் பாயணும் தல’ என்கிற நகைச்சுவைப் படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத வேலராமமூர்த்தியை பார்ப்பீர்கள்.
நடிக வாழ்வு எப்படி இருக்கிறது?
மன நிறைவாக இருக்கிறது. இந்த மாதிரியான கதாப்பாத்திரம்தான் என்றில்லை. எப்படியான கதாப்பாத்திரத்திலும் நடிப்பேன். ஏனென்றால் திரையில் தெரிவது வேல ராமமூர்த்தியல்ல. அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறி நடிப்பேன். காமெடி ரோலில் நடித்தாலும் கூட எனக்கான தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். இப்போது கை நிறைய படங்கள் இருக்கின்றன.
எழுத்து எனக்கு வாசிப்பு சார்ந்தவர்களின் அன்பைப் பெற்றுக் கொடுத்தது. சினிமா என்னை பரவலான மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. ஒரு நடிகனாக மக்கள் என் மேல் காட்டும் அன்பு அலாதியானது.
எந்த நிகழ்வுக்கு சென்றாலும் என்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். சினிமாவின் சக்தி இதுதான். மன நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கிறது. 40 ஆண்டுகளாக கலை இலக்கியத்துடன் தொடர்புடைய வாழ்க்கையின் உச்சகட்டமாக திரைத்துறை பங்களிப்பைப் பார்க்கிறேன்.
படங்கள்: அய்யப்ப மாதவன்
|