“படிக்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நடுக்கத்துடன்தான் பள்ளிக்குக் கிளம்பு
கிறேன். என் வகுப்பில் 27 பெண்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். இன்றோ 11 பேர் மட்டுமே இருக்கிறார்கள். என் தோழிகள் ராவல்பிண்டி, பெஷாவர் போன்ற இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மீதிப் பேர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறோம்...’’ - மலாலா யூசுப்சாய் 11 வயதில் (2009) எழுதிய பதிவு இது.
சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் கழிக்க வேண்டிய பால்ய பருவம், மலாலாவுக்கு மட்டும் இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையையும் துணிச்சலையும் தந்தது எப்படி?
பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மதவாதத்திலும் பழமைவாதத்திலும் ஊறிய இவர்கள், பெண்களுக்கு கணக்கிலடங்கா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். அதில் ஒன்று, ‘பெண்கள் கல்வி பயிலக்கூடாது’.
சிறுவயதிலேயே பயங்கரவாதிகளின் அட்டூழியங்களைக் கண்டு வந்த மலாலா, ‘பெண்களின் முன்னேற்றம் கல்வியில்தான் இருக்கிறது’ என்பதை உணர்ந்தார்... நம்பினார். தலிபான்களின் செயல்களை உலகறியச் செய்யவேண்டும் என்று நினைத்தார். பிபிசியின் உருது இணையதளத்தில், ‘குல் மகாய்’ என்ற பெயரில் தொடர்ந்து வலைப்பதிவு எழுதி வந்தார். இந்த வலைப்பதிவு பாகிஸ்தான் பெண்களிடம் விழிப்புணர்வைப் பரப்பியது. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மீது வஞ்சம் கொண்டார்கள் தலிபான்கள். இன்னொரு பக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகத் தொடங்கியது. பெண் கல்வி, குழந்தைத் திருமணம், சுகாதாரம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்திய மலாலா, ஒரு சமூகப் போராளியாக உருவானார். பாகிஸ்தானின் ‘தேசிய இளைஞர் அமைதி விருது’, 14 வயது மலாலாவுக்கு வழங்கப்பட்டது.
2012 அக்டோபர் 9. தோழிகளுடன் பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கி, நடந்து வந்தார் மலாலா. துப்பாக்கியுடன் வந்த ஒரு தலிபான், மலாலாவின் தலையிலும் கழுத்திலும் சுட்டுவிட்டுச் சென்றான். தோழிகள் படுகாயம் அடைந்தனர்.
ஒரு நொடியில் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் மலாலா. பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரவாதத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர். பள்ளி மாணவர்கள், மாணவிகள் எல்லோரும் ‘நான்தான் மலாலா’ என்ற வாசகங்களை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தார்கள். ‘என் மகள் மலாலா’ என்று பெண்களும் ஆண்களும் கதறினார்கள். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மத்தியில் ரோல்மாடலாக மாறிவிட்ட மலாலா, குழந்தைகளுக்குள்ள பிரச்னைகளை குழந்தைகள் புரிந்துகொள்ளவும் வழி செய்திருக்கிறார்.
“என்னுடைய 6 குழந்தைகளிடமும் மலாலாவைப் பற்றியும், அவள் எதற்காக இந்த முடிவைச் சந்திக்க நேரிட்டது என்பது பற்றியும் எடுத்துச் சொன்னேன். நான் மட்டுமல்ல... உலகில் உள்ள அம்மாக்களும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் மலாலாவைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள். மலாலாவுடன் சேர்வோம்... பெண் கல்விக்காகப் போராடுவோம்’ என்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
வரலாறு முழுவதும் அறிவும் துணிவும் மிக்க ஹைபேஷா, ஜோன் ஆஃப் ஆர்க் போன்ற பெண்களைக் காவு வாங்கிய மதவாதமும் பழமைவாதமும், இந்த 21ம் நூற்றாண்டிலும் திமிருடன் செயல்படுவதை துணிச்சலுடன் எதிர்கொள்வோம். பெண் கல்விக்குத் தோள் கொடுப்போம். உலகம் முழுவதும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்த பிறகும், ‘உயிருடன் திரும்பி வந்தால் மீண்டும் கொல்வோம்’ என்று சொல்லும் தலிபான்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
ஒவ்வொரு பெண்ணும் பள்ளி செல்ல வேண்டும் என்று போராடிய மலாலா, நீயும் பள்ளி செல்ல விரைவில் திரும்பி வரவேண்டும்!
- விஜயா ஆனந்த்