நான்...அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியின் மேயெஸ்வில்லி. 1875 ஜூலை 10. சாமுவேல் - பார்ட்சி என்ற ‘அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க’ தம்பதிக்கு 15வது குழந்தையாகப் பிறந்தேன். என் பெயர் மேரி மெக்லியோட். மற்ற குழந்தைகளைவிட நான் ஒருவிதத்தில் அவர்களுக்குச் சிறப்பு. எனக்கு முன் பிறந்த 14 குழந்தைகளும் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள், அடிமையாக வாழ்ந்தபோது பிறந்தவர்கள். நான் அடிமை அல்ல!
என் பெற்றோருக்கு மொத்தம் 17 குழந்தைகள். என் அப்பா துணிச்சலானவர், அதே நேரத்தில் மிகவும் மென்மையானவர். என் அம்மா மன வலிமையும் உடல் வலிமையும் கொண்டவர். இந்தப் பெரிய
குடும்பத்தை அவர்தான் வழிநடத்திச் சென்றார். என் அம்மா வில்சன் என்பவரின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். அப்பா பருத்திப் பண்ணையில் வேலை செய்து வந்தார்.
நான் ஓரளவு பெரியவளானவுடன் என்னையும் வேலை செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றார் அம்மா. அவருக்கு உதவியாக நான் வேலை செய்துகொண்டிருந்தபோது, வில்சன் குழந்தைகளின் குரல்
என்னை ஈர்த்தது. அவர்கள் படிக்கும் அறைக்குச் சென்றேன். அவர்களைச் சுற்றி பென்சில்கள், புத்தகங்கள், சிலேட்டுகள் இருந்தன. எனக்கு ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வேகமாகச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்தேன்.
“மேரி... உனக்குப் படிக்கத் தெரியாது. புத்தகத்தைக் கீழே வை. உனக்கு நான் சில படங்களைக் காட்டுகிறேன்’’ என்றாள் வில்சனின் மகள்களில் ஒருத்தி.
‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற வாக்கியம் என்னை ஓங்கி அறைந்தது போல இருந்தது. அப்படியே நின்றேன்.
“உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று மீண்டும் அவளின் குரல் என் காதில் விழுந்தது.
என் இதயத்தில் அதுவரை உணர்ந்திராத வலி. கண்களில் ஈரம் கசிந்தன. “நானும் ஒருநாள் உன்னைப் போலவே படிப்பேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு, அந்த இடத்தை விட்டுக் கிளம்பினேன்.
ஆமாம்... எனக்கு ஏன் படிக்கத் தெரியவில்லை?
நான் யோசிக்க யோசிக்க உண்மை புலப்பட்டது. எங்களைப் போன்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் யாரும் படிக்கவில்லை என்பது புரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். நாங்களும் மனிதர்கள்தானே?
எங்களுக்குப் படிப்பு அவசியமில்லையா? நிற வேறுபாட்டால் அத்தியாவசியமான விஷயங்கள்கூட மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? படிப்பு என்ற ஒன்று இல்லாததால்தான் நாங்கள் இவ்வளவு அறியாமையிலும் கஷ்டத்திலும் வாழ்கிறோம். படிப்பு இருப்பதால் அமெரிக்கர்கள் எங்களை விடச் சிறப்பான, வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். முக்கியமாக எங்களை அடக்கி ஆள்கிறார்கள்.
எங்களுக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது. உண்மையான விடுதலை நாங்கள் பெறக்கூடிய கல்வியில்தான் இருக்கிறது. படிப்புதான் வளர்ச்சிக்கு அடிப்படை.
என் அம்மாவிடம் இது தொடர்பாக விவாதித்தேன்.
“நாம் முயற்சி செய்தால் படிக்கலாம்... படிப்பின் மூலம் மாற்றத்தை உருவாக்கலாம்’’ என்றார் அம்மா.
ஒருநாள் நான் பருத்தி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அந்த அற்புதமான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அவர் பெயர் எல்மா வில்சன். எங்கள் ஊரில் உள்ள தேவாலயத்தின் மூலம்
அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களுக்கு கல்வி வழங்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறதாகவும் என்னை அந்தப் பள்ளியில் படிக்க அனுப்புமாறும் கூறினார்.
‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்பதைக் கேட்டு எவ்வளவு வருத்தம் அடைந்தேனோ, அதைவிட பல மடங்கு சந்தோஷத்தை இப்போது அடைந்தேன். மகளின் லட்சியத்தை அடைய இவ்வளவு விரைவில்
ஒரு வாய்ப்பு வந்ததை எண்ணி, என் அம்மா ஆனந்தப்பட்டார்.
தேவாலயத்தில்தான் எங்கள் பள்ளி அமைக்கப்பட்டிருந்தது. சிறிய பெஞ்சுகள், மேஜைகள் போடப்பட்டிருந்தன. சுவரில் ஒரு கரும்பலகை தொங்கிக்கொண்டிருந்தது. என்னைப் போல நிறைய குழந்தைகள்
படிக்க வந்திருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு நல்ல உடை கூட கிடையாது.
எங்களுக்குப் புது உலகத்துக்குள் நுழைந்தது போல இருந்தது. எல்மா வில்சன் எங்களைப் பொறுமையுடனும் அன்புடனும் நட்புடனும் கையாண்டார். நாங்கள் அறிந்த வரை அமெரிக்க வாழ்
ஆப்பிரிக்கர்களில் எல்மா வில்சனைத்தான் ‘மிஸ்’ என்று மரியாதையுடன் அமெரிக்கர்கள் அழைத்தனர்.
நானும் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆர்வமும் உழைப்பும் விரைவில் கற்றுக்கொள்ள உதவின. வார்த்தைகளையும் வாக்கியங்களையும் படிக்க ஆரம்பித்தேன். தன்னம்பிக்கை அதிகரித்தது.
மற்றவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்தேன். படித்துக் காட்டினேன். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், பைபிள் போன்றவற்றைப் படிக்கவும் எழுதவும் என்னால் முடிந்தது. ‘அவர்களுக்குத்தான் படிப்பு
வரும்... எங்களுக்குப் படிப்பு வராது’ என்று ஒன்றும் கிடையாது. ஆனால், அமெரிக்கர்கள், எங்களுக்குப் படிப்பு தேவை இல்லை என்று எண்ணியிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் படித்து விட்டால்,
அவர்களுக்கு அடிமை வேலை செய்ய ஆள் கிடைக்காதே!
என் அண்ணனுக்கும் என்னைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது. அவருக்கு நான் படிக்கவும் எழுதவும் சொல்லிக் கொடுத்தேன். அவர் இரவு பள்ளியில் படிக்கச் சேர்ந்தார். அந்தப் பள்ளி எங்கள்
வீட்டிலிருந்து 10 மைல் தூரத்தில் இருந்தது. ஆனாலும், அதை ஒரு தடையாக எண்ணாமல் போய் வந்தார்.
எங்கள் வீட்டில் மற்ற குழந்தைகளை விட நான் வித்தியாசமானவளாக இருக்கிறேன் என்பதை என் அம்மா கவனித்தார்.
“மேரி, உன்னை மிஷனரி நல்ல மனுஷியாக மாற்றியிருக்கிறது. யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால் நீ உதவி செய்யறே. ஷூ இல்லாதவர்களுக்கு உன் ஷூக்களைக் கொடுக்கறே’’ என்று
என்னைப் பாராட்டினார் அம்மா.
வாரத்தில் ஒருநாள் பண்ணைக் குழந்தைகளை அழைப்பேன். அவர்களுக்குக் கதை, கவிதை, பாடல் எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அவர்களையும் இதுபோன்ற பாடல்களை உருவாக்கச் சொல்வேன்.
16 வயதில் படிப்பு நிறைவடைந்தது. மீண்டும் நான் பருத்திப் பண்ணைக்குச் சென்றேன். நானும் வளரவேண்டும், என் இனத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
மீண்டும் மிஸ் வில்சன் எங்கள் பண்ணைக்கு வந்தார். ஆப்பிரிக்கர்களுக்காக நிறைய உதவிகள் செய்த சிம்சனும் அவருடன் வந்திருந்தார்.
மேரி கிறிஸ்மன் கொலரடோவில் ஆசிரியராக இருக்கிறார். அவர் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க குழந்தை ஒருவருக்குப் படிக்க உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். வில்சனும் சிம்சனும் அந்த
உதவியை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். விஷயத்தை அறிந்தவுடன் நான் ஓடி வந்தேன். கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
மேற்படிப்புக்காக நான் ஸ்காட்டியா செல்லும் விஷயம் பரவியது. என் குடும்பத்திலும் எங்கள் கிராமத்திலும் இருந்து உடைகள், காலணிகள் போன்ற உதவிகள் கிடைத்தன. நான் கிளம்பினேன். எங்கள்
கிராமத்தில் இருந்து குதிரைகளிலும் எருதுகளிலும் கால்நடையாகவும் நிறைய பேர் என்னை வழி அனுப்ப வந்தனர். அவர்களின் அன்பு என்னைக் கண்கலங்க வைத்துவிட்டது. அன்பான வாழ்த்துகளுடன்
ரயில் ஏறினேன்.
1887ல் பள்ளி மாணவியாகச் சென்ற நான், 1894ல் பட்டப்படிப்பு முடித்து, மீண்டும் என் கிராமத்துக்கு வந்தேன். உடனே வில்சன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். சமூக சேவகர் ஆல்பர்டஸ் பெத்யூனை
திருமணம் செய்துகொண்டேன். ஒரு குழந்தைக்குத் தாயானேன்.
1904... மிக முக்கியமான ஆண்டு. ஒரு பென்னிக்கும் குறைவான முதலீடை வைத்துக்கொண்டு, டயோட்டனாவில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க பெண்களுக்காகவே ஒரு பள்ளியை ஆரம்பித்தேன். இது
படிப்புடன் தொழிற்கல்வியையும் அளிக்கக்கூடிய பள்ளி. கற்றுக் கொடுப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டேன். சிறப்பான கல்வியை இதன் மூலம் அளித்தேன். அந்தக்
காலத்தில் பள்ளி நடத்துவது சாதாரண விஷயமில்லை. பல பேரிடம் நன்கொடைக்காக கை நீட்டியிருக்கிறேன். அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை ஏழைத் தொழிலாளர்கள் தங்கள்
வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக அளித்தனர். சிறைக்கைதிகள் தங்களுக்குக் கிடைத்த பழங்களையும் ரொட்டிகளையும் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினர். வாஷிங்டனில் ஓர்
அமெரிக்கப் பெண்மணி, கைக்குட்டையைக் கொடுத்தார். அதற்குள் பெரிய வைரக்கல் இருந்தது. “சந்தோஷமாக உன் கனவு பள்ளியை உருவாக்கு’’ என்றார். இவை எல்லாம் ஈரம் மிக்க நிகழ்வுகள்.
பள்ளியைப் போலவே அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களுக்கு மருத்துவமனையின் தேவையை உணர்ந்தேன். அதற்காக நிதி திரட்டினேன். பெரும் முயற்சிக்குப் பிறகு மருத்துவமனையும் உருவானது.
பள்ளி கல்வி முடித்தவர்கள் பெத்யூன் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். பின்னர் அது, குக்மென் கல்லூரியில் இணைக்கப்பட்டு, பெத்யூன் - குக்மென் கல்லூரி என்று வழங்கப்பட்டது. இந்தக் கல்லூரியின்
முதல்வராக நெடுங்காலம் பொறுப்பில் இருந்தேன்.
அமெரிக்கர்களுக்கு மட்டுமே அனைத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கொள்கையுடைய ‘கு க்ளக்ஸ் க்ளான்’ என்று ஓர் அமைப்பு இயங்கி வந்தது. அந்தக் காலத்தில் இது மிகத் தீவிரமாகச்
செயல்பட்டது. அவர்களின் பல நடவடிக்கைகள் எனக்குத் தொல்லைத் தருவதாக அமைந்தன. ஆனாலும், துணிச்சலுடன் எதிர்கொண்டேன். என் தோல்வி, முன்னேறத் துடிக்கும் ஓர் இனத்தின்
தோல்வியாகி விடக்கூடாது இல்லையா?
1920ம் ஆண்டு, ஆப்பிரிக்க வாழ் அமெரிக்கர்களுக்கான மிகச்சிறந்த கல்விக் கூடம் என்று எங்கள் பள்ளிக்கு அரசாங்கத்திடம் இருந்து பாராட்டு கிடைத்தது.
நான் பல பெண்கள் அமைப்புகளில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கப் பெண்களுக்காக வேலை செய்தேன். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவி எலியனார் ரூஸ்வெல்ட் அறிமுகம் கிடைத்தது. எங்கள்
இருவருக்கும் மிகச்சிறந்த புரிதல் இருந்தது. விரைவிலேயே நல்ல நண்பர்கள் ஆனோம். அமெரிக்க அதிபர் ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட்டும் நண்பரானார். கல்வி, அரசியல், பெண்கள், குழந்தைகள் என்று
நானும் அதிபரும் பேசாத விஷயங்களே இல்லை. அதிபர் குடும்பத்துடன் அதிகம் பயணம் செய்திருக்கிறேன். பல விஷயங்களை விவாதித்து இருக்கிறேன். ரூஸ்வெல்ட் அமைச்சரவையில் ஆலோசகராகப்
பணிபுரிந்தேன்.
இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தில் பெண்கள் அமைப்பை ஆரம்பித்து, பெண்களையும் பங்கேற்கச் செய்தேன். மக்களின் குடி உரிமை சட்டங்கள் குறித்து நிறைய எழுதினேன். கூட்டங்களில்
பேசினேன். நிறம், இனம் என்ற பெயரில் மனிதர்களில் வேற்றுமை காட்டப்படுவதை என் வாழ்நாள் முழுவதும் எதிர்த்திருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களை கல்வி ஒன்றால் மட்டுமே முன்னேற்ற முடியும்
என்பதை நான் நிரூபித்திருக்கிறேன்.
என் வயது 80. நான் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கு முன்னால் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்... “நான் அன்பை விட்டுச் செல்கிறேன். நான் நம்பிக்கையை விட்டுச் செல்கிறேன். நான் உண்மையை
விட்டுச் செல்கிறேன். நான் அதிகாரத்தை மதித்து, பயன்படுத்தும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். பேதங்களற்ற சமுதாயம் உருவாக்கும் பொறுப்பை எங்கள் இளைஞர்களிடம்
விட்டுச் செல்கிறேன். விடை பெறுகிறேன்...’’
சினிமா ராணி!
1911... தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் பஞ்சாபகேச ஐயருக்கும் மீனாட்சியம்மாளுக்கும் மகளாகப் பிறந்தவர் ராஜலஷ்மி. அக்கால வழக்கப்படி 8 வயதிலேயே ராஜலஷ்மிக்குத் திருமணம் செய்து
வைக்கப்பட்டது. புகுந்த வீட்டில் வரதட்சணை கேட்டு அவரைத் துன்புறுத்தினர். மீண்டும் தாய் வீட்டுக்கே வந்தார் ராஜலஷ்மி. தந்தையும் இறந்துவிட, தாயுடன் திருச்சிக்கு வந்தார். அவரிடம் இருந்த ஒரே
சொத்து குரல் வளம். அற்புதமாகப் பாடுவார்.
‘நாடகத் தந்தை’ சங்கரதாஸ் சுவாமிகளிடம் பயிற்சி பெற்றார். 11 வயதில் ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்தார். ‘பவளக்கொடி’ - அவர் நடித்த முதல் நாடகம். தொடர்ந்து பல நாடக கம்பெனிகளில்
பணிபுரிந்தார். தேசபக்திப் பாடல்கள் பாடி, நடித்ததால் மக்களின் அன்பைப் பெற்றார்.
1917ல் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘கீசகவதம்’ என்ற முதல் மௌனப்படத்தில் நடித்த முதல் பெண் ராஜலஷ்மிதான். தொடர்ந்து மௌனப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 1931ல்
‘குறத்தி பாட்டும் நடனமும்’ என்ற முதல் குறும்படத்தில் நடித்தார். தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸி’ல் நடித்த பெருமையும் ராஜலஷ்மிக்கே. ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாகவும்
சூர்ப்பனகையாகவும் இரு வேடங்களில் நடித்தார். ‘சினிமா ராணி’ என்று கொண்டாடப்பட்டார். ‘அரிச்சந்திரா’, ‘மதுரை வீரன்’, ‘வள்ளி திருமணம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த முக்கியமான
படங்கள்.
சக நடிகரான டி.வி.சுந்தரத்தைத் திருமணம் செய்துகொண்டு, கொல்கத்தாவில் வாழ்ந்தார். தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். திரைப்பட கம்பெனி ஆரம்பித்து முதல் பெண் தயாரிப்பாளர் என்ற
முத்திரையைப் பதித்தார் ராஜலஷ்மி. தானே கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, ‘மிஸ் கமலா’ என்ற படத்தை வெளியிட்டார். இதன் மூலம் முதல் பெண் இயக்குனரானார்.
திரைப்படம் தவிர எழுத்தாளராகவும் விளங்கினார் ராஜலஷ்மி. நிறைய கதைகள், நாவல்களை எழுதினார்.
பாடகி, நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பல்வேறு வகைகளில் முதல் முத்திரையைப்பதித்து, வரலாற்றில் நிலைபெற்ற ராஜலஷ்மி 1964ம் ஆண்டு மறைந்தார்.