சமையல் டிபஸ்



மாதம் இருமுறை அகத்திக்கீரை சமைத்து சாப்பிட்டு வந்தால் குடலுக்கும், உடலுக்கும் நல்லது.
- கே. ராணி, உள்ளகரம்.

சேனைக்கிழங்கைத் துருவி, நறுக்கிய வெங்காயம், உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து வதக்கி, வடைகளாக்கி பொரித்தெடுத்தால் சூப்பராக இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி-620 015.

குலோப்ஜாமூன் தீர்ந்து போன பிறகு இருக்கும் ஜீராவில் ரொட்டித் துண்டுகளை நெய்யில் வறுத்துப் போட்டு புரட்டிச் சாப்பிடலாம். ரோஸ்ட் செய்த பிரெட் மீது ஊற்றியும் சாப்பிடலாம். மிகவும் டேஸ்ட்டாக இருக்கும்.
- எம்.ஏ. நிவேதா, திருச்சி-620 015.

மாவில் பூச்சிகள், வண்டுகள் வராமல் இருக்க ஒரு தேக்கரண்டி உப்பை சிறிய துணியில் முடிந்து மாவில் போட்டு வையுங்கள்.
- ஹெச். ராஜேஸ்வரி, சென்னை-600 122.

வெயில் காலத்தில் எலுமிச்சைச்சாறு, பனைவெல்லம், இஞ்சிச்சாறு இவற்றைத் தண்ணீருடன் சேர்த்து பருகி வர அதிக தாகம் அடங்கும்.
- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி-629 703.

எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் 2 மேஜைக்கரண்டி கெட்டித்தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா சூப்பர் தான்.
வத்தக்குழம்பு செய்யும்போது குழம்பை இறக்கிய பின் 1 டீஸ்பூன் வறுத்த எள் பவுடர் போட்டால் நல்லெண்ணெய் மணத்துடன் வாசனையாக இருக்கும்.
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி-627 006.

கற்கண்டை பொடி செய்து வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்பருமன் பெறும்.
- அ. ரூபினா, நெய்வேலி-607 803.

நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வு நிற்கும்.
- மு. சுகாரா, தொண்டி.

ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க சிறு கிண்ணத்தில் கரித்தூளைப் போட்டு ஃப்ரிட்ஜின் உள்ளே ஒரு மூலையில் வைத்து விடலாம்.
- நா. பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை-627 002.

வெந்தயக் குழம்பு, பாகற்காய் பிட்லே மணமாகவும், சுவையாகவும் இருக்க மூன்று உளுந்து அப்பளங்களை பொரித்து நொறுக்கிப் போட்டு இறக்க வேண்டும்.
- ஆர். மீனாட்சி, திருநெல்வேலி-627 006.

கட்லெட் தயாரிக்கப் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் சோள மாவு சேர்த்தால் அதிக சுவையுடன் இருக்கும்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.