எங்கள் களம் மல்யுத்தம்



- ஜெ.சதீஷ்

உலக அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆண்களின் பங்களிப்பே அதிகம் இருந்து வந்தது. குறிப்பாக குத்துச்சண்டை, மல்யுத்த போட்டிகளில் பெண்களின் பங்களிப்பை பார்ப்பது அரிது. தற்போது பெண்கள் இவ்விளையாட்டுகளிலும் கோலோச்சத் துவங்கியுள்ளனர். உலக அளவிலான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே போன்று மற்றொரு வீரர் நீலம் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு என்று ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வீட்டில் அடைத்து வைத்திருந்தது இந்த சமூகம். பெண்கள் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தவறான கருத்தை உடைத்தெறியும் விதமாக, மல்யுத்த விளையாட்டிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை ‘டங்கல்’ திரைப்படம் உலகிற்கு எடுத்துக் காட்டியது.

இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளை நினைவூட்டுகிறது சமீபத்தில் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டி. 16 வயதான மல்யுத்த வீராங்கனைகள் சோனம் மாலிக் மற்றும் நீலம் ஆகிய இருவரும் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தட்டிச்சென்றனர். உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனம் மாலிக் மற்றும் நீலம் பங்கேற்றனர்.

நான்காவது நாள் நடைபெற்ற சாம்பியன் ஷிப் போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் சோனம் மாலிக் போட்டியிட்டார். ஜப்பான் வீராங்கனை செனா நகாமோட்டோ உடன் சோனம் நடத்திய பலப்பரீட்சையின் இறுதியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி, சோனம் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றினார்.