பருவங்களும் மாற்றங்களும்



-கி.ச.திலீபன்

Age is just a number  என்று  சொல்வார்கள். ஆம். வயது என்பது வெறும் எண்தான் என்றாலும் இது எல்லாவற்றுக்கும் பொருந்துமா? குறும்புத்தனம் மாறாத 9 வயதுக் குழந்தை பெரிய மனுஷியாகி குத்த வைக்கிறாள். அவளுக்கு இதையெல்லாம் எப்படிப் புரிய வைப்பது  என்று திணறிப்போகின்றனர் அவளது பெற்றோர். வேலைக்குச் செல்லும் பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் மேல்தான் திருமணம் குறித்தே யோசிக்கின்றனர். பருவமெய்தும் வயது குறைவது போல் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நின்று போகும் வயதும் குறைந்து வருகிறது. இப்படியான கால மாற்றம் மருத்துவ ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா? இது குறித்து மகப்பேறு மருத்துவர் கௌரி மீனா விளக்குகிறார்:

பருவமெய்தல்
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெண் குழந்தைகள் சராசரியாக 14 வயதில்தான் பருவமெய்தினார்கள். இப்போதோ 9 வயதில் கூட பருவமெய்தி விடுகிறார்கள். மிகக் குறைந்த வயதில் பெண் குழந்தைகள் பருவமெய்தினால் தலைப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி எனும் சுரப்பி, சிறுநீரகத்துக்கு அருகே இருக்கும் அட்ரினல் எனும் சுரப்பி மற்றும் சினை முட்டை உருவாகும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் கட்டி இருக்கிறதா? என்று சோதிப்போம்.

முன்பு போல் தற்போது குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, உட்கார்ந்தபடியேதான் இருக்கிறார்கள். இன்றைய உணவுப் பழக்கமும் இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவில் தேவையான சத்துகள் இருப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்புச்சத்து, உப்பு, சர்க்கரை ஆகியவையே அதிகளவில் இருக்கின்றன. இதனால் ஊளைச்சதையாக உடல் வளர்ந்து விடுகிறது. குறிப்பிட்ட எடையை எட்டியதும் பருவமெய்துவதென உடலுக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

இந்த உணவுப் பழக்கத்தாலும், உடற்பயிற்சியின்மையாலும் குழந்தைகள் குறைந்த வயதிலேயே அந்த உடல் எடையை எட்டி விடுகின்றனர்.  குறைந்த வயதில் பருவம் எய்திய பெண் குழந்தைகளுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி என்கிற pco இருக்கிறதா?  என்று பார்க்கிறோம். சினைப்பையில் நீர்க்கட்டி ஏற்படும்போது மாதவிடாய் பிரச்னை, கரு உண்டாவதில் தாமதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

வயதுக் கணக்கு மாறிப்போகும் போதுதான்  இது போன்ற கட்டிகள் ஏற்படும். மோசமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தூக்கம் கெடுதல் ஆகியவை இவற்றுக்குக் காரணமாக அமைகின்றன. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மாட்டின் பால்தான்  சத்தைக் கொடுக்கும். ஹார்மோன் கலப்புக்கு ஆளான பாலைக் குடிக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொண்டு இறைச்சியை அளவாக உட்கொண்டாலே இது போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்.

குறைந்த வயதில் பருவமெய்துவதற்கு உளவியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பிக்கு மேலே இருக்கும் hypothalamus தான் உணர்வையும், உடலையும் இணைக்கிறது. அதில் சுரக்கும் ஹார்மோன்தான் உணர்வை பிரதிபலிக்கிறது. குழந்தைகளுக்கு கட்டுப்பாடே இல்லாமல் எல்லாவற்றுக்குமான சுதந்திரத்தை வழங்குவதும் சிக்கல்தான். இன்றைக்கு புறச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் குழந்தைகளுக்கு முதிர்ச்சியை கொடுத்து விடுகிறது.

பெரியவர்களாகி புரிய வேண்டியதெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். வளர்ச்சி இல்லாத முதிர்ச்சி அது. இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்படுகிறது. அவர்கள் சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.

அவர்களின் வயதுக்கு மீறிய விஷயங்கள் அவர்களுக்கு தடையில்லாமல் கிடைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எது தேவையோ அதை மட்டும் அனுமதிக்க வேண்டும். அவர்களின் இணையப் பயன்பாட்டை அனுமதிக்கலாம். ஆனால் அவர்களுக்கு எந்த மாதிரியான இணையதளங்கள் தேவையோ அதைத் தவிர மற்றவற்றை தடை செய்யும் வசதி இணையத்தில் இருக்கிறது.

தாய்மை அடைதல்
ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.

30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம். இது போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.

மெனோபாஸ்
சராசரியாக 47 வயதில்தான் மெனோபாஸ் ஏற்படும். சிலருக்கு 52 வயது வரையிலும் மாதவிடாய் தொடரலாம். அதையும் தாண்டிப் போகும்போது மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும். ஹார்மோன் பிரச்னை, கர்ப்பப்பை, சினைப்பையில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மெனோபாஸ் ஏற்படும் வயது அதிகரிப்பது மட்டுமல்ல குறைவதும் கூட பிரச்னைதான்.

40 வயதுக்குள்  மாதவிடாய் நின்று போனால் எலும்பு மற்றும் இதயம் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். மெனோபாஸ் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் ரத்தக்கசிவு அதிகமாதல், முறையற்ற ரத்தக்கசிவு ஆகியவற்றை சாதாரணமாக நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. அப்படியான சூழலில் மருத்துவரை நாடுவது அவசியமாகும்.”

இயற்கையை நாம் புரிந்து கொள்வதும், இயற்கையான வாழ்வியலுக்குத் திரும்புவதுமே எல்லாவற்றுக்குமான தீர்வு.
சித்த மருத்துவர் காசிப்பிச்சை

“எல்லா உயிர்களும் பருவத்துக்கு வரும் வயதிலிருந்து 20 மடங்கு வயது வரை வாழும் என்பதுதான் இயற்கையின் விதி. தென்னை மரம் 5 ஆண்டுகளில் பாலை விரிக்கிறது, 100 ஆண்டு காலம் பழம் கொடுக்கிறது. பனைமரம் 8-10 ஆண்டுகளில் பாலை விரிக்கிறது. 200 ஆண்டுகள் பழம் கொடுக்கிறது. மாடுகள் 1 ஆண்டில் பருவத்துக்கு வருகிறது, 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் மனித இனம் 15 வயதில் பருவமெய்துகிறது என்றால் 300 ஆண்டுகள் வாழ வேண்டும்.

மனிதன் இயற்கையோடு இசைந்திருந்த போது இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். ஆனால் என்றைக்கு செயற்கையான வாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டானோ அன்றையிலிருந்தே அவனது ஆயுட்காலம் குறையத் தொடங்கி விட்டது. அது போல்தான் பருவமெய்தும் வயதும் குறைந்து போயிருப்பது. மின்சாரம் இல்லாத காலத்திலெல்லாம் நிலவொளியில் ஓடி ஆடி விளையாடுவார்கள்.

இதன் மூலம் நிலவொளியை உள்வாங்கினார்கள். நிலவொளி படப்பட ஏற்படும் ஹார்மோன் தூண்டுதலால் நல்ல உடல் அமைப்போடு வளர்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு எவரும் ஓடி ஆடி விளையாடுவதில்லை. நிலவொளியையோ, சூரிய ஒளியையோ உள்வாங்குவதுமில்லை. போக நமது வாழ்வியல் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. அந்நிய நாட்டுக் கலப்பின மாடுகள் கொண்டு வரப்பட்ட பின் ஏற்பட்ட விளைவுகளில் இதுவும் ஒன்று. கலப்பின மாடுகளின் பாலில் prion எனும் வைரஸ் இருக்கிறது.

இந்த வைரஸ் உள்ள மாட்டுப்பாலை அருந்துவதால் பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறைந்த வயதிலேயே பருவமெய்துவதற்கு இயற்கையான முறையில் வளர்க்கப்படாமல் ஹார்மோன் ஊசிகளால் வளர்க்கப்படும் மாட்டிலிருந்து கிடைக்கும் பாலை உட்கொள்வதும் முக்கியக் காரணம். பெண்களின் உடலில் இயற்கையாக 200 மாதங்கள் அதாவது பதினான்கரை ஆண்டுகள் மட்டுமே திடகாத்திரமான கருமுட்டை உற்பத்தி (healthy ovum production) இருக்கும். அன்றைக்கு 15 வயதில் பருவமெய்தினார்கள்.

32 வயதுக்குள் மணமுடித்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் கருக்கூடலும், பிரசவமும் இருந்தது. குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பருவமெய்தி விட்டாலும் தாய்மை அடைவதற்கான வயதைத் தள்ளிப்போடும்போது திடகாத்திரமான கருமுட்டை உற்பத்தியாகும் வயதைத் தாண்டி விடக்கூடும். இதனால் கருக்கூடலில் சிக்கல், மலடு ஆகியவை இன்றைக்கு சமூகத்தில் பெருகி வருகின்றன. 35 வயதிலேயே கூட மெனோபாஸ் அடையும் பெண்கள் ஏராளம்.

இயற்கையாக இருக்கும் உடல்வாகுப்படி 30-40 வயதில்தான் பாலுறவில் உச்சபட்ச இன்பத்தைப் பெற முடியும். இப்படியான நிலையில் மெனோபாஸ் அடையும்போது அதை அனுபவிக்க முடியாமலேயே போய் விடலாம். மாதவிடாய் நின்று போகும்போது தொந்தரவு கொடுத்துதான் நிற்கும். 2 ஆண்டுகள் வரையிலும் கூட இப்பிரச்னை நீடிக்கலாம். அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், முறையற்ற மாதவிடாய் ஆகியவை ஏற்படும்.

இதன் காரணமாக ஏற்படும் வலி மற்றும் அவஸ்தையின் காரணமாக கருப்பை மற்றும் கர்ப்பப்பையை எடுத்துவிடக்கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். மெனோபாஸ் பிரச்னைக்காக கருப்பையை எடுத்து விடுவது முற்றிலும் தவறானது.  இதனால் கருப்பை கொடுக்கும் ஹார்மோன் இல்லாமல் போவதால் பல நோய்களுக்கு ஆட்பட நேரிடலாம். இயற்கையை புரிந்து கொண்டு அதனுடன் இயைந்து வாழ்வது மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்.

சூரிய ஒளி, நிலவொளி ஆகியவை படும்படியாக நமது இயக்கம் இருக்க வேண்டும். சூரிய ஒளி பட்டால்தான் உடலின் ஹார்மோன் இயக்கம் நன்றாக இருக்கும். ‘சூரியன் புகாத இடத்தில்தான் மருத்துவன் நுழைகிறான்’ என்று ஒரு சீனப்பழமொழியே இருக்கிறது. நாம் இயற்கையை மறந்து விட்டோம். நமது உணவுக் கலாச்சாரம் என்பது மேலை நாட்டுத் தாக்கத்தால் ஆனதாக மாறி விட்டது.

நம் மண்ணில் என்ன விளைகிறதோ அதுதான் நமக்கான உணவு. மற்றவையெல்லாம் அந்நியமானதே. அந்நிய உணவுகளைத்தான் நாம் இன்றைக்கு பெரும்பாலும் உட்கொள்கிறோம். இயற்கை குறித்தான அடிப்படைப் புரிதலும் இயற்கையான வாழ்வியலுக்குத் திரும்புதலும் அவசியமானது.’’