இரண்டு, மூன்று டிகிரி படித்தவர்களுக்கே வேலை கிடைப்பது அரிதாக இருக்கிற இன்றைய சூழ்நிலையில், பிளஸ் டூ படித்தவர்களுக்கு கை நிறைய சம்பளம், தினமும் விமானப் பயணம், நட்சத்திர ஹோட்டலில் தங்குகிற வாய்ப்பு, இன்னும் பல சலுகைகளுடன் விமானத்தின் கதவுகள் விரியத் திறக்கின்றன. புரியவில்லை?
ஏர் ஹோஸ்டஸ் வேலை வாய்ப்பு!
அட! நிஜமாகவா?
அஃப்கோர்ஸ்..! அழகும் நளினமும் பிரதான தகுதிகள். தவிர, புன்னகை மாறாத முகம், பொறுமை இழக்காத பேச்சு, சூழ் நிலைகளை லாவகமாக, புத்திசாலித்தனமாக சமாளிக் கிற பக்குவம் இவையெல்லாம் அவசியத் தகுதிகள். மிக முக்கியமாக, பயணிகளிடம் முகம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டியது இவர்களது வேலையின் மிகப் பெரிய சவால்.
இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதோடு, ஏர் ஹோஸ்டஸ் வேலையை விரும்பி ஏற்றுக் கொண்ட தேவதைகள்தான் குனிகா, கிமி, ஷாலினி நாயுடு, கேத்தரின், வினிதா, சரண்யா, ஷீபா சிங் ஆகிய ஏழு பேரும்.
டெல்லி, உ.பி., அஸ்ஸாம், ஹைதராபாத், சென்னை, கேரளா என வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ‘ஸ்பைஸ்ஜெட்’ ஏர்ஹோஸ்டஸ் என்பதே அது! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சென்னையில் தங்கி, வேலை பார்க்கிற இந்த ஏழு பேரையும் ஒருங்கிணைத்து சந்திக்க வைத்தோம். அறிமுகப்படலத்துடன் ஆரம்பமானது அழகுதேவதைகளின் அமர்க்கள சந்திப்பு!
‘‘எனக்கு நேட்டிவ் டெல்லி. இப்போ சென்னையில தங்கியிருக்கேன். கரஸ்பான்டென்ஸ்ல எம்.ஏ. படிச்சிட்டிருக்கேன். என் ஃபிரெண்ட் ஒருத்தி ஒரு இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்ல ஏர்ஹோஸ்டஸா இருக்கா. அவளைப் பார்க்கிற போதெல்லாம், அவ டிராவல் பண்ணின இடங்களைப் பத்தியும், சாப்பிட்ட சாப்பாடு பத்தியும், மக்களைப் பத்தியும் தன்னோட அனுபவங்களைச் சொல்வா. அவதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஆனா, நான் இந்தியாவுக்குள்ள வேலை பார்க்கிறதைத்தான் விரும்பினேன். என் ஆசைப்படியே ஸ்பைஸ்ஜெட்ல எனக்கு வேலை கிடைச்சது. நானும் ஏர்ஹோஸ்டஸ் ஆயிட்டேங்கிறதை இன்னும்கூட என்னால நம்பமுடியலை!”
- அனுபவச் சிலிர்ப்பிலிருந்து வெளியே வராதவராகப் பேசுகிறார் குனிகா.
‘‘பஞ்சாப்ல பிறந்து, அஸ்ஸாம்ல செட்டிலாயிட்டோம். என்னை ஏர் ஹோஸ்டஸ் ஆக்கிப் பார்க்கணுங்கிறது என் அம்மாவோட கனவு. ரொம்ப சின்ன வயசுலேருந்தே அதைச் சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. அப்பல்லாம் எனக்கு அந்த வேலையைப் பத்தின சீரியஸ்னஸ் பெரிசா இல்லை. முதல் முறைஃபிளைட்ல போனப்ப, அந்த ஃபிளைட்ல இருந்த ஏர்ஹோஸ்டஸை பார்த்ததும், எனக்கும் அவங்களை மாதிரி ஆகணும்கிற ஆசை வந்திருச்சு. அம்மாகிட்ட சொன்னதும் சந்தோஷப்பட்டாங்க. அதுக்கான சரியான பாதையைக் காட்டினது, டிரெயினிங்ல சேர்த்துவிட்டது, இன்னிக்கு என்னை ஏர் ஹோஸ்டஸ் ஆக்கினதுன்னு எல்லாப் புகழும் என் அம்மாவுக்குத்தான்...’’
- ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டைலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் கிமி.
‘‘நான் ஆந்திரா பொண்ணு. பி.காம். முடிச்சேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் எம்.பி.ஏ., எம்.சி.ஏன்னு படிக்க ஆசைப்பட்டாங்க. நான் வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு நினைச்சு, இந்தத் துறையை செலக்ட் பண்ணினேன். நிஜமாவே இந்த வேலை நல்ல எக்ஸ்பீரியன்ஸை கொடுக்குது. தினம் தினம் புது இடங்கள்... புது மனுஷங்கன்னு லைஃப் ரொம்ப சுவாரஸ்யமாப் போயிட்டிருக்கு...’’- ஆந்திரப் பெண்ணாக இருந்தாலும் அழகுத் தமிழில் அட்டகாசமாகப் பேசி அசத்துகிறார் ஷாலினி நாயுடு.
‘‘எங்க ஆன்ட்டி ஒருத்தங்க சென்னையிலேருந்து, இத்தாலியில உள்ள சர்ச்சுக்கு அடிக்கடி போயிட்டு வருவாங்க. அவங்களை ஃபிளைட் ஏத்தி விட ஒவ்வொரு முறை ஏர்போர்ட் வரும்போதும், ஃபிளைட்டின் பிரமாண்டமும் ஏர்ஹோஸ்டஸ் வேலையும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு எனக்கு. பிளஸ்டூ முடிச்சதும், இந்த வேலையில சேர்ந்துட்டேன். எந்த பிரமாண்டத்தையும் அழகையும் பார்த்து பிரமிச்சேனோ, அதே வேலையில இன்னிக்கு நானும்! அந்த ஃபீலிங் எவ்ளோ பெருமையானதுங்கிறதை சொல்ல வார்த்தைகளே இல்லை...’’
- கனவு நனவான மகிழ்ச்சியில் பேசுகிற கேத்தரினின் கண்கள் அகல விரிகின்றன.
‘‘எனக்கு பூர்வீகம் கேரளா. பிளஸ்டூ முடிச்சதும் அடுத்து என்ன படிக்கலாம்கிற குழப்பம். மெடிசின், இன்ஜினியரிங் பிடிக்கலை. புதுசா ஏதாவது படிக்கணுங்கிற என் ஆசையை அம்மா, அப்பாகிட்ட சொன்னப்ப, அவங்கதான் ஏர்ஹோஸ்டஸ் படிப்பைப் பத்தி சொல்லி, என்னை என்கரேஜ் பண்ணினாங்க. ‘என்னது... ஏர் ஹோஸ்டஸா? பேசஞ்சருக்கு டீ, காபி கொடுக்கிற வேலைதானே’ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணினாங்க. அதையெல்லாம் நான் காதிலேயே வாங்கிக்கலை. ஏர்ஹோஸ்டஸ் வேலைங்கிறதும் ஒருவிதமான சர்வீஸ்னு அவங்களுக்குப் புரிய வச்சேன். இந்த வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு. ஆரம்பத்தில ஏளனமாப் பேசினவங்களே இப்ப பெருமையா பார்க்கிறாங்க. ஐ ஆம் வெரி ஹேப்பி!’’ - பெருமிதத்துடன் பேசி முடிக்கிறார் வினிதா.
‘‘எனக்கும் கேரளாதான். சின்ன வயசுல ஃபிளைட் பறக்கிறப்ப சந்தோஷமா வானத்தைப் பார்ப்போமே.... அப்பலேருந்தே பறக்கற ஆசை வந்திருச்சு எனக்குள்ள. அதோட தொடர்ச்சிதான், ஏர் ஹோஸ்டஸ் ஆகணுங்கிற என் விருப்பமும். இதோ இன்னிக்கு தினம் தினம் வானத்துல பறக்கறேன். அந்த சந்தோஷம் வேற எந்த வேலையிலயும் கிடைச்சிருக்காது.’’ - சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் சரண்யா.
‘‘உத்திரபிரதேஷ்ல பிறந்து, வளர்ந்தவள் நான். அப்பா ஏர்ஃபோர்ஸ்ல இருக்கார். அதனால என்னோட ஏர் ஹோஸ்டஸ் ஆசைக்கு உடனே கிரீன் சிக்னல் கிடைச்சிருச்சு. என்னை மாதிரி எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறவங்களுக்கு இதை விட பெஸ்ட் ஜாப் வேற இருக்குமான்னு தெரியலை...’’ - ‘மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்’ பட்டமே தரலாம் போல அத்தனை அழகாய் புன்னகைக்கிறார் ஷீபா சிங்.
அறிமுகப் படலம் முடிந்ததும், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்வியை முன் வைத்தோம்.
முதல் முறை விமானத்தில் பயணம் செய்பவர்களின் அனுபவங்களைப் போலவே, இவர்களுக்கும் முதல்நாள் வேலை அனுபவத்தில் எக்கச்சக்க சுவாரஸ்யங்கள்!
‘‘என்னோட ஃபிரெண்ட்ஸ் இன்னிக்கும் கிண்டலடிப்பாங்க... ஏர் ஹோஸ்டஸா என் வாழ்க்கையில முதல் நாள்... பேசஞ்சர்ஸ் எல்லாரும் ஃபிளைட்டுக்குள்ளே இருக்காங்க. ஃபிளைட் கிளம்புறதுக்கு முன்னால நாங்க, பேசஞ்சர்ஸுக்கு சேஃப்ட்டி விஷயங்கள் பத்தி டெமோ காட்டணும். மத்தவங்க கரெக்ட்டா டெமோ பண்ணிட்டிருக்காங்க. நான், அதை மறந்து போய், அப்படியே நின்னுக்கிட்டிருந்தேன்.
எல்லாரும் என்னை மட்டும் ஒரு டைப்பா பார்த்ததும் ஒரு வழியா சிரிச்சு, சமாளிச்சிட்டு, நானும் டெமோ பண்ணினேன்’’ என்கிற குனிகாவுக்கு தோழிகள் கை கொடுக்க....
‘‘பயணியா எத்தனையோ முறை ஃபிளைட்ல டிராவல் பண்ணிருக்கேன். ஆனா, யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு ஏர் ஹோஸ்டஸா உள்ளே நுழைஞ்ச அந்த முதல் நாள் இருக்கே... புது யூனிஃபார்ம், புது ஸ்கூல் பை, புது புக்ஸ் எடுத்துக்கிட்டு, கிளாஸ் ரூமுக்குள்ள போற ஸ்டூடண்ட் மாதிரி இருந்துச்சுப்பா...’’ - குழந்தையாக மாறிக் குதூகலித்தவர் கேத்தரின்.
‘‘என்னோட ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ட்ரிப்லேயே பேசஞ்சர்கிட்டயே, ‘அழகா சிரிக்கிறீங்க’ன்னு பாராட்டு வாங்கினேன் தெரியுமா...’’ என்றபடி, அதை நிரூபிக்கும் வகையில் அசத்தலாக சிரிக்கிறார் ஷீபா சிங்.
‘‘எனக்கு முதல் நாள் மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ் ஒண்ணு இருக்கு.... டெல்லி டூ கோவா போற ஃபிளைட் அது. 25 பேர் மொத்தமா டிராவல் பண்ணினாங்க. திடீர்னு ஒருத்தர், ‘அவசரமா சேஃப்டி பின் வேணும், கிடைக்குமா’ன்னு கேட்டார். கொண்டு வந்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா, அவங்க கையில இருந்த வாட்டர் பாட்டிலை ஓட்டை போட்டு, பக்கத்துல உள்ளவங்க மேல ஸ்பிரே பண்ணி விளையாட ஆரம்பிச்சிட்டார். மத்த பேசஞ்சர்ஸ் எல்லாம் என்னை முறைக்க... அவங்களை கூல் பண்ணி, நிலைமையை சுமுகமாக்கினேன். நல்லா ஹேன்டில் பண்ணினேன்னு என் சீனியர்ஸ் கூட என்னைப் பாராட்டினாங்க...’’ - சொல்லி முடித்த சரண்யாவின் முகத்தில் அப்படியோர் பெருமிதம்.
‘‘ஹேய்... எனக்குக் கூட அப்படியொரு எக்ஸ்பீரியன்ஸ்
உண்டுப்பா...’’ என அவசரமாகக் குறுக்கிட்டவர் குனிகா.
‘‘முதல் முறை டிராவல் பண்றவங்களை சமாளிக்கிறதுதான் சேலன்ஜ். ஒருமுறை அப்படித்தான் ஆச்சு. கூட்டமா சேர்ந்து வந்திருந்தாங்க. எல்லாருக்கும் சாண்ட்விச் கொடுத்தோம். சாப்பிட்டதும், ‘ஃபிளைட் ஜன்னலை திறந்து, கை கழுவணும், பேப்பரை தூக்கிப் போடணும்’னு அடம் பிடிச்சாங்க. ‘பஸ், டிரெயின் மாதிரியெல்லாம் இதுல ஜன்னலை திறக்க முடியாது’ன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கறதா இல்லை. ‘அப்போ எங்களுக்கு ஏதாவது ஆபத்துன்னாகூட ஜன்னலை திறக்க மாட்டீங்களா’ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குப் புரிய வச்சு, அமைதியாக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சு. இன்னொரு முறை ஒரு வயசான பாட்டியம்மா வீல் சேர்ல வந்து ஃபிளைட்டுக்குள்ள ஏறினாங்க. அவங்க இறங்கற வரை அப்பப்ப பக்கத்துல போய் என்ன வேணும், எப்படி இருக்காங்கன்னு பார்த்துக்கிட்டேன். இறங்கும் போது, என்னைக் கட்டிப்பிடிச்சு, கண்ணீர் விட்டு, ‘என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டேம்மா... தேங்க்ஸ்’னு சொன்னாங்க... எனக்கே கண் கலங்கிருச்சு தெரியுமா...’’ - செம ஃபீலிங்குடன் அவர் சொன்னதை ரசித்துக் கேட்டார்கள் தோழிகள்.
வழக்கமான வேலைகளைப் பார்க்கிற மற்றவர்களுக்கெல்லாம் பயணம்தான் மன அழுத் தம், டென்ஷனில் இருந்து விடுபடச் செய்கிற வடிகால். இந்த பறக்கும் பாவைகளுக்கோ, பயணம்தான் வேலையே...
இவர்களில் பலரும் பெற்றோரை, உறவினர்களைப் பிரிந்து, ஊர் விட்டு ஊர் வந்து தனியாகத் தங்கியிருப்பவர்கள். சிரமமாக இல்லை? தினசரிப் பயணம் போரடிக்காதா?
‘‘சான்ஸே இல்லை... வழக்கமான 9 டூ 5 வேலைன்னா, ஒரே மாதிரி வேலையை உங்க வாழ்க்கை முழுக்க பார்த்துப் பார்த்து போரடிக்கும். எங்க வேலையில தினம் தினம் புதுப்புது இடங்களுக்குப் போறோம். புதுசு புதுசா மக்களை சந்திக்கிறோம். ஸ்டார் ஹோட்டல்ல ஸ்டே பண்றோம். இந்த வயசுல மத்த வேலையில உள்ளவங்க இவ்ளோ சம்பாதிப்பாங்களாங்கிறது சந்தேகம். இதைவிட வேறென்ன
வேணும்...’’ என்ற கிமியை தொடர்ந்தார் ஷாலினி நாயுடு.
‘‘எங்கே போனாலும் ஃபிளைட்ல போகற வாய்ப்பு, நமக்கு மட்டுமில்லாம நம்ம குடும்பத்துக்கும் அந்த வாய்ப்பு இந்த வேலையில மட்டும்தான் சாத்தியம். ஒருவாட்டி எங்கம்மா, அப்பா ஸ்பைஸ்ஜெட்லயே ஒரு ஃபிளைட்ல டிராவல் பண்ணினாங்க. எனக்கு அவங்களை மீட் பண்ணணும், அவங்க வர்ற ஃபிளைட்ல நான் ஏர் ஹோஸ்டஸா இருக்கணும்னு ஆசை. கம்பெனிக்கு என் ஆசையைச் சொன்னேன்.
உடனே நிறைவேத்தினாங்க. இந்த மாதிரி ‘ரெக்வெஸ்ட் ஃபிளைட்’, ஏதாவது அவசரம்னா ‘எமர்ஜென்சி ஃபிளைட்’ வசதியெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம்!’’ ‘‘ஒரு நடிகைக்கு என்ன மாதிரியான மரியாதை கிடைக்குமோ, அதே மாதிரிதான் எங்களுக்கும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வெறும் டீ, காபி கொடுக்கிறதோட எங்க வேலை முடிஞ்சிடறதில்லை.
இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி எப்படிப் பேசணும், எப்படி சிரிக்கணும், எப்படி வணக்கம் சொல்லணும்னு அடிப்படையான விஷயங்கள்ல ஆரம்பிச்சு, திடீர்னு உடம்புக்கு முடியாமப் போகிற பயணிகளை எப்படி பாதுகாப்பா பார்த்துக்கணுங்கிற முதலுதவி, ஃபிளைட் பறந்திட்டிருக்கிறப்ப, ஏற்படற திடீர் அசம்பாவிதங்களின் போது எப்படி ரியாக்ட் பண்ணணும்ங்கிற வரைக்கும் சகலத்துக்குமான டிரெயினிங் உண்டு. கிட்டத்தட்ட 39 ஆயிரம் அடி உயரத்துல பறக்கிற ஃபிளைட்ல, அத்தனை பயணிகளோட பாதுகாப்புக்கும் நாங்கதான் பொறுப்பு. பெருமையான விஷயமில்லையா அது!’’ - இது வினிதா.
‘‘கஷ்டம்னு சொல்லிக்கிற மாதிரி இந்த வேலையில பெரிசா ஒண்ணுமில்லை. நாங்க எல்லாரும் மிஸ் பண்ற ஒரே விஷயம் தூக்கம். சில சமயம் அதிகாலையில ஃபிளைட் இருக்கும். சில சமயம் லேட் நைட் ஃபிளைட் இருக்கும். எந்த நேரமானாலும் தயாரா இருக்கணும். வாரத்துல ஒருநாள் எங்களுக்கு லீவு. அந்த ஒருநாள் வேலை பார்க்காம, வீட்ல இருக்கிறதே போரடிக்கும்னா, எங்களுக்கு ஃபிளையிங் எவ்ளோ பிடிக்கும்னு நீங்களே கணக்குப் பண்ணிக்கோங்க...’’ என்ற குனிகாவின் பதிலை அத்தனை பேரும் ஆமோதித்தனர்.
‘‘பர்சனலா நமக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், ஃபிளைட்டுக்குள்ள ஏறினதும், அதையெல்லாம் ஓரங்கட்டி வச்சாகணும். எல்லாத்தையும் மறந்துட்டு, சிரிச்ச முகத்தோட, பேசஞ்சர்ஸை வரவேற்கணும்.
உபசரிக்கணும். அதுக்காகத்தான் எங்களுக்கு இந்த சம்பளம், இந்த மரியாதை... எல்லாம்.... முதல்முறை டிராவல் பண்றவங்களுக்கு நிறைய பயமும் நடுக்கமும் இருக்கும். ஃபிளைட் லேசா சாய்ஞ்சாலே, பயந்து போய் எங்களைப் பார்ப்பாங்க. ‘ஒண்ணுமில்லை... பயப்படாதீங்க’ன்னு சொல்லி, நாங்க நம்பிக்கை தந்த பிறகுதான் அவங்க நிம்மதியாவாங்க...’’ - நெகிழ்ந்து பேசினார் கேத்தரின்.
‘‘ஏர் ஹோஸ்டஸா இருக்கிறதுல இவ்ளோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், முக்கியமான ஒண்ணு இருக்கு. நிறைய பிரபலங்களை சந்திச்சிட்டே இருப்போம். அரசியல் பிரபலங்கள், பிசினஸ்மேன்னு நிறைய பேர் வருவாங்க. அப்புறம்... சினிமா ஆர்ட்டிஸ்ட்... விஜய், விஷால், ஆர்யா, தீபிகா படுகோன், ஸ்ரேயான்னு அடுக்கிக்கிட்டே போகலாம். அத்தனை பேரையும் அவ்ளோ பக்கத்துல பார்க்கிற வாய்ப்பு வேற யாருக்குக் கிடைக்கும்?’’ - சட்டென சராசரி ரசிகையாக மாறியவர் ஷீபா சிங்.
‘‘என்னதான் நாங்க அவங்க ஃபேன்ஸா இருந்தாலும், ஃபிளைட்டுக்குள்ள போய் தொந்தரவு பண்ண முடியாது. எங்களுக்கு எல்லா பேசஞ்சர்ஸுமே வி.ஐ.பிதான். அதுவுமில்லாம, சாதாரண ரசிகர்கள் மாதிரி நாங்க ஃபிளைட்டுக்குள்ள அவங்களை தொந்தரவு பண்ண முடியாது. அங்கே அவங்களுக்கான ஸ்பேஸை கொடுத்தாகணும்...’’ - சரண்யாவை இடைமறித்த தோழிகள் ஒரே குரலில் சொன்ன விஷயம் ஆச்சரியம்...
‘‘ஒருத்தர் மட்டும் விதிவிலக்கு. சூர்யா... அவர் எப்போ எங்க ஃபிளைட்ல வந்தாலும், போட்டோகிராஃப், ஆட்டோகிராஃப்னு எதையும் மிஸ் பண்ணவே மாட்டோம்ல...’’ (அட்டென்ஷன் மிஸ்டர் சூர்யா.... உங்க அடுத்த படத்துக்கு ஹீரோயின்ஸ் ரெடி!)
இளமையும் அழகும் இருக்கும் வரைதான் ஏர்ஹோஸ்டஸ் வேலையில் இருக்க முடியும். திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டுவிட்டால் வேலையைவிட்டு நீக்கப்படுவார்கள், ஏர்ஹோஸ்டஸ் வேலையில் பிரமோஷன் இல்லை என்றெல்லாம் சொல்லப்படுவது பற்றியும் பேசினார்கள் இந்தப் பேரழகிகள்.
‘‘கல்யாணமாகி, குழந்தை பெத்த பிறகும், ஏர் ஹோஸ்டஸா கன்டினியூ பண்றவங்க இருக்காங்க. வயசோ, குழந்தை பெத்துக்கிறதோ இந்த வேலையில ஒரு தடையே இல்லை. நம்ம உடம்பை எவ்ளோ அழகா, ஸ்லிம்மா, கரெக்ட்டான ஷேப்ல வச்சிருக்கோம் என்கிறதுதான் முக்கியம். மத்த வேலைகளைப் போலவே இதுலயும் பிரசவ லீவு உண்டு. அது முடிஞ்சதும் மறுபடி ஏர் ஹோஸ்டஸா நம்ம வேலையைத் தொடரலாம். ஒருவேளை விருப்பமில்லைன்னா, வேற வேற வேலைகளுக்கும் மாத்திக்கலாம்’’ - தவறான கருத்துகளைத் தெளிவுப்படுத்தினார் குனிகா.
‘‘ஆர்வமும் திறமையும் இருந்தா, ஏவியேஷன் துறையில அடுத்தடுத்து புரமோஷன் வாங்கி, பெரிய பதவிகளுக்குப் போயிட்டே இருக்கலாம். இப்பதான் சமீபத்துல எனக்கு ‘கேபின் க்ரூ இன்சார்ஜ்’ புரமோஷன் கிடைச்சிருக்கு. பொதுவா சேஃப்டி சைடுல நான் ரொம்ப பிரில்லியன்ட்டுனு நிறைய பேர் பாராட்டுவாங்க. ஸோ... எதிர்காலத்துல ‘சேஃப்டி இன்ஸ்ட்ரக்டர்’ ஆகணும்னு ஒரு பிளான் இருக்கு...
எங்கள்ல யாரைக் கேட்டீங்கன்னாலும், ஒருத்தர் கூட வேற வேலைக்குப் போறதைப் பத்தி நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. இதே துறையில, அடுத்தடுத்த லெவல்... அதுதான் எங்க எல்லாரோட கனவும் லட்சியங்களும்... ஏன்னா, சவால்களையும் சாதனைகளையும் விரும்பறவங்களுக்கு இந்த ஃபீல்டுதான் ‘தி பெஸ்ட்!’’ அத்தனை பேர் சார்பாகவும் பேசிய ஷாலினிக்கு ‘தம்ஸ் அப்’ காட்டிக் கட்டியணைத்துக் கொண்டனர் தோழிகள். ஏர்ஹோஸ்டஸ் வேலையில் இத்தனை சவுகர்யங்களா? அழகுப்பெண்கள் அப்ளிகேஷனை தட்டலாமே!
- ஆர்.வைதேகி
அட்டை மற்றும் சிறப்புப் படங்கள்: ஆண்டன்தாஸ்