தேவதைகள் எல்லா நேரங்களிலும் வெள்ளுடை தரித்து வருவதில்லை. அழுக்கு உடையோடும் கருத்த முகத்தோடும்கூட இந்த பூமியில் உலவுவதுண்டு. நம்பியிருந்த வாழ்க்கைத்துணை உள்ளதையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓட, எதிர்காலம் இருண்ட சூழலிலும் துவளாமல் போராடிய லட்சுமி, ஒப்பாரிப் பாடகியாக உருவெடுத்து சமூகத்தை அதிர்வூட்டுகிறார். உயிருக்கு உயிராக தோள் கொடுத்த கணவன் திடீரென இறந்துபோக, கலங்கித்துவளாத கிருஷ்ணவேணி, தன் கணவனின் பிணந்தூக்கி வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கடலில் கால் வைக்கவே அஞ்சி நின்ற சேதுராக்கு இன்று, தனியாக வத்தை வைத்து ஆழ்கடல் சென்று மீன் பிடிக்கிறார்.
இப்படி, மறுக்கப்பட்ட தொழில்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட மூன்று பெண்களின் வாழ்க்கையை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் லீனா மணிமேகலை. ‘தேவதைகள்Õ என்று பெயரிடப்பட்ட அந்த ஆவணப்படம், பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை குவித்தி¢ருக்கிறது. தேவதைகளைப் பற்றி இந்த இதழிலும், லீனா மணிமேகலையின் இன்னும் இரு படங்கள் பற்றி அடுத்த இதழிலும் பார்க்கலாம்.
லட்சுமிகுரலும் விழியுமே அவருக்குள் உறைந்திருக்கும் அமானுஷ்யத்தை உணர்த்தி விடுகிறது. இயல்பை மீறிய வார்த்தைகள், சராசரியை மீறிய உடல்மொழி என ஒரு தனித்துவமான உலகத்தில் வாழ்கிறார் லட்சுமி. ‘‘திருவண்ணாமலை மாவட்டத்துல கல்ரபாடி நான் வாக்கப்பட்ட ஊரு. வீட்டுக்காரன் தாய்மாமன்தான். குடிச்சிட்டு வந்து உதைப்பான். இப்படியே அடி உதையைத் தாங்கிக்கிட்டு
6 புள்ளைகளையும் பெத்துப்போட்டேன். ஆயா... அதான் என்னோட மாமியாரு... ‘பேரன் வேணும் பேரன் வேணும்’னு சொல்லிச் சொல்லியே என் உயிரை வதைச்சுப்புட்டா. ஒத்த நிமிஷம் சும்மா இருக்க மாட்டேன்... களையெடுக்க, கருது அறுக்க, நடவு நடன்னு காட்டு வேலைக்கும் போயி சம்பாரிச்சுக் கொட்டுனேன். எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு தினமும் வதை... அடி உதை... எந்தப் பொம்பளை நீடிச்சு வாழ முடியும்? இல்லை அப்படி என்னதான் அவசியம்? ரெண்டு புள்ளைவள மட்டும் கையில புடிச்சுக்கிட்டு கிளம்பிப் போயிட்டேன். ‘நானே வேணாம்னுட்டு வந்துட்டே... எம்புள்ளைகளை மட்டும் ஏன் வச்சிருக்கே’ன்னு அந்த ரெண்டு புள்ளைகளையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். சரி... அதுவும் நல்லதுதான்னு நான் பாட்டுக்கு என் வேலையைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...
மூணுவேளை இல்லாட்டியும் ரெண்டு வேளையாவது சாப்புடணுமே... மாட்டுக்கறி விக்க ஆரம்புச்சேன். தினம் 50 கிலோ அன்னக்கூடையை தலையில வச்சுக்கிட்டு பத்து, பதினைஞ்சு ஊரு சுத்துவேன்.
உடம்பு வருத்துற நேரத்துல என் கதையை பாட்டாப் பாடி கண்ணீர் விட்டுக்கிட்டுப் போவேன்’’ என்கிறார் லட்சுமி.
தனக்குள் காளியின் சக்தி இருப்பதாகச் சொல்கிறார் லட்சுமி. பாதிக்கப்பட்ட எல்லா பெண்களுக்குள்ளும் இருப்பாள்தானே காளி! வார்த்தைகளில் மட்டுமல்ல... ஆட்டத்திலும் அந்தக் காளி வெளிப்படுகிறாள். லட்சுமி ஆடும் ருத்ரதாண்டவத்தில் சமூகத்தின் ஆணிவேரே ஆட்டம் காண்கிறது.
‘‘ஓங்காளி, மாங்காளி, அந்த மாயனோட தங்கச்சி அவ ஒடம்புல பாதியை எனக்குக் கொடுத்திருக்கா. குரலெடுத்துட்டா மனசுக்குள்ள அடஞ்சு கிடக்கிற சோகமெல்லாம் உடைஞ்சு வெளியே வந்திரும்...’’ என்கிற லட்சுமிக்கு ஒரு நிகழ்வுக்கு 550 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.
பசித்தவனுக்குத்தான் பிறரின் பசி வலி தெரியும். வாழ்வின் விளிம்புக்கு தள்ளப்பட்ட லட்சுமி, அடுத்த மனிதனின் பசியறிந்து உதவுகிறார். அதுமட்டுமல்ல... அவருக்கு நெருக்கமான இன்னொரு ஸ்னேகமும் இருக்கிறது. தினமும் பன் வாங்கிக்கொண்டு வனப்பகுதிக்குச் செல்கிறார்.
இவரின் வாசனை உணர்ந்து கொள்ளும் குரங்குக்கூட்டம் நட்புணர்வோடு சூழ்ந்து கொள்கிறது. பகிர்ந்தளித்துவிட்டு அவை அசைபோடுவதையும் ரசித்து விட்டுத்தான் வீடு திரும்புகிறார்.‘‘அந்த ஆளு இல்லைன்னா செத்துப்பூடுவேன்னு நினைச்சான். இன்னைக்கு யாரு செத்தாலும் என்னைத்தான் கூப்பிடுறாங்க. பலபேருக்கு ஒப்பாரி பாடியிருக்கேன். எனக்கு ஒப்பாரி பாடத்தான் யாரும் இல்லை...’’ - அமானுஷ்யம் ததும்பிய லட்சுமியின் கண்களில் இப்போது கண்ணீர் ததும்புகிறது.
சேதுராக்கு‘‘சின்ன வயசுல கடல்ல காலு வைக்கவே பயப்புடுவேன். ஒருநாளு எந்தாய்மாமன், ‘வத்தையில வாபுள்ள கடலுக்குள்ள கூட்டிப்போறேன்’னு கூப்பிட்டாக. தொரத்திப் புடிச்சு உக்கார வச்சுக் கூட்டிக்கிட்டுப் போனாக. பாதித்தூரம் போனபிறகு மாமா ஒரு கயித்தெடுத்து எம் உடம்புல சுத்துனாக. ஏதோ வெளையாடுறாகன்னு நினைச்சேன். ஒருமுனையைப் பிடிச்சுக்கிட்டு திடீர்னு என்னை கடலுக்குள்ள தூக்கி வீசிட்டாக... மூணு, நாலுமொறை, குழி போட்டு, தண்ணி குடிச்சு தத்தளிச்சுக் கிடந்த பிறகு, கயிறைப் புடிச்சு இழுத்து வத்தையில போட்டாக... ‘கடலு நமக்கு அம்மா மாதிரி... செத்தாலும் வாந்தாலும் அதோடதான் நமக்கு வாழ்க்கை. கடலுக்குள்ள போகவெல்லாம் பயப்படக்கூடாது’ன்னு புத்திசொன்னாக...’’ - ராமேஸ்வரம் சேதுராக்கு பேசுகிற உப்புப்படர்ந்த கடலோரத் தமிழ் இனிக்கவே செய்கிறது.
இன்று தாய்மாமா கற்றுக்கொடுத்த பாடம்தான் சேதுவின் வாழ்க்கையாக இருக்கிறது. தனியாக ஒரு வத்தை (படகு) வைத்து, கூலிக்கு சில பெண்களையும் வைத்துக்கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கிறார்.
‘‘குடும்ப சூழ்நிலை சரியில்லே. படிப்பும் நமக்கு ஏறலே. மாமா கடலுக்குள்ள தூக்கிப் போட்டப்போ எனக்கு 12 வயசு. அதுக்குப்பிறகு கடல் மேல இருந்த பயம் போயிருச்சு. சின்னக் கடலு, பெரிய கடலுன்னு கடல்ல வித்தியாசம் இருக்கு. தண்ணி வடியிற கழிமுகத்துக்கு பேரு சின்னக்கடலு. பெரிய கடலுன்னா ஆழத்துக்குப் போறது. அப்போ இருந்த கடல் வேற.. இப்போ இருக்கிற கடல் வேற.
அப்போ கடலுக்குள்ள போற ஆம்பளைக 50 கிலோ, 60 கிலோன்னு மீனை அள்ளிக்கிட்டு வருவாக. இப்போ 5 கிலோ கிடைச்சாலே அபூர்வமா இருக்கு. அன்னைக்கு கடலு இப்படித்தான்னு கணிக்க முடிஞ்சுச்சு. இன்னைக்கு கடலை கணிக்கவே முடியலே...’’ என்றபடி வலையைப் பிரித்துப்போடுகிற முத்துராக்கு, அனுபவங் களை சொல்லும்போது வலிக்கிறது.
‘‘வூட்டுக்காரு நல்லாயிருக்கும்போது நமக்குச் சம்பாரிச்சுப்போட்டாரு. இப்போ முடியாதபோது நாமதானே செய்யணும்? சரி, நமக்கு பழக்கமான கடலுதானேன்னு இறங்கிட்டேன். என்னை மாதிரியே இருந்த நாலைஞ்சு பேரு கூட வந்தாங்க. முதல்ல, ஆம்பளைங்களுக்கு சரிக்குச் சமமா நாங்க கடலுக்குப் போனப்போ, எல்லாரும் ஏசுனாங்க. எதையும் காதுல வாங்கிக்காம இறங்கிட்டோம்...
கடலு ஒருநேரம் போல இருக்கிறதில்லை. போயிட்டுத் திரும்பி வந்தாத்தான் உசுருக்கு உத்தரவாதம்.. நாலடி உள்ள போனா ஏழடிக்கு எழுந்திரிச்சு அடிக்கும் அலை... அதெல்லாம் தாங்கிக்கிட்டு வத்தையைப் போடணும். கொஞ்சம் அசந்தாலும் கவுத்து வுட்டுரும்... மனசுக்குப் பயமாயிருந்தா முருகன் பாட்டைப் பாடிக்கிட்டே துடுப்புப் போடுவோம். மீன்பிடிக்கிறதுல பலவிதங்கள் இருக்கு...
வலையைப் போட்டுக்கிட்டே போயி, வரும்போது இழுத்துக்கிட்டே வருவோம். அம்புடுறதுலாபம். இல்லைன்னா, பெரிய கம்பை ஊண்டி ஆழம்பாத்து, தகுந்த இடத்துல எல்லாரும் இறங்கிருவோம்.
கழுத்தளவுக்கு மூழ்கி கையில அம்புடுற எறா, மீனு, நண்டுகளைப் புடிப்போம். வெளியில இருந்து பாக்க சாதாரண வேலையாத் தெரியும். பல ஆபத்துகள் இருக்கு. நண்டு கையைக் கவ்வுனா விடாது...
ரத்தம் பாத்துட்டுத்தான் கொடுக்கை மடிக்கும். மீனுக கையக்கடிக்கும், காலக்கடிக்கும். அதிலயும் திருக்கை கடிச்சுச்சின்னு வச்சுக்க... பெரும்பாடு... மூணு நாளைக்குக் கடுக்கும். 1 வருஷம் வைத்தியம் பாக்கணும். கடல் பாம்புக கடிச்சாலும் விஷமேறிரும்...’’ - சேதுராக்கு தொழில் சிரமங்களை அடுக்குகிறார்.
‘‘நாலு பேரு போனா, கிடைக்கிறதை அஞ்சு பங்கா வப்போம். மூணு பேருக்கு மூணு பங்கு... எனக்கும் வத்தைக்கும் 2 பங்கு... எல்லாருக்கும் கொடுத்தது போக அம்பது ரூவா மிஞ்சும். மழை, தண்ணி வந்தா அதுவும் போச்சு...’’ என்கிற சேதுராக்கு, முன்பு போல இப்போது மீன் கிடைக்காததற்கு ‘ரோலர் மடி’ என்ற கொடூர வலையே காரணம் என்கிறார்.
‘‘ஆபீசருங்க வந்து, ‘கடலுக்குப் பக்கத்துல குடியிருக்கக்கூடாது. எல்லாரும் 4 கிலோமீட்டர் தள்ளிப்போகணும்’னு சொல்லிக்கிட்டிருக்காக. எங்களை கடலைவிட்டுப் போகச்சொல்ல அவங்க யாரு?
மீனவன் இல்லாம கடல் ஏது? கடல் இல்லாம மீனவுக ஏது? கடல் எங்களுக்குத்தான் சொந்தம். எந்தக் காலத்திலும் அதிகாரத்துக்குச் சொந்தம் கிடையாது’’ என்று ஆவேசம் காட்டுகிற சேதுராக்கு, இறுதியாகச் சொல்கிறார்.
‘‘இந்தக் கடக்கரை காத்தை இழுத்துக்கிட்டுத்தான் பெறந்து விழுந்தோம்... பொழச்சுக் கிடந்தோம். அந்தக்கடல் தாயியே எங்க உயிரை எடுக்கணும்னு நினைச்சா எடுத்துக்கட்டும். அதை யாரும் தடுக்க முடியாது. நாங்களும் கடலும் வேற வேற இல்லை...’’
- வெ.நீலகண்டன்
கிருஷ்ணவேணிபுதுச்சேரி கிருஷ்ணவேணியைத் தெரியாத போலீஸ்காரர்களே இல்லை. ஒரு வண்டி... மேல்தகரம் எப்போதும் பெயர்ந்து விழக்கூடும். முன்னிறுக்கும் கட்டைக்குள் நுழைந்து மூச்சைப் பிடித்து இழுக்கத் தொடங்கினால் சுடுகாடு போவதற்குள் வியர்வை உயிரை நனைத்து விடும். Ôபிணம் போல கனம்Õ என்பார்களே... பாவம் கிருஷ்ணவேணி... உள்ளுக்குள் இருக்கும் உயிரின் ஆணிவேரை பிடித்திழுக்கும் கனம். வியர்வை வழிந்தொழுக, கால்கள் பின்ன, வண்டியை இழுத்துச்செல்லும் கிருஷ்ணவேணிக்கு புதுச்சேரிதான் சொந்த ஊர். இதற்கு முன், அவரது கணவர் இந்த வண்டியைத்தான் இழுத்துச் சென்றார்.
இப்போது கிருஷ்ணவேணி.
‘‘ராத்திரி 12 மணிக்குக் கூட ஆளு வரும். வரமுடியாதுன்னு சொல்ல முடியாது. அப்புறம் இந்தப் பிழைப்பும் போயிரும். ரத்தமும் சதையுமா உடலை அள்ளிப்போடுவாங்க. கடல்ல விழுந்தது, ஆத்துல விழுந்தது, ரோட்டுல விழுந்து அடிபட்டது, நாய் கடிச்சு செத்ததுன்னு பல ரகங்கள் இருக்கு. இப்போ மரத்துப்போச்சு... ஆனா, முதல் பிணத்தைத் தூக்கினப்போ ஏற்பட்ட வலி இப்பவும் உடம்புலயும் மனசுலயும் இருக்கு...’’ - வியர்வையை வழித்து எறிந்துவிட்டு வண்டியை முன்னுக்கு இழுக்கிறார் கிருஷ்ணவேணி. உள்ளே அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள். எங்கே, எந்தக் குடும்பம் தவித்துக் கொண்டிருக்கிறதோ? ‘‘அவர் இறந்தபிறகு வழி தெரியலே... பிள்ளைகளைக் காப்பாத்தியாகணும். எது நடந்தாலும் சரின்னு வண்டியைத் தொட்டுட்டேன். பொணத்தைப் பாக்கவே பயமா இருந்துச்சு. அப்போ இந்த அளவுக்கு மனவலிமை, உடல்வலிமை இல்லை. இருந்தாலும் வைராக்கியமா வண்டிய தள்ளிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போயிட்டேன். ஆனா, என்னை யாரும் சுடுகாட்டுக்குள்ள இறங்கவிடலே.
இன்னைக்கு, அக்கா, தங்கச்சின்னு உறவு கொண்டாடி கையேந்தி நிக்கிறவங்க, அன்னைக்கு சுடுகாட்டுல கால வச்சின்னா வெட்டிருவேன்னு மல்லுக்கு நின்னாக. அவங்க பிழைப்பு போயிருமேங்கிற பயம்.
பொம்பளக இங்கே வந்தா யாருக்கும் நல்லதில்லைன்னு சாக்குச் சொன்னாங்க. நான் எதுக்கும் கலங்கிப்போகலே...’’ என்கிறார் கிருஷ்ணவேணி.
‘‘கடல்ல விழுந்த பொணம் நல்லாயிருக்கும். ஆனா, ஆத்துல விழுந்துட்டா புழு வச்சிரும். நாய் கடிச்சதுன்னா சொல்லவே வேணாம். சும்மா பேருக்கு துணியைச் சுத்தி குடுத்துருவாக. சில பொணங்களை அஞ்சுநாள், பத்துநாள் வச்சிப்பாத்து, யாரும் உரிமை கேட்டு வரலைன்னு அப்புறமாக் கொடுப்பாங்க. பொணத்தை ஏத்திட்டா வண்டியை ஃபுல்லா துணியைச் சுத்தி மூடிருவேன். ஆனாலும், ரோடு முழுவதும்
நாத்தம் அடிக்கும். ‘எதைக் கொண்டு போறாளோ’ன்னு திட்டிக்கிட்டே போவாங்க. தலைவிதி... எல்லாத்தையும் கேட்டுக்கணும்...’’ ஒன்றுக்கு மேல் இருந்தால் கிருஷ்ணவேணி பாடு பரிதாபம். இரண்டு குழி வெட்ட வேண்டும். இழுத்த களைப்பு நீங்குவதற்குள் அடுத்த வேலை... ‘‘நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு என் புள்ளைங்க உதவிக்கு வருவாங்க. பிணத்தை புதைச்சுட்டு ரசீதுல கையெழுத்துப் போட்டு போலீஸ்கிட்ட கொடுத்தா அஞ்சு மாசமோ, ஆறுமாசமோ கழிச்சு பணம் வரும். இங்கே உள்ள போலீஸ்காரங்க நூறு, அம்பது கொடுத்து உதவுவாங்க. அதுதான் அன்னாடத்துக்கு... எப்படியோ, எனக்கும் ரெண்டு புள்ளைவளுக்கும் சுடுகாடுதான் சோறு போடுது... அதுமட்டும் இல்லைன்னா நாங்க சுடுகாடு போயிருப்போம்...’’ என்கிற கிருஷ்ண வேணியின் கண்கள் கலங்குகின்றன. ஊதக்காற்று பலமாக அடிக்கிறது. கிருஷ்ணவேணிக்கு மற்றுமொரு வேலையைச் சுமந்துகொண்டு, புகை கக்கியபடி வந்து நிற்கிறது போலீஸ் வாகனம். தன் வண்டியின் தூசியை தட்டிவிட்டு இன்னொரு இறுதி யாத்திரைக்கு தயராகிறார் கிருஷ்ணவேணி.