அனிதா மூட்டிய தீ



- ஜெ.சதீஷ்

வலுக்கும் நீட் எதிர்ப்பு

அனிதா, தமிழகம் மட்டுமல்லாமல், கடல் தாண்டி வாழும் தமிழர்களையும் வீதியில் போராடவைத்த மூன்றெழுத்து மந்திரச்சொல். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதாவின் மரணம் தமிழக மக்களை வெகுண்டெழ வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் அலட்சியமும், மாநில அரசின் கையாலாகாதத் தன்மையுமே அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள், அரசியல்  கட்சி தலைவர்கள், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மூட்டைத்தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா.

ஏழை குடும்பத்தில் பிறந்து பல்வேறு சவால்களை கடந்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். மருத்துவப் படிப்பிற்கான கட் ஆஃப் இருந்தும் நீட் தேர்வு இவருக்கு முட்டுக்கட்டையிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவருக்கு வயது 17. அனிதா வின் இந்தப் போராட்டம் கடைசியில் மரணத்தில் முடிந்தது. அனிதாவின் நிலை இனி தமிழகத்தில் வேறு எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது, ஜல்லிக்கட்டுக்காக போராடிய தமிழகம் கல்வி உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று அனிதாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
அனிதாவின் போராட்டம் குறித்து மருத்துவர் எழிலன் கூறுகையில், “போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில், மிகவும் பின்தங்கிய  குடும்பத்தில் பிறந்து, தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர் அனிதா. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எல்லாம் கடந்து ஒரு பெண் 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

பொருளாதார பின்புலம் கொண்ட, மேல்தட்டு சமூகத்தை சார்ந்த ஒரு மாணவன்  மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி வகுப்புக்கு சென்று பெரும் மதிப்பெண்களை விட அனிதாவின் கட் ஆஃப்  பன்மடங்கு அதிகம். அனிதாவிற்கு இயல்பாகவே தன் சமூகத்திற்கான கடமையும் பொறுப்புணர்ச்சியும் இருந்ததை கடைசிவரை பார்க்க முடிந்தது. அனிதாவின் ஊருக்கு போதிய பேருந்து வசதி இல்லை.

இரண்டு அறைகளைக்கொண்ட கழிவறைகூட இல்லாத எளிமையான வீடு, இந்த சூழலில் அந்த கிராமமே அனிதாவை டாக்டர் அம்மா என்று கொண்டாடிய சூழலில் நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்தது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச்சீட்டு வழங்கப்பட்டிருந்தால் அனிதா இன்று மதுரை மருத்துவக்கல்லூரியிலோ அல்லது தர்மபுரி மருத்துவக்கல்லூரியிலோ மருத்துவம் படித்துக்கொண்டிருப்பார். 

நாமும் டாக்டருக்கு படிக்கலாம் என்று பிற மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கையை மத்திய, மாநில அரசுகள் அழித்துவிட்டனர். ஒரு அனிதா அந்த கிராமத்தில் மருத்துவரானால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல அனிதாக்கள் மருத்துவராகியிருப்பார்கள். இந்நாள் வரை அப்படிதான் இந்த சமூகம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் நீட் திணிப்பு இதை உடைத்துவிட்டது.

மாநிலப் பட்டியலில் இருக்கக்கூடிய மருத்துவம், பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலில் மாற்றியதன் ஒரே காரணத்தால், மாநில அரசு கட்டுமான பணியை செய்து, மருத்துவமனைகளை கட்டி,  மருத்துவக் கல்லூரிகளை திறந்து மருத்துவ சீட்டை ஒதுக்கினால் யார் நுழைய வேண்டும் என்று டெல்லியில் அமர்ந்து கொண்டு முடிவெடுப்பது சமூகநீதிக்கு எதிரானது. இங்கு படிக்கக்கூடிய மாணவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கோ வேலைக்கு செல்லமாட்டார்கள். அரசுப் பணியை தேர்வு செய்வார்கள்.

அரசுப் பணியில் இருப்பவர்களுக்குதான் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அவர்கள் முதுகலை மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்று தெரியும். இன்று புதுக்கோட்டையில் உள்ள அரசாங்க மருத்துவர் பெரியசாமிதான் நவீன முறையில் மூச்சுக்குழாயில் சுவாசம் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளார். இவரைப் போன்ற திறன் கொண்டவர்கள் இனி உருவாகாதபடி பார்த்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க முயற்சி செய்கின்றன.

மேல்தட்டு சமூகத்தை சேர்ந்த நகர்ப்புற மாணவன் மருத்துவர் ஆனால் அது அவனுக்கு மட்டுமே பலனை கொடுக்கும். அனிதா போன்ற கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவரானால் இந்த சமூகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே நன்மை உண்டாகும். இப்படி நல்ல மதிப்பெண் பெற்ற மாணவியை மருத்துவராகவிடாமல் கொன்றுவிட்டீர்களே என்கிற மக்களின் கோபம் தான் இன்று போராட்டமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
 
சமூகப் பொறுப்புணர்வோடு அரசாங்கப் பொதுத்துறையில் வேலை பார்த்து ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கட்டமைப்பை நீட் தேர்வு உடைத்துவிட்டது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் மூலம், அனிதா சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசாங்க மருத்துவ கல்லூரிகளுக்கு நிரந்தர நீட் விலக்கு வேண்டும்.  இரண்டாவது அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டப்படி கல்வியும் சுகாதாரமும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்கிறார் எழிலன்.

கல்வித்தரம் குறித்தும் அனிதாவின் மரணம் குறித்தும் பேசினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. “இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறார்கள். எவ்வித சுயநலமும் இல்லாமல் மாநிலத்தின் உரிமை காக்கவும் கூட்டாட்சி தத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்பை காக்க  வேண்டும் என்றும், சமமான கற்றல் வாய்ப்பு வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம்.

ஒரு தேர்வு என்பது திணிக்கப்பட்டால் வடிகட்டப்படக்கூடிய தேர்வாகவே அது அமையும். இனி வரும் காலங்களில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அகில இந்திய அளவிலான ஒரு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிக்கு செல்ல முடியும் என்கிற நிலை ஏற்படும். இந்த ஆபத்தினால்தான் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். மாணவர்களின் போராட்டத்தில் அரசு மௌனத்தை கலைக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். 

அதை எந்த வகையில் பரிசீலிக்க முடியும் என்று மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி வழக்கு பதிய வைப்பதும் கண்டிப்பதும் ஜனநாயக நாட்டிற்கு தீர்வாகாது. நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் படிக்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் மாணவர்களுக்கும் இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் போராடக்கூடிய மாணவர்கள்தான்.

நமக்காக குரல் கொடுக்க இந்த சமூகமே இருக்கிறது என்று நம்பிக்கையை கொடுக்கக்கூடிய வெளிப்பாடுதான் மாணவர்களின் போராட்டம். மக்களுடைய ஜனநாயக கருத்தை வெளிப்படுத்தக்கூடிய போராட்டங்களை அரசு அங்கீகரித்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஒடுக்குமுறைகளை கையாள்வது நல்ல அரசாக இருக்கமுடியாது. நமக்கான உரிமை மறுக்கப்படும் போது அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் நாம் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம்.

அதையும் தாண்டி நடந்த அனிதாவின் மரணம் மிகவும் வேதனைக்குரியது. நாம் இன்னும் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய மக்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. அந்தப் பொறுப்புணர்வோடு நாம் அனைவரும் செயல்பட வேண்டும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரிடம் பேசியபோது, “கடந்த ஆண்டு வரை மத்திய அரசை எதிர்த்து  நீட் தேர்வை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தினார் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறும் இன்றைய ஆட்சியாளர்கள் கடுமையாக போராடி நிறுத்தியிருக்க வேண்டும்.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு நாங்கள் போராடினோம் என்று கூறுவது எந்த விதத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மத்திய, மாநில  அரசுகளின் திட்டமிட்ட சதியால் நாம் இன்று அனிதாவை இழந்து நிற்கிறோம். நீட் தேர்வு நீண்ட ஆண்டுகளாக தமிழகத்தில் விலக்கு பெற்று வந்தது.  இந்த மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி நடத்தி முடித்தது. 

நல்ல மதிப்பெண் இருந்தும் நீட் தேர்வால் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் வெளிவரத்தொடங்கினர். தமிழக அரசு இந்த மாணவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆண்டு விலக்கு பெற்றுவிடுவோம் என்று பொய்யுரைத்து வந்தனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் இந்த ஆண்டு விலக்கு அளிக்க முயற்சி அளிக்கிறோம் என்று கூறியதால், அனிதா போன்ற மாணவர்கள் இந்த வருடம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்று நம்பிக்கை வைத்தனர்.

அப்போதுதான் அனிதா நீதிமன்றம் சென்றாவது நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுவிடலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு சரியான நீதியை கொடுக்காததே அனிதாவின் மரணத்திற்கு காரணம். அனிதா தனி ஒருவருக்காக மட்டும் சட்டப் போராட்டத்தை நடத்தவில்லை. ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்குமான போராட்டத்தை நடத்தினார். நீட் தேர்வுக்கான போராட்டம் நீண்ட நாட்களாகவே நடந்து வந்தது.

ஆனால் தனி ஒருவராக அனிதா டெல்லி வரை சென்று போராடி நீதி கிடைக்காததால் ஏற்பட்ட விளைவுகளை தமிழ்நாட்டு மக்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் நீட்சியாகவே அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரே இந்தியா, ஒற்றைக் கலாச்சாரம், ஒரே உணவு என்ற அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எந்த விதத்திலும் தமிழகம் அதற்கு இணங்காது என்பதை இந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களால் நிரூபித்துள்ளது.  அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக விலக்கப்பட்டு  சமூகநீதி காக்கப்பட வேண்டும்” என்றார்.