அசத்தலான நடிகை... அன்பான மனுஷி... அற்புதமான அம்மா... அக்கறையான தோழி... இப்படி நடிகை நளினியின் குணங்கள் தெரிந்த பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்... அவர் பிரமாதமான சமையல்கலைஞர் என்பது!
கே டி.வியில் ‘ஆல் இன் ஆல் அலமேலு’ தொடரில் சமைத்துக் காட்டுகிற நளினி, நிஜமாகவே சமையலில் ‘ஆல் இன் ஆல் அழகுராணி’தான்! நளினியின் சமையலறை அனுபவங்களில் சோகம், மகிழ்ச்சி, கிண்டல், கேலி என நவரசங்களையும் பார்க்க முடிகிறது.
‘‘அம்மா பிரமாதமா சமைப்பாங்க. அதிகபட்ச சுத்தம் பார்ப்பாங்க. கல் உப்பைக்கூட கழுவிட்டுத்தான் உபயோகிப்பாங்க. அது என் மனசுல பதிஞ்சிருந்தது. ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்துல
நடிச்சிட்டிருந்த நேரம்... அவசரமா ஷூட்டிங் கிளம்பிட்டிருந்தேன். வழக்கமா அம்மாதான் சமைச்சு, எல்லாருக்கும் டப்பா கட்டிக் கொடுப்பாங்க. அன்னிக்கு அம்மாவுக்கு ஏதோ அவசர வேலை.
‘வெண்டைக்காய் நறுக்கி வச்சிருக்கேன்... பொரியல் பண்ணிடு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. நறுக்கி வச்சிருந்த வெண்டைக்காயை எடுத்து தண்ணில போட்டுக் கழுவு கழுவுன்னு கழுவி, கடாய்ல போட்டா, கொழகொழன்னு ஒரு மாதிரியா வருது... 8 பேர் கொண்ட பெரிய குடும்பமாச்சா... 2 கிலோ வெண்டைக்காய்... மணிக்கணக்கா போராடியும் வெண்டைக்காய் கொழகொழப்பு என்னை விடறதா இல்லை. அம்மா வந்து பார்த்தாங்க. ‘வெண்டைக்காயை யாராவது நறுக்கிட்டுக் கழுவுவாங்களா? இனிமே கிச்சன் பக்கமே வரக்கூடாது’ என்னை விரட்டினாங்க. கல்யாணம் முடிஞ்சு, அம்மா வீட்டை விட்டு வர்ற வரைக்கும், கிச்சன் பக்கமே போகலையே! இத்தனை வருஷம் கழிச்சும் வெண்டைக்காய் பொரியல் பண்ணும் போது, அந்தச் சம்பவம் எனக்கு ஞாபகத்துக்கு வரும்!’’
பழைய நினைவு கிளறிய சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் நளினி. ‘‘கல்யாணத்துக்குப் பிறகு என் வீட்டுக்காரர் சாம்பார் வைக்கச் சொன்னார். அதுவரை எனக்கு கேஸ் தீர்ந்ததுன்னா மாத்தத் தெரியாது. துவரம்பருப்புக்கும் கடலைப்பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது.
மீனாட்சியம்மாளோட சமையல் புத்தகத்தைக் கையில வச்சுக்கிட்டு ட்ரை பண்ணினேன். அதுல க.பருப்பு, து.பருப்பு, உ.பருப்பு, ப.பருப்புன்னு நாலு போட்டிருக்கும். எது எந்தப் பருப்புன்னு தெரியாம,
உளுத்தம்பருப்பை போட்டு சாம்பார் வச்சிட்டேன். வெண்டைக்காய் பொரியலைவிட மோசமான எக்ஸ்பீரியன்ஸ் அது... அப்ப நான் பியூர் வெஜிட்டேரியன். மாமியார் வீட்ல நான்வெஜிட்டேரியன். அசைவ
அயிட்டம் எதையும் தொடக்கூட மாட்டேன். போராட்டத்தோடவே வாழ்க்கை போயிட்டிருந்தது. சமையல் என்னைப் பெரியளவுல ஈர்க்கலைன்னுதான் சொல்லணும்.
டைவர்ஸ் என் வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனை. அந்த டைம்ல வீட்ல இருந்த அத்தனை வேலைக்காரங்களையும் அனுப்பிட்டேன். காபி போடத் தெரியாது. அதனாலயே கட்டஞ்சாய் குடிப்பேன்.
பாக்கெட் பாக்கெட்டா பிரெட் வாங்கிடுவேன். ஒரு வேளை பிரெட் ரோஸ்ட்டுன்னா அடுத்த வேளைக்கு பிரெட் சான்ட்விச், அப்புறம் பிரெட், பட்டர், ஜாம்னு மூணு வேளையும் நானும் பிள்ளைங்களும்
பிரெட்டை சாப்பிட்டே வாழ்ந்தோம். அப்பதான் எனக்குள்ள ஒரு உத்வேகம்... ‘ஒரு பொண்ணு நினைச்சா வராத விஷயம்னு ஏதாவது உண்டா என்ன’ன்னு ஒரு வெறியோட சமைக்கக் கத்துக்கிட்டேன்.
இன்னிக்கு எனக்கு 100 வகையான சாம்பாரும் ரசமும் வைக்கத் தெரியும்...’’ - வார்த்தைகளுக்கு வண்ணம் பூசாத, நளினியின் வெளிப்படையான பேச்சில் அத்தனை யதார்த்தம்.
‘‘விஜின்னு எனக்கொரு ஃப்ரெண்ட்... சமையல்ல அவங்கதான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவங்க வீட்டுக்குப் போனா, என்கிட்ட பேசிக்கிட்டே, இன்னொரு பக்கம் கடகடன்னு சாம்பார், ரசம்,
சாலட்னு மணக்க மணக்க சாப்பாடு ரெடி பண்ணிடுவாங்க. அவங்கக்கிட்டதான் ஐயங்கார் சமையல் கத்துக்கிட்டேன். அன்புதான் சமையலுக்குத் தேவையான பிரதான அயிட்டம். அன்போட சமைக்கிறப்ப,
எவ்வளவு சிம்பிளான சமையலும் அறுசுவையோட ருசிக்கும்னு கத்துக்கொடுத்தவங்களும் அவங்கதான். இன்னிக்கும் என் சமையல் நாலு பேர் பாராட்டறபடி இருக்கக் காரணம், அந்த அன்பு
ரகசியம்தான்...’’ என்று சிரிக்கிறார்.
நளினி இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் என்றால் சக நட்சத்திரங்களுக்குக் கொண்டாட்டம்! யார் யாருக்கு என்ன பிடிக்கும் என முதல் நாளே கேட்டுத் தெரிந்து கொண்டு, அடுத்த நாள் தன் கைப்பட
தயாரித்துக் கொண்டு போய் பரிமாறும் அந்த அன்பு, பல நட்சத்திரங்களை நெகிழ வைத்திருக்கிறது.
‘‘தினமுமே எங்க வீட்ல பஃபே மாதிரி வெரைட்டியான சாப்பாடு இருக்கும். என் பையனுக்கு இன்ஸ்டன்ட் காபிதான் பிடிக்கும். பொண்ணுக்கு ஃபில்டர் காபி. எனக்கு டீ. மூணு பேருக்கும் தனித்தனியா ரெடி பண்ணுவேன். பையனுக்கு கான்டினென்ட்டல் உணவு பிடிக்கும்னா, பொண்ணுக்கு காரைக்குடி சமையல். பையனுக்கு வெள்ளை சட்னி பண்ணினா, பொண்ணு சிவப்பு சட்னி கேட்பா. அலுத்துக்கவோ,
கோபப்படவோ மாட்டேன். எந்தப் பண்டிகைகளையும் விட்டுக் கொடுக்காம, தெரியுதோ, இல்லையோ அத்தனை பலகாரங்களையும் ட்ரை பண்ணிப் பார்ப்பேன். தெரியாதுங்கிறதைக் காரணம் காட்டி, எஸ்கேப் ஆகாம, கத்துக்கிட்டாவது செய்யணும்னு நினைப்பேன். எந்த வேலையைச் செய்தாலும் ரசிச்சுப் பண்றது என் சுபாவம்.
பையன் திடீர்னு ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வீட்டுக்கு வருவான். சாப்பிடக் கொடுக்க ஒண்ணுமே இருக்காது. வேக வச்ச பருப்பு இருந்தா, அதை மசிச்சு, அதுல ஆவக்காய் ஊறுகாயோட சாறை மட்டும்
விட்டு, நெய் விட்டு, ஒரு காய்ஞ்ச மிளகாயை நடுவுல சொருகி, ஸ்டைலா ஒரு பேர் சொல்லிக் கொடுத்துடுவேன். ‘ஐயையோ... திடீர்னு விருந்தாளிங்க வந்துட்டாங்களே’ன்னு கையைப் பிசைஞ்சுக்கிட்டு
நின்னதே இல்லை. எது இருக்கோ, அதை வச்சு, மேனேஜ் பண்ணி, புதுமையான ஒரு அயிட்டமா கொடுக்கிறதுல நான் எக்ஸ்பர்ட்!
‘சமைக்கத் தெரியாது’ன்னு சொல்லிக்கிறதை இந்தக் காலத்துப் பொண்ணுங்க ஒரு ஃபேஷனா நினைக்கிறாங்க. ஆனா, வேற எந்த விஷயத்துலயும் உங்களுக்குக் கிடைக்காத திருப்தியும் சந்தோஷமும்
மத்தவங்களுக்கு சமைச்சுக் கொடுக்கிறதுல மட்டும்தான் கிடைக்கும். எனக்கு சமையல்தான் தியானம்... யோகா... எல்லாம். என்னை நானே சந்தோஷப்படுத்திக்கிறதும் சமையல் மூலம்தான். சமைச்சா
சந்தோஷம் வருமான்னு கேட்டீங்கன்னா, எனக்கு வரும். அதைச் சொன்னா புரியாது. அனுபவிக்கணும்...’’மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவியை அடையாளம் காட்டுகிறார் நளினி.
- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி