உடலினை உறுதி செய்!



-ஜெ.சதீஷ்

பெண்களும் அதிகளவில் ஜிம்முக்கு போகத் தொடங்கியுள்ள சூழலில், ஜிம்மில் பயிற்சியாளர்களாக ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் வலம் வருகிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் ஜிம்களில் மாஸ்டர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியல்லவா? சில்வியா அவர்களுள் ஒருவர்.

வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் சுத்தம் செய்வது போன்ற  வீட்டு வேலைகளையெல்லாம் இயந்திரங்களிடம் கொடுத்துவிட்டு, வேளா வேளைக்கு உணவை  மட்டும் அருந்தி விட்டு உடல் உழைப்பு இல்லாத கணினி தொடர்பான வேலைகளை செய்து வரும் பெண்கள் உண்டு.  இதனால் உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு  ஆளாகிறார்கள் பெண்கள்.

அதோடு நம் உடலுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை தவிர்த்து விட்டு நவீன உணவு வகையையும், நம் உடலுக்கு ஒத்துவராத உணவையும் உண்டு வாழ்கிறோம். உடல் உழைப்பில்லாத நம்மை அவ்வுணவுகள் இன்னும் பருமனாக்குகின்றன. இம்மாதிரியான சூழலில் உடற்பயிற்சி என்பது நமக்கு கட்டாயமாகிறது. அப்படி உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ஆண்களே பெரும்பாலான உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியாளர்களாக இருந்தார்கள்.

தற்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண் உடற்பயிற்சியாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் பயிற்சி கொடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். உடல் ஆரோக்கியம் பற்றி பேச இளம் பெண் உடற்பயிற்சியாளர் சில்வியாவை சந்தித்தேன். ‘‘பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் இளநிலை முடித்தேன்” என உற்சாகமாக தன் அனுபவங்களையும் டிப்ஸ்களையும் கூறத் தொடங்கினார்.

‘‘உடற்பயிற்சிக் கூடத்திற்கு வரக்கூடிய  பெண்கள் பெரும்பாலும் உடல் எடையை குறைப்பதற்கே வருகிறார்கள். 100 சதவீதத்தில் 70 சதவீதம் பெண்களுக்கு நீர்க்கட்டி  பிரச்சனை இருக்கிறது, தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுப்பழக்கவழக்கம்தான் அதற்கு காரணம்.  வயிற்றுப் பகுதியில்  கொழுப்பு சேர்கிறது என்றாலே அவர்களுக்கு இப்பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அவர்கள் மருத்துவரை சந்திக்கும்போது, மருத்துவர்கள் உடல் எடையை குறைக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்கள். உடலின் மேற்பகுதி, வயிற்றுப் பகுதி மற்றும் உடலின் தொடைப்பகுதிகளில்  கொழுப்பு சேர்கிறது. இதற்கு பளு தூக்குவது மற்றும் கார்டியோ  உடற்பயிற்சிகள் அளித்து வருகிறேன். இன்றைய காலகட்டத்தில் அனைத்து பெண்களுக்குமே கட்டாயமாக விளையாட்டு, நடைப்பயிற்சி என உடல் செயல்பாடுகள் தேவையாக இருக்கிறது. நம்முடைய உடல் செயல்பாடு குறைவதால் உடலில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. கண்டிப்பாக உடற்பயிற்சி என்பது அனைவருக்குமே அவசியமாகிறது.

பல பேருக்கு உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சில நோய்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். உணவுப் பழக்க வழக்கம் என்பது மிக முக்கியமாக இருக்கிறது. உடற்பயிற்சி எடுப்பதற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை கொடுத்து வருகிறோம். ஒல்லியாக இருப்பவர்களுக்கு 25 சதவீதம் மட்டுமே உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. 75 சதவீதம் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம்  செலுத்துவோம். சிலர் டயட் என்று சரியாக சாப்பிடுவதே இல்லை.

இதனாலும் கொழுப்பு சத்து அதிகமாகி விடுகிறது. சம அளவான ஊட்டச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் டயட். நம் முன்னோர்கள் எடுத்துக்ெகாண்ட சிறு தானியங்களும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளையும்தான் இன்றைய பெண்களுக்கு அறிவுறுத்துகிறோம். உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். பெண்களின் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கின்றன.

பெண்களின் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். கைகளின் சதை அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்” என்கிறார் சில்வியா.

படங்கள்: ஆா். கோபால்