வில்லுக்கு ஷிவானி



- மணிமகள்

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் டாலி ஷிவானி.  5 வயது சிறுமியான இவர் தனது இரண்டு வயது முதலே வில்வித்தையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு பல சாதனைகளை படைக்கத் தொடங்கி இருக்கிறாள். வில்வித்தை வீரர்களுக்கான அகாடமி நடத்தி வரும் டாலியின் தந்தையான செருகுரி சத்யநாராயணா, சிறு வயதிலிருந்தே டாலியிடம் கார்பன் அம்புகளைக் கொடுத்து ஆரம்பக் கட்ட பயிற்சியினைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

தொடரும் அவளின் ஆர்வத்தைப் பார்த்து விரைவிலேயே வில்வித்தை பயிற்சியினை தனது மகளுக்கு களத்திலேயே கொடுக்க ஆரம்பித்து விட்டார். 3 வயதில் 5 மீட்டர் மற்றும் 7 மீட்டர் தொலைவு வில்வித்தையில் 200 புள்ளிகள் எடுத்து தேசிய சாதனை படைத்த டாலி ஷிவானி லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்ததுடன், தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார்.

சமீபத்திய சாதனையாக 10 மீட்டர் தொலைவில் நின்றபடி, 11 நிமிடங்கள் 19 நொடிகளில் சரியாக 103 வில்களை இலக்கை நோக்கி செலுத்தி, வில்வித்தையில் புதிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இந்த குட்டி தேவதை. மேலும் மற்றோர் போட்டியில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 5 நிமிடங்கள் 8 நொடிகளில் சரியாக 36 வில்களை செலுத்தி மற்றொரு சாதனையும் அவர் படைத்திருக்கிறாள்.

ஷிவானியின் சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் விபத்தில் மரணமுற்றனர். ஷிவானியை குறித்த வியப்பான செய்தி என்னவெனில் அவள் வாடகைத் தாய் மூலம் பிறந்தவள். ஷிவானி தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடுவார் என அவரது  தந்தை  நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் கலக்கப் போகும் இந்த வில்வித்தை வீராங்கனையை வாழ்த்தி வரவேற்போம்.