நீராலானது இவ்வுலகு



மழை!! இந்த சொல்லே மந்திரமிக்கது. நம்மை உற்சாகப்படுத்துவது. இன்றைய அவசரகதி உலகம் சிலரை, மழையை சபிக்க செய்துள்ளது என்பது வேறு கதை. வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர்க் காலம், குளிர்காலம் என காலங்கள் பல்வேறாக உலகெங்கும் உள்ளன. ஆனால் பூமியின் மத்திய பகுதியில் உள்ள நமக்கு மழைக்காலம் என்னும் இயற்கையின் அற்புத கொடை காலம் கூடுதலாக உள்ளது. நம் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று மழைக்காலம். வான் மழையை போற்றிய நம் மரபிற்கும், “மழையே திரும்பி போ” என்று கூறிய மேற்கத்திய மரபிற்குமான  இடைவெளி கவனிக்க வேண்டிய ஒன்று.

வான் மழையை சேமித்து வேளாண்மை செய்த உலகின் மூத்த குடிகளின் வழிவந்தவர்கள் நாம். கோடைக் காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தை நமக்கு மழைக் காலமாக அமைத்துள்ளது இயற்கை. இந்தப் பருவ காலத்தில் மிகப் பெரிய இயற்கையின் இயற்பியல் அற்புதங்கள் நிகழ்கின்றன. அந்த அற்புதங்களை நிகழ்த்துவது மேகங்கள்!!

மேகங்களின் கதை
உயிர் சூழலை, உயிர் பன்மையை (Bio diversity) நிலைத்திருக்க செய்வதில் மழையின் பங்கு மிகப்பெரியது. இந்த பூமி தன்னைத் தானே ஒழுங்கமைத்துக் கொள்கிறது. உலகே ஓர் ஒற்றை உயிர் போல செயல்படுகிறது என்று அறிவியலாளர் ஜேம்ஸ் லவ்வாக் தன்னுடைய ‘கையா’ கோட்பாட்டில் கூறுகிறார். இதற்கு மிகச் சரியான உதாரணம் மழை!! மழை என்னும் இயற்பியலும் வேதியியலும் ஒன்றிணைந்த நிகழ்வு நிகழ இயற்கை பல முன் தயாரிப்புகளை செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படியான நிகழ்வுகளின் முதல் நிகழ்வு-மேகங்கள்!! இயற்கையின் அற்புத ஓவியங்கள் மேகங்கள். நீர் என்னும் தூரிகையில் சூரியன் வடித்த ஓவியங்கள் மேகங்கள். சூரியனின் கடும் பார்வையால் வெப்பமடையும் நீர், நீராவியாகி காற்றிலே கலந்துவிடுகிறது. இவைதான் மேகமாக உருவெடுக்கின்றன. இப்படி உருவாகும் நீராவி சுமார் 1000 மீட்டர் உயரம் வரை நம் தலைமேல் காற்றோடு கலந்திருக்கிறது. மேலே செல்லும் நீராவி, வெப்பக் காற்றோடு காதல் கொண்டு குமிழாகிறது.

நீல வானில் பறக்கும் இவர்கள், உருவம் பெருக்கெடுத்து மேகமாக மாறுகிறார்கள். இப்படி உருவாகும் மேகங்கள் அதன் உருவ அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சுருள் மேகம்(Cirrus), சுருள் குவியல் மேகங்கள்(Cirrocumulus), சுருள் அடுக்கு மேகங்கள்(Cirrostratus), இடைக் குவியல் மேகங்கள்(Altocumulus), இடை அடுக்கு மேகங்கள்(Altostratus), தாழ் குவியல் மேகங்கள்(Stratocumulus), தாழ் அடுக்கு மேகங்கள்(Stratus), கார் அடுக்கு முகில்கள்(Nimbostratus), குவியல் மேகங்கள்(Cumulus) மற்றும் கார் முகில்கள்(Cumulonimbus) என மேகங்கள் பல வகைப்படும்.

நம் தமிழ் இலக்கியங்களில் மேகங்கள் பற்றிய இத்தகைய வகைப்பாடுகள் இருப்பதை எழுத்தாளர் பாமயன் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லா வகை மேகங்களும் நமக்கு மழை தருபவை அல்ல. குறிப்பாக குவியல் மேகங்கள், தாழ் குவியல் மேகங்கள், இடை அடுக்கு மேகங்கள் மற்றும் கார் முகில்கள்தான் மழை தருபவை. அதிலும் கார்முகில் வகை இடி மின்னலுடன் மழை தருபவை. இத்தகைய மேகங்களை போற்றும் விதமாகவே நம் முன்னோர்கள் முகில், கார்முகில் போன்ற பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்தியாவில் கோடைக் காலத்தில் மழை தருபவை பெரும்பாலும் குவியல் மேகங்கள் தான். வானத்தை முழுவதுமாக மறைத்து கருமையான தோற்றத்தை உண்டாக்கி மழை தருபவை தாழ் குவியல் மேகங்கள். புயல் வருவதை நமக்கு முன்கூட்டியே சொல்லக் கூடியவை இடைக் குவியல் மேகங்கள்.  இந்த மேகங்கள் ஆயிரம் மைல்கள் பறந்து வந்து நமக்கு மழை தருகின்றன என்றால் நம்புவீர்களா?

பருவ மழை
மழை இரண்டு விதங்களில் நமக்குக் கிடைக்கிறது. தென்மேற்காக தவழ்ந்து வரும் காற்றின் காரணமாக பெய்யும் “தென்மேற்குப் பருவ மழை”. வடகிழக்காக ஓடி வரும் காற்றின் காரணமாகப் பெய்யும் “வடகிழக்குப் பருவமழை”. சூரியனை சுற்றி வரும் பூமி மையம் கொள்ளும் இடம், அதன் காரணமாக நிலம் மற்றும் கடல் பரப்பு அடையும்  வெப்பம், காற்றின் திசை - இப்படி பருவமழைக்கான காரணங்கள் ஏராளம். ஜூன் 1ம் தேதி கேரளத்தில் பயணத்தை துவங்கும் தென்மேற்குப் பருவமழை, கர்நாடகம் வழியாக  வட இந்தியாவெங்கும் மழை பொழியச் செய்கிறது.

மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் உலகின் அதிக மழை அளவு பொழிவதும் இந்தக் காலகட்டத்தில்தான். அக்டோபர் முதல் டிசம்பர் வரை நமக்கு வடகிழக்குப் பருவமழை கிடைக்கிறது.  தமிழகம், ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்கள் இதன் காரணமாக பயன் அடைகின்றன.

தார் பாலைவனம், அரபிக் கடல்,
வங்கக் கடல், மேற்குத்தொடர்ச்சி மலை, இமய மலை என பல இயற்கை அமைப்புகளால்தான் பருவமழை நமக்குக் கிடைக்கிறது. இது பல ஆயிரம் வருடங்களாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. தற்போது இதில் மிகப் பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தொடர்ந்து பருவமழை நமக்கு பொய்த்துப் போவதின் காரணம்தான் என்ன?

சூழல் சீர்கேட்டில் பருவமழை
பருவமழை தவறிப்போவதில் உலகெங்கும் நிகழும் காலநிலை மாற்றம் (Climate Change) ஒரு முக்கியக் காரணம். அதேபோல காற்றில் ஏற்படும் மாசு, காடுகள் அழிப்பு போன்ற இயற்கை சீரழிவும் பருவமழை குறைவதிற்கு காரணமாக உள்ளன. அதிலும் குறிப்பாக மனித சமூகத்தினால் காற்றில் அதிகரித்து வரும் அரோசல் (Aerosal) காரணமாக மழையின் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் காரணமாகவும் மேகங்களின் தன்மை மாறி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிக்கக் கூடும் என்னும் கருத்தும் உள்ளது. இவற்றை எதிர்கொள்ள வேண்டுமானால், சூழலை அதன் இயற்கைத் தன்மையோடு பாதுகாப்பது அவசியம். ஆனால் இதனை விடுத்து மீண்டும் அறிவியல் தொழில்நுட்பத் தீர்வுகளே ஆளும் அரசுகளால் முன்வைக்கப்படுகின்றன. காலநிலையை கணித்து இயற்கையோடு இயைந்த பாரம்பரிய அறிவோடு கூடிய மரபுசார் தொழில்நுட்பங்கள் பின்தள்ளப்படுகின்றன.

செயற்கை மழை 
வெள்ளி அயோடைடு என்னும் ரசாயனத்தை வானத்தில் தூவுவது மூலம் செயற்கையாக மழையை உருவாக்க முடியும் என்பதை 1970ம் ஆண்டு அமெரிக்கா கண்டறிந்தது. உண்மையில் இந்தத் தொழில்நுட்பம் வியட்நாம் போர் பயன்பாட்டிற்காக அமெரிக்காவால் கண்டறியப்பட்டது. பின்பு இந்தத் தொழில்நுட்பம் வறட்சியான இடங்களில் மழையை உண்டாக்குவதிற்காக பண்படுத்தப்பட்டது. பல தொழில்நுட்பங்களைப் போலவே இந்தத் தொழில்நுட்பத்தின் பக்கவிளைவும் காலதாமதமாகவே கண்டறிப்பட்டது.

இந்தத் தொழில்நுட்பத்தின் காரணமாக கனடா நாட்டின் கியூபெக் மாநிலத்தில் அபிடிபி எனும் பகுதியில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. மிகப் பெரிய பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். வானத்தை ராணுவமயமாக்கும் தொழில்நுட்பங்களும் சில நாடுகளில் ஆராயப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் ஹார்ப் (High Frequency Active Auroral Research Program - HAARP) திட்டம் வான்நிலையை எப்படி ஆயுதமாக பயன்படுத்தலாம் என்னும் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.

இதன் மூலம் செயற்கையான இயற்கைப் பேரிடர்களை உருவாக்கலாம். அதேபோல புவிசார் பொறியியல்(Geo Engineering) என்னும் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளும் வலுப்பெற்று வருகின்றன. இந்தத் தொழில்நுட்பம் சார்ந்து பலவேறு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இவை எல்லாமே  தொழில்நுட்பங்களை கொண்டு மழை உள்ளிட்ட உலக தட்பவெப்ப காலநிலைச் சூழலை மாற்ற முனைகின்றன.  இயற்கையோடு விளையாடும் மிகப் பெரிய ஆபத்து இத்தகைய திட்டங்கள். 

இதுபோன்ற ஆய்வுகளை முறைப்படுத்த பல அறிவியலாளர்கள் உலகெங்கும் குரல்கொடுத்து வருகின்றனர். அமெரிக்க ஐரோப்பிய நாடாளுமன்ற அவைகளில் இத்தகைய ஆய்வுகளை முறைப்படுத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இத்தகைய தொழில்நுட்பங்கள் மேலும் எதிர்மறையாக்கக் கூடும் என்னும் அச்சமும் நிலவுகிறது. ஒன்று மட்டும் புரிகிறது. இயற்கை மிக பிரமாண்டமானது.

அதனை நம் சட்டதிட்டத்திற்குள் அடக்கமுடியாது. இயற்கையை புரிந்து அதனோடு பயணிப்பதே நமக்குச் சிறந்தது.  மழையை மழையாக இருக்க விடுவோம். பருவ மழையின்  இயற்கை சூழலைக் காப்பது ஒன்றுதான் நாம் தொடர்ந்து பருவமழை பெற தீர்வாக இருக்க முடியும். மேற்குத் தொடர்ச்சி மலையை காப்பது, கடலை பாதுகாப்பது இவற்றில் முதன்மையானது மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது.

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு தன் பரிந்துரைகளை கொடுத்து பல வருடங்களாகிவிட்டன. இன்றுவரை தமிழக அரசு இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைதான் நமக்கான பருவமழையை பெற்றுத் தருகிறது. இதனை காக்கத் தவறினால் தமிழகம் பாலைநிலமாக மாறும். 
 

(நீரோடு செல்வோம்!)