இணையதளத்தில் வரன் தேடுகிறீர்களா? - ஓர் எச்சரிக்கை



வாசகர் பகுதி

பெண் நண்பர் ஒருவரின் பெற்றோர் பிரபல மேட்ரிமோனியல் தளங்களில் பதிவு செய்து விட்டு தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். அப்பெண்ணின் தந்தை அவ்வப்பொழுது ‘லாகின்’ செய்து தனக்கு வந்துள்ள வரன் விண்ணப்பங்களை ஆய்வு செய்த வண்ணம் இருந்திருக்கிறார்.

அதில் இருந்த ஒரு விண்ணப்பம்  பிடித்துப் போக, பெண், பெற்றவர்களின் அனுமதியுடன் அதற்கு பதில் அனுப்ப, பதிலுக்கு மிகப் பணிவாக அசர வைக்கும் ஆங்கிலத்தில் பதில் வந்தது. அந்த வரனுடன் இணையத்தில் அந்தப் பெண் உரையாட ஆரம்பித்து விட்டாள்.

எதிர்புறத்தில் அந்த வரன் தன்னை லண்டனில் மிகப் பெரிய வேலையில் இருப்பவன் என்றும், பெண் நண்பரை தனக்கும் தன் குடும்பத்திற்கும் மிகவும் பிடித்திருக்கிறது எனவும், ஜாதகமே பொருந்தி இருக்கிறது என அடுக்கடுக்காய் அன்புக் கணைகளை தொடுக்க  உருகிப் போன பெண் உரையாடலை ‘வாட்ஸ் அப்’பில் வரவேற்று தொலைபேசி  அழைப்புகளில் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு சில நாட்களிலேயே இந்த உரையாடலை  தொலைபேசி அழைப்புகளில் தொடர்ந்திருக்கிறார். இந்த உரையாடல் காதலாக மலர, இவளை நேரில் பார்ப்பதற்கு இந்தியா வந்து இவளின் பெற்றோர்களைப் பார்த்து பேசி முடிக்க இவனது பெற்றோர்களுடன் வருவதாக  கூறியவன், இவளுக்காக ஒரு விலை உயர்ந்த நெக்லஸை பரிசாகக் கொண்டு வருவதாகவும், வாட்ஸ் அப்பில் அந்த நெக்லஸின் படத்தை அனுப்பினான். பெண்ணின் பெற்றோர் ‘லண்டன் மாப்பிள்ளை’ ஆயிற்றே என்று அவசர அவசரமாக வீட்டை சரிப்படுத்தி ஆவலுடன் மாப்பிள்ளையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

‘நெக்லஸ்’ போட்டு அவர்களை நெக்குருக வைத்து விட்ட மாப்பிள்ளை வரப்போகும் அந்த தினமும் வந்தது. இவர்களும் வரவேற்கத் தயாராகக் காத்திருந்தனர். சொன்ன நேரத்திற்கு ஆளும் வரவில்லை. போனும் வரவில்லை. பலமுறை கால் செய்தும் எடுக்காததால் பெண் வீட்டார் பதறி விட்டார்கள்.

பல முயற்சிகளுக்குப் பின் போனை எடுத்த லண்டன் மாப்பிள்ளை சற்றே கலவர குரலில் ‘‘ஹனி! சம் பிராப்ளம் ஹியர், நான் திருப்பி ‘கால்’ பண்ணுகிறேன்’’ என போனை வைக்க முயல, பதறிப் போன பெண், ‘‘என்னடா ஆச்சு சொல்லு, ஐ வில் ஹெல்ப் யூ’’ என வெள்ளந்தியாய் கேட்க, இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்த லண்டன் லார்ட், தன் மோசடி மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினான்.

மும்பை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் செக்கிங்கில இருக்கிறேன் என்றும், விலையுயர்ந்த நெக்லஸ் மற்றும் அதிக அளவில் பவுண்டு பணம் கொண்டு வந்த காரணத்தால் பிடித்து வைத்துக் கொண்டு, லஞ்சம் தந்தால்தான் அதை எடுத்துப் போக அனுமதிப்போம் என கஸ்டம்ஸ் அதிகாரிகள் முரண்டு பிடிப்பதாகவும் தெரிவித்தான், அவர்களுக்குக் கொடுப்பதற்கு தன்னிடம் இந்திய ரூபாய் எதுவும் இல்லை.

அக்கவுன்டில் செலுத்துகிறேன்  என்றாலும், வெளிநாட்டு வங்கியில இருந்து தங்களுக்கு பணம் வந்தால் எங்களுக்கு பிரச்சனை என அவர்கள் மறுத்து விட்டதாகவும், செய்வதறியாமல் நான் இங்கு நிற்கிறேன்’’ என கதற, அதிர்ந்து போன பெற்றோரும் பெண்ணும் ‘‘இந்த இந்தியாவே  இப்படி தாங்க, லன்ச் சாப்பிடறதே லஞ்சத்தில தான்.

நீங்க கவலைப்படாதீங்க மாப்ள, போனை அந்த ஆபீஸர் கிட்ட கொடுங்க, நாங்க பேசிக்கிறோம்’’ என சொல்ல, போனை வாங்கி சலித்த குரலில் பேசிய ஆபீசர், ‘‘சார்! கஸ்டம்ஸ் ‘ஆக்ட்’ படி ஆண் 50,000 ரூபாய் பெறுமானம் உள்ள நகையும், பொண்ணுங்கன்னா 1,00,000 ரூபாய் பெறுமானமுள்ள நகை தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரலாம்.

உங்க மாப்பிள்ளை வச்சிருக்கிற நெக்லஸ் மட்டும் ஆறு லட்சம் ரூபாய் பெறும். அது போக பவுண்ட் பணம் மட்டும் நம்ம ரூபா மதிப்பிலே முப்பது லட்சம் இருக்கும் சார். லா  பிரகாரம் இதெல்லாம் சரி வராது. பெனால்டி போட்டா எகிறிடும். அதான் ஒரு ஐந்து  லட்சம் பார்த்து செய்யச் சொல்லுங்க, விட்டுடறோம். என்ன சொல்றீங்க!’’ என போனில் பேரத்தை ஆரம்பிக்க, இடைமறித்து லண்டன் மாப்பிள்ளை போனை வாங்கி, ‘‘அங்கிள்! இவங்க பொய் சொல்றாங்க.

நான் இந்தியன் ‘கஸ்டம்ஸ் ஆக்ட்’ படிச்சு  விட்டுதான் பணம் கொண்டு வந்திருக்கிறேன். வெளிநாட்டு பணம் கொண்டு வர ‘லிமிட்’ கிடையாது. கஸ்டம்ஸ்ல ஜஸ்ட் டிக்ளேர்தான் பண்ணனும். இவங்க வேணும்னே பண்றாங்க. பணம் கொடுக்காதீங்க அங்கிள், இவங்க ஏமாத்துறாங்க’’ என பொய்க் கண்ணீர் வடிக்க... ‘‘மாப்பிள்ளை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க போனை பெனால்டி கட்டி எடுத்திட்டு போகச் சொல்லுங்க’’ எனச் சொல்ல, பெண்ணின் தந்தை, ‘‘சார், மொத மொதல்ல என் பொண்ணை பார்க்க வர்றார்.

அபசகுனமா  நெனைச்சுக்கப் போறார், ப்ளீஸ். உங்க அக்கவுன்ட் நம்பரை கொடுங்க, அரை மணி நேரத்தில் பணம் அனுப்புகிறேன்’’ என்று கெஞ்ச, ‘‘சரி, பெரியவரே! கல்யாண மேட்டர் என்பதாலே ஒத்துக்கிறோம். பணத்தைப் பிரிச்சு போடுங்க’’ என சொல்லி மூன்று, நான்கு அக்கவுன்ட் நம்பரை கொடுக்க, அதை குறித்துக்கொண்டு பெண்ணின் தந்தை வங்கியை நோக்கி ஓடத் துவங்கினார்.

இவரை வழியில் ஒரு நண்பர் சந்திக்க, இவர் நடந்ததையெல்லாம் கூற, அவர் ‘‘இது பெரிய மோசடி. இதைப் பற்றி இணைய தளத்தில் வந்துள்ளதை நீங்கள் படிக்கவில்லை போலும்’’ என்று சொல்லி விட்டு, ‘‘உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் சொன்ன  மாதிரி செய்யுங்கள்’’ என்று கூறினார்.

பெண்ணின் தந்தை ‘வாட்ஸ் அப்’பில் லண்டன் மாப்பிள்ளையை அழைத்து ‘‘வங்கிக்காரர்கள் எதற்காக இவ்வளவு தொகை  போடுகிறீர்கள் என்று கேட்க, நான் நடந்த விஷயத்தை சொல்ல, அவர்கள் உண்மைதானா  நான் சொல்வது என்பதை ‘செக்’ பண்ண, நீங்கள் லண்டனிலிருந்து வந்திருக்கிற  விமான டிக்கெட்டை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்ப சொல்லி அதை காட்ட சொல்லியிருக்கிறார்கள் என்னிடம்.

தயவு செய்து உடனே அதை அனுப்புங்கள்’’ என்றார். ‘‘என்னை நம்பவில்லை அல்லவா நீங்கள்?’’ என்று சொல்லி மாப்பிள்ளையும், அந்த அதிகாரியும் போனை ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்து விட்டனர். பெண்களே... இந்த மோசடி கும்பல் மற்றவர்களை ஏமாற்றி கணிசமான தொகையை அபகரித்துக் கொண்டு, மறைந்து விடுகின்றனர். ஆகவே அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

டிட் பிட்ஸ்

* முதன் முதலில் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா கண்டத்தில்.
* அகில இந்திய வானொலி செய்தி ஒலிபரப்பு முதன் முதலில் 1937ம் ஆண்டு ஆகஸ்டில் டில்லியிலிருந்து தொடங்கியது.
* முதன் முதலில் சாலைகள் அமைத்தவர்கள் ரோமானியர்கள்.
* உலகில் முதல் விமானப் பயணம் 17.12.1903ல் வடகரோலினாவில் கிட்டிஹாக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
* உலகின் முதல் அஞ்சல் அட்டை 1869ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
* உலகையே வெளிச்சமாக்கிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் - படகு கட்டுபவரின் மகன்.
* உலகப்புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் ஆரம்பத்தில் குதிரை லாயத்தில் வேலை செய்தவர்.
* ஆபிரகாம் லிங்கன் விறகு வெட்டியின் மகன்.
* ரேடியம் கண்டுபிடித்த மேடம் கியூரி வறுமை காரணமாக ஒரு வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்தவர்.
* இடிதாங்கியை கண்டுபிடித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு மெழுகுவர்த்தி வியாபாரியின் மகன்.
* ஃபோர்டு காரை உருவாக்கிய ஃபோர்டு ஹென்றி பண்ணையில் வேலை செய்தவரின் மகன்.
* அடிப்படை எப்படியிருந்தாலும் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உயரத்தைத் தொட்டவர்களை போல் நாமும் உழைப்போம்! உயர்வோம்!

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

திராட்சை பிடிக்காதா? இதைப் படிங்க...

* திராட்ைசயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.
* மாதவிடாய் நின்றதும் ஏற்படும் மாறுதல்களைக் குணப்படுத்துகிறது.
* ஞாபக சக்தியைப் பெருக்குகிறது.
* நம் உடலில் நோய் உண்டாக்கும் உடல் மூலக்கூறுகளை அழிக்கிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
* ரத்த அழுத்தம், ரத்த உறைதல் போன்றவற்றை தடுக்கிறது.
* இதயத்திற்கு பாதுகாப்பு தருகிறது.
* முதுமையை விரட்டுகிறது. கண் நோய், நரம்பு மண்டல பாதிப்பை பெருமளவு கட்டுப்படுத்துகிறது.

- கே.வி.சீனிவாசன், திருச்சி.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)