வானவில் சந்தை
அபூபக்கர் சித்திக்
கத்தரிக்காய் என்ன விலை?
ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கும் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். நீண்ட காலம் மாடித்தோட்டங்களை அமைப்பதிலும், இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதிலும் ஈடுபட்டிருந்த நண்பரின் கடைத்திறப்பு அது. அரிசி, சிறு தானியங்கள், மஞ்சள், சீரகம், தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் என்று பரவலான பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. கூடவே பாரதியார் படம் போட்ட பருத்தியினாலான ஜோல்னாப் பைகளும் வைக்கப்பட்டிருந்தன.
என்னுடன் வந்திருந்த நண்பர் ஒரு தேன் பாட்டிலை வாங்கிக் கொண்டார். திரும்பிச் செல்கையில், அவர் அந்தத் தேன் நல்ல சுத்தமான ஆர்கானிக் தேன் இல்லையென்றும் அதற்கான காரணங்களையும் விளக்கிக் கொண்டு வந்தார். அவர் சொன்ன காரணங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தர்க்கங்களைக் கொண்டிருந்தன. ஆர்கானிக் பொருட்களை விற்கும் கடைகள் குறித்து ஒரு எளிய நுகர்வோனாக எனக்கு ஏற்கனவே இருந்த பல சந்தேகங்களை இது மேலும் உறுதிப்படுத்தியது.
இயற்கையைப் பெரிதும் தொந்தரவு செய்யாமல், மரபான முறையில், பாரம்பரியமான வித்துக்களைக் கொண்டு செய்யப்படும் விவசாயத்தின் விளைபொருட்கள் என்றுதான் ஆர்கானிக் பொருட்களைப் பற்றி எண்ணியிருந்தேன். நுகர்வோருக்கு அந்தப் புரிதல் மட்டும் போதாது. மதுரையில் நீண்ட காலம் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் கவிதா செந்தில்குமாரிடம் (www.organicgold.in), சில அடிப்படையான கேள்விகளைக் கேட்டபோது கிடைத்த தகவல்களைப் பார்ப்போம்.
1. இயற்கை பொருட்கள் அங்காடியில் நுழையும் ஒருவர் அங்குள்ளவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைதான் என்று எப்படி அறிந்துகொள்வது? இண்டியா ஆர்கானிக் என்ற சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்திய அரசின் இயற்கை சார்ந்த உற்பத்திக்கான தேசியத் திட்டம் (NPOP National Program for Organic Production) என்பதன் கீழ் உள்ள விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (APEDA- Agricultural and Processed Food Products Export Development Authority) நியமிக்கும் சோதனை சாலைகள் இவற்றை அளிக்கின்றன. தகுந்த சோதனைகளுக்குப் பின்பே இந்தச் சான்றிதழை பெறமுடியும்.
இந்தச் சின்னம் மூலம், வாங்கும் பொருள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்றும், செயற்கையான பூச்சிக்கொல்லியோ உரமோ பயன்படுத்தப்படவில்லை என்றும் நுகர்வோர் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். அதே நேரம், பிராண்ட் செய்யப்படாத இயற்கை விவசாயப் பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாகக் காய்கறிகளைச் சொல்லலாம்.
பெரிய அளவில் இல்லாமல், மேற்கண்ட சோதனைகளுக்குட்படாமல் சிறிய அளவில் இயங்கும் அங்காடிகளும் உண்டு. அவற்றி லும் நஞ்சில்லாப் பொருட்கள் கிடைக்குமென்றாலும் ஒரு நுகர்வோராக அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வழிகள் ஏதும் இல்லை. ஒரு நம்பிக்கையில்தான் வர்த்தகம் நடக்கும்.
2. ஆர்கானிக் பண்டங்களின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? நஞ்சில்லாதவை ஆர்கானிக் பொருட்களென்றால் எல்லோருமே அதை வாங்க வேண்டியதுதானே? ஏனில்லையென்றால், விலைதான் காரணம். ஆர்கானிக் பொருட்கள், வழக்கமான பொருட்களைக் காட்டிலும் குறைந்தபட்சம் நாற்பது சதவீதம் கூடுதல் விலை கொண்டதாக இருக்கிறது. இன்னும் சில பண்டங்கள், வழக்கமான விலையை விட சில மடங்குகள் கூடுதல் விலையாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், ஒரு குறிப்பிட்ட பரப்பில் நடக்கும் இயற்கை விவசாயத்தின் விளைச்சல் அளவு, வழக்கமான விவசாயம் (செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மூலம் நடப்பது) மூலம் கிடைக்கும் மகசூலை விடக் குறைவாகவே இருக்கும் என்பதுதான்.
இப்போதைய நிலவரப்படி, விலை நிர்ணயம் அந்தந்த விற்பனையாளரைப் பொறுத்ததே. பொதுவான கூட்டமைப்போ, விலை நிர்ணய முறைமையோ இப்போது சந்தையில் இல்லை. அதனால்தான் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை என்ற முத்திரையோடு பல மடங்கு விலையில் விற்கப்படுகின்றன. சாமானியர்கள் அதை நெருங்க முடியாது. ஆனால் எல்லோரும் பரவலாக வாங்க ஆரம்பித்தால் இயற்கை விவசாயம் செய்யும் பரப்பளவு அதிகரிக்கும் என்றும் அதனால் விளைச்சலும் அதிகரிக்கும் என்றும், விளைவாக விலை வீழும் என்றும் சொல்லப்படுகிறது.
3. ஒருவர் ஏன் ஆர்கானிக் பொருட்களை வாங்க வேண்டும்?
முதல் காரணம் உடல் நலம்தான். செயற்கையான உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மூலம் விளைவிக்கப்படும் பண்டங்கள், நீண்ட கால அளவில் உடலில் வினையாற்றி, புற்றுநோய் போன்ற பலவிதமான நோய்களை தோற்றுவிக்கின்றன என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. நமது உடல் நலத்தைக் காத்துக் கொள்வதோடு எதிர்காலச் சந்ததியும் நஞ்சில்லாத உணவை உண்ண வகை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.
அத்தோடு ஒரு நிலத்தின் உணவு முறை, அந்நிலத்தில் வாழும் இனக்குழுவின் பண்பாடு மற்றும் கலாசாரத்தோடு பிணைந்து கிடப்பது. மரபான வித்துக்களை அழியாமல் பாதுகாப்பதும் அவற்றின் விளைச்சலை அதிகரிப்பதும் அவற்றை வாங்கி நுகர்வது மூலம்தான் நடக்கும். இயற்கைப் பண்டங்களை நுகர்பவராக ஒருவர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், அவை பரவலாகக் கிடைக்காது என்பதுதான். ஒரு குறிப்பிட்ட அங்காடியில் கிடைப்பது வேறொரு இயற்கை அங்காடியில் கிடைக்காது.
அத்தோடு, தொடர்ச்சிஆகவும் கிடைக்குமா என்பதும் சந்தேகம். நான் சில மாதங்களுக்கு முன் ஒரு கடையில், தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் சிகைக்காய் பொடி வாங்கினேன். நன்றாக இருந்தது என்று வீட்டில் சொல்ல, தீர்ந்ததும் போய்க் கடையில் கேட்டால் இப்போது இருப்பு இல்லை என்றார்கள். கடந்த மூன்று மாதங்களாகவே அதுவே பதில். சென்ற வாரம் அவர்களே சலித்து, இனி அந்த பிராண்டு சிகைக்காய்த் தூள் வராது என்றார்கள்.
ஒரு குறிப்பிட்ட வகைச் சுவைக்குப் பழகி அது பின்னால் கிடைக்காமல் போகும் சாத்தியமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் ஆரம்ப நிலைப் பிரச்னைகள்தான். இயற்கை சார்ந்த விவசாயம் மூலம் விளையும் நஞ்சில்லாப் பண்டங்கள் பரவலாக வாங்கப்படும்போது, விவசாயப் பரப்பு கூடிவிடும். சாமானியரும் நெருங்கும் வகையில் விலையும் குறையக்கூடும்.
(வண்ணங்கள் தொடரும்!)
|