பொய்யுரைக்கும் தமிழக அரசு
- ஜெ.சதீஷ்
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு வரவிருக்கும் இந்த சமயத்தில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த மாதம் 18ம்தேதி தொடங்கி நாடு முழுவதும் சாலை மறியல், ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை அரசு ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு எதிராக மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மு. அன்பரசிடம் பேசினேன். “நாங்கள் புதிய கோரிக்கைகள் எதுவும் முன் வைக்கவில்லை. 2016 பிப்ரவரி மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் கடைசிநாளில் பணியாளர் சீர்திருத்தத்தினுடைய கோரிக்கையின் பேரில் 11 அறிவிப்புகள் 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
அதில் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்படும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு மதிப்பு ஊதியத்தில் வேலை செய்யக்கூடிய சுமார் 4 லட்சத்துக்கும் மேலான ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் தமிழ்நாட்டில் வழங்கப்படும் என்று 1.1.2011 அன்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை என்பவர்களுக்கு பழைய ஓய்வு ஊதியத்திற்காக பணி வகைகளை கண்டுபிடிப்பதற்கான வல்லுநர் குழு போடப்பட்டு அந்த வல்லுநர் குழு 20 மாதங்கள் ஆகியும் எங்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறது.
எங்களுக்கான ஊதிய மாற்றத்தை காலம் கடந்து கொடுத்தாலும் அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மாதா மாதம் 20 விழுக்காடு நிவாரணத்தை கொடுங்கள் என்று கேட்டோம். எதுவும் சாத்தியமே இல்லை என்று கூறுகிறார்கள். பல பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டோம். அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் கமிட்டி ரிப்போர்ட் வந்தபிறகு சொல்கிறோம் என்றனர்.
அதே நேரத்தில் எந்த கமிட்டியையும் போடாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் காவல் துறையில் உயர்பதவியில் இருக்கக்கூடிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் ஊதிய மாற்றம் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ, எம்.பிக்கள் சம்பள உயர்வையும், ஓய்வு ஊதியத்தையும் உயர்த்தி பெற்றுக்கொண்டனர்.
ஆனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து வருகின்றனர். சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என்கிறார் மு.அன்பரசு.
|