ஐயமிட்டு உண்
- ஜெ.சதீஷ்
உணவை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் கொடுக்கும் நோக்கத்தில், சென்னை பெசன்ட் நகரில் ‘ஐயமிட்டு உண்’ என்கிற உணவுப் பெட்டகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஐசா பாத்திமா ஒரு லட்ச ரூபாய் செலவில் அமைத்திருக்கிறார்.
ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது வீட்டில் மீதமான கெட்டுப் போகாத உணவுகளை இந்த உணவுப் பெட்டகத்தில் வைத்துச் செல்லலாம். குளிர்சாதன வசதி கொண்ட இந்த உணவுப் பெட்டகத்தில் உணவு பாதுகாக்கப்படுகிறது.
5 சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டியில் தங்களுக்கு தேவைப்படாத ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், பாத்திரங்கள், இதர பயனுள்ள பொருட்களையும் வைத்துச்செல்லலாம். கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்து செயல்பட்டுவரும் இந்த உணவுப் பெட்டகத்தில் தினந்தோறும் ஏராள மானோர் தங்களது தேவை போக மீதமான உணவுப்பொருட்களை வைத்துச் செல்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் உணவுப் பொருட்களை தேவைப் படுபவர்கள் எடுத்துச்சென்று பசியாறுகின்றனர்.
இந்த உணவுப் பெட்டகம் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை செயல்படுகிறது. இங்கு வைக்கப்படும் உணவு மற்றும் ஆடை போன்ற பொருட்கள் சரியானவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாதச் சம்பள அடிப்படையில் காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர இங்கு ஒரு பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
உணவுப் பொருட்களை கொண்டுவந்து வைப்ப வர்கள் அந்த பதிவேட்டில் தான் கொண்டு வந்த அந்த உணவு எப்போது தயாரிக்கப் பட்டது, எத்தனை நாட்களுக்குள் அவற்றை உண்ணலாம் என்பது பற்றி பதிவு செய்கின்றனர். இங்குள்ள காவலாளி அந்த உணவை பரிசோதித்து அது கெட்டுப்போகவில்லை என்று உறுதி செய்த பின்னரே பெட்டகத்துக்குள் வைக்க அனுமதிக்கிறார். பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்ட பொருட்கள் என்றால் காலாவதி தேதியை பார்த்த பிறகுதான் பெட்டகத்தில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.
உணவுப் பெட்டகம் அமைக்கப்பட்டது குறித்து டாக்டர் ஐசா பாத்திமா ஜாஸ்மின் கூறியதாவது... “இந்தியாவில் 40 சதவீத உணவுப்பொருட்கள் பயன்படுத்தப்படாமலே வீணடிக்கப்படுவதாகவும், இதன்மூலம் மட்டும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும் அறிந்துகொண்டேன். ஒருவரது வீட்டில் மீதமாகும் உணவுப்பொருளை ஏழைகளை தேடிச் சென்று கொடுப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது.
ஒரு வீட்டில் ஒரு பாக்கெட் உணவு வீணாகிறதென்றால் 200 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 200 பாக்கெட் உணவு வீணாகும். இப்படி வீணாகும் உணவுப்பொருட்களால் மீத்தேன் போன்ற எரிவாயு உருவாகி சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்க இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்.
உணவுப் பெட்டகத்தை அமைக்க ரூ.1 லட்சம் செலவு செய்துள்ளேன். யாரையும் எதிர்பார்க்காமல் எனது சொந்த செலவிலேயே இதை ஏற்படுத்தி உள்ளேன். இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோன்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்தால் தமிழகம் முழுவதும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்”. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
|