நகங்கள் உங்கள் முகம் காட்டும் கண்ணாடி!
ஒருவரது நக அழகை வைத்தே, அவர்களது ஆரோக்கியத்தைக் கணித்து விடலாம்.
* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை.
* வெள்ளை வெளேரென இருந்தால் கல்லீரலில் கோளாறு.
* மஞ்சளானால் சாதாரண சத்துக் குறைபாட்டிலிருந்து, சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பிரச்னை, நீரிழிவு என எதுவாகவும் இருக்கலாம்.
* உடைந்து போனால் கால்சியம் பற்றாக்குறை. இன்னும் இப்படி நிறைய... இவையெல்லாம் உள்ளுக்குள் ஏதோ பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள்.
சிலருக்கு இப்படி எந்தப் பிரச்னையுமே
இல்லாமல், நகங்கள் உடைந்தும், நிறம் மாறியும், வறண்டும் காணப்படுவதைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் பராமரிப்பின்மை!
‘‘அழகுக்காக நீங்க செலவிடற நேரத்துல, உங்க கை, கால் நகங்களையும் பத்திரமா பார்த்துக்கோங்க’’ என்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ வீணா.
‘‘மாசம் ஒரு முறை மெனிக்யூர் செய்யறது உங்க கைகளை மட்டுமில்லாம, நகங்களையும் ஆரோக்கியமாக்கும். நகம் கடிக்கிற பழக்கம் கூடவே கூடாது. நகங்களை உங்களுக்கு விருப்பமான ஷேப்ல
வெட்டி, ஃபைல் செய்து, அழுக்கு சேராம பார்த்துக்கோங்க. ரொம்பவும் ஸ்ட்ராங்கான சோப், டிடெர்ஜென்ட்ல கைகள் படாமப் பார்த்துக்கணும். வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில்ல நகங்களை வாரம் ஒரு
முறை ஊற வச்சு, மசாஜ் செய்யறது மூலமா அவை உடையாம பார்த்துக்கலாம். கால்சியமும் புரோட்டீனும் அதிகமுள்ள உணவுகள் நகங்களுக்கு நல்லது...’’ - நகங்களின் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்
சொல்கிற வீணா, நக அழகில் லேட்டஸ்ட் டிரெண்ட் பற்றியும் பேசுகிறார்.
‘‘எல்லா பெண்களுக்கும் நெயில் பாலீ* பிடிக்கும். வீட்டுவேலை பார்க்கும்போது, நெயில் பாலீ* உரிஞ்சு வந்துடும்னு பலரும் அதைத் தவிர்த்துடறாங்க. அப்படிப்பட்டவங்களுக்காகவே வந்திருக்கு
‘பெர்மனன்ட் நெயில் பாலீஷ்’. இதை ஜெல் பாலீஷ்னும் சொல்லலாம். இதை வீட்ல போட்டுக்க முடியாது. பார்லருக்கு வந்து, அரை மணி நேரம் செலவழிச்சு செய்துக்கக்கூடிய சிகிச்சை. விருப்பமான
கலர்ல கிடைக்குது. கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு இந்த பாலீ* அழியாது. இந்த பாலீஷுக்கு மேல அவங்கவங்க விருப்பப்படி கிளிட்டர்ஸ் ஒட்டலாம். டிசைன் போடலாம். நெயில் ஆர்ட் பண்ணிக்கலாம்.
திடீர்னு அந்த ஷேடு பிடிக்கலைன்னா, அதுக்கு மேலயே வேற கலர் போட்டுக்கலாம். நெயில் பாலீ* ரிமூவர்னு சொல்லக்கூடிய அசிட்டோன் வச்சுதான் சாதாரணமா நெயில் பாலீஷை எடுப்போம். ஆனா, இந்த பெர்மனன்ட் பாலீஷை அப்படி எடுக்க முடியாது. பார்லர்ல போய்தான் எடுக்கணும்.
‘நகமே வளர்றதில்லை... உடைஞ்சிடுது’ங்கிற கவலை பல பெண்களுக்கு உண்டு. அவங்க ‘நெயில் எக்ஸ்டென்ஷன்’ பண்ணிக்கலாம். முடி வளர்ச்சி கம்மியானவங்க, ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’ பண்ணிக்கிற மாதிரிதான் இதுவும். ஒருத்தரோட உண்மையான நகத்துக்கு மேல செயற்கை நகத்தை ஒட்டிடுவோம்.
3 மாசத்துக்கு அது அப்படியே இருக்கும். நிஜ நகம் வளர வளர, அதுக்கும் செயற்கை நகத்துக்கும் இடையில ஒரு இடைவெளி தெரிய ஆரம்பிக்கும். அதை பார்லர்ல போய் மறுபடி சரி பண்ணிட்டு வந்துடலாம். நடிகைகள், மாடல்கள்னு பிரபல பெண்கள் பலரோட நீளமான, அழகான நகங்களோட பின்னணி இதுதான். நெயில் எக்ஸ்டென்ஷன் பண்ணிட்டு, அதுக்கு மேல ஃப்ரென்ச் டிப்ஸ் (நகங்கள் இயல்பான நிறத்துலயும், நக முனைகள் மட்டும் வெள்ளையாகவும் இருக்கிற மாதிரி செய்யறதுதான் ஃப்ரென்ச் டிப்ஸ்) செய்துக்கலாம்.
ஃப்ரென்ச் டிப்ஸ்லயே இப்ப பளபளக்கிற கிளிட்டர்ஸ் உபயோகிக்கிறதும் ஃபேஷனாயிட்டிருக்கு. நெயில் எக்ஸ்டென்ஷன் மேல நெயில் ஆர்ட் பண்ணலாம். செயற்கை நகமாச்சே... கழண்டு வந்துடுமோங்கிற பயமே வேண்டாம். அதே மாதிரி நீங்களே சொன்னாகூட அது செயற்கை நகம்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது’’ என்கிறவர், இளம்பெண்களின் ஃபேஷன் பட்டியலில் நீங்காமல் நிற்கிற நெயில் ஆர்ட்டில் என்னவெல்லாம் லேட்டஸ்ட் என விளக்குகிறார்.
‘‘நெயில் ஆர்ட்ல இப்ப 3 விஷயங்கள் ரொம்ப லேட்டஸ்ட்.
‘எம்பாசிங்’னு சொல்ற ஸ்டைல். இதுல நகத்தை முதல்ல அழகுப்படுத்திட்டு, அதுக்கு மேல குட்டிக் குட்டி பூ, மணி மாதிரி ஒட்ட வைப்போம். அது நகத்துக்கு மேல அப்படியே நிற்கும்.
அடுத்து சீசனல் ஸ்டைல். ஐ.பி.எல். நடக்கிறப்ப, ஒலிம்பிக்ஸ் நடக்கிறப்ப, ஏஷியன் கேம்ஸ் நடக்கிறப்ப அவங்களோட ஃபேவரைட் டீமோட லோகோ அல்லது பிளேயர்ஸ் உருவங்களை நெயில் ஆர்ட்ல பண்ணிக்கிறாங்க. இதுக்காக ரெடிமேடா நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்ஸும் கிடைக்குது. அதை வாங்கி ஒட்டிக்கிறாங்க. தவிர விருப்பமான சினிமா ஸ்டார்ஸ் படங்களை ஒட்டிக்கிறவங்களும் உண்டு.
மூணாவதா ஃப்ளோரல் டிசைன். கல்யாணம், ரிசப்ஷன், பார்ட்டிக்கெல்லாம் ஏற்றது. டிரெஸ்ஸுக்கு மேட்ச்சான கலர்ல, விதம் விதமான பூக்களை நெயில் ஆர்ட்டா பண்ணிக்கலாம். ரெடிமேட் செராமிக் ஸ்டிக்கர்ஸும் கிடைக்குது. விருப்பப்பட்டவங்க அதையும் ஒட்டிக்கலாம்.’’
- ஆர்.வைதேகி