குரல்கள்



- கி.ச.திலீபன்

கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் பாஜக அரசு ஆட்சியமைத்த பின் நமக்குள் எழும் பல கேள்விகளில் முதன்மையானது இது ஜனநாயக நாடுதானா என்கிற கேள்விதான். ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் நிகழ்த்தப்பட்ட ‘பண மதிப்பிழப்பு’ இதற்கு உதாரணம்.

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமை இங்கே இருக்கிறதா? ‘இங்கே யாருக்கும் சகிப்புத்தன்மை இல்லை’ என்று நடிகர் அமீர்கான் சொன்னதற்காக அவர் பல விதங்களில் தாக்குதல்களுக்கு ஆளாகினார்.

இந்து மத அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதியும், செயலாற்றியும் வந்த கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இங்கே சகிப்புத்தன்மை அறவே இல்லை என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.

இந்துத்துவத்துக்கு எதிராக செயலாற்றி வந்தவர்கள் குறி வைத்துக் கொல்லப்படுகின்றனர். கொலை செய்தவர்கள் மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனும்போது இவை அரசால் நிகழ்த்தப்படும் கொலைகள் என்பது புரிய வரும். ஆகவே இந்த கேள்வி மீண்டும் மீண்டும் வலுப்பெறுகிறது. உண்மையில் இது ஜனநாயக நாடுதானா?

மு.வி.நந்தினி, ஊடகவியலாளர்

அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைத்தெறியும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை, மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டது என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள்.  ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.

கடந்த நான்காண்டுகளில் நடத்தப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து இருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம்.

ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படை வாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.

இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை.

அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான்.

இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என  அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.

பொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி? சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா? சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும்.

தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள்! அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். 

அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கினால், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலி கொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது. வெறித்தனம் மட்டுமே இருக்கும்.

அபிநயா, மனிதம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி

வெகுஜன பத்திரிகைகள் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில்தான் தோன்றின எனலாம். அப்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான போராளிகள் பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் சுதந்திரப் போருக்கான விதைகளைத் தூவி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பத்திரிகைகள் மிக வலிமையான ஊடகங்களாய் சுதந்திரப் போராட்டத்தை கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தமையால் அவை ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாயிற்று.

இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோதே  பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் எதிர்காலத்தில் நாம் பல்வேறு கருத்து முரண்பாடுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரித்தார். இதை மனதிற்கொண்டே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்கள் வடிவமைக்கப்பட்டன. பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்களாக மதிக்கப்பட வேண்டியவை. எதிர்ப்புக்குரல் என்பது பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கான அடிப்படை அம்சமாக அரசியல் சட்டம் அங்கீகரித்தது.

ஆனால் சமீப காலங்களில் பத்திரி கையாளரின் எதிர்ப்புக்குரல்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.  அதிகாரவர்க்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிய பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல் ஆகும். இவ்வாறு பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது ஜனநாயகத்தின் தோல்வியையே குறிப்பதாகும். வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனித இனத்தின் வளர்ச்சி என்பது எதிர்ப்பு மனப்பான்மை சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

விஜயலட்சுமி, சமூக ஆர்வலர்

கருத்துரிமைக்கு எதிராக இப்படிப்பட்ட கொலைகள் நிகழ்த்தப்பட்ட பிறகு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பிதம்தான். கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் இந்து அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்கள். இந்துத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்த பாஜக ஆட்சியில் இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. இந்த ஆட்சிக்காக மக்கள் கொடுத்த விலை ரொம்பவும் அதிகம்.

பண மதிப்பிழப்பு தொடங்கி இது போன்ற கொலைகள் வரை நாம் எடுத்துக் கொண்டால் சர்வாதிகாரத்தன்மை நிறைந்த ஆட்சியாகவே இந்த ஆட்சி இருக்கிறது. பொது மக்கள் குறித்த அக்கறையோ, அவர்களின் கேள்வியை எதிர்கொள்ள வேண்டி வருமே என்கிற பயமோ இல்லாமல் நடத்தப்படும் ஆட்சி எப்படி ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியும்?

கீர்த்தனா, ஆய்வு மாணவி

ஜனநாயகத் தன்மையற்ற நாடாக இந்தியா மாறி விட்டது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர் அமீர்கான் ஓர் இஸ்லாமியர். அவர் தன்னளவில் எழுந்த கருத்தை வெளிப்படுத்தினார். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்றுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் அவரது கருத்துக்காக அவர் பல விதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது.

அவர் ஓர் இஸ்லாமியர் என்பதே இதற்கு முதன்மைக் காரணம். பல்வேறு மொழி, மதம், இனங்களின் கூட்டி ணைவுதான் நமது இந்தியா. அது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இந்து மத அடிப்படைவாதிகள் இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றப் பார்க்கின்றன.

பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அப்படியாகத்தான் தோன்றுகிறது. இது போன்ற கொலைகள் உணர்த்துவது என்னவென்றால் தவறுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்களுக்கு மரணம்தான் முடிவு என்பதைத்தான், இந்து மதத்தை போர்வையாகப் போர்த்திக்கொண்டு இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

மத வெறியை பரப்புவதன் மூலம் பாமர மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை உருவாக்குகிறார்கள். இவர்களின் அரசியலை வெட்ட வெளிச்சமாக்குகிறவர்களை கொன்றொழிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் மரணம் என்பது நம் ஜனநாயகத்தின் மரணமும் கூட.

கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது என பொதுவாகச் சொல்வோம். ஆனால் பேனா முனையை விட துப்பாக்கி முனை கூர்மையானது என்று அது திருத்தி எழுதப்பட வேண்டிய காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதி, மத, இன அடையாளங்களை கடந்து மத அடிப்படைவாதத்துக்கு எதிராக நாம் ஒன்று சேர வேண்டும்.