சாதனை சகோதரிகள்



-ஸ்ரீதேவிமோகன்

இளம் வயதில் மட்டுமல்ல 35 வயதுக்கு மேலும் பெண்கள் சாதிக்கலாம் என்பதற்கு ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படம் நமக்கெல்லாம் ஓர் உந்துசக்தியாக இருந்தாலும் நம் கண்முன் இருக்கும் முக்கியமான முன்மாதிரிகள், டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா மற்றும்
வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள்.

முதல் நிலை டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரிகள். இவர்களது தந்தையான ரிச்சர்டு வில்லியம்ஸும் ஒரு டென்னிஸ் வீரர்தான். இவர்களின் ஆரம்ப கால குருவும் இவரே. செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் 2017 ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி வீனஸ் உடன் போராடி 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனைப் படைத்ததன் மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மீண்டும் முன்னிலைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்டெபிகிராபின் சாதனையை முறியடித்துள்ளார் செரீனா. தனக்கு ஏற்பட்டிருந்த பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த சாதனையைச் செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி முடிவுகளின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் செரீனா 7,780 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

இவரது உடன் பிறந்த சகோதரியான வீனஸ் வில்லியம்ஸும் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கிறார். 2001 யுஎஸ் ஓப்பன் தொடங்கி 2017 ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் வரை இருவரும் ஒன்பது முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளனர். ஆண்-பெண் இரு பிரிவிலும் நான்கு போட்டிகளுக்கு மேல் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட பெருமை இவர்களுக்கு மட்டுமே உண்டு.

2000ம் ஆண்டு தொடங்கி 2017 வரை உள்ள இந்த பதினேழு வருட காலக்கட்டத்தில் விம்பிள்டன் பட்டத்தை வீனஸ் ஐந்து முறையும் செரீனா ஏழு முறையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் இருவரும் ஒற்றையர் பிரிவில் ஒவ்வொரு முறை தங்கம் வென்றுள்ளனர். வீனஸ் 2000ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் செரீனா 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றுள்ளனர்.

ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில் இவர்கள் இருவரும் இணைந்து விளையாடி மூன்று முறை (2000 சிட்னி, 2008 பீஜிங்,2012 லண்டன்) தங்கம் வென்றுள்ளனர். இதுமட்டுமில்லாமல், டென்னிஸில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள இந்த சகோதரிகள் வெற்றிபெற நினைக்கும் பெண்களுக்கான சிறந்த முன்னுதாரணம். இவர்களில் செரீனாவின் வயது 35, வீனஸுக்கு 36 என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.