வாள்சண்டையில் ராணி



-ஷாலினி நியூட்டன்

என்னது வாள்சண்டையா?... இதையெல்லாம் 60-70களில் எம்.ஜி.ஆர் படங்களில் பார்த்ததுடன் சரி என நிச்சயம் நம்மில் பலரும் சொல்வோம். ‘ஃபென்ஸிங்’ எனப்படும் வாள்வீச்சில் ஒரு பெண் ஆர்வம் காட்டி கற்றுக்கொள்வதே ஆச்சர்யம்... இதில் தேசிய அளவில் சாம்பியன், இப்போது சர்வதேசப் போட்டியில் பதக்கம், நுழைவு என்றால் ஆச்சர்யம்தானே? நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்கனி, வாள்வீச்சில் பதக்கங்கள் பெற்றது மட்டுமின்றி இப்போது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கால்பதித்து இந்தியாவின் பெருமையை அமைதியாக தலைநிமிரச் செய்து வருகிறார். 

ஆச்சர்யமாக இருக்கே... வாள்வீச்சில் எப்படி ஆர்வம்? “சின்ன வயசுலயே எனக்கு எதாவது வித்தியாசமான கலைய கத்துக்கணும்னு தோணுச்சு. அப்படி உருவான ஆர்வம்தான் இந்த வாள்வீச்சு. இப்போ தாய்லாந்து நாட்டுல நடந்த சர்வதேசப் போட்டியில பதக்கம் வாங்குற வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்கு. எனக்கு 12 வயசு இருக்கும் போதே இந்தக் கலை மேல ஒரு ஆர்வம் இருந்துச்சு.

அப்பா பேரு தியாகராஜன். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் தையல்தான் தொழில். சொந்தமா ஒரு சின்னக் கடை வெச்சு நடத்திட்டு இருக்கோம். தேசிய அளவுல 3 தங்கப் பதக்கம், ரெண்டு வெள்ளிப் பதக்கம், ஸ்கூல்ல இருந்து கணக்கிட்டா மொத்தமா 50 பதக்கங்கள் இருக்கு. இந்தப் பதக்கம்தான் எனக்கு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில சீட்டு கூட வாங்கிக் கொடுத்தது”.

‘வாள்வீச்சு’ கலையை கேள்விப்பட்டாலே நிறைய பேர் பயப்படுவாங்க. உங்க வீட்ல எப்படி ஏத்துக்கிட்டாங்க? “நான் அந்தப் பொறுப்பை என்னுடைய மாஸ்டர்கிட்ட விட்டுட்டேன். நான் ஒரு வார்த்தை கூட பேசலை. சார் தான் அப்பா, அம்மாவுக்கு புரிய வெச்சாங்க. ஒரு சில சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க ஏன் பொண்ணுக்கு இந்த விளையாட்டுன்னு கேட்டாங்க. ஆனா எங்க அப்பா சரியா என்னை புரிஞ்சிக்கிட்டாரு.

அவங்களே சரி சொன்னதுக்கு அப்புறம் மத்தவங்க பத்தி ஏன் யோசிக்கணும். ஆனால் நான் எப்போ பதக்கங்கள் வாங்க ஆரம்பிச்சேனோ அப்பவே அவங்களுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு”. ‘தாய்லாந்து வெண்கலப் பதக்கம்’ எப்படி சாத்தியம் ஆச்சு? “அந்தப் போட்டிக்காகத்தான் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். தேசிய அளவுல ஜெயிச்சிட்டேன். ஆனால் சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்கிற அளவுக்கு பெருசா எங்ககிட்ட வசதி இல்ல.

மாநில அரசும் தேசிய போட்டிகள்ல கலந்துக்க உதவிகள் செய்தாங்க. சர்வதேசப் போட்டின்னு வரும்போது கிடைக்கல. அப்போதான் கோவை கமிஷனர் விஜய் கார்த்திகேயன் சார் பத்தி தெரிஞ்சு அவரைப் போய் பார்த்தேன். என்னுடைய பதக்கங்கள், சான்றிதழ்கள்னு பார்த்துட்டு எவ்வளவு ஆகும்னு கேட்டாரு. 86,550 ரூபாய் பணம் அப்படியே அவருடைய சம்பளத்துல இருந்து கொடுத்தார். அப்படி தான் தாய்லாந்து பயணமும், பதக்கமும் சாத்தியமாச்சு!”

இந்தப் பயிற்சிக்கு எவ்வளவு செலவாகும்?
“ எல்லா பெற்றோர்கள் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன். முடிஞ்ச வரைக்கும் உங்கள் குழந்தைகள் கத்துக்கணும்னு நினைக்கறத கத்துக்க விடுங்க. அதே சமயம் ஒரு பயிற்சிக்கு எவ்வளவு விலைன்னு விசாரிச்சு குழந்தைகள சேர்த்துவிடுங்க. ஏன்னா பணத்தை பிரதானமா நினைக்கறவங்க மனப்பூர்வமா கத்துக்கொடுக்க மாட்டாங்க. இந்த வாள்வீச்சுக் கத்துக்க மாசத்துக்கு அதிக பட்சம் 2,000 ரூபாய்க்கு மேல ஆகாது. எனக்கு 1,500 கூட ஆகலை. எந்த வயசுக்காரங்களும் கத்துக்கலாம். 10 வயசுலருந்து இந்த வாள்வீச்சு பயிற்சியில குழந்தைகள சேர்க்கலாம்!”

உங்க எதிர்கால கனவு என்ன?
“முதல்ல நான் தமிழ்நாடு அரசுகிட்ட ஒரு கோரிக்கை வைக்க நினைக்கிறேன். எத்தனையோ பேர் திறமையிருந்தும் சர்வதேச அளவுல அதை நிரூபிக்க பணம் ஒரு தடையா இருக்கு. உதவி செய்யத் தயாரா இருக்கும் நபர்களுக்கு தமிழக அரசு எங்களை அடையாளப்படுத்தணும். இதன் மூலமா நிறைய பேர் சாதிப்பாங்க. அப்படித்தான் எனக்கு விஜய் சார் கிடைச்சார்.  வாள்வீச்சுக்காக ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்கணுங்கிறது என்னுடைய எதிர்காலக் கனவு.

குறைந்த கட்டணத்துல நிறைய பேருக்கு சொல்லிக் கொடுக்கணும். விரைவில் மலேசியாவில் நடக்குற சர்வதேச போட்டிகள்ல கலந்துக்கப் போறேன். இளைஞர்கள் எதையும் முடியுமா, நடக்குமான்னு யோசிக்காதீங்க. உங்க திறமைய எதாவது ஒரு வழியில இந்த உலகத்துக்கு காட்டிக்கிட்டே இருங்க. நிச்சயம் ஒருநாள் அங்கீகரிக்கப்படுவீங்க. என்னுடைய தாய்லாந்து வெற்றிய எனக்கு உதவின விஜய் கார்த்திகேயன் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். நேரத்துல அவர் செய்த உதவிதான் இன்னைக்கு என்னை உலக அளவுக்கு கொண்டு போயிருக்கு!”

கமிஷனர் விஜய் கார்த்திகேயன்
“என்னைப் பொறுத்தவரைக்கும் திறமை இருந்தும் அதை சாதிக்க பணம் ஒரு தடையா இருக்கக்கூடாது. அரசு உதவி செய்யும். ஆனால் கொஞ்சம் தாமதமாகும். என் கிட்ட தமிழ்கனி வரும்போது ஒரு வாரத்துல போட்டினு சொன்னாங்க. சரி, யாராவது உதவுறாங்களான்னு பார்க்குறேன்னு சொல்லி அனுப்பி வைக்க முடியாது. அதனாலதான் நானே அவங்களுடைய பயணச் செலவுக்கு ஒரு சின்ன தொகை கொடுத்தேன்.

நான் மட்டும் இல்லை... சோசியல் கேபிடல் அப்படின்னு ஒரு தளம் நடத்திக்கிட்டு இருக்கோம். அதில நிறைய உதவுற மக்கள் உறுப்பினர்களா இருக்காங்க. மேற்கொண்டு இப்படி யாராவது உதவி கேட்டா அந்த குரூப்ல போடுவோம். விவரங்கள் தெரிஞ்சு சீக்கிரமாவும் உதவிகள் கிடைச்சிடும். அவங்களுக்கு திறமை இருக்கு. நான் ஒரு சின்ன உதவி செய்தேன். அவ்வளவுதான். இன்னும் நிறைய இளைஞர்கள் இப்படி திறமைகள் இருந்தும் தகுந்த உதவிகள் இல்லாம கஷ்டப்படுறாங்க. அத எங்களால முடிஞ்ச வரைக்கும் கண்டுபிடிச்சு உதவிட்டு இருக்கோம்!”