கடைவிரித்தோம் கொள்வாரில்லை



-ஸ்ரீதேவிமோகன், மகேஸ்வரி,

மீனவர்களின் வாழ்வு துயர் மிக்கது. ‘ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ தான். ஏற்கனவே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு, துப்பாக்கிச்சூடு, வர்தா புயல், மெரீனா போராட்டத்தின் முடிவில் மீனவ மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் போன்ற பல்வேறு இன்னல்களை மீனவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மீன் விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்குக் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது.

எண்ணெய்ப் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியது. இதன் தாக்கம், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை வரையிலும் பரவியது. கடலிலிருந்து பிடித்து வரப்படும் மீன்களை பெண்கள் மீன் அங்காடிக்கு எடுத்துச்சென்று விற்பார்கள்.  அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன்கள் எல்லாம் இப்போது அடிமட்ட விலைக்கு விற்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான வருமானம் கூட கிடைக்கவில்லை என்கிறார்கள் மீனவப் பெண்கள்.

கச்சா எண்ணெய் படலம், படகுகளிலும், மீன் பிடி வலைகளிலும் படிந்து விடுவதால் அதனை அகற்றுவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் மீனவர்கள். எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கக்கூடிய மீன் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு தரப்பிலிருந்து, பொதுமக்கள் மீன்களை சாப்பிடலாம் அதில் எந்த சிக்கலும் இல்லை என்று அறிவிப்பு வந்தபின்னும், மக்கள் மீன்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள். 

கச்சா எண்ணெய் கழிவுகள் காரணமாக மீன்கள் இடம்பெயர்ந்து விட்டதாகவும், இதனால் வழக்கமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்கள்  இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்ப வருவதாகவும் கூறுகிறார்கள் மீனவர்கள். கடலில் நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தாலும் அதை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டாததால் கடலுக்குள் செல்ல மீனவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கடலுக்குச் செல்வது ஆண்களாகவும், கொண்டு வந்த மீன்களை சந்தையில் போட்டு விற்பது பெண்களாகவும் இருக்கும் சூழலில் கொள்வாரில்லாமல் கடைவிரித்திருக்கும் மீனவப்பெண்கள் சிலரை சந்தித்தோம்.

கிரிஜா
“மீன், கருவாடு வாங்க யாரும் வரமாட்டேங்குறாங்க. எண்ணெய் கடல்ல கலந்ததால குழந்தைங்களுக்கு எதாவது ஆயிடுமோன்னு ஜனங்க பயப்படறாங்க. பிழைப்பே இல்லை. எப்பவும் வலை மீன் எடுத்தாந்தா உடனே காலியாயிடும். புது மீன் என்பதால வாங்குறதுக்கு போட்டி போடுவாங்க. ஆனால் இந்த எண்ணெய் பிரச்னையால் மதியம் 12 மணிக்குப் பிடிச்சாந்த மீன் இதோ மணி 6 ஆகப்போகுது இன்னும் வியாபாரம் ஆவலை. சாப்பிடக் கூட போவாம உக்காந்திருக்குதுங்க பாவம்.

முதல்ல வர்தா வந்து படுதா போட்டுச்சு. வர்தா வந்த அன்னிக்கு மட்டுமல்ல அதுக்கு முன்னாலயும் சரி பின்னாலயும் சரி, காத்து ரொம்ப வேகமா வீசுச்சு. அதனால ஒரு வாரம் கிட்டதட்ட யாரும் மீன் பிடிக்கப் போவல. அப்புறம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தப்ப உண்மையைச் சொல்லணும்னா, ஜனங்க நிறைய பேர் போராட்டத்துக்கு வந்து போகும் போது ஜாலியா பேசிட்டு மீன் வாங்கிட்டுப் போனாங்க. ஆனால் அந்தக் கலவரம் நடந்த அன்னியிலிருந்து யாரும் அவ்வளவா மீன் வாங்க வர்றதில்லை. தடை உத்தரவு வேற. பயம் வந்துடுச்சு. அதிலிருந்து மீள்றதுக்குள்ள இப்ப இந்த பிரச்னை. ரொம்ப கஷ்டமா இருக்குது.”
 
நீல வேணி
“20 வருஷமா மீன் விக்குறேன். எப்பவும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்ததில்லை. இப்ப கொஞ்ச நாளா எங்க பிழைப்பே அழிஞ்சுப் போய் கிடக்கும்மா. அடுத்தடுத்து சோதனைதான். புயல் வந்து கொஞ்ச நாள் கழிச்சு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் போது 144 போட்டுட்டாங்க. வண்டியில வரக் கூடாதுன்னு தடுக்குறாங்க. கூட்டமா நாலு பேரா சேர்ந்து வரக்கூடாதுன்னா எப்படி வந்து பார்த்து வாங்குவாங்க சொல்லுங்க. குடும்பமா வந்தா தானே பிடிச்ச மீனை பார்த்து வாங்கி போவாங்க.

அதனால வியாபாரமே இல்லாம இருந்துச்சு. 4 நாள்ல 5000 ரூபாய் நஷ்டங்க. எவ்வளவு மீனைத்தான் கருவாடு போடறது. இப்போ எண்ணெய் பிரச்சனை வேற. அதனால நிறைய மீனை கொண்டு போய் குப்பையிலதான் கொட்றோம். வியாபாரம் ஆகாத மீனை வெச்சுக்கிட்டு வேற என்ன செய்றது? தினம் மீன் வித்தாதான் எங்களுக்கு சாப்பாடு. இப்படியே போனா நாங்க எப்படி சாப்டறது சொல்லும்மா? பக்கத்து அக்கத்துல ஐம்பது, நூறை கடன் வாங்கி சாப்பாடு செய்ய வேண்டி இருக்கு.”
 
குமுதா
“30 வருஷமா மீன் வியாபாரம் செய்றேங்க. இப்ப கொஞ்ச நாளா தொடர்ந்து நஷ்டந்தாங்க. எடுத்தாற மீனெல்லாம் வீணாப் போகுது. அதைக் கருவாடாப் போட்டா கால்வாசிக் காசு கூட தேறாதுங்க. அதனால வீணா தூக்கித்தான் கொட்றோம். பணத்தட்டுப்பாடு வந்தப்ப ஆரம்பிச்சது எங்களுக்கு தலைவலி. கையில பணம் நடமாட்டம் அவ்வளவா இல்லாததால் மக்கள் அவ்வளவா மீன் வாங்க வரலை. வந்த சிலரும் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்காம மீனை வாங்காம போய்ட்டாங்க. நாங்க எத்தனை பேருக்கு தான் சில்லறை கொடுக்க முடியும். அதனால தொழிலு பாதிச்சுது.

அதுக்குப் பின்னாடி வர்தா, அப்புறம் கலவரம், இப்ப எண்ணெய். ஒரு நாளுக்கு 5000 ரூபாய்க்கு 100ன்னு வட்டிக்கு வாங்கி சரக்க வாங்கியாந்து இப்படி கொட்டினா நாங்க எப்படி பிழைக்குறது? காலையில 9 மணிக்கு வந்தேன். இதோ மணி 5 மணிக்கு மேல ஆகுது. ஒரு மீன் கூட விக்கலை. இது ஒருபக்கம்னா மாணவர் போராட்டத்துக்குப் பின்னால போலீஸ் செய்ற பிரச்னைக்கு பயந்து பிள்ளைங்க எங்கோ போய் படுத்துக் கிடக்குதுங்க. அதுங்க எப்படி இருக்குதுங்களோன்னு நினைச்சு நமக்கு தூக்கம் கூட சரியா வர்ற மாட்டேங்குது.”

வானதி
‘‘டிசம்பர் மாதம் வந்த வர்தா புயலால் நாங்க அதிகமா பாதிக்கப்பட்டோம். ஒரு மாசம்  கழிச்சு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பின்னாடி சாயங்காலம் கடற்கரைக்கு வர்றவங்க 144 போட்ட பின்னால வர்றதில்லை. மக்கள் நடமாட்டம் குறைஞ்சுபோச்சு. இதுல கடல்ல எண்ணெய் பரவி, அந்தப் பிரச்சனை வேறு சேர்ந்துடுச்சு. காலைல 8 மணியிலேர்ந்து உட்கார்ந்திருக்கிறோம். பயந்துக்கிட்டு யாரும் மீன் வாங்கவில்லை. எண்ணெய் பரவியதால் சாப்பிடக்கூடாது என டி.வி.யில் சொல்றதால வாங்காமல் செல்கிறார்கள். மீனவர்ங்குறதுக்கே அர்த்தமில்லாமப் போயிடுச்சு. வேற எந்த வேலையும் எங்களுக்குத் தெரியாது.’’

கௌசல்யா
‘‘நமக்காகத்தான் அந்தப் பிள்ளைங்க போராடிச்சுங்க. அதுக்காகத்தான் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தோம். பசங்க அடிதாங்காம ஓடியாரும்போது எப்படி கண்டுக்காம இருக்க முடியும்? கடலைப் பத்தி அதுங்களுக்கு இன்னா தெரியும். பாவம். கடல்ல இறங்குச்சுங்க. அதனால உதவி பண்ணோம். ஆனால் போலீஸ் எங்கள தீவிரவாதிங்கிற மாதிரி கொண்டுவந்துட்டாங்க. அப்புறம் 144, அப்புறம் எண்ணெய் கடல்ல கலந்துடுச்சு. மக்கள் வர்றதும் குறைஞ்சுருச்சு. வியாபாரமில்ல. இதுதா எங்க பொழைப்பு. விற்காத மீனை பள்ளம் தோண்டி கொட்டிட்டுப் போறோம்.’’

குமாரி
‘‘மீன் வைக்கிற ஐஸ் பெட்டி எல்லாம் புயல்ல அடிச்சுட்டுப் போயிருச்சு. 10,000ம் வரை எங்களுக்கு நஷ்டம். வலைங்க எல்லாம் கிழிஞ்சிருச்சு. படகு வர்தா புயல்ல அடிவாங்கிச்சு. பெண்கள் தண்டலுக்கு வாங்கி மீன் விக்கிறோம். புயலால் எங்கள் வீடு, மீன் எல்லாம் சேர்ந்தே போச்சு. அப்புறம் போராட்டத்திலிருந்தே விற்பனை இல்லை. 144 தடையால் மக்கள் வருவது குறைஞ்சு சுத்தமா வியாபாரம்  இல்லை. இப்போது ஆயில் கலந்ததால் விற்பனையே இல்லை.

தினமும் ஆயிரத்துக்குக் குறையாம வியாபாரம் இருக்கும். இப்ப 100க்கு கூட விற்கலை. பத்து வட்டிக்கு மீன் வாங்கி வர்றோம். வர்தா புயலுக்குப் பிறகு அதிகாரிங்க யாரும் எங்களை கவனிக்கலை. எங்க வீட்டின் கூரை, ஓடு எல்லாம் பறந்துடுச்சு. வீடு சேதமாயிடுச்சு, பாதி வீடு தண்ணிக்குள்ள போயிடுச்சு. எங்கள் பகுதியில 50 வீடுவரை சேதம். அரசாங்கம் நஷ்டஈடும் தரலை. அதிகாரிங்களும் கண்டுக்கலை.’’

படங்கள்: ஆ.வின்சென்ட் பால், ஏ.டி. தமிழ்வாணன்