கொஞ்சம் காபி... நிறைய பேச்சு...



ஒரு மாலைப் பொழுது அல்லது விடுமுறை நாள். நண்பர்களோடு பேசிக் கழிக்க நாம் நினைத்தால், அதுவும் அந்த இடம் எழுதவும், படிக்கவும், கூடி விவாதிக்கவும் சிறந்த இடமாக இருந்தால்... அட, அதுதாங்க ‘ரைட்டர்ஸ் கஃபே’ எனும் காபி ஷாப். சென்னை கோபாலபுரத்தில் குடும்ப வன்முறையில், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மீண்ட 7 பெண்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

குடும்ப வன்முறைகளால் தற்கொலைக்கு  முயன்று, தீவைத்துக்கொண்டு காப்பாற்றப்பட்ட பெண்கள் அல்லது குடும்ப  வன்முறையில் வற்புறுத்தி கொளுத்தப்பட்டு பிழைத்த பெண்களைக் கொண்டு தொடங்கப்பட்டது ரைட்டர்ஸ் கஃபே. பிசிவிசி (Prevention Crime & Victim Care) தொண்டு நிறுவனம் மற்றும் ‘வின்னர்ஸ் பேக்கரி’ ‘ஹாட் பிரெட்’ கடைகளை நிறுவி நடத்தி வரும் ‘ஓரியண்டல் ஹூசைன் ரெஸ்டாரன்ட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகாதேவன் ஆதரவுடன், வெற்றிகரமாக நடத்தி வரும் ஒரு வித்தியாசமான பேக்கரி உணவகம் இது என்கிறார் இதன் மேலாளர் கரண் மணவாளன்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று, தீக்காயங்களில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், மாறாத தழும்புகளுடன் இயங்கும் ஏழு பெண்களைக் கொண்டு வெற்றிகரமாக இந்த கஃபேயினை நடத்தி வருகின்றனர். தன்னுடைய வின்னர்ஸ் பேக்கரியில் பேக்கிங் உணவுகளை தயாரிக்கும் முறை குறித்த பயிற்சியினை முதலில் இந்த 7 பெண்களுக்கும் வழங்கி, அவர்களை வைத்தே பலவிதமாக பேக்கரி உணவுகளை விதவிதமாய், அழகாய் தயார் செய்யப்படுகிறது.

இது தீயின் கொடூர நாக்கிற்கு உருவத்தை பலி கொடுத்தவர்களின் வாழ்வில் ஒளி துவங்கப்பட்ட வித்தியாசமான கஃபே.  இது முழுக்க முழுக்க இந்தப் பெண்களைக் கொண்டே இயக்கப்படுகிறது. இதில் வரும் லாபம் இந்தப் பெண்களுக்கே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தேநீர், பேக்கரி உணவுகள் மட்டுமல்ல புத்தகங்களும் கிடைக்கும். ‘ரைட்டர்ஸ் கஃபே’ மேல் தளத்தில் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புத்தகக் கடை ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்துடன் இலவச இணையத் தொடர்பும் இங்குள்ளது.

‘‘குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனிப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை என்கிற ஆதங்கம் எனக்குள் இருந்தது. குற்றவியல் பத்தின ஆய்வுப் படிப்பை முடித்த கையோடு 2001ல் சென்னை அண்ணா நகரில் ப்ரிவென்ஷன் ஆஃப் க்ரைம் அண்ட் விக்டிம் கேர்(PCVC) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன்” எனப் பேசத் துவங்கினார் பிசிவிசி அமைப்பின் நிறுவனர் பிரசன்னா. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கவுன்சலிங், பிரச்னைகளுக்கான தீர்வுகள், தற்காலிகப் புகலிடம், பிழைப்புக்கான வழி, பிள்ளைகளின் படிப்பு என அத்தனை பொறுப்புகளையும் ஏற்றுச்செய்கிறது பிசிவிசி தொண்டு நிறுவனம்.

‘‘வெறுமனே அடிச்சு, உதைக்கிறது மட்டுமே வன்முறைன்னு நினைக்க வேண்டாம். உடல் ரீதியான துன்புறுத்தல்கள் ஒருவிதமான வன்முறை. செக்ஸ் ரீதியான வன்முறை இன்னொரு ரகம். மனைவிக்கு உடன்பாடில்லாமல், விருப்பமில்லாமல் பாலியல் இச்சைக்கு அவளை வற்புறுத்தறதும் வன்முறைதான். மூன்றாவது உணர்வுபூர்வமான வன்முறை. தகாத வார்த்தையால் திட்டுவதில் துவங்கி, சகலவிதமான மிரட்டல்களும் அதில் அடக்கம். எது வன்முறைன்னு தெரியாமலேயே பலரும் அதை அனுபவிச்சிட்டு வாழ்ந்திட்டிருக்காங்க.

உங்களுக்கு நடக்கற விஷயங்கள் தவறுன்னு உங்க உள் மனசு சொன்னா, அதை கவனியுங்க. அது உங்களுக்கு மன உளைச்சலையோ, விரக்தியையோ கொடுத்தா, அதுதான் வன்முறை!” என்கிறார் தெளிவாக. ‘‘வன்முறையை அனுபவிக்கிற பெண்களை வீட்டை விட்டு வெளியேற நாங்க வற்புறுத்தறதில்லை. சிலர், வீட்டுக்குள்ளேயே, கணவரோடு இருப்பதை விரும்பலாம். எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதுதான் எங்கள் நோக்கம்.

குடும்ப வன்முறையோட உச்சமா சில பெண்கள் தீ வச்சு கொளுத்தப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலைமையில் காப்பாத்தப்பட்டு வருவார்கள். அப்படிப்பட்டவங்களுக்கு அவசர சிகிச்சை கொடுத்து, இழந்த வாழ்க்கையை மீட்டுத் தரவும் முடிஞ்ச உதவிகளைச் செய்யறோம். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் குடும்ப வன்முறையால் தீக் காயங்களுக்கு ஆளான பெண்களை அணுகி, அவர்கள் நலம் பெற்றதும், வேண்டிய உதவிகளை செய்து, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களை சரிசெய்து, பொருளாதாரத் தேவைக்கான வழிகளை ஏற்படுத்தித் தருகிறோம்” என்கிறார். அதில் ஒன்றுதான் வின்னர்ஸ் பேக்கரியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள
ரைட்டர்ஸ் கஃபே.

வன்முறைக்கான முதல் புள்ளியினையே முற்றுப்புள்ளியாக்க வேண்டியது பெண்களாகிய நீங்கள்தான்.

* ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கொரு முறையும், ஏதோ ஒரு இடத்தில் ஒரு இளம் பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்படுகிறாள் அல்லது துன்புறுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படுகிறாள்.
* திருமணமான இந்தியப் பெண்களில் மூன்றில் இருவர், ஏதேனும் ஒரு காலகட்டத்தில் குடும்ப வன்முறையை அனுபவித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
* 20 முதல் 34 வயதுப் பெண்கள் அதிகபட்ச வன்கொடுமையை அனுபவிக்கிறார்கள்.
* கணவனிடம் அடி வாங்குவதில் தவறில்லை என்று மூளைச்சலவை செய்யப்பட்ட இந்தியப்பெண்கள் சுமார் 56 சதவிகிதம்!

அத்தனை புள்ளிவிவரங்களும் ஏதோ உங்களுக்கு சம்பந்தமே இல்லாத பிரிவினரைப் பற்றியதல்ல. புள்ளிவிவரம் காட்டுகிற கணக்கில் நீங்கள்கூட ஒருவராக இருக்கக்கூடும்.