அரக்கன் மனிதன் மாமனிதன்!
* பிறர் நமக்கு துன்பம் தரும்போது நமக்கு வலிக்கிறது... * ‘நம்மை துன்பப்படுத்தியவரும் துன்பப்படட்டும்... வலியை அனுபவிக்கட்டும்’ என்று எண்ணுவது அரக்க குணம். * பிறர்க்கு நாம் துன்பம் தரும்போது அது நமக்கும் வலித்தால் அது மனித குணம். பிறருக்கு வலிக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது. * பிறருக்கும் வலிக்கும் என்று உணர்ந்து துன்பம் தராமல் மன்னிப்பது மாமனித குணம். * நம் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்று குணங்களும் அவ்வப்போது தலை தூக்கும். அரக்க குணத்தை குறைத்து, மனித குணத்தை அதிகமாக்க முயல வேண்டும். * முதலில் மனிதனாக வாழ முயற்சித்தால் அவன் மாமனிதனாக போற்றப் படுவான்... முயற்சிப்போம்! - சீதாலட்சுமி
ஞாபகப் பொத்தல்களின் வழியே கசியும் உன் நினைவுகள் இதழிடுக்குகளில் புன்னகையாகவும் கண்களில் கண்ணீராகவும்... - சாந்தி ராஜ்
‘நாளை நான் சாப்பித்தேன்’ என்பா... ‘நேத்து நான் சாப்பிதுவேன்’ என்பா... இலக்கணங்கள் இல்லை எனினும் இலக்கியங்கள் உண்டு மகளின் மழலைத் தமிழில்! - தமிழமுது
எதைப் பற்றியும்... ஏன் பறத்தலை பற்றியும்... உணர விரும்பா பறவை நான்! - கவிதா சொர்ணவல்லி
பள்ளி செல்லும் வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளையும் எந்த நேரமும் டாஸ்மாக் வாசலில் குவிந்து கிடக்கும் கும்பலையும் பார்க்கும்போது அடக்கமாட்டாத துயரமும் கோபமும் வருகிறது எனக்கு... - செல்வி சங்கர்
எனது பிறந்த தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு அதிகாலை ஐந்தரை மணி... போன் வந்தது... கணவர் பேசினார். பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘இன்று எனக்கு பிறந்த
நாள் இல்லை’ என்று சொன்னேன். ‘சாரி சாரி’ என்று வழிந்துகொண்டே போனை வைத்தார். ‘செலக்டிவ் அம்னீஷியா’ போல இவருக்கு ‘செலக்டிவ் மெமரி’. சில விஷயங்கள் மட்டும் தேதி சுத்தமாக,நேர
சுத்தமாக ஞாபகம் இருக்கிறது! ‘விஜி இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? சொர்ணா (முன்னாள் சைட்டாம்) பிறந்த நாள்.’ ‘விஜி இன்னைக்குத்தான் சொர்ணாவ முதலில் பார்த்தேன்.’ ‘விஜி இன்னைக்கு மதியம் ரெண்டே முக்கால் மணிக்குதான் சொர்ணாகிட்ட முதல் முதல்ல பேசினேன்.’ இதை எல்லாம் கூட தாங்கிக்கலாம். ‘விஜி இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? சொர்ணாக்கும் அவ லவ்வருக்கும் கல்யாணம் ஆன நாள்.’ (முதல் கல்யாணமான்னு நானும் கேக்கல... அவரும் சொல்லல). கத்தி எடுத்து குத்தலாம் போல இருந்தது... அமைதியாகக் கேட்டேன்... ‘நம்ம கல்யாண நாள் என்னைக்குன்னு சொல்லுங்க...’ ‘தெரியல விஜி... பட் அன்னைக்குத்தான் நமக்கு கல்யாணம் நடந்தது...’ - விஜயலட்சுமி
ஸ்பெஷல் புல்லாங்குழலின் துளைகளுக்கு அருகே மௌனமாக காத்திருக்கும் இசை போல எங்கும் நீக்கமற வியாபித்திருக்கிறது என் அன்பு... உட்கொள்வாய் அதனை.... - ரமா இன்ப சுப்பிரமணியம்
நாம் தோற்பதும் ஜெயிப்பதும் நம்மோடுதான் ! - நீத்து விஜி
மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியான சிலர் கண்களில் படுகிறோம், மிகச் சரியாக, தவறாகப் புரிந்துகொள்ளப் படுவதற்கெனவே! - சசிகலா பாபு
என்னுள் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கும் உனக்கான காத்திருப்பை நீ உணரும் நொடிப்பொழுதில் மீண்டும் துளிர்ப்பேன் ஓர் மாதுளிராக... - மரிய மெர்லின் வித்யா
உன்னைக் காணாத போதில் உன்னையும் கண்ட போதில் வார்த்தைகளையும் தேட வைக்கிறாய். - மஞ்சுபாஷிணி ஜெகதானந்தன்
தான் செய்த நன்மையையும் தன் நட்புகள் செய்த தீமையையும் வெளியே சொல்லாது இருப்பவனே சிறந்த நண்பன் ஆகிறான். - ஆண்டனி ரோசலின்
மின்சாரத்தை மட்டும் அண்டா குண்டாவில் சேமிக்க முடிந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்! - ரத்திகா பவழமல்லி
எல்லாவற்றின் ஆரம்பங்களும் உன் நினைவில் முடிவடைய, முடிவற்ற ஆரம்பமாய் நீ மட்டும்! - இந்திரா கிறுக்கல்கள்
சொல்லித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற பிடிவாதத்தில் பெண்ணும்... சொல்லாமல் புரிந்துகொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தில் ஆணும்... இதற்கிடையில் ஓடத்தான் வேண்டும் என்ற ஓட்டத்தில் வாழ்க்கையும்! - மாதங்கி லதா
ஞாபகப் பொத்தல்களின் வழியே கசியும் உன் நினைவுகள் இதழிடுக்குகளில் புன்னகையாகவும் கண்களில் கண்ணீராகவும்... - சாந்தி ராஜ்
|